ஈஷாவிற்கு இன்னுமொரு அங்கீகாரம்
ஆதியோகியுடன் செல்ஃபி எடுத்து மகிழும் மக்கள்முதல் அருளதிர்வை ருசித்து தரிசனம் பெற்றுச்செல்லும் மக்கள்வரை என அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக ஈர்த்துவரும் ஈஷாவிற்கு, தற்போது கிடைத்துள்ள தமிழக சுற்றுலா துறையின் விருது இன்னுமொரு அங்கீகாரமாய் நமக்கு உற்சாகம் அளிக்கிறது! தொடர்ந்து படித்தறியுங்கள்!
யோகாவிற்கான தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலத்திற்கான விருது நம் ஈஷா யோகா மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி! .
மதுரா ட்ராவல்ஸ் நடத்திய 3வது தமிழ்நாடு சுற்றுலா விருது வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் மார்ச் 14ம்தேதி (புதன்கிழமை) நிகழ்ந்தது. தேசிய, சர்வதேச மற்றும் மாநில அளவிலான சுற்றுலாத் துறை மற்றும் சுற்றுலா மையங்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் சுற்றுலா துறைக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
ஈஷா அறக்கட்டளையின் தன்னார்வலரும் சோழமண்டலம் குழுமத்தின் தலைவருமான திரு.வெள்ளையன் சுப்பையா அவர்கள் ஈஷா சார்பில் விருதினை பெற்றுக்கொண்டார்.
Subscribe
நிகழ்ச்சியில் தேச மங்கையற்கரசி அவர்கள் வழங்கிய தமிழ் இலக்கியத்தில் சுற்றுலா என்ற தலைப்பிலான சொற்பொழிவு, பாரதி திருமுருகன் அவர்களின் வில்லுப்பாட்டு, முனைவர் கு.ஞானசம்பந்தன் குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் பல்கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறி, உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் ஆன்மீகம் சென்றடையச் செய்த முதல்யோகியும், யோகத்தின் மூலமுமான ஆதியோகி 112 அடி திருமுகம் 2017ஆம் ஆண்டு மஹாசிவராத்திரியன்று சத்குரு அவர்கள் முன்னிலையில் பாரத பிரதமர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது!
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அருளும் அழகுணர்ச்சியும் ததும்ப அமைந்துள்ள ஆதியோகியின் இந்த தனிச்சிறப்புமிக்க திருமுகத்தைக் காண பல்வேறு தேசங்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து தரிசனம்பெற்றுச் செல்வதைப் பார்க்கிறோம்!
ஆதியோகி திருமுக தரிசனம் தங்களுக்கு வழங்கிய பிரம்மாண்ட அனுபவங்களை இங்கு வருகைதரும் பலரும் பெருவியப்புடன் பகிர்கிறார்கள்! ஆதியோகியுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்கிறார்கள்! ஒரு சுற்றுலா தலம் என்பதையும் தாண்டி, இந்தியாவின் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையமாக ஈஷா திகழ்வதை மறுப்பதற்கில்லை!
எந்த மதத்தையும் சாராவண்ணம் யோக விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு, பிராணப் பிரதிஷ்டை மூலம் சத்குருவால் 1999ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட தியானலிங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அற்புதசூழல் நிறைந்த தியானலிங்க வளாகத்தில் அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் வருகைபுரிந்து, ஆழமான ஆன்மீக அனுபவங்களை பெற்றுச் செல்வது அன்றாட நிகழ்வாகும்!
தினமும் ஈஷாவிற்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு ‘ஓம்கார தீட்சை’ எனும் தியானப் பயிற்சி இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன. மேலும், கோடை விடுமுறை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் எளிமையான மற்றும் பலன்கள் தரக்கூடிய உபயோகா வகுப்புகள் இலவசமாக நடத்தப்படவுள்ளன. இந்த பயிற்சிகளில் இங்கு வருகைதரும் அனைவரும் கலந்துகொள்ளலாம்.