சென்ற பதிவில் புற்றுநோய் வராமல் தடுப்பதில் மஞ்சளின் பங்கு குறித்து பார்த்தோம். இந்தப் பதிவில், அழகு, ஆரோக்கியம், ஆன்மீகம் என்று பன்முகம் கொண்ட மஞ்சளின் மகிமைகள் குறித்துப் பார்க்க இருக்கிறோம்.

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:

கிருமி நாசினி... எளிய முதலுதவி!

இதன் கிருமி நாசினி (ஆன்டிசெப்டிக்) பண்பை அறிய நம் முன்னோர் யாரும் யுனிவெர்சிட்டியில் படித்தேறவில்லை. வீட்டில் எவருக்கேனும் அடிபட்ட காயமா? சீழ்கட்டியா? விஷக்கடியா? நம் வீட்டுப் பெரியவர் போடும் மஞ்சள்பற்று, ஒரு தலைச்சிறந்த எமெர்ஜென்ஸி ஃபஸ்ட் எய்ட் என்பது நவீன உலகம் இன்று கூறும் அறிவியல் உண்மை. அம்மை நோய் காலங்களிலும், பெண் பிள்ளை பூப்பெய்தும் காலங்களிலும் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் சடங்கும் இதே கிருமி நாசினி கோட்பாடே.

அழகுப் பராமரிப்பு

அன்றைய மஹாராணிகள் முதல் இன்றைய மாடர்ன் ராணிகள் வரை, தங்கள் மேனி அழகுப் பராமரிப்பில் மஞ்சள் பொடிக்கு ஒரு முக்கிய இடம் தந்துள்ளனர். “என்ன சார், இப்ப எந்த மாடர்ன் ராணி மஞ்ச தேய்ச்சு குளிக்குறாங்களாம்?” என்பது ஆடவரின் கேள்வி.

ஆம், போலி கௌரவமும், மேற்கின்பால் கொண்ட வெற்று மோகமும் இப்பழக்கத்தை சிறிது குறைத்திருக்கிறது எனினும், “டர்மரிக் சோப் கெடைக்குமா..? டர்மரிக் கலந்த நேச்சுரல் பிம்பிள் க்ரீம் இருக்கா..?” எனத் தேடித் தேடி வாங்கும் இன்றைய பெண்களின் உளவியலில், மஞ்சளின் அருமையை உணர்ந்த அன்றைய அழகிய மஹாராணிகளின் ஜீன்கள் இன்னும் வேலை செய்துகொண்டுதான் இருக்கின்றன!

மேனியும் முகமும் ஒளிர ஓர் எளிய குறிப்பு

மஞ்சள் குழைத்து இரவு படுப்பதற்கு முன் முகத்தில் பூசி, சில நிமிடங்களில் குளிர்ந்த நீரில் கழுவிடலாம். பின் காலை எழுந்ததும், முகத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்து, பச்சைப்பயறு மாவிட்டு கழுவினால், எந்த ஃபேஸ் க்ளென்சருடனும் தங்களுக்கு இனி ஜோலி இல்லை.

மஞ்சளும் மங்களமும்

திருமணத்தில் மங்கள சூத்திரமாய், அட்சதையாய், கங்கணமாய் நன்னாட்களில் வாசல் முற்றங்களில் குங்குமத்துடன் பூசப்பட்ட கலவையாய், பொங்கல் பானைகளில் சுற்றிக் கட்டப்பட்டது மஞ்சள். தடைகளைத் தகர்க்கும் விநாயகனை மஞ்சளில் பிடித்து வழிபடுவதும் மங்களத்தைக் குறிக்கும். இப்படி, ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்த மஞ்சள், மங்களத்திற்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு பெண்ணும் மங்களத்தின் சின்னமாய் புருவ மத்தியிலும், மணமானோர் நெற்றி வகிடிலும் குங்குமத் திலகம் இடுவது வெறும் சடங்கோ, அழகுக்கோ மட்டும் அல்ல. பொருள் உலகின் நன்மைகளை அடைய நம் உடல், மன கட்டமைப்பிற்கு இது உறுதுணையாக இருக்கின்றது. மஞ்சளோடு, சிறிது சுண்ணாம்பு, கற்பூரம் கலந்து தயாரிக்கப்படுவதே குங்குமம். “குடும்பத்தின் ஆண் முக்தி நோக்கம் கொண்டு விபூதி இடுவதும், பெண் பொருள் உலக நன்மைக்காக குங்குமம் இடுவதும் வாழ்வில் சமநிலை நிலவ உதவும் சிறு உபாயம்,” என்பது சத்குருநாதர் வாக்கு.

