ஸ்பூனுக்குத் தெரியுமா சூப்பின் ருசி?
புத்தருடன் இருந்த அவரது சகோதரர் பிற சீடர்களைப் போல் உண்மையை உணர முடியவில்லை. இது எதனால்?
சத்குரு:
புத்தரின் சீடர், ஆனந்தர். உறவுமுறையில் அவர் புத்தருக்கு சகோதரர். அந்த உரிமையில், தான் எப்போதும் புத்தருடனேயே இருக்க வேண்டும் என்று ஆனந்தர் நிபந்தனை விதித்தார். நிபந்தனை விதிக்கிறபோது, சீடரோ, சாதகரோ, எல்லா வாய்ப்புகளையும் இழக்கிறார். “அது உன் விருப்பம்“ என்று புத்தரும் சொல்லி விட்டார்.
8 ஆண்டுகள் கழித்து ஞானம் பெற்ற பின்னர் தன் மனைவி யஷோதராவை புத்தர் பார்க்கப் போனார். என்றோ ஒரு நள்ளிரவில், தன் மனைவியையும், மகனையும், அரச பதவியையும் விட்டுவிட்டு, ஒரு திருடனைப் போல வெளியேறியதால், யஷோதரா மிகவும் வேதனையில் இருந்தாள். 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவளைச் சந்திக்கும் சமயத்தில், நீ உடன்வரத் தேவையில்லை என்றார் ஆனந்தரிடம். ஆனால் ஆனந்தர் ஒப்புக்கொள்ளவில்லை. தானும் உடன் வருவேன் என்று வலியுறுத்தினார். புத்தரும் அழைத்துச் சென்றார். புத்தரைக் கண்ட யஷோதரா சீறினாள். அவரை ஒரு கோழை என்று ஏசினாள். “உன் கணவன் இப்போது இல்லை. இங்கே இருப்பது முற்றிலும் புதிய மனிதன்” என்றார் புத்தர். யஷோதரா கேட்கவில்லை, பிறகு தன் மகனை அழைத்து, “உன் அப்பா உனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறார் என்று கேள்” எனப் பணித்தாள். புத்தர் ஆனந்தரை அழைத்து தன் திருவோட்டைக் கொண்டுவரச் சொன்னார். அதனை மகனிடம் கொடுத்து, “உனக்கு முழுச் சுதந்திரம் தருகிறேன். நீ அரசனாகித் துன்பப்பட வேண்டியதில்லை. இந்தத் திருவோடுதான் என்னுடைய சொத்து” என்று கையில் தந்ததும் எட்டு வயதுச் சிறுவன் சந்நியாசம் பெற்றான்.
புத்தர் மறையும்போது, ஞானமடைந்த சீடர்கள் மட்டுமே உடனிருந்தனர். ஆனந்த தீர்த்தர் வெளியில் இருக்கவே நேர்ந்தது. ஏறக்குறைய 40 ஆண்டுகள் கூடவே இருந்தும் நிபந்தனை விதித்ததால், ஆனந்தர் அந்த வாய்ப்பை இழந்தார். வெளியில் இருக்க நேர்ந்த அவர் கதறி அழுதார். ‘‘இவ்வளவு காலமும் கூடவே இருந்தேனே! ஏன் எனக்கு ஞானம் கிட்டவில்லை? அவர் உடலை விடும் இந்த நேரத்தில் வெளியே நிற்கிறேனே!’’ என்று புலம்பினார்.
அதுசரி, ரசத்துக்குள் இருப்பதாலேயே கரண்டி ஒருபோதும் ரசத்தைச் சுவைப்பதில்லையே!
Subscribe