வீடியோவின் எழுத்தாக்கம்:

கேள்வியாளர்: இன்றைய உலகில் மெய்நிகர்-உண்மை (Virtual Reality) தொழில்நுட்பம் மிகப் பிரபலமாகி வருகிறது. இதை மனித நல்வாழ்விற்கு பயன்படுத்தும் நோக்கில் பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தற்சமயம் இந்த தொழில்நுட்பத்தால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளது. என்னைப் பற்றி நானே உருவாக்கிக் கொள்ளும் மாற்றுப் பிம்பம் (alter ego), தற்சமய நிதர்சனத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியான escapism, சமூகத்துடன் ஒத்துப்போகாமல் இருக்கும் குணம் (anti-social behavior), மெய்நிகர்-உண்மை விளையாட்டுக்களுக்கு அடிமைத்தனம் என பல வகைகளில் இது பிரச்சினை உருவாக்கி வருகிறது. இதை மனித நலனுக்கு உபயோகப்படுத்துவது எப்படி? மனித விழிப்புணர்வின் மீது இதன் தாக்கம் என்ன?

சத்குரு: மெய்நிகர் உண்மையை நன்றாகவே உபயோகிக்க முடியும். இப்போது கூட அதை உபயோகிக்கிறோம் பாருங்கள் - சத்குரு இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறார் தெரியுமா? எந்தத் தொழில்நுட்பமும் தீங்கானது அல்ல. என்னவொன்று, மனிதனின் மனம் தீங்கு விளைவிக்கும் நோக்கில் இருக்கும்போது, அனைத்து தொழில்நுட்பமும், அனைத்துமே தீங்கானதாக ஆகும். அவ்வளவு ஏன் இந்த மடிக்கணிணி எடுத்து அடுத்தவரின் மண்டையை கிழிக்கமுடியும். அப்படியெனில் கணிணிகள் தீங்கானவையா? இதுபோல் சில சம்பவங்கள் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பல அலுவலகங்களில் இப்படி நடந்துவிட்டது. கிட்டத்தட்ட 10 அலுவலகங்களில் "ஆப்பிள் ஏர்" (ஆப்பிள் கம்பெனியின் புது மெலிதான, ஒல்லியான மடிக்கணிணி வகை) எடுத்து உடன் வேலை செய்பவரின் தலையை கிழித்துவிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியெனில் மடிக்கணிணிகள் தீங்கானவையா? இல்லை.

தொழில்நுட்பம் எப்போதுமே பிரச்சினையல்ல - அது எப்படிப்பட்ட தொழில்நுட்பமாக இருந்தாலும், இதுதான் நிஜம்! கேள்வி என்னவெனில், நாம் அதை விழிப்புணர்வோடு உபயோகிக்கிறோமா? இல்லை கட்டாயத்தின் அடிப்படையில் (அ) வாணிகத்திற்காக உபயோகிக்கிறோமா? என்பதுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மனிதர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். கையில் என்ன கிடைத்தாலும், அதைத் தங்களுக்கு எதிராக எப்படித் திருப்பிக் கொள்ளவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவ்வளவு ஏன் உங்கள் புத்தியே உங்களுக்கு எதிராக செயல்படச் செய்கிறீர்கள். இதற்கு மேல் வேறென்ன வேண்டும்? இப்போது தொழில்நுட்ப "அடிமைத்தனம்-நீக்கும்" மையங்கள் உருவாகியுள்ளன. இதுபற்றி தெரியுமா உங்களுக்கு? போதைப்பொருள் அடிமைத்தனம் நீக்கும் மையம், மதுபான அடிமைத்தனம் நீக்கும் மையம் போல், இப்போது தொழில்நுட்ப அடிமைத்தனம் நீக்கும் மையங்களும் வந்துவிட்டன. இதற்குக் காரணம் நம் கட்டாயங்களுக்கு உட்பட்டு நாம் செயல்படுவதுதான். நாம் சாப்பிட ஆரம்பித்தால், சாப்பிடுவதை எப்போது நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று நமக்குத் தெரியவில்லை. அதுதான் பிரச்சினை, மிகப் பெரிய பிரச்சினை. குடிக்க ஆரம்பித்தால், குடிப்பதை எப்போது நிறுத்தவேண்டுமென்று தெரியாது. ஷாப்பிங் போனால், வாங்குவதை எப்போது நிறுத்தவேண்டுமென்று தெரியாது. ஃபோனை உபயோகிக்க ஆரம்பித்தால், அதை எப்போது கீழே வைக்கவேண்டுமென்று தெரியாது.

