ஜென்னல் பகுதி 2

புத்தரின் ஞானோதயமடைந்த சீடரான காஸ்யபருக்கும் அவரின் எழுத்துக்களில் மட்டுமே ஊறியிருந்த ஆனந்தருக்கும் இடையே நடந்த ஒரு நிகழ்ச்சியை சத்குரு விளக்கியிருப்பதை படித்து மகிழுங்கள்.

கழுகு மலையில் புத்தரைச் சுற்றி அவருடைய சீடர்கள் கூடி இருந்தனர். புத்தர் தன் அன்னப் பாத்திரத்தையும், தன் மேல் அங்கியையும் சீடர் காஸ்யபரிடம் கொடுத்தார்.

இதைக் கண்ணுற்ற சீடர் ஆனந்தர் காத்திருந்து காஸ்யபரிடம் கேட்டார், "சரிகை வேலைப்பாடுகள் மிக்க மேல் அங்கியைத் தவிர சாக்கிய முனி வேறு என்ன கொடுத்தார்?’’

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காஸ்யபர், "ஓடு... தாமதமாகிவிட்டது, கொடி மரத்தை நீ தாங்கி முன்னே செல்’’ என்றார்.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

என்னிடம் ஒரு ராஜாங்கம் இருக்கிறது. அதை உங்களிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கிறேன். என் கிரீடத்தை எடுத்து உங்கள் தலையில் சூட்டுகிறேன். கிரீடத்தை மட்டுமா உங்களுக்கு வழங்கினேன்?

ராஜ்யத்தையே அல்லவா? அதுபோல், புத்தரின் மேல் அங்கியும், பிச்சைப் பாத்திரமும் வெறும் குறியீடுகள்தாம். அவற்றை காஸ்யபருக்கு வழங்கியதன் மூலம் புத்தர் தனது எல்லாவற்றையும் (புத்தராக உள்ளதையும் சேர்த்து) காஸ்யபருக்கு வழங்கிவிட்டதாக அர்த்தம். இந்த நுட்பத்தைப் புரியாத ஆனந்தர், சரிகை வேலைப்பாடுகளில் கவனம் வைத்துவிட்டார்.

புத்தர் தனது சீடருக்கு ஏதோ உயில் எழுதி தன்சொத்தைக் கைமாற்றிவிட்டார் என்பதுபோல் காஸ்யபரிடம் அதுபற்றிக் கேட்கிறார். எதையும் பொருள்ரீதியாக மதிப்பிட்டுப் பார்க்கும் ஆனந்தரிடம், அதை உணர்த்தும்விதமாக, ‘புத்தரின் அங்கியை விடப் பெரிதாக இருக்கும் கொடிமரத்தை எடுத்துக் கொள்’ என்று காஸ்யபர் வேடிக்கையாகச் சொல்கிறார்!

ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418