துறந்தவரெல்லாம் துறவியல்ல
தான்சேன் எனும் ஞானோதயமடைந்த துறவி ஒருவர் தன் சீடரான இன்னொரு துறவியுடன் நடைபயணமாகச் சென்றுகொண்டு இருந்தபோது நடந்த இச்சம்பவத்தை நீங்கள் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால் இக்கதையை விளக்கும் சத்குரு, மனதின் தன்மை குறித்த சூட்சுமம் ஒன்றைச் சொல்கிறார், தவறவிட்டுவிடாதீர்கள்!
ஜென்னல் பகுதி 3
தான்சேன் எனும் ஞானோதயமடைந்த துறவி ஒருவர் தன் சீடரான இன்னொரு துறவியுடன் நடைபயணமாகச் சென்றுகொண்டு இருந்தபோது நடந்த இச்சம்பவத்தை நீங்கள் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால் இக்கதையை விளக்கும் சத்குரு, மனதின் தன்மை குறித்த சூட்சுமம் ஒன்றைச் சொல்கிறார், தவறவிட்டுவிடாதீர்கள்!
ஒரு நாள் தான்சேன் இன்னோர் இளம் துறவியுடன் நடந்துகொண்டு இருந்தார். வழியில் நதி ஒன்று குறுக்கிட்டது. கரையில் நின்றிருந்த ஓர் இளம்பெண், ‘’என்னை அக்கரையில் கொண்டுவிட முடியுமா?’’ என்று தான்சேனிடம் கேட்டாள். அவர் அவளைச் சுமந்து நதியின் மறுகரையில் இறக்கி விட்டார்.
சில மணி நேரங்கள் கழித்து தான்சேனுடன் இருந்த இளம் துறவி அவரிடம் திடீரென்று கேட்டார், ‘‘துறவிகள் பெண்களைத் தீண்டக் கூடாது என்றல்லவா எண்ணியிருந்தேன்?’’
தான்சேன் சிரித்தார்: ‘‘அவளை நான் எப்போதோ இறக்கிவிட்டேனே? இன்னமும் நீ ஏன் சுமக்கிறாய்?’’
Subscribe
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் இவ்வளவு போராட்டங்களைச் சந்திப்பதற்குக் காரணமே அவர்கள் தங்கள் மனதின் இயல்பைப் புரிந்துகொள்ளத் தவறியதுதான்.
மனதிலிருந்து ஓர் எண்ணத்தை வலுக்கட்டாயமாக வெளியே துரத்தப் பார்த்தால், அது அங்கேயே நங்கூரம் பாய்ச்சி நிற்கும். இது மனதின் அடிப்படைக் குணம். இந்த மனதில் கூட்டலும் பெருக்கலும் நடக்குமே தவிர, கழித்தலோ, வகுத்தலோ நடப்பது இல்லை. ஏதோ ஒன்றை நீக்கப் பார்த்தால், அங்கே கூடுதலாக ஒன்றுதான் வந்து சேரும். எந்தக் குறிப்பிட்ட எண்ணத்தையும் பறித்துப் போடுவதற்கு முயற்சி செய்வதை விடுத்து, உயர்ந்த ஒன்றில் கவனத்தை வைத்தால், தேவையற்றது எல்லாம் தானாகவே ஆவியாகி மறைந்துவிடும்.
துறவி என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரைமுறைகளை வகுத்துக் கொண்டு, அவற்றை விறைப்பாகக் கடைப்பிடிப்பதால் மட்டும் ஒருவர் துறவியாகிவிட முடியாது. துறவியாக இருப்பதற்கு ஒரு பெண்ணைத் தொடவே கூடாது என்று சபதம் எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை. அற்பமான சுகங்களைத் தாண்டி வாழ்க்கையில் மேன்மையான ஒன்றில் முழுமையாக கவனம் வைத்துப் பயணம் செய்கையில், ஆணா, பெண்ணா என்று பேதப்படுத்திப் பார்த்துக் கொண்டு இருப்பதுகூட நேராது.
தான்சேன் உதவி செய்தபோது, அது ஆணா, பெண்ணா என்பதில் கூட கவனம் வைத்திருக்கமாட்டார். பெண்ணைத் தவிர்க்கவேண்டும் என்று நினைத்த இளம் துறவியோ, அதிலேயே சிக்கிப்போய் அந்தப் பெண்ணை தன் மனதிலேயே சுமந்து கொண்டு வந்திருக்கிறார். இது ஆண், பெண் தொடர்பான அம்சமல்ல. இது இயல்பைப் புரிந்துகொள்வது தொடர்பான அம்சம்.
மலை உச்சிக்குப் போகவேண்டும் என்றால், அடிவாரத்தை கடந்து தான் போகவேண்டும். ஆனால், உச்சியில் உங்கள் கவனம் முழுமையாக இருந்தால், அடிவாரத்தைக் கடக்கையில், அங்கே என்ன குப்பைகள் கிடக்கின்றன என்பதில் உங்கள் கவனம் போகாது!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418