டாக்டர். கிரண் பேடி - முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி. டாக்டர் பட்டம் முதல் பாரத குடியரசுத் தலைவர் அளிக்கும் விருது வரை பல பட்டங்களை வாங்கியவர். வருடத்தின் சிறந்த பெண் என இவரைத் தேடி வந்த பட்டங்கள் ஏராளம். ஆனால் இவர் தேடி வந்த இடம் எப்படி இவரது வாழ்க்கைப் பயணத்தில் தெளிவினை உண்டாக்கியது? இதோ அவர் வார்த்தையில்...

1982 ல் ஆசிய விளையாட்டுகள் நடைபெறவிருந்த போது டெல்லிநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அப்போது வாகன நெரிசலைத் தவிர்க்க காவல்துறை அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தினர். தவறான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த (no parking) வாகனங்கள் கிரேன்களை கொண்டு அகற்றப்பட்டன.

“DHI 1817” என்ற வாகனம் கிரேன் (crane) கொண்டு அகற்றப்பட்ட போது டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமமந்திரி திருமதி.இந்திரா காந்தியின் கார் என்றும் பாராமல் அதனை அகற்றிய காவல்துறை அதிகாரியைப் பற்றி பல செய்தித்தாள்களும் செய்தி வெளியிட்டன.

கடமை என்று வரும்போது கடவுளே எதிரில் வந்தாலும் சமரசம் செய்து கொள்வதோ சலுகைகள் அளிப்பதோ இவரது வாழ்வில் எப்போதும் நிகழ்ந்ததில்லை. வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் காவல்துறை அதிகாரியாக டெல்லி நகரவீதிகளில் இவர் குரல் கர்ஜித்த நாள் முதல் ஐ.நா வின் சிறப்பு காவல்துறை ஆலோசகராக (civilian police advisor) உலக அரங்கில் இவர் குரல் எதிரொலித்த நாள் வரை இவரது வீரத்தை எழுதிடாத பத்திரிகைகளே இல்லை எனலாம்.

புதுமைப் பெண், புரட்சி பெண் என வீரப்பெண்மணிகளை தமிழ் பலவாறு வர்ணித்திருக்கிறது. ஆனால் இந்த கம்பீரப் பெண்ணை கிரேன் பேடியா (Crane Bedi) அல்லது கிரண் பேடியா என பல பத்திரிகைகளும் அந்நாளில் வர்ணித்தன.

1973 ஆம் வருடம் “நான் சாதாரண பெண் அல்ல! நான் சவாலான ஒரு தொழிலையே தேர்ந்தெடுப்பேன்” எனக் கூறிய அந்த இளம் கிரண் பேடியின் இரத்தத்தின் புத்துணர்வு இன்றும் குறையாமல் புது சக்தியுடன் செயல்படுவதை பார்க்கும்போது வாழ்வின் மீது இவருக்கு இருக்கும் தணியாத தாகம் நமக்கு புலப்படுகிறது.

தாகம் கொண்ட உள்ளமும் தணிக்கும் தண்ணீர் அளிக்கும் நதியும் சந்தித்தால் அது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். திருமதி. கிரண் பேடி சத்குருவை சந்தித்ததும் அவர் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்ததும் வாழ்வின் மீது அவருக்கு இருந்த தாகத்தை மேலும் பெரிதாக்கியது.

இந்திரா காந்தி முதல் பில் கிளின்டன் வரை பல VVIP க்களை சந்தித்த இவருக்கு சத்குருவின் சந்திப்பு மட்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய காரணம் என்ன? தேசத்தின் நலனே தன்னலமாக கொண்டு வாழும் இந்த வீராங்கனைக்கு ஒரு ஆன்மீகக் குருவின் மேல் ஏன் இத்தனை ஈர்ப்பு?

இதனை அவரே விளக்குகிறார். “நான் சத்குருவைப் பற்றி பெரிதும் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அவரை நேரில் காண விருப்பினேன். நான் சென்ற வருடம் சென்னையில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டபோது அவரை சந்திக்கும் அந்த அற்புத வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பார்த்ததும் அவரது பேச்சை கேட்டதும் அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழுந்தது. நான் அவரிடம் சென்றேன். அவரை வாழ்த்தினேன். அவர் ஈஷா யோகா மையத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

நானும் எனது செயலாளர் அர்ச்சனாவும் வெள்ளியங்கிரி மலைச்சாரலை அடைந்தோம். நான் உண்மையில் பரவசத்தில் ஆழ்ந்தேன். கூர்மையான சிந்தனையும், மூட நம்பிக்கையில்லாத அணுகுமுறையும் கொண்ட ஒரு உண்மையான மனிதரை நான் சந்தித்தேன். அவரது பேச்சில் எந்த மூடநம்பிக்கையும் இல்லை.

ஈஷா யோகா மையத்தில் தியானலிங்கத்தின் அற்புதத்தையும், பழமையின் அழகையும், நிரம்பி வழியும் தியான அன்பர்களின் கூட்டத்தையும் கண்டு வியந்தேன். ஆசிரமத்திற்குள் அமைந்திருந்த ஈஷா ஹோம் ஸ்கூலில் ஆனந்தமாக வலம் வந்த சிறுவர்களைக் கண்டேன். சத்குருவே அவரது ஜீப்பில் என்னை ஆசிரமம் முழுக்க அழைத்து சென்று காண்பித்தார். அவர் என்னுடன் ஆனந்தமாக உரையாடிக் கொண்டு வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்தார். அவர் என்னுடன் மிகவும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தார். இப்படி என்னுடன் எளிமையாக பேசிக் கொண்டு வரும் இந்த மனிதருக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அப்போது உணர்ந்து பார்க்கவேயில்லை.

