‘உடல்’ – அற்புதத் தொழிற்சாலை
இயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்து, கடந்த திங்கட்கிழமையன்று இயற்கை எய்திய நம்மாழ்வார் அவர்கள், தனது வாழ்நாள் முழுக்க பல சமூக நலத் தொண்டுகளைச் செய்து வந்ததோடு யோகப் பயிற்சிகள் மூலமும் சரியான உணவு பழக்க வழங்கங்களாலும் உடல் எனும் எந்திரத்தை அற்புதமாகப் பராமரித்து வந்தார். இங்கே உடல் பற்றி அவர் கூறியுள்ள அற்புத வார்த்தைகள் சில!

நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 17
இயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்து, கடந்த திங்கட்கிழமையன்று இயற்கை எய்திய நம்மாழ்வார் அவர்கள், தனது வாழ்நாள் முழுக்க பல சமூக நலத் தொண்டுகளைச் செய்து வந்ததோடு யோகப் பயிற்சிகள் மூலமும் சரியான உணவு பழக்க வழங்கங்களாலும் உடல் எனும் எந்திரத்தை அற்புதமாகப் பராமரித்து வந்தார். இங்கே உடல் பற்றி அவர் கூறியுள்ள அற்புத வார்த்தைகள் சில!
நம்மாழ்வார்:
இ யற்கை 460 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக அற்புதமான இந்த உலகத்தைத் தோற்றுவித்தது. இந்த உலகத்தில் மனிதனையும் தோற்றுவித்தது. அதாவது பரிணாம வளர்ச்சியில் மனிதனே உயர்மட்ட ஆற்றல். மனிதன் தோன்றுவதற்கு முன்பே மனிதனுடைய தேவையை எல்லாம் இயற்கை படைத்திருந்தது.
பன்னாட்டு கம்பெனிகளால் இறக்குமதி செய்யப்படும் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் இரண்டாவது பச்சைப் புரட்சி என்று பட்டம் சூட்டப்படுகிறது. முதல் பச்சைப் புரட்சி ஏற்படுத்திய சீரழிவுகளை இன்னும் நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்து நாளேட்டின் சிறப்பு நிருபர் சாய்நாத் இதைப் பற்றிக் கூறுகையில்...
"உலகச் சுகாதார அமைப்பு 2007 ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் 2020ம் ஆண்டு முதல் உலகெங்கும் ஆண்டுதோறும் மூன்று லட்சம் பேர் பலியாகக் காரணமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது.
Subscribe
இதுபற்றி விவாதிப்பதற்காக டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் நகரத்தில் 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூடிய 195 நாட்டு பிரதிநிதிகள் எந்த ஒரு முடிவும் எடுக்காமலே பிரிந்தார்கள். அதனால் பொறுப்பு, வளரும் நாட்டு மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது." என்கிறார்.
திருவள்ளுவர்,
நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
என்கிறார்.
நோய் அறிவதிலேயே தடுமாற்றம் இருக்கும்போது நோய்முதல் நாடுவது எப்படி?
அண்மையில் மருந்தில்லா மருத்துவம் பேணும் மருத்துவர் உமர் ஃபாருக் எழுதிய உடல் மொழி நூலைப் படித்தேன். அதில் இரண்டு கருத்துக்களை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். முதல் கருத்து இயற்கை ஒரு காலத்திலும் தவறு செய்வதில்லை. இரண்டாவது கருத்து, உடல் ஒருபோதும் தன் கடமையை செய்யத் தவறுவதில்லை.
நாம் உண்ணுகிற உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக் கொள்ளும் உடல் அதனை மூன்று நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறது. ஒன்று செரிமானம், இரண்டாவது இயக்கம். மூன்றாவது நோய் எதிர்ப்பு அல்லது பழுதுபார்த்தல்.
செரிமானம் என்பது இரண்டு கூறுகளைக் கொண்டது. ஒன்று உட்கொள்ளும் பொருளில் உள்ள சத்துக்களைப் பிரித்து தன்மயமாக்குதல். இரண்டாவது உட்கொண்டவற்றில் அல்லது உடலில் சேமிக்கப்பட்டுள்ள கழிவுகளை வெளியேற்றுதல். இப்படிக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு உடல் பின்பற்றும் உத்திகள் வாந்தி, இருமல், மயக்கம், வயிற்றால் போவது போன்றவையாகும். இப்படிக் கழிவுகளை வெளியேற்றும் போக்கையே நாம் நோய்கள் என்று கருதுகிறோம். மருந்தை உட்கொண்டு கழிவு வெளியேற்றத்தைத் தடை செய்யும்போது கழிவுகள் உடலுக்குள்ளேயே தேங்கி தீராத நோய்களைத் தோற்றுவிக்கிறது. இத்தகைய தீராத நோய்களில் இருந்து விடுபடுவதற்காகவே யோகப் பயிற்சிகளை நாம் மேற்கொள்ளுகிறோம்.
இப்படி ஐம்பூதங்களால் ஆன உடலில் நிகழ்வதைப்போலவே பயிர் வளர்ச்சியிலும் நிகழ்கிறது. தானாக நிகழும் சிகிச்சையை நோய் என்று கருதி, தொலைதூரத்தில் இருந்து வரும் வித்துக்களையும், உப்புக்களையும், நஞ்சுகளையும் நிலத்தில் கொட்டி தீராத நோய்களை வரவழைத்துக் கொள்கிறோம். இனிமேலாவது நோய் நாடி முதல் நாடுவோம்!
தொடர்ந்து விதைப்போம்...
இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்!