ஈஷா யோக மையத்திலுள்ள ஸ்பந்தா ஹாலைப் பற்றியும், தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியின் நுண்ணிய அமைப்புடன் அது எப்படி பிண்ணிப் பிணைந்துள்ளது என்று சத்குருவின் வார்த்தைகளில் இங்கே.

சத்குரு: ‘ஸ்பந்தா’ என்றால் மூலமான அல்லது ஆதியானது என்று சொல்லலாம். இந்த கூடத்தின் அமைப்பு முதலில் நமது பாவ ஸ்பந்தனா மற்றும் சம்யமா பயிற்சிகளுக்காக உருவாக்கியது – முக்கியமாக சம்யமாவை விட பாவ ஸ்பந்தனாவிற்கு அதிகம். இது ஒரு உருக்காலை போன்றது. இங்கே பாவஸ்பந்தனா பயிற்சி மிக சுலபமாக நடத்த முடியும் ஏனென்றால் இயற்கையாகவே அதற்காக பிரதிஷ்டை செய்தது. உருக வைக்கக் கூடியது.

ஸ்பந்தா ஹாலும், லிங்க பைரவியும் ஒரே திசையில் உள்ளன. ஸ்பந்தா ஹாலை நிர்மாணிக்கும் பொழுது லிங்க பைரவியைப் பற்றி நான் பேசியிருக்கவில்லை. நான் நிறைய பேரை வற்புறுத்த வேண்டியிருந்தது, “இதுதான் சரியான கோணம், இந்த மூலையில்தான் ஸ்பந்தா ஹால் இருக்க வேண்டும்” என்று. எல்லோரும் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டுமென்றெல்லாம் சொன்னார்கள். நான் விடாப்பிடியாக, “இப்படித்தான் இருக்க வேண்டும் ஏனென்றால் இது ஒரு தொகுப்பு முறையின் பகுதி” என்றேன்.

தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யும் பொழுது, தென்மேற்கு மூலை லிங்க-பைரவியின் இடம் என்பது என் மனதில் இருந்தது. ஓரிரண்டு முறை அதைப் பற்றி பேசியும் இருக்கிறேன் என நினைக்கிறேன் ஆனால் அதற்குத் தேவையான வழிவகையும் இல்லை, நேரமும் இல்லை ஆனால் உண்மையாக அப்படித்தான் திட்டம்,

தியானலிங்கம் கருவறை போன்றது. அது தேவியின் யோனி. யோனி என்றால் கருவறை. தனித்துவம் வாய்ந்த சம்ஸ்கிருத மொழியில் பெண்ணுறுப்புக்கு தகுந்த வார்த்தை இல்லை. எப்பொழுது ஒருவரின் புத்தி இனப்பற்றில் சிக்கி திசை மாறுகிறதோ, அப்பொழுது யோனியை ஒரு தனி இனப்பெருக்க உறுப்பாக பார்க்க வைக்கும். இல்லையேல் யோனி என்றால் கருவறை. நாம் ஒன்றுமே செய்ய இயலாமல் இருந்த காலத்தில் நம்மை சுமந்த ஒரு உறுப்பு என்று தெய்வீகமாக பார்த்த காலம் உண்டு. அந்தத் தருணங்களில், இயற்கை நம்மை அந்த இடத்தில் வைத்து நம்மைப் பேணி பாதுகாத்தது. இது தெய்வீகத்தன்மை வாய்ந்த ஒரு இடம்.

எப்பொழுதுமே – சிவ-சக்தி தத்துவத்தில், லிங்கமும் யோனியும் சேர்ந்திருக்குமிடத்தில், கருவறையின் உள் பக்க காட்சிதான் நாம் பார்ப்பது. ஆதலால்தான் பெண்ணுறுப்பு - ஆவுடையார் என்பது – கீழேயும் லிங்கம் அதனுள்ளேயும் இருக்கும். நீங்கள் தியானலிங்கத்தின் உள்ளே நுழைந்தால், நீங்கள் கருவறையினுள்ளே இருப்பீர்கள், லிங்கமும் உள்ளே இருக்கும். அதைத்தான் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.

லிங்க பைரவி எப்பொழுதுமே இந்த முக்கோணத்தின் ஒரு கோணம். அதற்காக இட ஒதுக்கீடு செய்யாமலே இருந்தது. முதலில், ஏதோ ஒரு வகையில் இந்த இடம் முழுமை அடையாமல் இருந்தது. தியானலிங்கம் தனக்குத்தானே முழுமையானதுதான் ஆனால் இந்த இடம் வெறுமையாக இருந்தது. லிங்கபைரவி வந்தவுடன் இந்த இடம் முழுமையான தொகுப்பாக மாறியது. லிங்கபைரவி இருக்கும் முக்கோண மூலைதான் தேவியின் பெண்ணுறுப்பின் வெளியின் முக்கோணம். தியானலிங்கத்தின் கோளம்தான் கருவறை, உள்ளே தியானலிங்கம். உயிரின் முதல் அதிர்வை ‘ஸ்பந்தா’ என்று அழைப்போம். உயிரின் அந்த அதிர்வை உணர்வதால் அதை ஸ்பந்தா ஹால் என்று அழைத்தோம்.