இங்கு பிரச்சினை தொழில்நுட்பம் அல்ல. நம் கட்டாயங்கள்தான். கட்டாயங்கள் என்று சொன்னால், அது நம் விழிப்புணர்வற்ற நிலையைக் குறிக்கிறது. நாம் விழிப்புணர்வான மனிதராக இருந்தால், எல்லாவற்றையும் நம் நல்வாழ்விற்காகவும், அனைவரின் நல்வாழ்விற்காகவும் பயன்படுத்துவோம். ஆனால் கட்டாயத்திற்கு உட்பட்டு செயல்படும்போது, ஏதோவொன்றை செய்ய ஆரம்பித்தால் அதை எப்போது நிறுத்தவேண்டும் என்று நமக்குத் தெரியவில்லை. தொடர்ந்து அதே முட்டாள்த்தனத்தை செய்துகொண்டே இருப்போம். அதனால் மெய்நிகர்-உண்மையாக இருந்தாலும், செயற்கை-புத்திசாலித்தனமாக (artificial intelligence) இருந்தாலும், இல்லை வேறு எந்த தொழில்நுட்பமாகவே இருந்தாலும், அவை பிரச்சினையல்ல - நடக்கும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக தொழில்நுட்பம் காரணமல்ல. ஏனெனில் அவையெல்லாம் நாம் உருவாக்கிய கருவிகள்தான். "அதை நம் நல்வாழ்விற்காக உபயோகிக்க வேண்டும்" என்பதுதான் நம் நோக்கம். ஆனால் மிகப் பிரமாதமான தொழில்நுட்ப வளர்ச்சிகள் அனைத்தையும் நம் வளர்ச்சிக்கு எப்படி உபயோகிக்கலாம் என்று பார்ப்பதற்கு பதிலாக, அவற்றை இராணுவத்திற்கு பயன்படுத்துவது எப்படி என்ற நோக்கில்தான் அணுகுகிறோம், ஏனெனில் எப்போதும் வேறொன்றை அழிப்பதுதான் நம் நோக்கமாக இருக்கிறது. இப்போதுதான் இப்படி இருக்கிறது என்றில்லை, எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது.

இன்று மெதுவாக நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அளவிற்கு வியாபாரம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

இதற்குக் காரணம் மனித விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சியை நாம் இதுவரை மேற்கொள்ளவில்லை. மனிதர்கள் விழிப்புணர்வோடு வாழ்ந்தால், இவ்வுலகை வழிநடத்தும் தலைமை விழிப்புணர்வோடு செயல்பட்டால், எந்தத் தொழில்நுட்பமும் மனிதர்களுக்கு எதிராக, ஏன் எந்த ஜீவராசிக்கும் எதிராக இருக்கும் நிலை ஏற்படாது. தொழில்நுட்பம் என்றால் நம் திறன் அதிகரிக்கிறது என்று அர்த்தம். இப்போது பாருங்கள், நான் இந்த ஒலிப்பெருக்கி (மைக்) உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். இது நம் திறனின் மேம்பாடு அல்லவா? இந்த ஒலிப்பெருக்கி இல்லாமல் பேசினால், ஒருசிலரால் மட்டுமே நான் பேசுவதைக் கேட்கமுடியும். இதை உபயோகித்தாலோ, இங்கிருக்கும் அனைவரும் நான் பேசுவதைக் கேட்கமுடிகிறது. அதனால் இது நம் திறனின் மேம்பாடு. ஆனால் ஒலிப்பெருக்கி இருக்கும் ஒரே காரணத்திற்காக அதை வைத்து நான் கத்த ஆரம்பித்தால், இது அந்த ஒலிப்பெருக்கியின் பிரச்சினையல்ல! "இல்லை இல்லை… இது ஒலிப்பெருக்கியின் பிரச்சினைதான்" என்று நினைக்கிறீர்களா? "ஓ! இந்த ஒலிப்பெருக்கிதான் இத்தனை சப்தமாக கத்துகிறது" - அப்படியா?... நாம் இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

