தினமும் என்னை கவனி! என ஒரு வாகன ஓட்டுனர் தனது வாகனத்தில் எழுதி வைத்திருப்பதைப் பார்திருப்போம்! அப்போதுதான் அந்த வாகனம் இடையில் பழுதாகும் வாய்ப்பு குறைவாக இருக்கும். ஒரு விளையாட்டு வீரர் தினமும் தன் உடலையும் அதற்கான பயிற்சிகளையும் கவனிக்க வேண்டியது அவசியமாகும்! இப்படி ஒவ்வொருவரும் தினமும் சில விஷயங்களை கவனிக்கும்போது அதனால் நன்மைகள் இயல்பாகவே நடக்கத்தான் செய்யும்! ஆனால் நாம் அனைவருமே தினம் தினம் கவனிக்கவேண்டிய ஒன்றுதான் இந்த மரங்கள்!

மரங்களை கவனிப்பதில் இருக்கும் மகத்தான விஷயங்களை அறிந்துகொண்டால், பின் மரங்களே நமக்கு பேராசானாக மாறிவிடும்
இதென்ன மரங்களை கவனிப்பது… அதுபாட்டுக்கு அது வளருமே?! நாம் மரங்களை நட்டு, முடிந்தால் அவ்வப்போது தண்ணீர் விட்டால் தானாக வளர்ந்துவிட்டுப்போகிறது என நம்மில் பலர் நினைக்கலாம்! ஆனால், மரங்களை கவனிப்பதில் இருக்கும் மகத்தான விஷயங்களை அறிந்துகொண்டால், பின் மரங்களே நமக்கு பேராசானாக மாறிவிடும் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

ஆம்… மரங்களை பலரும் பலவிதங்களில் அணுகுகிறார்கள். சிலர் மரங்களை வியாபாரப் பொருளாக பார்க்கிறார்கள். சிலரோ மரங்களை நிழல்தரும் குடையாக மட்டுமே பார்க்கிறார்கள்! நம் கலாச்சாரத்தில் மக்கள் பலர் மரங்களை கடவுளாகவே வழிபடுகிறார்கள்! யோகிகள் பலர் மரங்களிடத்திலிருந்து நுட்பமான ஞானத்தையும் கடந்த காலங்களையும் அறிந்துகொள்கிறார்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பலகாலம் வாழ்ந்த மரங்களில் இருக்கும் கரும்வளையங்களின் எண்ணிக்கையும் அளவையும் கொண்டு அந்த இடத்தில் நிகழ்ந்த பருவகால மாற்றங்கள் பற்றி அறிந்துகொள்கிறார்கள்! இது ஒரு தனி அறிவியலாகும். ஆனால், இந்த வளையங்களை மரங்களை வெட்டினால் மட்டுமே காணமுடியும்! மரங்கள் இருக்கும்போதே நாம் அதனை தினமும் கவனிப்பதன்மூலம் பருவகால மாற்றங்களை உணர்ந்துகொள்ளமுடியும்! அதற்கான வழிமுறைகளையும் நுட்பங்களையும் Season Watch என்ற ஒரு அமைப்பு மக்களிடத்தில் கொண்டுசேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது!

ஒரு மரத்தை தினமும் கவனிப்பதன் மூலம் சுற்றுச்சூழலில் நிகழும் மாற்றங்களையும் பருவநிலை மாறுபாடுகளையும் இவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள்! இந்த நுட்பத்தை விருப்பமுள்ளவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார்கள்! உதாரணத்திற்கு, ஒரு மரத்தின் இலைகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே உதிரத்துவங்கினால், அப்போது சுற்றுச்சூழலில் பருவநிலை இயல்பாக இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஈஷா பசுமைக் கரங்களின் பசுமைப் பள்ளி இயக்கத்தினர் இந்த அமைப்புடன் தொடர்புகொண்டு, அவர்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை தற்போது ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒரு மரத்தை தினமும் கவனிப்பதன் மூலம் சுற்றுச்சூழலில் நிகழும் மாற்றங்களையும் பருவநிலை மாறுபாடுகளையும் இவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள்!
இதன்மூலம், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்தும், இயற்கை குறித்தும், பருவநிலை மாற்றங்கள் குறித்தும் போதுமான அறிவும் விழிப்புணர்வும் கிடைக்கப்பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் மரங்களை தினமும் கவனிப்பதால், சுற்றுச்சூழலில் அந்த மரத்தோடு தொடர்புகொண்டுள்ள மண், எறும்புகள், பூச்சிகள், அணில்கள், பறவைகள் என அனைத்தையும் கவனிக்கும் தன்மை இயல்பாகவே அவர்களுக்கு உண்டாகிறது! எனவே மாணவர்கள் சுற்றுச்சூழல் பற்றிய அறிவோடும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்ற முனைப்போடும் திகழ்கிறார்கள். இதற்கான பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கத்தின் தன்னார்வத்தொண்டர்கள் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிக்குச் சென்று வழங்குகிறார்கள்.

ஈஷாவின் பசுமைப்பள்ளி இயக்கம்
2011ல் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலம் துவங்கப்பட்ட பசுமைப் பள்ளி இயக்கத்தில் தமிழகம் முழுவதிலும் 2,200 பள்ளிகளில் சுமார் 1லட்சம் மாணவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். மேலும், "தேசிய பசுமைப் படை"யில் உறுப்பினராக உள்ள மாணவர்களையும் ஒன்றிணைத்து, அவர்களை வருடத்திற்கு 2000 மரக்கன்றுகளை உருவாக்க ஊக்கமளித்து வருகிறது இந்த இயக்கம்! குழந்தைகளுக்கு இயற்கையோடு தொடர்பிலிருக்கும் வாய்ப்பினை இந்த இயக்கம் நல்குவதோடு, அவர்களை சிறப்புமிக்க தலைமுறையாய் உருவாக்கி, இன்று 35 லட்சம் மரக்கன்றுகளை நடச்செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள மாணவர்கள் தாங்களாகவே நாற்றுப் பண்ணைகளை உருவாக்கி மரக்கன்றுகளை நடுவார்கள். விதைகளைச் சேகரித்து மண்ணில் ஊன்றுவதிலிருந்து, அது கன்றாக வளர்ந்து மரமாகும் வரை தாங்களே பராமரித்து வளர்ப்பதால், அந்த மாணவர்களுக்கு மரங்கள் உற்ற தோழனாகி விடுவதோடு, அவர்களிடம் மரங்களை வெட்டக் கூடாது என அறிவுறுத்த வேண்டிய அவசியமிருக்காது. மேலும், தாங்கள் உருவாக்கிய மரக்கன்றுகளை தங்கள் ஊர்களில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் நடச் சொல்லிக்கொடுப்பதில் அந்தச் சின்னஞ்சிறு உள்ளங்களின் மகிழ்ச்சியை சொல்லிட வார்த்தைகள் இல்லை!

இதுகுறித்து மேலும் தகவல் பெறுவதற்கு கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

94425 90062