முழுத்தீவிரத்தில் செயல்படுவோம், வாருங்கள்!

வருடம்முழுக்க இடைவிடாத பயணத்திலிருந்த சத்குரு, இறுதியாக தற்போது ஈஷா யோகா மையத்திற்கு திரும்பிவிட்டார். இது பயணத்திலிருந்து திரும்புவதாக மட்டுமல்லாமல் புதிய செயல்திட்டங்களை வடிவமைப்பது, முக்கிய பங்குதாரர்களை சந்திப்பது, புதிய முன்னேற்றத்திற்கான எல்லைகளைத் தொடுவதில் அனைவரையும் ஒருங்கிணைப்பது போன்றவற்றிற்கான தருணமாகும். இந்த ஸ்பாட்டில், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துவக்கத்தைப் பற்றி தனது பார்வையை முன்வைக்கிறார் சத்குரு. அதேசமயம் ஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சந்திப்புகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் குறித்த தொகுப்புகளின் சில துளிகளும் உங்களுக்காக!
 
muzhu-theevirathil-seyalpaduvom
 
 
 

கடந்த சில மாதங்களாக என் பயணங்கள் எந்த அளவு உயர்ந்துள்ளது என்றால், ஒன்றரை வாரங்களுக்கு முன்பு நான் ஈஷா யோகா மையம் வரும் வரை, என் வீட்டில் நான் தூங்கியது இந்த வருடத்தில் முப்பத்தி இரண்டு நாட்கள்தான். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நகரத்தில் இருந்தேன், பல சமயங்களில் வெவ்வேறு தேசங்களிலும் இருந்தேன்.

தற்போது நான் வேகமாக முன்னே செல்கிறேன், ஆனால் ஒரு நிறுவனமாக ஈஷா அந்த வேகத்திற்கு இன்னும் வரவேண்டியிருக்கிறது.

முன்பு எப்போதும் இல்லாத விதத்தில் உலகம் கதவுகளைத் திறந்துள்ளது - நமக்கு மட்டுமல்ல, ஈஷாவிற்கு மட்டுமல்ல, நாம் எவ்வளவு மக்களை சென்றடைகிறோம் என்று பார்த்தால் இது குறைந்தது இருபத்தைந்து மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஆங்கிலம் பேசவோ, எழுதவோ, புரியவோ செய்தால், அவர்களில் கிட்டத்தட்ட எல்லோரும் "Youth and Truth" நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள். அசர்பைஜான் (Azerbaijan) போன்ற நாட்டில் கூட, தெருவில் செல்பவர்கள் பலரும் நம் வீடியோ பார்த்தவர்களாக இருந்தார்கள். அற்புதமான விஷயம் என்னவென்றால் இளைஞர்கள், அதுவும் பன்னிரண்டு முதல் பதினைந்து வயதான குழந்தைகள் கூட ஆன்மீக உரைகளை கேட்கத் துவங்கிவிட்டார்கள்.

சமீபத்தில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழு ஒரு பயிற்சி நிகழ்ச்சிக்கு நம்முடன் இருந்தார்கள். அங்கமர்தனா மற்றும் மேலும் சில பயிற்சிகளை அவர்களுடைய அதிகாரிகள் மற்றும் படைகளுக்கு கற்றுக்கொடுக்க பயிற்சிபெற்றார்கள். சியாச்சின் (Siachen) மற்றும் பிற இடங்களில் இருந்த நமது வீரர்களை நான் சந்தித்தபோது, அவர்கள் இருந்த இடத்தின் கடினமான சீதோஷண நிலை, நிலப்பரப்பு, மற்றும் சந்திக்கவேண்டிய சவாலான சூழ்நிலைகளுக்கு, இப்படிப்பட்ட பயிற்சி அவர்களுக்கு அவசியம் என நினைத்தேன். இது அவர்களுக்கு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதனால்தான் தலைவர்கள் மற்றும் பிற அதிகாரிகளிடம் பேசினோம், அவர்கள் இந்தப் பயிற்சி நிகழ்ச்சிக்கு வழிவகை செய்தார்கள்.

இந்திய இராணுவத்திற்கு ஹட யோகா பயிற்சி நிகழ்ச்சி

 

சமீபத்தில் இந்திய எலும்பியல் மருத்துவர் சங்கத்தின் வருடாந்திர IOACON மாநாட்டில் நான் பேசினேன், அதில் ஐந்தாயிரம் மருத்துவர்கள் கூடியிருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு நரம்பியல் ஆராய்ச்சியாளர் மற்றும் மயக்கமருந்தியல் முனைவருடன் ஞாபகம் மற்றும் சுயநினைவு குறித்து ஹார்வேர்டு மெடிக்கல் ஸ்கூலில் நான் பேசினேன். மருத்துவத் துறையின் தலைவர்கள் கூட முன்பு எப்போதும் இல்லாத விதமாக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இவற்றை நான் சொல்கிறேன்.

IOACON மாநாட்டில் டாக்டர் ராஜசேகரனுடன் சத்குரு உரையாடியபோது

 

இந்த அளவு நாம் மக்களை சென்றடையும்போது, இது வேகத்தை குறைப்பதற்கான நேரமல்ல. கடந்த சில மாதங்களாக நம் மொழிபெயர்ப்பு வேலைகளை நாம் பெரிய அளவில் அதிகப்படுத்தி வருகிறோம். இந்திய மொழிகளிலும் பிற சர்வதேச மொழிகளிலும் மொழிபெயர்த்து ஆங்கிலம் பேசாத ஜனத்தொகைக்கு இந்த சாத்தியம் கிடைக்கும்விதமாகச் செய்ய விரும்புகிறோம். இன்னர் எஞ்ஜினியரிங் ஆன்லைன் நிகழ்ச்சி அனைவரையும் சேரும் விதமாக நாம் செய்யவேண்டும். சத்குரு செயலியை அப்கிரேடு செய்து, மக்கள் பார்க்க விரும்புவதை அதிகமாக பரிமாறவிருக்கிறோம்.

