ஒவ்வொருவரும் சத்குருவை ஒவ்வொரு விதத்தில் உணர்வார்கள். சிலருக்கு அவர் குரு, சிலருக்கு ஞானி, சிலருக்கு யோகி, வேறு சிலருக்கு நண்பர், வழிகாட்டி, கவிஞர், கட்டிடக்கலை நிபுணர்…. என இன்னும் பற்பல முகங்கள், பற்பல பரிமாணங்கள்! இதையெல்லாம் தாண்டி அவர் ஒரு கணவர், தந்தையும் கூட!

எல்லோராலும் விஜி என்று வாஞ்சையாக அழைக்கப்பட்டவர் சத்குருவின் மனைவி விஜயகுமாரி. சாமுண்டி மலையில் ஞானோதயம் அடைந்த சத்குரு, அதற்கு இரண்டு வருடம் கழித்து, மைசூரில் முதன்முதலாக விஜி அவர்களைச் சந்தித்தார். மைசூரில் ஒரு மதிய உணவு அழைப்பிற்கு விருந்தினராகச் சென்றிருந்த இடத்தில், இவர்களின் முதல் சந்திப்பு நடந்தது. அதன்பின், ஒரு சிறு கடிதப் பரிமாற்றம். மனம்விட்டு நிகழ்ந்த இந்த பரிமாறல்களுக்குப் பின், ஒரு மங்களகரமான மஹாசிவராத்திரி நாளில், 1984ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. சத்குருவின் யோகா வகுப்புகள் எப்போதும் போல் முழுவீச்சில் நடந்தது, தென்னிந்தியாவில் பல இடங்களில் அவர் இடைவிடாது வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். விஜியோ ஒரு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவ்வப்போது சத்குருவுடன் பயணம் செய்து, சத்குருவின் வகுப்புகளில் அவர் தன்னார்வத் தொண்டும் செய்தார்.

“நானும் என் மனைவியும் கலாக்‌ஷேத்ராவிற்கு செல்ல நேர்ந்தது…”
1990ல் சத்குருவுக்கும் விஜிக்கும் ராதே என்றொரு மகள் பிறந்தார். இதைப் பற்றி சத்குரு சொல்லும்போது: "குழந்தை வேண்டும் என்பதில் விஜி மிக உறுதியாக இருந்தாள். அவளைப் பொறுத்தவரை ஒவ்வொரு பெண்ணிற்கும், தாய்மைப்பேறு என்பது மிக முக்கியமான, அவசியமான ஒரு அனுபவம். இதில் என் விருப்பம் என்று பார்த்தால்... என்னுடைய 19 வயதில், குடும்ப வாழ்க்கையில் நாட்டமோ, குடும்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணமோ இருக்கவில்லை.ஆந்திர மாநிலத்திலுள்ள ரிஷி வேலி, (Rishi Valley) ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆரம்பித்திருந்த பள்ளிக்கு நான் செல்ல நேர்ந்தது. “எனக்கு மட்டும் குழந்தை என ஒன்று பிறந்தால் அவளை... ஏனோ எனக்கு “அவள்” என்றே தோன்றியது... அவளை இப்பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும்," என்கிற எண்ணம் ஏற்பட்டது. அதன்பின், ராதே பிறப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன் நானும் விஜியும், இந்திய பாரம்பரிய நடனப் பள்ளிகளில் பெயர்பெற்ற கலாக்ஷேத்ராவிற்குச் சென்றிருந்தோம். அதைப்பார்த்தபோது, எங்களுக்கு மட்டும் மகள் பிறந்தால், அவளை கலாக்ஷேத்ராவிற்கு செல்லவேண்டும் என்று நினைத்தோம். அதற்குப் பிறகு அதைப் பற்றி நாங்கள் எண்ணிக்கூட பார்க்கவில்லை. ராதே பிறந்தபின், அவள் ரிஷி வேலி பள்ளிக்கு 8 வருடங்கள் சென்றாள், அதைத் தொடர்ந்து கலாக்ஷேத்ராவிலும் நான்கு வருடம் பயின்றாள். இன்று அவளொரு நாட்டியக் கலைஞராக வளர்ந்திருக்கிறாள்.

“பிரயத்தனப்படாமல், புன்னகைத்தவளாய் அவள் உடல்விட்டுச் சென்றாள்…"
நாட்கள் செல்லச் செல்ல, சத்குருவின் கவனம் முழுவதும் தியானலிங்கத்தை பூர்த்தி செய்வதிலேயே இருந்தது.