தொழில்நுட்பம் எப்போதுமே பிரச்சினையல்ல - அது எப்படிப்பட்ட தொழில்நுட்பமாக இருந்தாலும், இதுதான் நிஜம்! கேள்வி என்னவெனில், நாம் அதை விழிப்புணர்வோடு உபயோகிக்கிறோமா? இல்லை கட்டாயத்தின் அடிப்படையில் (அ) வாணிகத்திற்காக உபயோகிக்கிறோமா? என்பதுதான். இப்போது வாணிகமே கட்டாயமாக நடக்கிறது (செய்தே ஆகவேண்டும், லாபம் கிடைத்தே ஆகவேண்டும் என்று). இந்த வியாபாரத்தை பண்டைமாற்றம் எனும் அடிப்படையில்தான் ஆரம்பித்தோம். என்னிடம் சிறிது அரிசி இருக்கிறது, உன்னிடம் கோழி இருக்கிறது; சரி இதை நீ வைத்துக்கொள், எனக்கு அதைக் கொடு; இப்படித்தான் இந்த வியாபாரம் தொடங்கியது. என்னிடம் அதிகம் இருப்பதை நான் உனக்குத் தருகிறேன். உன்னிடம் அதிகம் இருப்பதை நீ எனக்குத் தா. இதனால் நீயும் வாழலாம், நானும் வாழ்கிறேன். இப்படித்தான் இது ஆரம்பித்தது.

ஆனால் இன்று மெதுவாக நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அளவிற்கு வியாபாரம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. இப்போது உங்கள் அரசாங்கம் (அமெரிக்காவில்) என்ன சொல்கிறது? முடிந்தவரை எல்லோரும் அதிகமாக வங்கிக்கடன் பெறுங்கள், இல்லையெனில் நம் பொருளாதாரம் இறங்கிவிடும் என்று சொல்கிறதுதானே? இன்னும் அதிகமாக கடன் பெற உங்களைத் தூண்டுகிறார்கள். நிஜம்தானே? என்னிடம் கூட சொல்கிறார்கள், "சத்குரு உங்களுக்கு போதுமான நாணயநிலை நம்பகத்தன்மை (credit worthiness) இல்லை ஏனெனில் நீங்கள் வங்கிக்கடன் எதுவும் எடுக்கவில்லை" என்று. கடன் வாங்காமல் இருப்பது நல்ல விஷயம் என்று நினைத்திருந்தேன். இதுவரை கடனே வாங்கவில்லை என்பது மிக நல்ல விஷயம் என்றுதானே நினைத்திருந்தோம், ஆனால் இப்போது அது நல்லதல்ல என்கிறார்கள். "உங்களுக்கு போதுமான நாணயநிலை நம்பகத்தன்மை இல்லை. நீங்கள் வங்கிக்கடன் வாங்கித்தான் ஆகவேண்டும்." "சரி, கடன் வாங்கி என்ன செய்வது?" என்று கேட்டால், "எங்கேயோ ஏதோவொரு வீடு வாங்குங்கள். வாங்கி அதை வாடகைக்கு விடுங்கள். இப்படி உங்கள் நாணயநிலை நம்பகத்தன்மையை அதிகரிக்கலாம்" என்கிறார்கள்.

இதற்குத் தீர்வு தொழில்நுட்ப முன்னேற்றத்தை தடை செய்வதல்ல; ஒவ்வொரு மனிதனும் மேலும் விழிப்புணர்வோடு தன் வாழ்வை நடத்திக் கொள்வதுதான்.

