பக்தி எனும் தீ! - சிவாங்கா

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், பக்தியெனும் நெருப்பை நம் நெஞ்சில் பற்றவைப்பதன் முக்கியத்துவம் பற்றியும், இவ்வருடம் துவங்கப்பட்டிருக்கும் சிவாங்கா சாதனாவில் எப்படிப்பட்ட பக்தி வெளிப்பட வேண்டும் என்பது பற்றியும் சத்குரு விளக்குகிறார்...
 
 
 
 

பெண்களுக்கான சிவாங்கா சாதனா என்பது, லிங்கபைரவி தேவியின் அருளை பெண்கள் அனுபவமாய் உணர்ந்திடக்கூடிய ஒரு 21-நாள் சாதனாவாகும். இந்த சாதனாவிற்கான தீட்சைநாள் ஜனவரி 18, 2020.

ஆண்களுக்கான சிவாங்கா சாதனா என்பது, தியானலிங்கத்தின் சக்தியதிர்வுகளை ஒருவர் கிரகிக்கக்கூடிய திறனை மேம்படுத்தும் ஒரு 42-நாள் சாதனாவாகும்.

பக்தியின் நெருப்பு உங்களுக்குள் இல்லையென்றால், வாழ்க்கையை நீங்கள் மேடு பள்ளம், இரவு பகல், இருள் வெளிச்சம், ஆரோக்கியம் சுகவீனம், இன்பம் துன்பம் என்றுதான் அனுபவிப்பீர்கள். பக்தி நெருப்பைத் தனக்குள் பற்ற வைத்திருப்பவருக்கு இரவு பகல், இருள் வெளிச்சம், மேடு பள்ளம், இன்பம் துன்பம், என்பதெல்லாம் கிடையாது. இந்த உலகத்தின் மற்ற உயிர்கள் அனைத்தும் அனுபவிக்கும் இவற்றிலிருந்து மனிதனை விடுவிப்பது பக்தியெனும் நெருப்பு மட்டும்தான். இவற்றை புழுக்கள், பூச்சிகள், பறவைகள், செடிகள் என்று எல்லா உயிர்களும் அனுபவிக்கிறது. அதில் தவறேதும் இல்லை, ஆனால் அவை படைப்பின் அங்கமாக வாழ்கின்றன. நீங்கள் இங்கே படைப்பவரின் அங்கமாக வாழ விரும்பினால் உங்கள் நெஞ்சில் பக்தியின் நெருப்பு இருக்க வேண்டும்.

உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் உறுதியாய் இருக்கும் நெருப்பாக அது இருக்க வேண்டும். இன்று உணவருந்தினாலும் அருந்தாவிட்டாலும், நினைத்தபடி வாழ்க்கை நடந்தாலும் நடக்காவிட்டாலும், விரும்பியபடி மக்கள் பழகினாலும் பழகாவிட்டாலும், பூமி சரியாகச் சுழன்றாலும் சுழலாவிட்டாலும், தளராத நெருப்பாக அது இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பக்தி நெருப்பைத் தன் நெஞ்சில் வளர்த்திருக்கும் ஒருவரை வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் தொடமுடியாது.

சிவாங்கா என்றால் சிவனின் அங்கம் என்று பொருள். நாம் இப்போது துவங்கியிருக்கும் சிவாங்கா சாதனா என்பது, படைப்பின் அங்கமாக இருப்பதிலிருந்து படைத்தவனின் அங்கமாக இருப்பதை நோக்கி முன்னேறும் பயணமாகும். படைப்பின் மூலம் மனிதர்களுக்குள் மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிருகளுக்கு மூலமும் ஒன்றுதான், ஆனால் மனிதர்களான நம்மால்தான் அதை அனுபவத்தில் உணரமுடியும். இதுதான் நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பாக்கியமும், சவாலும், வாய்ப்பும் ஆகும். நம்மால் இப்பயணத்தை ஒரு விழிப்புணர்வான செயல்முறையாகச் செய்யமுடியும். வேறெந்த உயிரனத்தாலும் இப்படிச் செய்யமுடியாது. மற்ற உயிரினங்களுக்கும் இதே மூலப்பொருள் இருந்தாலும், அவற்றால் இதை உணர்ந்துகொள்ள முடிவதில்லை. உங்கள் நெஞ்சில் பக்தி நெருப்பை ஏற்றினால், இங்கே பூமியின் ஒரு பகுதியாக வாழமாட்டீர்கள்; சிவனின் ஒரு அங்கமாக, பாகமாக வாழ்வீர்கள்.

