இன்போசிஸ் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாமி செட்டிப் பட்டியில் ஈஷா வித்யா இன்போசிஸ் பள்ளி கட்டுவதற்கான பூமிபூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான கிராமப்புறக் குழந்தைகளின் கல்விக் கண் திறக்க இருக்கும் இப்பள்ளியைக் கட்டுவதற்கு இன்போசிஸ் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி. சுதா மூர்த்தி அவர்களுக்குத் தூண்டுகோலாக இருந்த சுவையான பின்னணித் தகவல்கள் உங்களுக்காக...

கடந்த வருடம் ஜூன் மாதத்தில் இன்போஸிஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், இன்போஸிஸ் குழுமத்தின் தலைவர் திரு. நாராயணமூர்த்தியின் துணைவியாருமான திருமதி. சுதா மூர்த்தி அவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்திருந்தார்.

ஏற்கனவே, ஸ்விட்சர்லாந்தில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டின்போது, அவர் சத்குருவிற்கு அறிமுகமாகியிருந்தார். அப்போதே ஈஷா பற்றியும், ஈஷாவின் திட்டங்கள் பற்றியும் அவருக்கு பரிச்சயம் ஏற்பட்டிருந்தது.

எனவே கோவை விமான நிலையத்திலிருந்து யோகா மையத்திற்கு காரில் வரும் வழியிலேயே சந்தேகவுண்டன் பாளையத்திலுள்ள ஈஷா வித்யா பள்ளிக்கு சென்று பார்வையிட வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார்.

இதுவரை உருவாக்கப்பட்டுள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளில், இந்தப் பள்ளிதான் முதன்முதலில் உருவான ஈஷா வித்யா பள்ளி. கிராமத்து ஏழை மாணவர்களும் ஆங்கிலக் கல்வி மற்றும் கம்ப்யூட்டர் அறிவுடன் கூடிய தரமான கல்வி பெறவேண்டும் என்னும் சத்குருவின் கனவு இங்கிருந்துதான் இனிதே செயல்படத் தொடங்கியது.

இப்பள்ளியில் அருகிலிருக்கும் 20 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கின்றனர். குறைந்தபட்சம் 60 முதல் 70 சதவீத குழந்தைகளின் பெற்றோர் தினக்கூலியாக வேலை பார்ப்பவர்கள். இக்குழந்தைகள் அனைவரும் கல்வி உதவித்தொகை பெற்று படிக்கின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இவ்விபரங்களை கேட்டுக் கொண்டே பள்ளியை முழுவதுமாக சுற்றிப் பார்த்த சுதா மூர்த்தி, நேராக ஒன்றாம் வகுப்பிற்கு சென்று, அங்குள்ள ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, குழந்தைகளுடன் பேசத் தொடங்கினார். அவரை சுற்றிக் குழந்தைகள் தயக்கமின்றி கூட ஆரம்பித்தனர்.

அவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, ஒன்றாம் வகுப்பு குழந்தைகளும் ஆங்கிலத்தில் பதில் சொல்ல என்று ஏறக்குறைய 15 நிமிடங்கள் இந்த உரையாடல் நீண்டது. குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர் பற்றியும், குடும்பம் பற்றியும் நேரடியாக கேட்டறிந்து கொண்டார்.

பிறகு ஏழாம் வகுப்பிற்கு சென்ற அவர் அங்குள்ள குழந்தைகளுடனும் உரையாடினார். அங்குள்ள மாணவர்களிடம் பாடப் புத்தகங்களை தவிர வேறெதாவது படிக்கிறீர்களா என்று கேட்டபோது சில மாணவர்கள் நாளிதழ்கள் படிப்பதாகக் கூறினர். அதில் ஒரு மாணவன் ஹிந்து பேப்பர் படிப்பதாகக் கூறினான். அதை சுதா மூர்த்தி வெகுவாகப் பாராட்டினார்.

வகுப்பறைகளைப் பார்வையிட்ட பின்னர் சமையலறைக்கு சென்ற சுதா மூர்த்தி அங்குள்ள உணவை சுவை பார்த்துவிட்டு, உணவு சுவையுடனும், சத்தாகவும் இருப்பதாகக் கூறினார்.