பன்முகப் பயிர்

“தசாவதாரம்“ கமல்ஹாசன் போல பயிர்களில் மஞ்சள் ஒரு வெர்சடைல் ஹீரோ என்று சொல்லலாம். உணவில் நறுமணமூட்டி, நிறமூட்டி, சுவையூட்டி, உட்கொள்ளும் மருந்து, வெளிப்பூச்சு மருந்து, அழகு சாதனப் பொருள், மங்கள நிகழ்வுகளில் முக்கிய பங்கு, ஆன்மீக வாழ்வின் இன்றியமையா அம்சம் என வெர்சடைல் விருதினை அள்ளிக் கொள்கிறது மஞ்சள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மஞ்சள் சில குறிப்புகள்...

ஜீரண மண்டலம்

ஒருவரது ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை பொறுத்தே அவரது உடல் ஆரோக்கியம் அமைகிறது என்பது இந்திய மருத்துவ முறைகளின் ஒரு முக்கிய கோட்பாடு. “வயிறுல தான் உயிர் இருக்கு” என்பது தமிழ் மருத்துவத்தின் வழக்கு மொழி.

பொதுவாக, குறைந்த செரிமான சக்தி, உண்டபின் ஏற்படும் வயிறு மந்தம் போன்ற நிலைகளுக்கு மஞ்சள் ஓர் அற்புத நிவாரணி.

மதிய உணவு உண்டபின், ஒரு சிட்டிகை அளவு மஞ்சளை சிறிது மோருடன் கலந்து எடுப்பது செரிமான சக்தியை தூண்டும்.

வலி நிவாரணி

மூட்டு வலி, சுளுக்கு, வீக்கம் போன்ற வலிகளுக்கு, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் இரு சிட்டிகை தோல் நீக்கிய இஞ்சியை சேர்த்து நீர்விட்டு அரைத்து கொள்ளவும். ஒரு சுத்தமான துணியில் அதனை பரப்பி, வலிகண்ட இடத்தில் கட்டிக்கொள்ளவும்.

இரத்த சோகை

தினம் காலை ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்த நீரை, தேனுடன் கலந்து பருக வேண்டும்.

கண்வலி

ஒரு ஸ்பூன் நசுக்கிய மஞ்சளை ஒரு டம்ளர் அளவு சுத்தமான நீரில் கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டிய பின்னர், இந்த நீரில் துணியை நனைத்து, கண்களின் மேல் போட்டுக்கொள்ளலாம். வலியை குறைக்கும்.

மஞ்சள் பற்றி சத்குரு:

மஞ்சள் சிறந்த சுத்திகரிப்பான்

மஞ்சள் இரத்தத்தை சுத்தம் செய்து உங்களின் சக்தி அமைப்பில் தெளிவை ஏற்படுத்த வல்லது. மஞ்சள் உடல்நிலையில் மட்டும் அல்லாது உங்கள் சக்தி நிலையிலும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெளிப்புற தூய்மைக்கு ஒரு சிட்டிகை மஞ்சளை ஒரு வாளி தண்ணீரில் இட்டு, குளித்து வந்தால் தேகம் புத்துணர்வுடன் பிரகாசிக்கும்.

கபம் நீக்கும் வல்லமை

கபம் சார்ந்த தொல்லைகளால் அனுதினமும் இரு நாசிகளிலும் அடைப்பு ஏற்பட்டு அவதிப்படுவோர், மிளகு, தேன், வேப்பிலை, மஞ்சள் சேர்ந்த கலவை எடுப்பது ஆகச்சிறந்த பலனை அளிக்கும்.

10 முதல் 12 குறு மிளகை நசுக்கி, இரண்டு ஸ்பூன் தேனில் ஓர் இரவு (8 முதல் 10 மணி நேரம்) ஊறவைக்க வேண்டும். காலையில் இந்தக் கலவையை உட்கொள்ள வேண்டும்; மிளகை மென்று உண்ணலாம். தேனுடன் சிறிது மஞ்சளையும் கலந்து எடுத்துக் கொள்வதும் பலன் அளிக்கும். பொதுவாகவே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தவிர்த்தாலே கபம் படிப்படியாய் குறையும்.

யோக சாதனைகளுக்கு மஞ்சளின் உதவி

இந்த மண்ணில் இருந்து பெறப்படும் எந்த ஒரு பொருளுக்கும், உங்கள் உடல் உட்பட, ஒரு செயல் அற்ற தன்மை (inertia மந்தத்தன்மை) உண்டு. இது குறித்த கூர்ந்த விழிப்புணர்வோடு, இந்தச் செயல் அற்ற தன்மையின் அளவை நம் உடலில் மிகக் குறைவாக வைத்துக் கொள்வது அவசியம். பொதுவாக, நீங்கள் எந்த அளவு விழிப்புணர்வுடன் உள்ளீர்கள் மற்றும் உங்களது தூக்கத்தின் அளவு எவ்வளவு? என்பதை வைத்து உங்கள் யோக சாதனை வேலை செய்கிறதா இல்லையா என்பதை நாம் அறிகிறோம். உள்ளபடி, நாம் அளப்பது இதன் மூலம் உங்கள் உடல் உற்பத்தி செய்யும் “செயல் அற்ற தன்மையைத்தான்”!!

