வானமே எல்லை

ஒலியில்லாவிடினும் வாழ்வில் வலி ஏற்படுத்திக் கொள்ளாமல், வழி ஏற்படுத்திக் கொண்ட திரு. வைபவ் கோத்தாரியின் வெற்றி சரிதம் இன்று நமக்குப் பாடமாய்... கற்றுக் கொள்ளுங்கள்!
 

ஒலியில்லாவிடினும் வாழ்வில் வலி ஏற்படுத்திக் கொள்ளாமல், வழி ஏற்படுத்திக் கொண்ட திரு. வைபவ் கோத்தாரியின் வெற்றி சரிதம் இன்று நமக்குப் பாடமாய்... கற்றுக் கொள்ளுங்கள்!

நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை, இன்சைட் - டிஎன்ஏ ஆஃப் சக்சஸ் என்னும் நிகழ்ச்சி சத்குரு முன்னிலையில், திரு. ராம் சரண், திரு. கே.வி. காமத், திரு. ஜி.எம். ராவ் அவர்களின் வழிகாட்டுதலோடு ஈஷா யோகா மையத்தில் நிகழ்ந்தது.

வியாபாரத் தலைவர்கள் எல்லாம் ஒரு யோக மையத்தில் கூடுவது உலக சரித்திரத்தில் அநேகமாக இதுவே முதல் முறையாக இருக்கும்!

இந்நிகழ்ச்சியில் வித்தியாசமான ஒரு நபர் கலந்து கொண்டார். மாற்றுத் திறனாளியான இவர் இந்த நிகழ்ச்சி முழுக்க யார் பேசுவதையும் எதையும் கேட்க முடியாமல், பேச முடியாமல் இருந்தாலும் அந்த நான்கு நாட்களுமே மிக மிக உற்சாகமாக பங்கேற்றார்.

நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேசுவதை, அவருக்கு சைகையாக மொழிப் பெயர்த்துச் சொல்ல இரண்டு சைகை மொழிப் பெயர்ப்பாளர்களையும் அவர் கூடவே அழைத்து வந்திருந்தார்.

சுமார் 500 கோடி மதிப்புள்ள தனது வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் திரு. வைபவ் கோத்தாரிக்கு தனது வியாபாரத்தை மேலும் முன்னேற்றும் வழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதும் இதற்காக ஜெயப்ப்பூரிலிருந்து அவர் இவ்வளவு தூரம் பயணித்ததும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

நிகழ்ச்சியின் ஒவ்வொரு பகுதியிலும் தன் மொழிப்பெயர்பாளர்கள் மூலம் முழுமையாய் கலந்து கொண்ட இவர் இடைவேளையின் சில மணித்துளிகளை கூட வீண் செய்யாமல் தீர்த்தகுண்டத்தில் குளிப்பதும் தியானலிங்கத்தை உணர்வதுமாக தன்னை ஆசிரமத்தில் முழுமையாக இணைத்துக் கொண்டார்.

பலர் கூடி இருக்கும் நிகழ்வில் குறையற்ற மனிதர்கள் கூட அனைவரிடமும் பேசுவதற்கு கூச்சப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இவரோ எந்த தடையுமின்றி அவருக்கே உரிய மொழியில் எல்லா பங்கேற்பாளர்களிடமும், தன்னார்வத் தொண்டர்களுடனும் பேசினார்.
aa

நிகழ்வின் முந்தைய நாளே வந்துவிட்ட இவர் பிறரைப் போல தன் அறைக்குள் ஓய்வெடுக்காமல் யோக மையத்தை சுற்றிப் பார்ப்பதில் நேரம் செலவிட்டார். மையத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் துல்லியமாக கவனித்தார். ஆசிரமம் நிர்வாகம் செய்யப்படும் விதத்தை கூர்மையாக கவனித்தார்.

இவரது குறைபாடு கருதி அதிக கவனம் செலுத்த முன் வந்த தன்னார்வத் தொண்டர்களை புன்சிரிப்புடன் தவிர்த்த இவரிடம் அபரிமிதமான தன்னம்பிக்கை வெளிப்பட்டது.

சத்குருவின் வார்த்தைகளும் அவரது நகைச்சுவையும் மந்திர ஒலி அதிர்வுகளும் பலரது வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது. நிசப்தத்தின் மடியில் நிரந்தரமாய் வசித்துவரும் இவரோ சத்குருவின் பால் ஈர்க்கப்பட்ட மாயம்தான் என்ன என்பது தெரியாத நிலையில், சத்குருவிடமும் அவர் பேசியது நம்மை நெகிழச் செய்கிறது!

இவரது குறைபாடு இவருக்கு தாழ்வு மனப்பான்மையை அளித்துவிடவில்லை. பதவி இவரை சர்வாதிகாரியாக்கி விடவில்லை. வெற்றி இவருக்கு ஆணவத்தை கொடுத்துவிடவில்லை. பணம் இவரை மந்தமாக்கி விடவில்லை.

மாறாக இவரது பணிவும் மேலும் மேலும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற இவரது ஆர்வமும் பலரது நெஞ்சத்தையும் தொட்டது. அவரது உடலில் இருக்கும் குறைபாடு அவரை மேலும் கூர்மையாகவே ஆக்கியிருப்பதை காணும்போது வாழ்வில் சிறு தடை வந்தாலே துவண்டு போகும் பலர் முன் மிகப் பெரிய தடையையும் தாண்டி உற்சாகமாய் இவர் வலம் வருவது நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது.

உலகில் இருக்கும் வெவ்வேறு விதமான ஒலி அதிர்வுகளை கலந்து வார்த்தையாய் அர்த்தம் செய்து மொழியாய் பயன்படுத்தி வரும் நமது மனக்கிடங்கில், எண்ணிலா வார்த்தைகளை ஓட விட்டிருக்கிறோம். அதிர்வுகளற்ற இவரது மனதில் ஆனந்தம் மட்டும் பிரவாகமாய் இறுதி நாளன்று பெருக்கெடுத்தது. அதை இவரது நடனமே வெளிப்படுத்தியது.

தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி விட்டால் வளர்ச்சிக்கு எல்லைதான் ஏது?

 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
7 வருடங்கள் 2 மாதங்கள் க்கு முன்னர்

wonderful:))