இங்குள்ள குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற ஈஷா எடுக்கும் முயற்சிகளை கேட்டறிந்து விட்டு, ஈஷா வித்யாவின் நோக்கமும், இன்போஸிஸ் அறக்கட்டளையின் நோக்கமும் மிகவும் இணக்கமாக இருக்கிறது என மன நிறைவை வெளிப்படுத்தினார்.

ஏற்கனவே இன்போஸிஸ் அறக்கட்டளை, கடலூர் ஈஷா வித்யா பள்ளியில் 6 வகுப்பறைகள் உருவாக்கத் தேவையான 25 இலட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்திருக்கிறது. இருப்பினும், கோவை ஈஷா வித்யா பள்ளியைப் பார்த்த பின்னர் தங்கள் அறக்கட்டளையின் சார்பில் ஒரு புதிய ஈஷா வித்யா பள்ளிக்கு முழுமையாகவே கட்டிட வசதி ஏற்படுத்தித் தர விரும்புவதாக சுதா மூர்த்தி தெரிவித்தார்.

அவர் வாக்களித்ததைப் போலவே, தர்மபுரி மாவட்டத்திலுள்ள சாமி செட்டிப் பட்டியில் புதிய ஈஷா வித்யா இன்போசிஸ் பள்ளி துவங்குவதற்கு இன்போசிஸ் அறக்கட்டளை நிதி உதவி வழங்கியிருக்கிறது. புதிய பள்ளிக்கான பூமிபூஜை கடந்த 22ம் தேதி சாமி செட்டிப் பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பள்ளிக்கூடம் கட்டுவதற்கான பொருளாதார உதவிகளை இன்போசிஸ் அறக்கட்டளை செய்ய முன்வந்ததும், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்களின் அயராத தேடலின் விளைவாக, இப்போது இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது.

இந்த இடத்தை வாங்குவதற்கான தொகையில் ஒரு பகுதியையும் தன்னார்வத் தொண்டர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இந்தப் பள்ளி தர்மபுரி நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமையவுள்ளது. அடுத்த வருடம் மே மாதம் பள்ளியின் கட்டிடப் பணிகள் முடிந்து பள்ளி செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தரமான கல்வியும், சத்தான உணவும் வழங்க இருக்கும் இப்பள்ளியின் துவக்க நாளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தர்மபுரி பள்ளியின் கட்டிடச் செலவை இன்போஸிஸ் முழுமையாக ஏற்றாலும் மற்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான மேஜை, நாற்காலி போன்ற உபகரணங்கள் வாங்குவது, நூலக வசதி ஏற்படுத்துவதற்கான புத்தகங்கள் வாங்குவது, பள்ளிப் பேருந்துகள் வாங்குவது, பரிசோதனைக் கூடங்கள் அமைப்பது போன்றவற்றிற்காக சுமார் ரூபாய் 45 லட்சம் தேவைப்படுகிறது.

கோவை, ஈரோடு, மேட்டூர், கடலூர், தூத்துக்குடி, நாகர்கோவில், விழுப்புரம போன்ற இடங்களிலுள்ள ஈஷா வித்யா பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு நன்கொடைகள் பெருமளவில் வரவேற்கப்படுகின்றன.

தொண்டுள்ளம் கொண்ட நிறுவனங்கள் மட்டுமல்ல, தனிநபர்கள் கூட உதவ முடியும். சிறிய அல்லது பெரிய அளவுகளில் நன்கொடைகளை எப்படி வேண்டுமானாலும் வழங்கலாம்.


நிறுவனங்கள் தொடர்பு கொள்ள:

திரு. வினோத் ஹரி - 94422 28606/ 98410 48949

ஈஷா வித்யா பற்றிய இதர தகவல்களுக்கும் நன்கொடை அளிக்க விரும்பும் தனிநபர்களும்

தொடர்பு கொள்ள: தொ.பே: 94425 44458/ 99404 75000

இணையதளத்தில் உதவ :