ஈஷா யோகா மையத்தில் கடந்த ஜூன் 12ஆம் தேதி மாலை 4 மணியளவில் மெல்லிய தென்மேற்கு பருவ மழைச்சாரல் நம்மை பன்னீர் தெளித்து நனைத்தபடி இருக்க, அந்த எழில்மிகு சூழலை விட்டுவிட்டு வேலூர் நோக்கி பயணிக்க வேண்டுமா என யோசனை பலமாய் இருந்தது. மறுநாள் ஆதியோகி ஆலயத்தில் சத்குரு தரிசனம் வேறு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வேலூரில் மறுநாள், ஈஷா முன்னெடுக்கும் அந்தவொரு பசுமை முன்னெடுப்பு நம் சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பது நன்றாகப் புரிந்திருந்தது. தன்னார்வத் தொண்டர்கள் குழுவுடன் சேர்ந்து வேலூருக்கு பயணமானோம்.

வழிநெடுக இதே மழை பெய்தால் நாம் தாமதமாகத்தான் போய் சேருவோம் என்று காரை ஸ்டார்ட் செய்தபடி ஸ்வாமி ஹக்கேஷா கூற, இந்தச் சாரலும், இந்த இதமான பருவநிலையும் மேற்குத்தொடர்ச்சி மலையோரத்தில் மட்டும்தான், நகரத்திற்குள் செல்லச் செல்ல மழை இருக்காது என்று தன்னார்வத் தொண்டர் ஒருவர் வானிலை அறிக்கை தந்தார்.

கோவைக்கு சென்று அங்குள்ள பீளமேடு ஈஷா பசுமைக்கரங்கள் நர்சரியில் நிகழ்வுக்குத் தேவையான மரக்கன்றுகள் மற்றும் பேனர்களைப் பெற வேண்டியிருந்ததால் அங்கிருந்து மீண்டும் வேலூருக்கு புறப்பட சில மணி நேரங்கள் ஆயிற்று.

நகரில் மையத்தில் பிரம்மாண்டமாய் அமைந்திருக்கும் வேலூர் கோட்டை காலைநேர சூரிய கதிர்களுடன் நம்மை வரவேற்றது. வேலூர் ஊரிஸ் கல்லூரியை காலை உரிய நேரத்தில் வந்தடைந்தோம். ஏற்கனவே அங்கே நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக தங்கியிருந்த ஸ்வாமி ரப்யா தலைமையிலான குழுவினர் நிகழ்வுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். வேலூர் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மிகவும் உற்சாகமாக பார்வையாளர்களை வரவேற்றபடி, நிகழ்வுகள் தேவையான ஏற்பாடுகளை செய்வதிலும் துணைநின்றனர்.

முந்தைய நாள் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இதமான சாரல் மழையில் நனைந்து வந்திருந்த எங்களுக்கு வேலூரில் தகிக்கும் வெயிலின் உக்கிரத்தை நன்றாகவே உணரமுடிந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“ஏனுங்க உங்க ஊர்ல இந்த மாதிரி வெயில் ஒரு மார்க்கமா அடிக்குதுங்ளே?” என ஒரு டீ கடைக்காரரிடம் கேட்க, “இது வேலூர் இல்ல வெயிலூர்னு மாத்தி வச்சிகணும். இங்க இப்டிதான். எங்களுக்கு அப்டியே பழகிச்சுப்பா” என சென்னை தமிழில் பதிலளித்தார் அந்த உள்ளூர்வாசி.

வேலூரில் 2ஆம் ஆண்டாக தொடர்ந்து பசுமைப் பள்ளி இயக்கத்தினை முன்னெடுப்பதற்கு ஈஷா பசுமைக்கரங்கள் தீர்மானித்ததற்கு காரணம் என்னவென அப்போது புரிந்தது. இவ்வியக்கத்தின் மூலம் ஈஷா பசுமைக்கரங்களும் வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து பள்ளி மாணவர்கள் மூலமாகவே மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, மரங்களை நடுவதற்கும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கும் வழிகாட்டுகிறது.

குறும்பா… பொறுப்பா? இரண்டும் கலந்த மாணவர்கள்!

காலை 10 மணியளவில் துவங்கிய நிகழ்ச்சியில், நிகழ்வின் கதாநாயகர்களான பள்ளி மாணவர்களின் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்ததைப் பார்க்க முடிந்தது. அது ‘சின்ன கலைவாணர்' என அழைக்கப்படும் நடிகர் விவேக் அவர்களின் வருகைக்காகனது என நன்றாகவே தெரிந்தது.

