பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள், அறிவோம் வாருங்கள்! -பாகம் 1

பூச்சிகள் இயற்கை விவசாயத்தில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் நோக்கில், இயற்கை ஆர்வலர் திரு. பூச்சி செல்வம் அவர்களைக் கொண்டு ஈஷா விவசாய இயக்கம் நிகழ்த்திய நிகழ்ச்சியில், பகிரப்பட்ட கருத்துக்கள் இங்கே!

ஈஷா விவசாய இயக்கம் சார்பாக “பூச்சிகளை கவனிங்க” என்ற சிறப்பு பயிற்சி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகில் உள்ள கதிராமங்களம் கிராமத்தில் திரு. ஸ்ரீராம் அவர்களின் SVR இயற்கைவழி வேளாண் பண்ணையில் கடந்த 24, 25 - டிசம்பர் 2016 அன்று நடைபெற்றது.

விவசாயத்தில் பூச்சிகளால் ஏற்படும் சேதம், பொருளாதார சேதநிலையைத் தாண்டி பெரிய இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்துகிறது.

பூச்சியியல் வல்லுநர் திரு.“பூச்சி” செல்வம் அவர்களால் இப்பயிற்சி நடத்தப்பட்டது. ஈஷா பசுமைக்கரங்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.

தமிழகம் முழுவதிலுமிருந்து ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகள் 32 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இவர்களோடு இயற்கை ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முதல் கட்டமாக நடந்துள்ள இந்த பயிற்சியைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் இத்தகைய களப்பயிற்சிகள் நடத்தப்படும்.

இயற்கை விவசாயத்திற்கு பூச்சிகள் குறித்த விழிப்புணர்வும் மிக அவசியமாகும்.

"ஏனுங்க இந்த கள்ளிப்பட்டி கலைவாணியும் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேணுங்க! கலந்துக்க முடியாதவங்க எல்லாம் வருத்தப்படாதீங்க, இந்த நிகழ்ச்சியில நடந்தது அல்லாத்தையும் தொடர்ந்து இங்க பேசப்போறோமுங்க!"

பூச்சிகள் ஓர் அறிமுகம்
நன்மை செய்யும் பூச்சிகள் பற்றிய புரிதல்
தீமை செய்யும் பூச்சிகள்
நன்மை செய்யும் பூச்சிகளின் (அசைவ உண்ணிகள்)
இரை விழுங்கிகள்
ஒட்டுண்ணிகள்
முட்டை ஓட்டுண்ணி
ட்ரைகோகிராமா குளவி
புழு ஒட்டுண்ணி
கூட்டுப்புழு பருவ ஒட்டுண்ணி
அசுவினி மற்றும் பொறி வண்டுகள்
பூச்சி இரவுக் காட்சி
வயல் ஆய்வு மற்றும் உழவர் வயல்வெளிப் பள்ளி
வயல் ஆய்வில் கவனிக்கவேண்டிய விஷயங்கள்
இரசாயன பூச்சிக்கொல்லிகள் - உணர்வும் அடையாளமும்
எஞ்சும் நஞ்சு மற்றும் தங்கிய நஞ்சு
நன்மை செய்யும் பூச்சிகளை பெருக்கும் முறைகள்
ட்ரைகோகிராமா இனப்பெருக்கம் செய்தல்
பூச்சிகளைக் கொல்லும் நுண்ணுயிர்கள்
பூச்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தாவர நோயியல் அறிமுகம்
நோய்கள் பரவும் விதம்
நோயை பரப்பும் பூச்சிகள்
கேள்வி பதில் நிகழ்ச்சி

போன்ற பல விஷயங்களை 'பூச்சி' செல்வம் அவர்கள் விவசாயிகளுக்கு இந்நிகழ்ச்சியில் விளக்கினார்.

"அட சாமி... பூச்சிகள சாதாரணமா நெனச்சுப் போடாதீங்ணா! எவ்வளவு விஷயமிருக்கு பாருங்க! பூவுன்னா வண்டு வரும், பொண்ணுன்னா வெக்கம் வரும்னு சும்மாவா சொல்லிவச்சாங்கோ?! ஆனா அதைய புரிஞ்சிக்காம நெறைய பேரு பூ கிட்டத்தால பூச்சியே இருக்கக்கூடாதுனு கங்கணம் கட்டிக்கிட்டு பூச்சி மருந்து அடிச்சுப்போட்டு மண்ணையும் மனுசனையும் கெடுத்துப்போடுறாங்கோ! சரி வாங்கண்ணா... நம்ம இந்த பூச்சிகள பத்தி இப்பவாச்சும் தெரிஞ்சுக்கலாம்!’

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

பூச்சிகளை கவனிங்க

திரு.'பூச்சி' செல்வம் அவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன், உற்சாகத்துடன் பூச்சிகள் பற்றி தனது அனுபவத்தை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

கள ஆய்வு, பூச்சிகளை லென்ஸ் மூலம் கவனித்தல், கவனித்ததை கலந்துரையாடல் மூலம் உறுதி செய்தல், பார்த்து தெரிந்துகொண்ட பூச்சியை வரைய வைத்தல், வரைந்த படத்தை மற்ற குழுவினருக்கு விளக்குதல் போன்ற பல செயல்முறை பயிற்சிகளை பங்கேற்பாளர்களுக்கு கொடுத்து பூச்சிகளை கவனிக்க வைத்தார். பங்கேற்ற அனைவரும் பூச்சிகளை கவனித்து, பூச்சிகள் பற்றிய நல்ல தெளிவை பெற்றனர்.

“இப்பல்லாம் ரொம்ப பேருக்கு அவிக புள்ளைகள கவனிக்கவே நேரமில்லாம சுத்திகிட்டு திரியுறாங்கோ! பூச்சிய கவனிக்க சொல்றதெல்லாம் அவிகளுக்கு ரொம்ப சோக்கா தானுங்க இருக்கும்! ஆனா... நம்ம ‘பூச்சி செல்வம்’ அண்ணா இந்த பூச்சிகளுக்காக இவ்வளவு மெனக்கெட்டு நிகழ்ச்சி நடத்தி, அல்லா மக்களையும் கவனிக்க வச்சுப்போட்டாருங்கோ!”

விவசாயத்தில் பூச்சிகளின் முக்கியத்துவம்

விவசாயத்தில் பூச்சிகளைப் பற்றிய கல்வி தற்போது அதிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. ஏனெனில் பூச்சிக்கொல்லி இரசாயனங்களால் ஏற்படும் தீங்குகளை மக்கள் நேரடியாக கவனிக்க தொடங்கிவிட்டனர்.

இந்த BT பருத்தி நன்கு விளையவேண்டும் என்றால் அதிக தண்ணீர் தேவை, அதிக உரம் தேவை, இவை இரண்டும் இல்லை என்றால் மகசூல் வராது.

விவசாயத்தில் பூச்சிகளால் ஏற்படும் சேதம், பொருளாதார சேதநிலையைத் தாண்டி பெரிய இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்துகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் பூச்சிகளைப் பற்றிய புரிதல் விவசாயிகளுக்கு இருக்குமாயின், இரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தாமலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிவகைகளை அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

இந்த பூச்சிக்கொல்லி இரசாயனங்கள் உயிரினங்களுக்கும், மனித குலத்திற்கும் அதிக தீங்கை செய்யக்கூடியவை, இவைகளை முற்றிலும் தவிர்த்து விவசாயம் செய்வது பூமித்தாய்க்கு செய்யும் சேவையாகும்.

மேலும் பூச்சி எதிர்ப்பு திறனுடைய ரகங்கள் என்று, மரபு மாற்ற முறையில் உருவாக்கப்படும் பயிர்களில் விளையும் காய்கறிகளை உண்பதால் எதிர்காலத்தில் மனிதனின் அடிப்படை மரபுத் தன்மையே மாறக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் மரபு மாற்ற முறையில் உருவாக்கப்பட்ட பயிர்களின் பூச்சி எதிர்ப்புத்தன்மையும் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருப்பதில்லை.

உதாரணமாக சில மாநிலங்களில் அதிகமாக பயன்பாட்டில் உள்ள பி.டி பருத்தி (BT Cotton) காய் புழு தாக்காத வகையில் உயிரித் தொழில்நுட்ப (Biotechnology) முறையில் உருவாக்கப்பட்டது.

ஆனால், இந்த BT பருத்தி நன்கு விளையவேண்டும் என்றால் அதிக தண்ணீர் தேவை, அதிக உரம் தேவை, இவை இரண்டும் இல்லை என்றால் மகசூல் வராது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்ட BT பருத்தி, வெளிட்ட ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே காய் புழுக்களுக்கு எதிரான வீரியத்தை இழந்து விட்டது. எனவே பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு மரபு மாற்ற பயிர்களை (Bio technologically modified plants) நாடுவது விவசாயிக்கும், இயற்கைக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தக் கூடியதாகும்.

“ரொம்ப கரெக்ட்டா சொல்லிப்போட்டாங்கோ... நம்ம நாட்டு கத்திரிக்காய எத்தன பேரு சாப்பிடுறாங்கோ! அந்த மாறி நாட்டு காய்கறிகள்ல இருக்குற ருசிய பாத்தவுங்கோ வேற ஒட்டு ரகத்தல்லாம் கண்டிப்பா சீண்டமாட்டாங்கோ! அட கொஞ்சம் வெயிட் பண்ணிங்கண்ணா, இதவிட நல்ல நல்ல விசயமெல்லாத்தையும் அடுத்தடுத்து சொல்லுவோம். பூச்சிய பத்தி அல்லா விசயத்தையும் தெரிஞ்சுக்கலாமுங்க!


பூச்சிகளை தொடர்ந்து கவனிப்போம்...