வரும் செப்டம்பர் 6ம் தேதியன்று கோவையில் நடக்கவிருக்கும் பிரம்மாண்டமான "ஈஷா கிராமோத்சவம்" விழா, அதில் நடக்கவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

கபடி, கிளித் தட்டு, கில்லித் தண்டு, சிலம்பம், எறி பந்து, உதை பந்து... தமிழகத்தில் இதுபோன்ற கிராமிய விளையாட்டுக்களும் கிராம மக்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தே இருந்ததை முந்தைய தலைமுறைகளில் பார்க்க முடிந்தது. ஆனால், இப்போதோ பெரும்பான்மையான கிராமங்கள் உற்சாகமற்று களையிழந்து காணப்படுகின்றன. இன்று இந்தியா பொருளாதார அளவிலும் தொழில்நுட்ப வசதியிலும் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஆனால், இந்தியாவின் நகர்புறங்களில்தான் இந்த வளர்ச்சியெல்லாம்! கிராமங்களில் இன்னும் களையிழந்துபோன வாடிய முகங்களையே பார்க்க முடிகிறது.

இந்த இயக்கத்தின் மூலமாக 60 வயது பெண்மணிகளும் 70 வயது பெரியவர்களும் விளையாட்டில் ஈடுபடுவதைப் பார்ப்பது அற்புதமான ஒன்று!

ஊட்டச்சத்து குறைபாடுகளாலும், ஆரோக்கிய பிரச்சனைகளாலும் உடல் அளவில் பலகீனமானவர்களாகவே பெரும்பான்மையான கிராம மக்கள் காணப்படுகிறார்கள். ஆனால், விளையாட்டு என வரும்போது அவர்கள் புத்துணர்ச்சி கொண்டு துள்ளி எழுகிறார்கள்.

“நீங்கள் ஒரு பந்தை உதைக்கும்போது கடவுளுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள்!” என சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். ஆம்! நாம் விளையாடும்போது நமது உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. அதோடு நமக்குள் புதைந்துகிடக்கும் கொண்டாட்ட உணர்வும் வெளிப்படுகிறது. ஆனால், வாழ்க்கை சூழலும் பொருளாதார நெருக்கடிகளும் பலவிதங்களில் மனிதர்களை மாற்றி நமது பாரம்பரிய விளையாட்டுகளையும், விளையாட்டுகளால் நாம் அடையும் நன்மைகளையும் புறந்தள்ளச் செய்கின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம்

கிராமப்புற மக்களின் உடல், உள்ளம், பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பாட்டை எடுத்து வந்து, அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை கொண்டு வருவதற்காக சத்குரு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் கிராமங்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதோடு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தப்படுகிறது.

ஈஷா புத்துணர்வு கோப்பை 2015

2003ஆம் ஆண்டு முதல் ஈஷா கிராம புத்துணர்வு இயக்கத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் கிராமங்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதோடு, வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டும் அதுபோல் மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெறவிருக்கிறது.
இந்த ஆண்டு ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் மூலம் மாதம் முழுக்க நிகழவுள்ள 675 கைப்பந்து (Volley ball) போட்டிகள் கொண்ட தொடரில் தமிழகம் முழுக்க உள்ள கிராமங்களிலிருந்து சுமார் 7500 பேர் பங்கேற்க உள்ளனர்.

இப்போட்டித் தொடரின் நுழைவுக்கட்டப் போட்டிகள் தமிழகத்தின் 32 இடங்களிலும், அடுத்தகட்ட போட்டிகள் 8 இடங்களிலும் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டிகள் கோவையில் நடைபெறவிருக்கின்றன. வெற்றிபெறும் அணிகளுக்கு பதங்கங்களும் பரிசுத்தொகையும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்படுகின்றன.

உங்கள் ஊர் விளையாட்டுக் குழுவும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்களைப் பெற விரும்புவோர் gramotsav@ishaoutreach.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்! மேலதிக விவரங்களைப் பெற 94425 90084 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்!