விவேக் அவர்கள் மேடையேறியதும் மாணவர்கள் உற்சாகக் குரலிட்டு அவரை வரவேற்றனர். அவரின் பிரபல சினிமா வசனத்தை கோரஸாக சொல்லி குதூகலித்த அந்த சிறுவர்களின் நாடித்துடிப்பை நன்கு உணர்ந்திருந்த விவேக் அவர்களின் உரையும் மாணவர்களைக் கவரும் வகையில் ஜனரஞ்சகமாகவே இருந்தது. அதே அளவுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களும் கலந்தே இருந்தன.

“வேலூர் என்றால் இரண்டு விஷயம் பேமஸ்… அது என்னனா ஒன்னு ஜெயிலு, இன்னொன்னு வெயிலு' என்று கூறிய விவேக், இந்த வேலூரை நாம் குயில் கூவும் ஒரு சோலைவனமாக மாற்றுவது நம் கையில்தான் உள்ளது என்பதையும் அங்கே பதிவு செய்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களின் சீடராக ‘பசுமைக் கலாம்’ எனும் முன்னெடுப்பின் மூலம் தமிழகம் முழுவதும் பல லட்சம் மரங்களை நடுவதற்கான முயற்சியில் உள்ள விவேக் அவர்கள், ஈஷா பசுமைக்கரங்களின் பசுமைப் பள்ளி இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதற்கு உறுதுணையாக இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. மார்ஸ் ஆகியோரின் மகத்தான ஒத்துழைப்பையும் வெகுவாகப் பாராட்டினார்.

4 லட்ச மரக்கன்றுகள்… இலக்கு!

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. மார்ஸ் அவர்கள் பேசுகையில், “வேலூரில் பள்ளி கல்வித்துறையும் ஈஷா பசுமைக்கரங்களும் இணைந்து செயல்படுத்தும் பசுமைப் பள்ளி திட்டம் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்தாண்டு, இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 11 ஆயிரம் மரக் கன்றுகளை மாணவர்களே உருவாக்கி நட்டு சாதனை படைத்துள்ளனர். இந்தாண்டு 4 லட்சம் மரக் கன்றுகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அமைப்புகளை காட்டிலும், ஈஷா பசுமை இயக்கத்தின் மூலம் நடப்படும் மரக் கன்றுகள் மரங்களாக மாறும் வெற்றி சதவீதம் அதிகமாக உள்ளது” என்றார்.

மாணவர்கள் மனதில் ஊன்றிய மரங்கள்…

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருந்த பள்ளி மாணவர்களிடத்தில் அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ள சற்று பேச்சுக் கொடுத்தோம்!

“ஏம்ப்பா நீ போன வருஷம் மரம் வளத்தியா…? இந்த வருஷமும் எத்தனை மரம் வளப்ப?” அங்கிருந்த குடியாத்தம் பள்ளி மாணவன் ஒருவனிடம் கேட்க,

“நாங்க student’s எல்லாம் சேர்ந்துதான் மரக்கன்னுகள வளப்போம். எப்படி பாக்கெட்ல மண் நிரப்புறதுனு ஈஷா வாலண்டியர்ஸ் சொல்லித்தர்றாங்க. அதுமட்டுமில்ல, எப்படி பராமரிச்சு வளர்த்து, மரமா நடணும்னு நாங்க carefulஆ பார்த்து பண்றோம். இதுல எங்க டீச்சர்ஸும் ரொம்ப ஹெல்ப் பண்ணுவாங்க.” என்று உற்சாகமாக பதிலளித்தான் அந்த மாணவன்.

முற்பகலில் நிகழ்ந்த துவக்க விழாவையடுத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மதிய உணவு ஈஷா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகலில் மாணவர்கள் ஆசிரியர்களின் மேற்பார்வையில் பாக்கெட்டுகளில் மண்ணை முறைப்படி நிரப்பும் செயல்பாட்டில் ஈடுபட்டனர். இதனையடுத்து வேளாண் காடுகள் உருவாக்கத்தின் அவசியம் குறித்தும் சுற்றுச்சூழல் குறித்தும் விழிப்புணர்வு காணொளிக் காட்சிகள் திரையிடப்பட்டன. அவற்றை ஆர்வத்துடன் கண்டுகளித்த ஆசிரியர்களும் மாணவர்களும் இறுதியில் நிகழ்வு குறித்த தங்கள் அனுபவங்களை மேடைக்கு வந்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சி நிறைவுக்குப்பின் அன்றைய இரவில் வேலூர் பேருந்து நிலையத்தில் கோவை பேருந்திற்காக காத்திருந்தபோது, அங்கு நம்மை நனைத்த சாரல் மழை, வேலூரில் பள்ளி மாணவர்களால் நிகழவிருக்கும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான ஒரு நல்ல அறிகுறியாக தென்பட்டது.