சத்குருவின் வார்த்தைகளில், "1996 ம் வருடம் ஜூலை மாதம் அது. தியானலிங்கப் பிரதிஷ்டையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். தியானலிங்கப் பணிகள் முடிவடைந்ததும், தன் உடலைத் துறக்கப்போவதாக விஜி முடிவெடுத்தாள். ஒரு பௌர்ணமியைக் குறிப்பிட்டு, அன்றைய தினத்தில் தன் உடலைத் துறக்கப்போவதாக அவள் அறிவித்தாள். அதற்குத் தேவையான வகையில் தன்னைத் தயார் செய்துகொள்ளவும் ஆரம்பித்தாள். இம்முடிவை மாற்றிக்கொள்ளுமாறு நான் அவளை வலியுறுத்தினேன். “இப்போது இதற்கான அவசியம் என்ன இருக்கிறது..? இன்னும் சிறிது நாள் பொறுத்திரு” என்று கூறினேன். ஆனால் அவளோ, ‘இதுதான் எனக்குச் சரியான நேரம். என் வாழ்வில் இப்போது நான் ஒரு நிறைவை உணர்கிறேன் – வெளி சூழலிலும் சரி, என் உள்நிலையிலும் சரி நான் மிக நிறைவாய் உணர்கிறேன். நாளையே ஏதோ நடந்து இந்த சமநிலை பாதிக்கப்பட்டால், அதைத் தாங்கும் வகையில் நான் இல்லை. நான் நிறைவாய் உணரும்போதே விடைபெற்றுச் செல்ல நினைக்கிறேன். அதனால் இதுதான் எனக்கு ஏற்ற நேரம். இந்நேரத்தை தவறவிட என்னால் இயலாது,” என்றாள்.

சில காரணங்களினால், அந்நேரத்தில் எங்களால் பிரதிஷ்டையை செய்துமுடிக்க முடியவில்லை. குறிப்பிட்ட அந்த பௌர்ணமி நாளன்று, சில தியான அன்பர்களுடன் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தாள். எட்டு நிமிடங்களுக்கு பின்னர், சிரத்தையில்லாமல், புன்னகைத்தவளாய், உடலைவிட்டு சென்றாள். அவள் முழுமையான ஆரோக்கியத்தோடு இருந்தாள். முப்பத்தி-மூன்றே வயதுதான். உடலில் சிறு சிதைவுகூட ஏற்படுத்தாமல், அத்தனை இலகுவாக உடலைப் பிரிந்துசெல்வது ஒன்றும் சுலபமான காரியமில்லை. மிக எளிதாக அணிந்திருக்கும் உடையை களைந்திடலாம்... ஆனால் நாம் கொண்டிருக்கும் இவ்வுடலை, ஆடையைக் களைவது போல் எளிதாக உதறிவிட்டுச் செல்வது..? அது ஒன்றும் அத்தனை சாதாரண விஷயமல்ல! தன் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகிவிட்டது, இனி இவ்வுலகில் தான் பார்ப்பதற்கோ, உணர்வதற்கோ ஒன்றுமில்லை என்ற நிலைக்கு ஒருவர் எப்போது வருகிறாரோ, அப்போது அவர் முழு விருப்பத்தோடு இவ்வுடலை உதறிவிட்டுச் செல்கிறார். ஒருவேளை அதில் போராட்டமோ, அல்லது உடலிற்கு காயமோ, தீங்கோ ஏற்பட்டால், அது தற்கொலை. ஆனால் போராட்டங்கள் எதுவுமின்றி, ஏதோ அறையிலிருந்து வெளியே செல்வது போல, மிக சாதாரணமாக உடலைவிட்டு ஒருவர் வெளியேறினால், அது "மஹா சமாதி".

இதுபோல் ஒருவர் முழு விழிப்புணர்வுடன், உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், தானாக உடலை உதறிச் சென்றால், அதன்பிறகு அவர் இங்கு இருக்கமாட்டார். பொதுவாக, ஒருவர் இறந்தால் அவரை போய்விட்டார் என்கிறீர்கள், ஆனால் அது உண்மையில்லை. நீங்கள் அவரை தெரிந்து வைத்திருந்த விதத்தில் அவர் இனி இருக்கமாட்டார். ஆனால், மஹாசமாதி அடைந்தவர்கள், முழு விழிப்புணர்வுடன் செல்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே காலமாகிப் போய்விடுவார்கள். ஒரு உயிராக அவர் இருக்கமாட்டார். முழுவதுமாக கரைந்து போவார்கள். அவ்வளவுதான்... நாடகம் முழுவதுமாக முடிவடைந்துவிடும்!