நான் ஆசிரமம் திரும்பியதிலிருந்து, இடைவிடாது பல சந்திப்புகள் நடந்துள்ளது. மண்டல ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்தோம், செயற்குழு சந்திப்பு, இன்னர் எஞ்ஜினியரிங் ஈஷாங்காக்களை சந்தித்தோம். இன்று உலகம் முன்பு எப்போதும் இல்லாத விதத்தில் தயாராக இருக்கிறது என்று அவர்களிடம் சொன்னேன். இதுதான் அனைவருக்கும் இதை கொண்டுசேர்ப்பதற்கான நேரம். நாம் அதிக காலம் காத்திருந்தால், இப்போது இருக்கும் இதே வாசல்கள் நமக்கு இருக்காது. தற்போது நான் வேகமாக முன்னே செல்கிறேன், ஆனால் ஒரு நிறுவனமாக ஈஷா அந்த வேகத்திற்கு இன்னும் வரவேண்டியிருக்கிறது. ஆசிரமத்தின் ஒருவார பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம், அது தன்னார்வத் தொண்டர்கள் பல செயல்களை நடத்தவும், ஆசிரமத்தின் வீரியத்தை அவர்கள் உள்வாங்கவும் வழிவகுக்கும்.

ஈஷா மண்டல ஒருங்கிணப்பாளர்களை சத்குரு சந்தித்தபோது

 

ஈஷா அறங்காவலர்களை சத்குரு சந்தித்தபோது

 

இன்னர் எஞ்ஜினியரிங் ஈஷாங்காக்களை சத்குரு சந்தித்தபோது

 

நான் பார்ப்பது என்னவென்றால், நம்முடன் செக்யூரிட்டி பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் கூட, இவ்விடத்தில் இருப்பதால் மாறியிருக்கிறார்கள். ஆசிரமத்தில் இருக்கும் அனைவரும் முழு ஆசிரமத்திற்கும் பொறுப்பேற்று, எல்லாவற்றுக்கும் எப்படி பங்களிப்பது என்று பார்க்கவேண்டும் என நான் விரும்புகிறேன். அதோடு இன்னர் எஞ்ஜினியரிங் நிகழ்ச்சியின் முன்னுதாரணமாக நமது யோகா ஆசிரியர்கள் இருக்கவேண்டும். முழுத்தீவிரத்தில் இல்லாமல் அவர்கள் வேறெப்படியோ ஒருக்கணமும் இருக்கக்கூடாது. அனைவரும் முழுத்தீவிரத்துடன் தீயாய் எரியவேண்டும், அதுதான் எல்லாவற்றையும் நிகழ்த்தத் தேவைப்படுகிறது. அன்று சில ஹட யோகா ஆசிரியர் பயிற்சி மாணவர்களை நான் சந்தித்தபோது, அவர்களிடமும் அதே போன்ற தீவிரத்தைக் கண்டது மகிழ்ச்சி.

ஈஷா ஹடயோகா ஆசிரியர் பயிற்சி மாணவர்களுடன் சத்குரு

 

நான் வலியுறுத்தும் இன்னொரு விஷயம் நேர்மையும் உறுதியும். ஈஷாவில் இருக்கும் எவரிடமும், எந்த விதத்திலும், துளிகூட எந்த பிறழ்வும் இல்லாதிருக்கவேண்டும். இது எப்படி என்றால், இன்று கைலாயத்திலிருந்து நீங்கள் ஒரு சிறு கல்லை எடுத்து, நாளை கைலாய மலையே சென்னையில் இருக்கக்கூடும். ஆன்மீக செயல்முறை துடிப்பாக, உயிரோட்டமாக, வருங்கால சந்ததியினருக்கு தூய்மையான வடிவத்தில் கிடைக்கும்விதமாக இருக்கவேண்டும் என்றால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்கவேண்டும்.

உங்களில் ஒவ்வொருவரும் இதற்குத் தயாராகி, இந்த சாத்தியத்தை பூமியின் ஒவ்வொரு மனிதருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும்

ஈஷாவில் இருக்கும் அனைவரும், இப்போதிலிருந்து நூறு வருடங்களுக்கு தொலைநோக்குடன் பாருங்கள் - நாம் சாதிக்க விரும்புவது என்ன? உலகிற்கு நாம் எப்படி பங்களிக்க விரும்புகிறோம்? ஈஷாவின் கலாச்சாரம் முற்றிலும் தூய்மையாக இருப்பதை நாம் எப்படி உறுதிசெய்யப் போகிறோம்? இந்த ஆன்மீக சாத்தியத்தை அனைவருக்கும் கொண்டுசேர்க்க, நீங்கள் அனைவரும் உங்களை மேம்படுத்தி, உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது.

முன்பு எப்போதும் இல்லாத விதத்தில் இன்று உலகம் ஆன்மீக செயல்முறைக்காக தாகத்துடன் இருக்கிறது. உங்களில் ஒவ்வொருவரும் இதற்குத் தயாராகி, இந்த சாத்தியத்தை பூமியின் ஒவ்வொரு மனிதருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

உங்களால் முடிந்த விதங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்குபெறுவதற்கான வாய்ப்பு இது. உலகைத் தொடவும் மாற்றம் ஏற்படுத்தவும் தொடர்பில் இருங்கள். மிகவும் வல்லமை வாய்ந்த இந்த தலைமுறையையும் மிக அற்புதமான தலைமுறையாக்கிடுங்கள். இதனை நாம் நிகழச்செய்வோம்.

அன்பும் அருளும்