கிளம்பும் போது எனக்கு அன்புப் பரிசாக அவரது வாழ்க்கை வரலாறு புத்தகமும் வீடியோ டிவிடிகளும் அளித்தார்கள். இந்த சந்திப்பு என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் எனக்கு இன்னும் அவரை முழுதாகப் புரியவில்லை. அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் மேலோங்கியது. அவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் என்னை கட்டிப் போட்டது. அந்தப் புத்தகத்தை கீழே வைக்க என்னால் முடியவில்லை. அப்போது தான் எனக்கு அந்த உண்மை புரிந்தது. நான் பெரும் வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். அவர் அருகில் இருந்தாலும் அவரது மற்றொரு பரிமாணத்தை உணராமல் போய்விட்டேன். அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தாகமே அதிகரித்தது. வலைதளம் முழுக்க தேடினேன். யூ ட்யூபில் (YouTube) தினமும் அவரது சொற்களை கேட்டேன். அவரது வார்த்தைகள் எனக்கு சக்தியூட்டும் ஊட்டசத்தாய் அமைந்தன.

எனக்குள் ஒருவித தெளிவும் நான் சூழ்நிலைகளை அணுகும் விதத்தில் மாற்றத்தையும் உணர முடிந்தது. நான் பலரிடமும் எனது இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்.

நான் ஏங்கியிருந்தது போலவே எனக்கு ஈஷா யோகா மையத்திலிருந்து ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது! ஜூன் 6 ஆம் தேதி “தேசத்தை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் “இன் கான்வெர்சேஷன் வித் த மிஸ்டிக்“ என்ற நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள்.

இந்த மாமனிதரின் முன் நிற்பதற்கு முன் ஈஷா யோகாவின் அடிப்படை பயிற்சியையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். என் வேண்டுகோளை ஏற்ற ஈஷா பிரம்மச்சாரிகள் இருவர், டெல்லி ஈஷா யோகா மையத்தில் எங்களுக்கு யோக வகுப்பிற்கான ஏற்பாடுகளை செய்தனர். எங்கள் குழுவில் இருக்கும் அனைவரும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டோம். அவர்கள் எங்களுக்குள் இருந்த கடினத்தன்மையை விலக்கி எங்கள் உள்ளங்களை திறந்தனர்.

மேலும் எங்களுக்கு தீட்சை அளிக்கப்பட்டநாள் புத்த பௌர்ணமி. இதைவிட எனக்கு வாழ்வில் வேறு என்ன கிடைத்து விட முடியும்? நான் மட்டுமல்ல, எங்கள் மையத்தை சேர்ந்த ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், சமையல்காரர்கள், ஓட்டுநர்கள் என சுமார் 100 பேர் இன்னும் சில நாட்களில் இவ்வகுப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்த வகுப்பை ஏற்கனவே முடித்தவர்கள் பதவியெனும் வட்டத்தை உடைத்து இவர்கள் செய்யும் வகுப்பில் தன்னார்வத் தொண்டு செய்யப் போகிறோம்.

நாங்கள் அனைவரும் தொடர்ந்து ஈஷாவில் சொல்லிக் கொடுத்த கிரியா பயிற்சியை செய்து வருகிறோம்.

எங்கள் குழுவில் ஒவ்வொருவரும் எங்கள் எண்ணங்களைப் பற்றியும் செயலைப் பற்றியும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் சுயமாக செயல்படுகிறார்கள். ஒவ்வொருவரும் அமைதியாக சுயகட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஆனந்தமாக வேலை செய்கிறார்கள். வீட்டிலும் ஆனந்தமாக இருக்கிறார்கள். இதைவிட எனக்கும் எங்கள் மையத்திற்கும் வேறு என்ன வேண்டும்?

இதுபோன்ற அனுபவப்பூர்வமான வகுப்பாக அல்லாமல் வெறும் புத்தக அறிவு ஒருவரை எங்கும் அழைத்துச் செல்லாது. புத்தகங்கள் ஒருவரை வாழ்வின் ஆழத்திற்கு எடுத்துச் செல்வதில்லை. ஆனால் என்னுள் பல கேள்விகள் எழுந்து விட்டன. தேசத்தின் நிகழ்வுகளை யார் மாற்றுவது? பெற்றோர்களா? ஆசிரியர்களா? சமூகத் தலைவர்களா? யார்? மாற்றத்தை யார் துவக்க வேண்டும்?

இதற்கான பதிலை சத்குருவிடமே கேட்டுவிடலாம்.

இந்தக் கேள்விகள் எல்லாவற்றையும் சத்குருவிடம் கேட்போம். இதனைக் கேட்டு புது ஆட்சி அமைக்கவிருக்கும் திரு. நரேந்திர மோடி அவர்கள் நாம் விரும்பும்படியான புதிய பாரதத்தை நமக்கு செதுக்கி தருவதற்கான திட்டத்தினை அவருக்கு வகுத்துக் கொடுப்போம். நான் கேட்கவிருக்கும் இந்த கேள்விகளுக்கான பதில்களை ஜுன் 6ம் தேதி சத்குருவுடன் நடைபெற இருக்கும் "இன் கான்வர்சேஷன் வித் தி மிஸ்டிக்" என்னும் நிகழ்ச்சியில் நீங்கள் பார்க்கலாம். அவருடன் இருந்து இந்த கேள்விகளுக்கான பதில்களை கேட்பது நமக்கு கிடைக்கும் பாக்கியம் என்றே நான் சொல்வேன். சத்குருவிடம் ஈஷா யோகா வகுப்பினை கற்றுக் கொண்டது என் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. முடிவற்ற என் வாழ்க்கைப் பயணத்தில் பெரும்படி இது.