துறவு, சமூக சேவை - எது சிறந்தது?
ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வாழ்க்கை பற்றியும், தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அப்படி சிலர் கேட்ட கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள் இங்கே...
ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வாழ்க்கை பற்றியும், தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அப்படி சிலர் கேட்ட கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள் இங்கே...
சத்குரு:
துறவி என்ற சொல்லே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் ஒன்று. அவர்கள் உண்மையில் எதையும் துறந்தவர்கள் இல்லை. இன்னும் பெரிதாக எதையோ தேடிச் சென்று இருக்கிறார்கள். உங்கள் அன்றாட வாழ்க்கையில் உங்களுக்குப் பெரிதாக தோன்றுகின்ற விஷயங்கள் அவர்களுக்குப் பெரிதாக தோன்றவில்லை.
Subscribe
சிலர் வேலைக்காக அமெரிக்காவிற்கு செல்கிறார்கள். அவர்கள் தங்கள் தாய், தந்தை, தேசம் அனைத்தையும் விட்டுவிட்டுப் போவதால் அவர்களை துறவி என்று சொல்வீர்களா? இல்லை இங்கு கிடைப்பதைவிட பெரிதாக ஏதோ கிடைக்கிறது என்பதால் அவர்கள் அங்கே செல்கிறார்கள். அதைப்போல ஒரு பெரிய விஷயத்திற்காக சிலர் சராசரி வாழ்க்கையை விட்டுவிட்டு ஒரு தேடுதலில் இறங்குகிறார்கள். நீங்கள் சிறிய சொத்து சம்பாதிக்க விரும்புகிறீர்கள். அவர்கள் பெரிய சொத்தைத் தேடிப்போகிறார்கள். தினமும் காலையில் ஒரு பிளேட் பொங்கல் சாப்பிடுவதே சிலரைப் பொறுத்தவரையில் பெரிய சாதனையாக இருக்கிறது. சிலருக்கோ மிகப்பெரிய லட்சியங்கள் இருக்கின்றன.
இத்தகைய துறவிகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும் இருந்தார்கள். அவர்கள் கடவுள் நம்பிக்கையையும், மூடப் பழக்க வழக்கங்களையும் கேள்வி கேட்டார்கள். மத வளர்ச்சிக்கு அவர்கள் தடையாக இருப்பார்கள் என்று கருதி அவர்களை உலகின் பல பகுதிகளிலும் அழித்துவிட்டார்கள். எனவே இந்தியாவைப் போல் துறவிகள் உலகின் பல பகுதிகளில் இருந்தாலும் மதம் சார்ந்த தீவிரவாதம் வளர்ந்தபோது அவர்கள் அதற்கு பலியானார்கள்.
சத்குரு:
என்னைக் கேட்டால் சேவையே தேவையில்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பேன். உலகில் யாருக்காவது ஏதாவது கஷ்டம் இருந்து கொண்டு இருந்தால்தான் நீங்கள் சேவை செய்ய வேண்டும். நன்றாக இருப்பவரிடம் போய், உங்களுக்கு சேவை செய்கிறேன் என்று நீங்கள் சொன்னால் அவர்கள் உங்களிடம் சண்டைக்கு வருவார்கள். சிரமத்தில் இருப்பவர்களுக்கு சேவை செய்தால் அவர்கள் உங்களை கும்பிடுவார்கள். எல்லா சேவைகளும் ஒருவிதத்தில் குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள்ளேயே நின்றுவிடும். துறவு அதனையும் கடந்தது.
உலகப் பொருளாதார மாநாட்டில் நான் கலந்து கொண்டபோது சிலர் என்னிடம் வந்து, "நீங்கள்தானே மரம் நடுகிற பணியை செய்பவர். பல லட்சம் மரங்களை நடுபவர் நீங்கள்தானே" என்று கேட்டார்கள். நான் அவர்களிடம், "மரம் நடுவது என் வேலை இல்லை. மனிதர்கள் உள்நிலையில் மலர வைப்பதுதான் என் வேலை" என்று சொன்னேன். மனிதர்களை மலர வைப்பது துறவிகளுடைய வேலை. அந்த நோக்கம் எல்லோருக்கும் இருந்திருக்கும் என்றால் துறவியாக வேண்டிய அவசியமே கிடையாது. எனவே உள்நிலையை மலரச் செய்வதே உயர்ந்த பணி.
சத்குரு:
நீங்கள் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ வசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் அப்பா அம்மாவின் புகைப்படங்களை பெரிதாக வீட்டில் மாட்டி வைத்திருக்கிறீர்கள். இவ்வளவு பெரிய புகைப்படம் வைத்திருக்கிறீர்களே அவ்வளவு அன்பா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. ஒரு மனிதன் தன் அன்பை வெளிப்படுத்த எவ்வளவோ வழிகளை பின்பற்றுகிறான். அதில் புகைப்படம் மாட்டி வைப்பதும் ஒன்று. அதுபோல் தன் பக்தியை மனிதன் எவ்வளவோ வழிகளில் வெளிப்படுத்துகிறான். அதில் திருநீறு பூசுவதும் ஒன்று.
திருநீறு பூசுவதற்கென்று விஞ்ஞான பூர்வமாக காரணங்கள் உண்டு. ஒரு மனிதனின் கிரகிக்கிற தன்மையை மேம்படுத்த திருநீறு பூசுவது பெரிதும் உதவுகிறது. இந்த வாழ்க்கையை பல விதங்களில் கிரகித்து உள்வாங்க முடியும். காமமாகவோ, பக்தியாகவோ வெவ்வேறு நிலைகளில் மனிதர்கள் வாழ்க்கையை கிரகித்துக் கொள்கிறார்கள். உயர்ந்த தன்மையில் வாழ்க்கையின் அம்சங்களை கிரகிக்கும் பொருட்டு நெற்றி, கழுத்து போன்ற சில இடங்களில் திருநீறு பூசுவது விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் உருவான பழக்கம். காலப்போக்கில் ஒரு துளி திருநீறை வைக்கச் சொல்லும் இடத்தில் நிறைய பூசிக்கொள்வது என்பது பழக்கமாகிவிட்டது என்றாலும் திருநீறு பூசுகிற சம்பிரதாயம் பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் நிகழ்வதாகும்.