ஒரு குறிப்பிட்ட அளவு சக்தியை உங்கள் செல் கட்டமைப்பு கிரகிப்பதை உங்கள் உடல் அனுமதிக்கவில்லை எனில், இந்த செயல் அற்ற தன்மையின் அளவு அதிகரிக்கும்.

மஞ்சள் வேம்பு கூட்டணி, உடலின் செல்லுலார் கட்டமைப்பை விரிவடையச் செய்வதால், சக்தி, உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் பாய்வதற்கு வழிவகை செய்கிறது. மஞ்சளும், வேம்பும் பொருள் நிலையில் உங்கள் சாதனைக்கு நல்ல துணை எனினும், யோகப் பயிற்சிகளால் மட்டுமே கூட உங்கள் உடல் முழுதும் சக்தியை சீரிய முறையில் செலுத்த முடியும்.

யோகப் பயிற்சிகள் மூலம் உடலில் உருவாக்கப்படும் அளப்பரிய சக்தியை, ஒரு கப் ஸ்ட்ராங்க் காபி அல்லது சிகரெட் போன்ற நரம்பு ஊக்கப் பொருட்களால் கூட உங்களுக்கு வழங்க முடியும். ஆனால், இந்த நரம்பு ஊக்கிகளுக்கு உடலின் செல்லுலார் கட்டமைப்பை விரிவடையச் செய்து, அதன் மூலம் சக்தியை தேக்கி வைத்து நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்தும் ஆற்றல் கிடையாது. இவை மூலம் உருவாக்கப்படும் சக்தி சேமிக்கப்படுவதற்கு மாறாக, அக்கணமே வெளிப்பட்டு விடுவதால் பாதிப்பையே ஏற்படுத்துகின்றது. பாதிப்பு உங்கள் உடலுக்கு மட்டும் அல்ல, உங்கள் மனம், உங்கள் செயல் மற்றும் உங்களை சுற்றியுள்ள சூழ்நிலை என அனைத்தும் பாதிப்படைகின்றன.

நம் உடலில் சக்தியை உருவாக்கும்போது, மிக முக்கியம் யாதெனில், அது தானாக வெளிப்பட்டு சிதையக்கூடாது. மாறாக, பெருக்கப்படும் சக்தியை நம் உடலில் சேமித்தும், நம் விருப்பத்தின் பெயரிலேயே சக்தி வெளிப்படுவதும் மிக அவசியம்.

வேம்பு மஞ்சளை வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து உண்பது, நம் உடலின் செல் கட்டமைப்பை சுத்தி செய்து விரிவடையச் செய்யும் சிறந்த வழி. இதன் மூலம் சக்தியை உடல் கிரகிக்கும் தன்மை மேம்படுகிறது. நீங்கள் யோகப் பயிற்சி செய்யும்போது செல்களின் இந்த விரிவடைந்த நிலை உங்கள் தசைகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும். இந்த நெகிழ்வுத் தன்மை உங்கள் உள்கட்டமைப்பை சீராக மிக சக்திவாய்ந்த சாத்தியமாக வடிவமைக்கும். ஒரு புதுவித சக்தியால் உங்கள் உடல் துள்ளுவதை, ஆசனப்பயிற்சிகள் செய்யும்போது நீங்களாகவே உணரமுடியும்.

நன்றி: மருத்துவ குறிப்புகள் - சித்த மருத்துவர் சக்தி புவனாம்பிகை, ஈஷா ஆரோக்யா மருத்துவமனை, சேலம்.

குறிப்பு: இதுபோல், மருத்துவ பயன்பாட்டிற்காக மஞ்சளைப் பயன்படுத்தும்போது, அது இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்டதா என்பதைப் பார்த்து வாங்குவது சிறந்தது. இன்று மிதமிஞ்சிய அளவில் கலப்படும் செய்யப்படும் பொருட்களில் மஞ்சளும் மிளகும் முக்கிய இடம் வகிக்கின்றன.அதனால் இவற்றை உண்ணும்போது தரமான மஞ்சள் தானா என்று அறிந்து வாங்குவது நல்லது. நேரடியாக விவசாயிகளிடமிருந்து சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம். ஈஷா யோக மையத்தில் தினசரி காலையில் வேம்புடன் உட்கொள்ளப்படும் மஞ்சள் விவசாயம் செய்யும் நம் தன்னார்வத் தொண்டர்களிடமிருந்து நேரடியாக பெறப்படுகிறது. தரம் உறுதி செய்யப்படுகிறது.

மஞ்சள் பொடியாகவும், வெறும் வயிற்றில் உண்பதற்கு ஏற்ற மாத்திரையாகவும் ஈஷா ஆரோக்யாவில் கிடைக்கின்றது.

சென்னை (044) 42128847; 94425 90099
கோவை 83000 55555; (0422) 4218852
சேலம் 94425 48852; (0427) 2333232