"நான் விஜி என்று குறிப்பிடுகையில் அவரை என் மனைவியாகவோ அல்லது வேறொரு பெண்ணாகவோ குறிப்பிடவில்லை…"
கீழ்வருவது தைபூசத்தன்று விஜி மஹா சமாதியடைந்த இரு தினங்களுக்கு பிறகு 1997ம் ஆண்டு சத்குரு பேசியது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: விஜி பற்றி பிறரிடம் விவரிப்பது எனக்கு எப்போதுமே மிகக்கடினமான ஒரு விஷயம். நான் விஜி என்று கூறும்போது, என் மனைவியாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ அவளை குறிப்பிடவில்லை. ஒரு உயிராக பார்த்தால்கூட, என்னுடைய அனுபவத்தில் அவள் மிக அற்புதமான உயிராகவே என்றும் இருந்திருக்கிறாள். அவள் மிகவும் உணர்ச்சிமிக்கவள் என்று உங்களில் பலபேருக்கு தெரிந்திருக்கும். குழந்தையயைப் போன்ற அவளது சுபாவத்தினால், அவளுக்குள் ஏற்பட்ட உணர்வுகள் எப்பொழுதும், எல்லா சூழ்நிலையிலும் வெளிபட்டன. இப்போது ஆன்மீகத்தேடலில் இருப்பவரின் இறுதி இலக்கான மஹா சமாதி நிலையை சற்றும் சிரமமின்றி எட்டி, அவளது மதிப்பை நிரூபித்துகாட்டிவிட்டாள்.

இது குழந்தை விளையாட்டு அல்ல; பல பிறவிகளாக ஆன்ம சாதனாவில் இருப்பவர்கள்கூட இந்நிலையை அடைவதற்கு போராட்டம் இருக்கும். உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல், உடலைவிட்டு உயிரை வெளியேற்றுவது என்பது அசாத்தியமான செயல். இதற்கு அபரிமிதமான சக்தியை ஒருவர் உருவாக்க வேண்டும்; அதற்கு தீவிரமான சாதனா தேவை. அதை எப்படி அடைய வேண்டுமென்ற முறை அறிந்திருந்த விஜி, அதை நோக்கி செயல்கள் செய்து கொண்டிருந்தாள். ஆனால் இந்த கட்டத்தில் என்னுடைய உதவி இல்லாமல் அவளால் தேவையான சக்தியை திரட்ட முடிந்ததை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எப்படியும் அவள் இந்நிலையினை அடைந்திருப்பாள் என்பது நிச்சயம், ஆனால் அதனை அடைந்துள்ள நேர்த்தி - உச்சபட்சமானது. இது அன்பினால் மட்டுமே அவளுக்கு சாத்தியமடைந்துள்ளது; அவளுக்கு அறிந்திருந்ததும் அன்பு மட்டுமே.

நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும்போது, தெய்வீகத்தின் சித்தத்துடன் இது நடந்திருக்கிறது தெளிவாய் இருக்கிறது. அவள் இதயத்தின் குரலான "ஷம்போ" தான் அவளை கைப்பிடித்து அழைத்து சென்றிருக்கிறார். அன்பின் தீவிரத்தால் இதனை அவள் அடைந்துவிட்டாள்.

அவளுக்கு நெருக்கமான சிலரிடம் இது குறித்து பலமுறை பேசி இருக்கிறாள். எந்த ஒரு பிணைப்புமில்லாமல் தன்னுடைய உடலை முழு விழிப்புணர்வுடன் விடவேண்டும் என்பதே அவளின் தீவிர ஆசை என்று சொல்லியிருக்கிறாள். என்னிடமும், "நான் விடைபெற வேண்டும்" என்பதே அவளின் நிலையான மந்திரமாக இருந்தது.

ராதேவை பள்ளியில் விட்டுவிட்டு ஊட்டியிலிருந்து கீழிறங்கி வந்து கொண்டிருக்கும்போது, எப்போதும் போலவே "ஷம்போ" மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தாள். கண்ணீர் மளமளவென பெருகி வழிந்தோடிக் கொண்டிருந்தது. என் கைகளைப் பற்றிக்கொண்டவள், வாகனத்தை நிருத்தச் சொல்லி சொன்னாள். “எனக்கு வேறு எந்த ஷம்போவையும் தெரியாது. சில கணங்களில் நான் உங்களைத்தான் அந்த வடிவில் பார்த்திருக்கிறேன். நீங்கள்தான் என் மோக்‌ஷத்திற்கு உதவ வேண்டும்,” என்று கூறி அழுதாள். “உனக்கு அவனை தெரியுமோ தெரியாதோ ஆனால் அவனுக்கு உன்னை நன்றாக தெரியும். நீ என்ன செய்கிறாயோ அதை முழு ஈடுபாட்டுடன் செய், நீ என் உருவத்தையும் கடந்து அவனை அனுபவப்பூர்வமாக உணர முடியும், அறிய முடியும்,” என்று நான் கூறினேன்.

