கடந்த அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியன்று விடுமுறை தினமானதால் பலரும் பலவிதமாக அந்த நாளை செலவிட்டிருப்பார்கள். சிலர் டிவி நிகழ்ச்சிகளில் மூழ்கியும், சிலர் நண்பர்களுடன் ஊர் சுற்றியும் பொழுதைக் கழித்திருக்கலாம். வெகுசிலரே உருப்படியான சில காரியங்களைச் செய்திருப்பார்கள். அந்த வெகுசிலர் பற்றி சில வார்த்தைகள்...

காந்தி ஜெயந்தி விடுமுறையை பயனுள்ளதாகக் கழித்த வெகுசிலரில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஈஷா தன்னார்வத் தொண்டர்களும் அடங்குவார்கள் என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம்! ஆம்... சுமார் 65 தன்னார்வத் தொண்டர்கள் செங்கல்பட்டிலுள்ள ஈஷா நாற்றுப்பண்ணைகளில் தங்கள் தன்னார்வத் தொண்டினை வழங்கி அந்த நாளை பயனுள்ளதாக்கினர். அவர்களுடன் வந்திருந்த ஒரு டஜன் குட்டீஸ்கள் அந்த இடத்தை விளையாட்டும் குதூகலமுமாய் அழகுபடுத்தினர்.

பெரியவர்களும் குழந்தைகளும் இணைந்து தன்னார்வத் தொண்டுபுரிந்தது வித்யாசமான ஒரு காட்சியாக அமைந்தது. குழுக்களாக தங்களை பிரித்துக் கொண்ட அவர்கள், ப்ளாட்டிக் பைகளில் மண்ணையும் தென்னை நார்க்கழிவுகளையும் சம அளவில் கலந்து நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். ‘அதிகம் நிரப்புபவர்களே வெற்றி பெற்ற குழு’ என்று அறிவித்துக்கொண்டு, தங்களுக்குள் போட்டியில் ஈடுபட்ட அவர்கள், சில மணிநேரங்களில் சுமார் 3000 பைகளை நிரப்பியது ஆச்சரியப்படுத்தியது.

மதியம் உணவு இடைவேளைக்குப் பின், மீண்டும் அவர்கள் குழுக்களாகப் பிரிந்து களை எடுத்தல், நாற்றுகளுக்கு தண்ணீர் விடுதல், நாற்றுகளின் தாய் படுக்கையை (mother bed) சுத்தம் செய்தல் என பல்வேறு செயல்களில் ஈடுபட்டனர். சிலர் நாற்றுகளை எடுத்து சூரிய ஒளி நன்கு கிடைக்கும் இடத்தில் வைத்தனர். மாலையில் விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றன. அங்கு வந்திருந்த தன்னார்வத் தொண்டர்களும் குழந்தைகளும் முழுமையாக அந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ஒரு தன்னார்வத் தொண்டரின் பகிர்வு:

“இந்த விடுமுறை நாளில் வீட்டில் தூங்கியெழுந்து இருக்க வேண்டுமென்றிருந்தேன். ஆனால் எனது மனதை மாற்றிக்கொண்டு இங்கு வந்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் இங்கு நாற்றுப் பண்ணையில் மண்ணை கைகளால் தொட்டு, தண்ணீர் விட்டு, தன்னார்வத் தொண்டு புரிந்தது எனக்கு புதிய அனுபவமாகவும் உற்சாகம் தருவதாகவும் இருந்தது. இங்குள்ள குழந்தைகளுடனும் தன்னார்வத் தொண்டர்களுடனும் ஒன்றாக இணைந்து செயலாற்றியது மனநிறைவு தருவதாக இருந்தது”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.