இதுதான் நம் கட்டாயங்கள் வாணிகமாய் வெளிப்படும் நிலை. சாதாரணமாக மக்கள் வீடு கட்டுகிறார்கள் என்றால், அங்கு அவர்கள் வாழ விரும்புகிறார்கள் என்று அர்த்தம். ஆனால் இன்று வாணிகம் நம் பூமி முழுவதையும் விழுங்கும் அளவிற்கு ஒரு கட்டாயமாக நடந்துவருகிறது. சில நாட்களுக்கு முன் இது செய்திகளில் வெளியானது. இதை நீங்கள் கேட்டீர்களா என்று தெரியவில்லை. ஒரு 20 நாட்களுக்கு முன்பு 40,000 டன் கனமான ஒரு ருஷிய கப்பல், வடதுருவ ஐஸ்-ஐ (Arctic ice) உடைத்துக் கொண்டு கடலில் சென்றுவர ஒரு புது பாதை அமைத்ததாம். இது அவர்களின் பயணத்தில் 8000 கி.மீ தூரத்தை குறைக்கும் என்பதால் பெரிய அளவில் பணம் சேமிக்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் வடதுருவ ஐஸ் வழியாக இப்பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஏதோ அங்கு ஐஸ் மெலிதாக இருப்பதால் அதை உடைத்துகொண்டு அவர்கள் செல்கிறார்கள். இன்னும் சிறிது காலத்தில் வியாபார நிமித்தமான கப்பல் பயணங்கள் வடதுருவம் வழியாக நடைபெறுமாம். இதுதான் "கட்டாய வாணிகம்". நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற தெளிவே இன்றி இதை செய்து கொண்டிருக்கிறீர்கள். நிஜமா? இல்லையா?

இது முழுக்கமுழுக்க கட்டாயம்தான். இதை வாணிகம் என்று சொல்லாதீர்கள். இது மனிதர்களின் கட்டாயமான செயல்பாடு. அவர்களால் சும்மா இருக்கமுடியவில்லை; அவர்கள் ஏதோவொன்று செய்தே ஆகவேண்டும். அதனால்தான் இம்முழு உலகையும் தினமும் 21 நிமிடம் அமைதியாக உட்கார வைத்துவிட்டால், எப்படியும் இந்த உலகைக் காப்பாற்றிவிடலாம் என்று நினைத்தோம். அவர்களுக்கு தியானம் செய்யத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை! கொஞ்சம் இதை கற்பனை செய்து பாருங்கள். இந்த 760 கோடி மனிதர்களும் தினமும் 21 நிமிடம் எதுவும் செய்யாமல் இருந்தால் எப்படி இருக்கும்! இதனால்தான் நான் சொல்கிறேன்… இவ்வுலகை காப்பாற்றிக் கொண்டிருப்பது மனிதர்களின் புத்திசாலித்தனம் அல்ல, அவர்களின் அன்போ கருணையோ அல்ல - இவ்வுலகை காப்பாற்றிக் கொண்டிருப்பது அவர்களின் சோம்பேறித்தனம்தான். இவ்வுலகில் பாதிக்குபாதி மனிதர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். அவர்கள்தான் இவ்வுலகை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . ஆம். இங்கிருக்கும் அனைவரும் முழு உத்வேகத்துடன் உழைக்க ஆரம்பித்தால், நம் கையில் இருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒரு 15 - 20 வருடங்களுக்குள் இவ்வுலகை மொட்டை அடித்துவிடுவோம். நிஜமா? இல்லையா?

நாம் இப்போது அங்குதான் சென்று கொண்டிருக்கிறோம். எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, எவ்வித தொழில்நுட்பமும், எவ்வித திறமை மேம்பாடும் என்றுமே ஒரு பிரச்சினையாக இருக்கத் தேவையில்லை. மனிதர்களின் திறமை மேம்பட்டால், அது பிரச்சினையாக வேண்டுமா என்ன? நிச்சயம் இல்லை. ஏதோவொரு பிரச்சினைக்கு அது தீர்வாக இருக்கமுடியும். நாம்தான் நம் கட்டாயத்தால் அதை ஒரு பிரச்சினையாக மாற்றுகிறோம். இதற்குத் தீர்வு தொழில்நுட்ப முன்னேற்றத்தை தடை செய்வதல்ல; ஒவ்வொரு மனிதனும் மேலும் விழிப்புணர்வோடு தன் வாழ்வை நடத்திக் கொள்வதுதான்.

அன்பும் அருளும்