ஒரு குழந்தைக்கு அறிவுறுத்தல் கையேடு தேவையில்லை

ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படி வாழ்வது என்பதைப் படிப்படியாக விளக்கும் கையேடு ஏதேனும் உள்ளதா? இதோ, அது குறித்த சத்குருவின் கூற்று....
A Child Needs No Instruction Manual
 

கேள்வி: ஒரு குழந்தை பிறக்கும்போது, விளக்கக் கையேடுடன் வருவதில்லை என்று யாரோ ஒருவர் கூறினார். ஒரு மனிதர் பிறந்தது முதல் இறக்கும் வரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கையேடு ஒன்றினை எழுதவேண்டும் என்று ஒருவர் அனுமானித்தால், அப்படிப்பட்ட ஒரு விஷயம் என்னவென்று இருக்கும்?

சத்குரு: வெற்று புத்தகம் நன்றாக இருக்கும். இப்போது நீங்கள் எல்லாவற்றையும் இயந்திரமாக மாற்ற முயற்சிக்கிறீர்கள். ஏதோ ஒரு வழியில் பயனுள்ளது என்று நீங்கள் நினைக்கும் விதத்தில் அவரை "இயக்குவதை" விட, ஒரு மனிதருக்கு மற்ற பரிமாணங்கள் உள்ளன. ஒரு மனிதர் யாருக்கும் பயனுடையவராக இருக்கவேண்டிய தேவையில்லை. ஒரு மாட்டு வண்டியுடன் பூட்டப்பட்ட காளைகள், காட்டில் சுற்றித் திரியும் காட்டு மான்களைப் பார்த்து, “ஓ, அவர்கள் யாருக்கும் பயன்படாமல் தங்கள் வாழ்க்கையை எப்படி வீணடிக்கிறார்கள், இது சிறப்பல்ல,” என்று எண்ணுகின்றன. ஆனால், மான் ஆனந்தத்தில் திளைத்திருக்கிறது. நீங்கள் நுகத்தடியோடு பூட்டப்பட்டு இருக்கிறீர்கள்,

 

அதனால் உங்களுக்குள் மகிழ்ச்சி இல்லை. பயனுள்ளவராக இருக்க முயற்சிப்பதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியற்ற மனிதராக மாறினால், வாழ்வின் அனைத்து நோக்கங்களும் தோற்கடிக்கப்படுகின்றன. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது பொருளற்றது. துயரம் சுமந்திருக்கும் உங்கள் முகத்திற்கும், உலகில் நீங்கள் செய்த விஷயங்களுக்கும், ஒருவேளை அவர்கள் உங்களுக்கு சமூகரீதியாக ஒரு விருதை வழங்குவார்கள், ஆனால் வாழ்வில் அதற்கு எந்தப் பொருளும் இல்லை.

உங்களை வழிநடத்தும் நூலை கைவிடுங்கள்


மற்றவரின் புத்திசாலித்தனத்தின் வழியாக வாழ்வைப் பார்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வை அதிக புத்திசாலித்தனத்துடன் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். பிறவற்றின் தாக்கங்கள் நீக்கப்பட்டால் அவரவர் வாழ்க்கையை அறிவுடன் பார்ப்பதற்குத் தேவையான புத்திசாலித்தனம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பிரச்சனை என்னவென்றால், நீங்கள் கடந்தகால மற்றும் தற்போதைய கதாநாயகர்களால் அதிகமான தாக்கத்திற்கு உள்ளாகிவிட்டீர்கள். முடிவில், உங்கள் மனோநிலை ஒரு ரசிகர் மன்றத்தின் நிலையைப் போன்றதாகத்தான் இருக்கிறது. ரசிகர் மன்றம் என்பது மிகவும் அடிப்படையான ஒரு மனோநிலை.

குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள், அவர்கள் உங்களிடமிருந்து வரவில்லை. அவர்களை உங்களுக்குச் சொந்தமானவர்கள் என்று எப்போதும் நினைக்க வேண்டாம்.

