அன்போடும் பரிவோடும் உள்ளங்களை வெல்வோம்: வைரஸை வெல்வோம் - ஈஷா டைரி - பாகம் 7
அனைத்து உயிருக்கும் அன்போடு அக்கறை காட்டுவது, எளிதில் பாதிப்படையக் கூடியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது, அதே சமயம் இளையவர்களின் முகங்களில் புன்னகையை வரவழைப்பது என ஈஷா தன்னார்வலர்களின் ஒரு முழுநாள் செயல் பல்வேறாக உள்ளது. அவர்களின் இந்த தன்னலமற்ற சேவைக்கான சிறந்த விருது களங்கமற்ற குழந்தைகளின் உள்ளத்தில் இருந்து மலர்கிறது - முக்கியமாக, ஒரு எட்டு வயது குழந்தை வைரஸை வெல்வோம் என உதவிக்கரம் நீட்டுவது ஒரு பெரிய விருதுதான்.

சிந்தனைக்கான தீனி
நீண்ட தொலைவு கொளுத்தும் வெயிலில் நடந்து கோவை கிராமங்களில் வசிப்பவர்களுக்கு உணவும் உதவியும் வழங்கும் ஈஷா தன்னார்வலர்களின் ஒரு நாள் பணி என்பது, கடுமையான ஒன்றுதான். அவ்வாறு ஆலந்துறை பஞ்சாயத்தில் ஜெகதீஸ் என்ற ஈஷா தன்னார்வலர் உணவு பொட்டலங்களை விநியோகித்தப் பின் அவரிடம் எஞ்சி இருந்தது இரண்டு பொட்டலங்கள்.
அக்கம் பக்கம் பசித்திருப்பவர் யாரேனும் விடுபட்டுவிட்டார்களா என்று அவர் சுற்றிலும் நோக்கியபோது அவர் கண்களில் அந்த பரிதாபகரமான காட்சி தென்பட்டது. அப்போது அவர் உள்ளத்தில் பெரும் கருணை பொங்கியது - மெலிந்த தேகம் கொண்ட நாய் ஒன்று எழுந்து நிற்கக்கூட முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது. அதன் கால் ஒன்றில் பெரும் காயம் ஏற்பட்டிருந்தது.
அந்த நாயின் இக்கட்டான நிலையையும் வலியையும் உணர்ந்த ஜெகதீஸின் உள்ளம் உருக, அவர் உடனே அதன் உதவிக்கு விரைந்தார். தன்னிடம் இருந்த பொட்டலங்களில் ஒன்றை பிரித்து பசியோடிருந்த அந்த நாய்க்கு உணவு வழங்கினார்.
Subscribe
தன்னார்வத் தொண்டு புரிய ஆர்வம்
தன்னார்வலர்கள் தங்கள் வாசலுக்கே வந்து உதவுவதைக் கண்ட கிராமத்தினர் பலர், உத்வேகம் கொண்டு தங்கள் உதவிக்கரங்களை உள்ளன்போடு நீட்டினர். நரசீபுரம் பஞ்சாயத்தில் அத்தகைய ஒரு ஆச்சர்யம் நம் தன்னார்வலர்களுக்கு நேர்ந்தது. ஒரு எட்டு வயது சிறுவன் அவர்களின் வருகைக்காக ஆர்வத்தோடு காத்திருந்தான். கிராமங்களுக்கு உணவு வழங்குவது மற்றும் உதவுவது என தன்னார்வலர்கள் புரியும் பணிகளில் அவர்களோடு இணைந்துகொள்ள ஆர்வமோடு அவன் இருந்தான்.
முதலில் சிறிது தயங்கிய அவனது பெற்றோர்கள், நம் தன்னார்வலர்கள் அளித்த நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் பேரில் அவனை அந்த பணியில் ஈடுபட அனுமதித்தனர். உடனே அந்த சிறுவன் அவனுடைய முகக்கவசத்தையும் கையுறையையும் அணிந்து கொண்டு, மற்ற கிராமத்தினருக்கு உணவு விநியோகிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன்னார்வலர்களோடு சேர்ந்து கொண்டான்.

காவல்துறையின் நண்பர்கள்
உணவகங்கள் கூட மூடியுள்ள நிலையில், தம் வீடுகளை விட்டு விட்டு அந்த கிராமங்களுக்கு வந்து சரியான உணவுக்கு வழியின்றி பெரும் சிரமத்தோடு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு, நம் ஈஷா தன்னார்வலர்கள் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருவதை தம் கடமையாக செய்து வருகின்றனர்.
பேரூர் சோதனைச் சாவடியில் பணியில் இருக்கும் காவல்துறையினர் ஈஷா தன்னார்வலர்களிடம் ஒரு பிரத்யேகமான கோரிக்கையை வைத்தனர். செல்வபுரம் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உதவும்படி நம் தன்னார்வலர்களைக் கேட்டுக்கொண்டனர். அவர்களின் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தன்னார்வலர்கள் இப்போது செல்வபுரம் மற்றும் தெலுங்குபாளையம் சோதனைச் சாவடிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் நம் தன்னார்வலர்கள் அன்போடு வரவேற்கப்படுகிறார்கள். அங்குள்ள காவல்துறையினருக்கு அவர்கள் நிலவேம்பு கசாயமும் வழங்கி வருகிறார்கள்.

ஊரடங்கின்போது தினமும் அனைவரும் நிலவேம்பு கசாயம் அருந்த வேண்டுமென தமிழக அரசு ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் அந்த கசாயத்தை இதுவரை கிராம மக்கள் அனைவருக்கும் வழங்கி வந்த நம் தன்னார்வலர்களுக்கு இந்த செய்தி பெரும் உற்சாகத்தை அளித்தது.