பௌர்ணமி தினங்களில் சில தீவிரமான சாதனாக்களில் அவள் ஈடுபடுவாள். காலை 8:45 மணிக்கு குளித்துவிட்டு சாதனாவிற்கு அமருவாள், பின் 11:45 மணிக்கு மறுபடியும் குளித்துவிட்டு அமருவாள், மீண்டும் 3:45 மணிக்கு குளித்துவிட்டு தனது பயிற்சிகளை தொடங்குவாள். அவள் சமாதியடைந்த நாளன்று, அந்த மூன்று வேளைகளிலும் நான் அவளுக்குப் பயிற்சிகளை தொடக்கி வைத்துவிட்டு வகுப்பெடுக்கச் சென்றேன். மாலை 6:15 மணிக்கு, "ஷம்போ" என்ற மந்திரத்தில் கரைந்துவிட்டாள், அவனுடையவள் ஆகிவிட்டாள்.

“வெற்றித் திருமகள்”
இன்றும், அவள் விட்டுச்சென்ற சக்தியை நாம் உணரும்போது, அன்பின் இடமான அனஹத்தா சக்கரத்தின் வழியாக அவள் உயிர் பிரிந்தது என்பது தெளிவாக தெரிகிறது. உடலின் கட்டுப்பாடுகளைத் தாண்டுவதற்கு எந்த உயிருக்கும் இதை விட சிறந்த வழி எதுவுமில்லை. அந்த உயிருக்கு, உடலுடைய பிணைப்பு இனியில்லை. அவளது பெயர் விஜய குமாரி, அதாவது "வெற்றியின் திருமகள்" – எந்த உயிருக்கும் கிடைக்கக்கூடிய அதிகபட்ச வெற்றியை அவள் அடைந்துவிட்டாள்.

அவள் எனது வீட்டை வெறுமையாக்கி விட்டு நமது இதயங்களை நிரப்பியிருக்கிறாள். ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் தியானலிங்க பிரதிஷ்டையில் அவளுக்கு முக்கிய பங்கு இருந்தது. அதற்கான பணிகள் மகத்தான வகையில் முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது அதில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அவளை தன்னவள் ஆக்கி கொண்ட ஷம்போதான் நமக்கு வழிகாட்ட வேண்டும்.

எனக்கு இறப்பு ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் அவள்விட்டுச் சென்ற அன்பு எனும் சக்தி, அதைதான் என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை. இனிமேல் நாம் செய்கின்ற எல்லா சாதனாவிலும் இந்த புதுமையான பரிபூரணமான அன்பின் மணம் வீசும்.

ஆன்மீகப் பாதையிலிருக்கும் அனைவருக்கும் மகாசமாதிதான் உச்சபட்ச இலக்கு. அவர்கள் செய்கின்ற அனைத்து சாதனாவின் முழு நோக்கமும் தெய்வீகத்துடன் கலப்பது தான். பிறப்பு மற்றும் இறப்பை கையிலெடுக்கும் வாய்ப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது என்று மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். மக்களின் பொதுவான நம்பிக்கை என்னவென்றால், இது போன்ற விஷயங்கள் பண்டைய கால ரிஷிகள் மற்றும் முனிவர்களுடன் முடிந்துவிட்டது என்பதுதான். ஆனால், ஆன்மீகம், தனது உச்சபட்ச சாத்தியத்தில் இன்னும் மிக மிக உயிர்ப்புடன் இருக்கிறது.

பொரும்பாலானவர்கள் உண்மையான ஞானிகளின் காலம் முடிந்துவிட்டது என்று தீர்மானம் செய்துவிட்டனர். ஆனால் இங்கு நடந்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, இப்போதல்ல எப்போதுமே இது முடிவுக்கு வராது என்று நமக்கு உணர்த்துகிறது.

இந்த சூழ்நிலையில், இங்கிருக்கும் யாரும் அவர்கள் உடலை விட்டு பிரிந்து செல்வதை நான் விரும்பவில்லை. ஆனால் அவள் இதற்காக ஆசைப்பட்டாள். "ஷம்போ" என்ற மகா மந்திரத்துடன் அவள் கலந்துவிட்டாள். நான் மட்டுமல்ல யாருமே, இது சரியா தவறா என்று கேள்வி எழுப்ப தேவையில்லை. அவனை (சிவனை) கேள்விகேட்கும் அளவுக்கு நான் பெரியவனில்லை.

இது மகத்தானது, உண்மையிலே மிக மகத்தானது! என்னுடைய உதவிகூட இல்லாமல் இறப்பு என்ற பந்தத்தையே கடந்துவிட்டாள். தன் அன்பினால் அவள் எல்லாவற்றையும் கடந்து சென்றுவிட்டாள். நாம் நமது அன்பினால் நம் கையில் இருக்கும் பணிகளை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஆஊம் ஷம்போ ஷிவ ஷம்போ
ஜெய ஷம்போ மஹாதேவா