மக்களின் இதயங்களை பக்தித்தீயால் பற்றவைக்கும் இந்த கலாச்சாரம் இங்கே காலம் காலமாக இருந்திருக்கிறது. ஆனால் தற்போதைய காலத்தில், தனக்குக் கொஞ்சம் புத்தி இருப்பதாகக் கருதும் எவரும், தான் சரியாகச் சிந்திப்பதாகக் கருதும் எவரும், பக்தியின் பக்கமே நெருங்க விரும்புவதில்லை. அந்த அளவிற்கு பக்தர்கள் ரசிகர்மன்றங்களைப் போல நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். பக்தர்கள் மென்மையானவர்களாக, புத்தியுடையவர்களாக இருக்கும் புதிய கலாச்சாரத்தை உருவாக்க இதுதான் சரியான நேரம். இந்தப் புதிய கலாச்சாரத்தில், ஒருவர்மேல் ஒருவர் ஏறிக்கொண்டு, ஒருவரை ஒருவர் மிதித்துக்கொண்டு, ரசிகர்களைப் போல எனக்கு அருகில் வர முயற்சி செய்வது இருக்கக்கூடாது. அப்படிச் செய்வதெல்லாம் ரசிகர் மன்றங்களில்தான் நடக்கும். அங்குதான் மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதில் சிறிதும் அக்கறை இல்லாமல், எப்படியாவது அவர்களுடைய சூப்பர் ஸ்டாரைத் தொட்டுவிட விரும்புவார்கள். நான் சூப்பர் ஸ்டார் இல்லை, பூமியில்தான் இருக்கிறேன். ஸ்டாரெல்லாம் மேலே வானத்தில் இருக்கின்றன.

எனவே நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும், இதைச் சரிசெய்து கொள்வோம். ஏனென்றால் சில பக்தர்கள் நடந்துகொள்ளும் விதத்தால்தான், தங்களை கொஞ்சம் புத்தியுள்ளவர்கள் என்று கருதுபவர்கள் எல்லோருக்கும் பக்தி என்றாலே அலர்ஜியாக இருக்கிறது. நாம் இதைச் சரிசெய்ய வேண்டும். நான் இதன்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன், நீங்களும் இதை மதித்தால், பக்தர்கள் சரியான கலாச்சாரத்தை உருவாக்குவதை நீங்கள் உறுதி செய்திட வேண்டும். இதை நீங்கள் செய்யாவிட்டால், பக்தி எனும் தன்மையுடன் எவரும் எவ்விதத்திலுமே தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தங்களுக்கு வேண்டியவற்றை அடைய கத்தி, கூச்சலிட்டு, ஒருவர்மேல் ஒருவர் ஏறும் பித்துப்பிடித்த கூட்டமாகவே மக்கள் பக்தர்களைப் பார்ப்பார்கள்.

சிவாங்கா ஓர் அழகிய செயல்முறையாக வளரும். ஆனால் மற்றவர்கள் பக்தித்தீயை உணர வழி செய்கிறீர்களா, இல்லை பக்தியைப் பற்றி வெறுப்படைய வழி செய்கிறீர்களா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. இது நீங்கள் சரியாக நடத்த வேண்டிய பெரும்பொறுப்பும், பெருமைக்குரிய சிறப்புரிமையும் ஆகும்.

பக்தர்களாக நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும், இன்னும் கூர்மையாக உணரும் தன்மையை உங்களுக்குள் கொண்டுவர வேண்டும். இப்படிப் புதிய நிலையில் கூர்-உணர்வுத்திறனும் பக்தியும் கொண்டு, இந்த புதிய கலாச்சாரம் மிகவும் அழகானதாக, அனைவரையும் கவரும்விதமாக விளங்க வேண்டும். நம் கலாச்சாரம் இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. காரணமே இல்லாமல் நெருப்பாக எரிவதற்குத்தான் மனித நெஞ்சம் ஏங்கிக்கொண்டிருக்கிறது. காரணமில்லாமல் பற்றி எரியாவிட்டால், ஹார்மோன்களால் பற்றவைப்பீர்கள். பக்தி இல்லாவிட்டால், யாரிடமாவது அட்டைபோல் ஒட்டிக்கொள்ள விரும்புவீர்கள். பக்தி இருந்துவிட்டால், நீங்கள் விரும்புவதெல்லாம் உங்களுக்குள்ளேயே மிக அழகாக நடந்துகொண்டிருப்பதை உணர்வீர்கள். உங்களுக்குள்ளேயே அவ்வளவு நடந்துகொண்டிருப்பதால், உங்களைச் சுற்றியிருக்கும் வேறு எதையோ உங்களுக்குப் பார்க்கக்கூட நேரமிருக்காது.

நாம் துவங்கியிருக்கும் இந்த சிவாங்கா சாதனை மிகப்பெரிய இயக்கமாக வளரப் போகிறது. மக்களை ஈர்க்கும் விதமாக இதை சரியான திசையில் வளரச் செய்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தவறான செயல்களைச் செய்வதால் மற்றவர்கள் இதை வெறுத்து விலகிவிட்டால், ஒரு மகத்தான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காமல் செய்துவிடுவீர்கள். ஆன்மீகப் பாதையில் நடப்பவர்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. நீங்கள் தவறாகச் செயல்படுவதால் ஆன்மீக சாத்தியத்தைப் பலருக்கும் புறக்கணிக்கிறீர்கள். ஆன்மீகத்தைப் பற்றிய தவறான கருத்தை ஏற்படுத்துவது, ஒருவர் தன் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகவும் எதிர்மறையான செயலாகும். ஒரு ஆன்மீக வாய்ப்பை நீங்கள் உருவாக்க முடிந்தால், அது மகத்தானது. அப்படிப்பட்ட வாய்ப்பை உருவாக்க முடியாவிட்டால், அதற்குத் தடையாக இல்லாமல் இருந்தால், அது பரவாயில்லை. ஆனால் நாம் செயல் செய்யும் விதத்தால் அவர்களுக்கு ஆன்மீக வாய்ப்பு கிடைப்பதைத் தடுத்து அவர்களை விலகிப்போக வைத்தால், அது மிகப்பெரிய தவறாகிவிடும்.

இந்த இயக்கத்தை நல்ல முறையில் கொண்டு செல்லும் பொறுப்பை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறேன். அடுத்த வருடம் இங்கு ஆராயிரத்திற்கு பதிலாக 60 லட்சம் மக்கள் இருப்பார்கள். அப்போது பக்தர்களை, கட்டுப்படுத்த முடியாத முட்டாள்க் கூட்டம் என்று மக்கள் எண்ணிவிடக் கூடாது. அனைவரும் பக்தர்களை மிகுந்த மரியாதையுடனும் மதிப்புடனும் பார்க்கவேண்டும். அப்படிச் செய்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இதைச் சரியாக நிகழத்துவது மிகவும் முக்கியம், இதை நிகழச் செய்யுங்கள்!

அன்பும் அருளும்

ஆசிரியர் குறிப்பு:இந்த மஹாசிவராத்திரியில், பக்தி எனும் தீ உங்கள் இதயத்தில் பற்றிக்கொள்ள அனுமதித்து, சிவனின் ஓர் அங்கமாக மாறுங்கள்!

ஆண்களுக்கான சிவாங்கா சாதனா, இருப்பின் அடிப்படை மூலமான ஷிவா அல்லது ஒன்றுமில்லாத தன்மையுடனான ஒருவரின் விழிப்புணர்வு தொடர்பை அதிகரிக்கும் ஒரு சக்திவாய்ந்த 42-நாள் சாதனாவாகும்.

2020 ஜனவரி 10 அன்று உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் தீட்சை வழங்கப்பட உள்ளது. 2020 பிப்ரவரி 21, மஹாசிவராத்திரியன்று ஈஷா யோக மையத்தில் சாதனா நிறைவுறுகிறது.

மேலும் தகவல்களுக்கு, தொடர்புகொள்ளவும் +91 8300083111 or email info@shivanga.org or visit www.shivanga.org.

பதிவுசெய்ய