வல்லாரை வருவிக்கும் வற்றாத ஆரோக்கியம்!

வல்லாரைக் கீரை தரும் வியக்கவைக்கும் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி நம் உமையாள் பாட்டி தனது அனுபவ வார்த்தைகளை நம்முடன் பகிர்கிறாள், தொடர்ந்து படித்து அறியலாம்!
வல்லாரை வருவிக்கும் வற்றாத ஆரோக்கியம்!, Vallarai varuvikkum vatratha arogyam
 

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 22

வல்லாரைக் கீரை தரும் வியக்கவைக்கும் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி நம் உமையாள் பாட்டி தனது அனுபவ வார்த்தைகளை நம்முடன் பகிர்கிறாள், தொடர்ந்து படித்து அறியலாம்!

உமையாள் பாட்டியை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று பார்த்துவிட்டு வரலாமென நினைத்து, வண்டியை ஸ்டார்ட் செய்ய, ஸ்டார்ட் ஆகவில்லை. ஆம்... முதலில் அதில் சாவி போடவேண்டுமே?! சாவி வைத்த இடத்தை மறந்து சுமார் அரை மணிநேரம் கழித்து என் சட்டைப்பையிலேயே இருப்பதைப் பார்த்ததும், ஆட்டைத் தோளில் போட்டுக்கொண்டு தேடியவன் கதைபோல ஆனதை எண்ணி நொந்துகொண்டேன்.

ஞாபக சக்தியை அதிகரிக்குற தன்மை இருக்குறதால வல்லாரைக் கீரைய ஞாபகவல்லி’னு சொல்லுவாங்க.

பாட்டி ஒரு பிரபல வார இதழைக் கையில் வைத்து, சாவகாசமாக படித்தபடி அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம்!

“என்ன பாட்டி எப்பவுமே எதையாவது செஞ்சிகிட்டு பரபரப்பா இருப்பீங்க, இப்படி உங்களப் பாத்ததே இல்லையே?!”

“வாப்பா... வா! உன்னப் பத்திதான் நினைச்சுகிட்டு இருந்தேன். நீயே வந்திட்டே!” வார இதழில் மூழ்கியிருந்த தன் முகத்தை, புன்னகைத்தபடியே என் பக்கம் திருப்பினாள் பாட்டி.

“என்னப் பத்தியா... அந்தப் பத்திரிக்கையில என்னப் பத்தி ஏதும் போட்டிருக்கா?!” வேடிக்கையாக கேட்டேன்.

“இதுல ஒரு கவிதை வந்திருந்தது, அந்த கவிதைய படிச்சதும் உன் ஞாபகம் வந்தது!”

“என்ன கவிதை பாட்டி?!” ஆவலுடன் கேட்டதும் பாட்டி வாசித்துக் காட்டினாள்!

சிறகை விரித்தபடி பறவைகள்
நெளிந்து நகர்ந்தபடி ஊர்வன
பாய்ந்தபடியும் தாவியபடியும் விலங்குகள்
வண்டிச் சாவியைத் தேடியபடி மனிதன்!

பாட்டி சொன்னதும் ஒருவேளை நடந்ததை ஒளிந்திருந்து பார்த்திருப்பாளோ என எண்ணத் தோன்றியது.

“ஞாபக மறதியை கிண்டல் செஞ்சா செஞ்சிட்டுப்போங்க, அதோட கூடவே அதுக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்களேன்!” நான் அலுத்துக்கொள்ள பாட்டி வல்லாரைக் கீரையின் மகத்துவங்களை எடுத்துரைக்கத் துவங்கினாள்.

“ஞாபக சக்தியை அதிகரிக்குற தன்மை இருக்குறதால வல்லாரைக் கீரைய ஞாபகவல்லி’னு சொல்லுவாங்க. வல்லாரை இலைப் பொடி 130 மி.கி அளவு பசும்பால்ல கலந்து குடிச்சு வந்தா ஞாபக சக்தி அதிகரிக்கும். அதோட மூளையும் பலமடையும்.”

“ஓ... ரொம்ப நல்லது பாட்டி! இன்னையில இருந்து ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.”

“அதோட நீ யோகாவும் டெய்லி பண்ணுனா, பூர்வஜென்மம் கூட ஞாபகம் வந்திரும்ப்பா”

பாட்டி என்னை வாரத் துவங்கியதும் நான் சுதாரித்துக்கொண்டு வல்லாரை குறித்த வேறு ஆரோக்கிய குறிப்புகளையும் சொல்லுமாறு கேட்க, பாட்டி தொடர்ந்தாள்.

“வல்லாரை இலைய அரைச்சு மூட்டு வீக்கத்திலயும் கட்டிகளால வர்ற வீக்கத்திலயும் கட்டிவந்தா நல்ல குணம் கிடைக்கும். நெறி கட்டுறதால உண்டாகுற புண்ண குணமாக்க, 130 மி.கி அளவு வல்லாரை இலைப் பொடிய வெதுவெதுப்பான தண்ணியில கலந்து குடிக்கலாம். அதோட, புண் இருக்குற இடத்திலயும் பொடிய தூவி விடுவது புண் குணமாக உதவியாயிருக்கும். வல்லாரை இலைய வெந்தயம் சேத்து அரைச்சு குடிநீராக காய்ச்சி, 1-2 சங்கு அளவுக்கு குழந்தைகளுக்கு (2 முதல் 5 வயசு) கொடுத்துவந்தா வயிறு உபாதைகள் தீரும்.”

பாட்டி வல்லாரையின் பலவித ஆரோக்கியக் குறிப்புகளை அடுக்கிக் கொண்டே செல்ல, எனக்கு பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. வல்லாரை இலை மனித மூளையின் வெளித்தோற்றத்தை ஒத்திருக்கும் என்பதோடு, மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்பது எனக்கு புதிய தகவலாக இருந்தது. அப்போது, வல்லாரையை எங்கே எப்படிப் பெறுவது என ஒரு கேள்வியும் எனக்குள் எழுந்தது!

அதற்கும் பாட்டி விடை சொன்னாள். ஈஷா ஆரோக்யாவில் வல்லாரை கல்பம், வல்லாரை மாத்திரை, வல்லாரை சர்பத் ஆகியவை கிடைக்கும் என்பதை கனிவுடன் பாட்டி சொல்லியதும், உடனே வண்டியை ஸ்டார்ட் செய்து வல்லாரை வாங்குவதற்குக் கிளம்பினேன், இம்முறை வண்டிச்சாவியை தேடாமல்...!

குறிப்பு:
  • குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுக்கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கு தீர்வதற்கு, 3-4 வல்லாரை இலையை சீரகம் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்து குழந்தைகளுக்குக் (5 வயதிற்கு மேல்) கொடுக்கலாம் அல்லது இலையை மட்டும் தனியாக அரைத்து தொப்புள் மீது பற்று இடலாம்!
  • கவனிக்க: கர்ப்பிணி பெண்கள், வலிப்பு நோய் உள்ளவர்கள் இம்மூலிகையை பயன்படுத்தக்கூடாது.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்