சாதாரணமாக எந்தவொரு குழந்தையும் முழுமையான ஒரு உயிராகத்தான் வந்துள்ளது. குழந்தையை அவரது முழு திறனுக்கும் நீங்கள் வளர்க்கத்தான் முடியும். அவர்களிடமிருந்து நீங்கள் ஏதோ ஒன்றை உருவாக்க முடியாது. உங்களது இலக்கு ஒரு தென்னை மரமாக இருந்து, ஒரு மா மரம் உங்கள் தோட்டத்தில் முளைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? இது ஒரு தென்னை மரம் போல் இல்லை என்பதால், நீங்கள் எல்லா கிளைகளையும் வெட்டிவிட்டு, ஒரு கிளையை மட்டும் விட்டு வைப்பீர்கள். அது மிகவும் பரிதாபகரமான மா மரமாகவே இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம், குழந்தையை அதன் முழுமையான புத்திசாலித்தனம், உடல் நலம் மற்றும் உணர்ச்சி நலனை எட்டுமளவுக்கு பராமரித்து வளர்ப்பது. நீங்கள் குறுக்கீடு செய்யாமல் குழந்தையை வளர்க்கும்போது மட்டும்தான் இது நிகழும்.

ஒரு சுமூகமான சூழலை உருவாக்குதல்

 

குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள், அவர்கள் உங்களிடமிருந்து வரவில்லை. அவர்களை உங்களுக்குச் சொந்தமானவர்கள் என்று எப்போதும் நினைக்க வேண்டாம். அவர்கள் உங்கள் மூலம் நிகழ்ந்திருப்பது பெருமைக்குரியது. அவர்களுக்கு அன்பான மற்றும் ஆதரவான சூழ்நிலையை வழங்கும் பொறுப்பு மட்டும்தான் உங்களுக்கு உரியது. உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும், உங்கள் தத்துவங்களையும், உங்கள் நம்பிக்கை முறைகளையும், முட்டாள்தனத்தையும் குழந்தை மீது திணிக்க முயற்சிக்காதீர்கள். தனது வழியைக் கண்டுகொள்ளக்கூடிய அதற்கே உரிய புத்திசாலித்தனம் குழந்தைக்கு உண்டு. அவரது புத்திசாலித்தனம் முழுமையாக வளர தேவையான உகந்த சூழ்நிலையை நீங்கள் உருவாக்கினால், அவர் அறிந்த விதத்தில் அதை அவர் கையாள்வார்.

"எல்லாம் சரியாக நடக்குமா?" அது சரியாகவும் போகலாம், தவறாகவும் போகலாம் – அது முக்கியம் இல்லை. ஆனால் அது தவறாக நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. குழந்தை தனது சொந்த புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வளரும்போது, அவர் ஒரு தவறு செய்தால், அதைச் சரிசெய்ய அவருக்குப் புத்திசாலித்தனம் இருக்கிறது. அவர்கள் தங்கள் நல்வாழ்வை நோக்கி செயல்பட்டு, தங்கள் சொந்த வாழ்க்கைக்கு எதிராக எதிர்மறையான ஒன்றை அவர்கள் செய்யாத வரை, நீங்கள் காத்திருக்க வேண்டும். குழந்தை இருபத்தோறு வயதை எட்டும் காலம் வரை, நீங்கள் இன்னும் கர்ப்பமாக இருப்பதைப் போல உணர வேண்டும். குழந்தை உள்ளே இருந்தபோது, நீங்கள் எதுவும் செய்யவில்லை, இல்லையா? உங்களுக்கு ஊட்டம் அளித்துக்கொண்டு காத்திருந்தீர்கள். அதைப்போலத்தான் - அந்தச் சூழலை உருவாக்கிவிட்டு காத்திருங்கள்.

[Sadhguru with glasses image]