2005ல் வெற்றிபெற்ற அணிகளுக்கு அன்றைய தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களும் நடிகர் விஜய் அவர்களும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். 2006ல் அன்றைய தமிழக வேளாண்துறை அமைச்சரும், 2007ல் அன்றைய தமிழக முதலமைச்சர் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வரும் செப்டம்பர் 6ஆம் தேதியன்று கோவை வ.உ.சி. பூங்காவில் மிகப் பிரம்மாண்டமாக நிகழவிருக்கும் ஈஷா கிராமோத்சவ நிகழ்ச்சியில் போட்டிகள் நிறைவுற உள்ளது. சுமார் 3 லட்சம் பேர் மைதானத்தில் நேரடியாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர். மேலும் பல லட்சம் பேர் தொலைத்தொடர்பு ஊடகங்கள் வழியாக நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க உள்ளனர்.

பாரம்பரிய விளையாட்டுகளும், கிராமிய நடனங்களும், இசை நிகழ்ச்சிகளும், அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திருவிழாக்களும் இந்நிகழ்ச்சியில் நிகழவுள்ளன. மேலும் நாள்முழுக்க நிகழவுள்ள கிராமிய உணவுத் திருவிழாவும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வு கண்காட்சியும் இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்க உள்ளன.

சத்குரு இது பற்றி கூறும்போது...

விளையாட்டில் ஈடுபடும்போது ஒருவரின் உடலும், மனமும் வலிமை அடைகிறது. இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால் ஒரு விளையாட்டினை எப்படி விளையாட வேண்டுமென்று அறிந்துகொள்வதும் கூட ஆன்மீக செயல்முறையே! விளையாட்டு என்பது ஒருவர் தன் எல்லைகளைக் கடந்து இயங்குவதற்கான எளிய வழிமுறை.

கிராம மக்களின் வாழ்வை புத்துணர்வு கொள்ளச் செய்யும் நோக்கில் நாம் இந்த கிராம புத்துணர்வு இயக்கத்தின் மூலம் அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். முதன்முதலில் இந்த விளையாட்டுகளில் கிராம மக்களை ஈடுபடுத்த முயன்றபோது ஜாதி ரீதியான, சமூக ரீதியான வேறுபாடுகளால் அவர்களிடையே தயக்கங்கள் இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால் விளையாட்டு என வரும்போது அது அவர்களை எல்லைகளைக் கடந்து ஒன்றாக்கியது.

பொதுவாக கிராமப் புறங்களில் 6 வயதிற்கு மேல் பெண் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை. ஆனால், இந்த இயக்கத்தின் மூலமாக 60 வயது பெண்மணிகளும் 70 வயது பெரியவர்களும் விளையாட்டில் ஈடுபடுவதைப் பார்ப்பது அற்புதமான ஒன்று! அவர்கள் இளம் வயதுடையவர்களுடன் போட்டி போட்டு வெற்றியும் பெறுகின்றனர்.

இந்த இயக்கத்தின் மூலம் நிகழும் இன்னொரு குறிப்பிடத்தகுந்த மாற்றம், கிராமத்து இளைஞர்கள் இதன்மூலம் தங்கள் உடல்திறனை மீட்டெடுக்க முன்வருகிறார்கள் என்பதுதான். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றிற்கு அடிமையாகி தங்கள் உடல் நலனை கெடுத்து வந்தவர்கள், திடீரென்று இந்த விளையாட்டுப் போட்டிகளால் அந்த பழக்கங்களிலிருந்து மீண்டு, தங்கள் உடல்திறனை மேம்படுத்துகிறார்கள். போட்டிகளில் வெற்றிபெற வேண்டுமென்ற முனைப்பு அவர்களை அப்படி மாற்றுகிறது.

ஈஷாவில் துவங்கியுள்ள இந்த முதற்கட்ட முயற்சி இந்த நாடு முழுவதும் பரவ வேண்டும். விளையாட்டு என்பதை துவக்கப் புள்ளியாகக் கொண்டால், மனிதனின் பொருளாதார, சமூக, ஆன்மீக வளர்ச்சிகளையும் எளிதில் அடைந்துவிடலாம். அனைத்திற்கும் மேலாக, இந்த வாழ்க்கை எனும் விளையாட்டில்தான் ஒவ்வொரு மனிதனும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமானது!