நம்மாழ்வார் வழியில் வீறுநடை போடும் ‘ஈஷா விவசாய இயக்கம்' – பகுதி 2

தென்னந்தோப்பில் பறிக்கலாம் ஆரஞ்சு! – பல்லடுக்கு பயிர்முறை நுட்பங்கள்

1,900 தென்னை, 9,000 பலவகை மரங்கள், 1300 பழ மரங்கள், 500 ஜாதிக்காய் மரங்கள், 100 பாக்கு மரங்கள், 100 பப்பாளி… இப்படி நூற்றுக்கணக்கான மரங்களை ஒரே இடத்தில் நட்டு ஒரு குட்டி காட்டையே உருவாக்கி இருக்கிறார் பகுதிநேர விவசாயி வள்ளுவன்.

இனிப்பான இளநீருக்கு பெயர் பெற்ற ஊர் பொள்ளாச்சி. அங்கிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள வேட்டைகாரன்புதூரில்தான் இயற்கை விவசாயி வள்ளுவனின் தோட்டம் அமைந்துள்ளது. ஏராளமான தென்னந்தோப்புகளுக்கு நடுவே பல வகையான மரங்கள் செறிந்து பசுமையாக காட்சியளித்தது அந்த தோட்டம். நாங்கள் சென்றிருந்தபோது மழைபெய்து ஓய்ந்திருந்தது.

“நாலைஞ்சு வருசமா சரியான மழை இல்லாம வறட்சியா இருந்துச்சு. இந்த வருசம்தான் நல்ல மழை” என சொல்லிக் கொண்டே தோட்டத்தை சுற்றி காண்பித்தார் திரு.வள்ளுவன்.

ஈஷாவின் வழிகாட்டுதலுடன்

“2006-ல் இந்த தோட்டத்த வாங்கினேன். வாங்கும்போது தென்னந்தோப்பா இருந்துச்சு. ஈஷா விவசாய இயக்கத்தோட வழிகாட்டுதலோட 2009-ல் பல அடுக்கு பயிர் முறைக்கு மாத்தினேன். காட்டுல எப்படி அடுக்கடுக்கா பல வகையான மரங்கள் வளர்ந்துருக்கோ அதுமாதிரி முறையில் இந்த தோட்டத்த வடிவமைச்சிருக்கோம்.

உயரமான தென்னை மரங்களுக்கு நடுவுல மத்த மரங்கள ஊடுபயிரா போட்டுருக்கேன். தென்னைக்கு அடுத்து அதவிட கொஞ்ச உயரம் கம்மியா இருக்குற மரங்களையும் பாக்கு மரங்களையும் நட்டுருக்கேன். அடுத்து அதைவிட உயரம் கம்மியா இருக்குற வாழை மரங்கள் நட்டுருக்கேன். இடையில ஜாதிக்காய், எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு மரங்களை வச்சிருக்கேன்.

வளர்ச்சிக்கு உதவும் ஈரப்பதம்

இப்படி அடுக்கடுக்கா மரங்கள் நட்டிருப்பதால் எல்லா மரங்களுக்கும் சரிசமமா சூரிய ஒளி கிடைக்கும். அதிகமான வெயில் தரைக்கு எறங்காது. அதுமிட்டுமில்லாம மரங்கள்ல இருந்து விழுகிற இலை தழைகள், தென்னை மட்டை இப்படி எதையும் வெளிய எடுத்து போடமாட்டோம். அதுனால தரையில எப்பவும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கும். தேவையான அளவுக்கு ஈரப்பதம் இருந்தாலே மரங்கள் தானா செழிப்பா வளர்ந்துரும். அதோட அதெல்லாம் மக்கி மண்ணோட கலக்குறதுனால மண்ணும் வளமா இருக்கும்.

வறட்சியையும் தாங்கி வளர்ந்தன...

நாலு தென்னை மரத்துக்கு நடுவுல 3-க்கு 3 அடி அளவில் குழி தோண்டி மரத்துல இருந்து விழுகிற தென்னை மட்டை, இலை தழைகள் எல்லாத்தையும் போட்டு நிரப்பிருவோம். அது கொஞ்சம் கொஞ்சமா மக்கி உரமா மாறிடும். தென்னை மரத்துக்கு தேவையான சத்து குழியில இருந்து அதோட வேர் வழியா மரத்துக்கு போயி சேரும்.

ஒரு வருசத்துக்கு முன்னாடிலாம் கடுமையான வறட்சி. பக்கத்து தோப்புகள்ல இருக்குற மரங்களெல்லாம் நிறைய காய்ந்துருச்சு. ஆனா, நம்ம தோட்டத்துல இருக்குற மரங்கள் தாக்குப்பிடிச்சதோட காய்ப்பும் பெரிசா பாதிக்கல…” பேசிக்கொண்டு இருக்கும்போது விவசாயி வள்ளுவனின் மனைவி பிரேமலதா தோட்டத்தில் இருந்து பறித்த 2 இளநீரை கொண்டு வந்து கொடுத்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

பில்டிங் காண்டிராக்டராக இருக்கும் வள்ளுவன் அவர்களும் அவரது மனைவியும் வாரத்துக்கு 2 நாட்கள் தோட்டத்துக்கு வந்து விவசாய பணிகளை கவனிக்கின்றனர். மற்ற நாட்களில் வீட்டில் இருந்தவாறே தோட்டத்தில் நடக்கும் பணிகளை வேலை ஆட்களிடம் செல்ஃபோனில் கேட்டு தெரிந்துகொள்கின்றனர்.

அதிக வேலையாட்கள் தேவையில்லை

“எங்கட்ட இருக்குற இந்த 28 ஏக்கர் தோட்டத்த வெறும் 8 பேருதான் பாத்துக்கிறாங்க. மத்த தோட்டங்களிலெல்லாம் காய் பறிக்குறதுக்கே நிறைய பேரை வேலைக்கு வைச்சுருப்பாங்க. ஆனா, எங்க தோட்டத்துல தென்னையில காய் பறிக்குறது இல்ல. தானா காய்ச்சு கீழ விழுகிற காய மட்டும் வேலயாளுங்க பொறுக்கி எடுத்துருவாங்க. இளநீர் காயாக விற்றால் ஒரு வகையிலதான் வருமானம் கிடைக்கும். ஆனா, நான் இப்போ தென்னையில இருந்து மூணு வகையில வருமானம் பாக்குறேன்.

காய உறித்து தேங்காயா விக்கிறேன். தேங்காய காயவைச்சு கொப்பரையாக்கி விக்கிறேன். கொப்பரைய செக்குல அரைச்சு எண்ணெயா மாத்தியும் விக்கிறேன். எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்களை காய்ப்பு வந்ததும் பறிச்சு வித்துருவோம். இதுதவிர, வாழை, ஜாதிக்காய்ல இருந்தும் வருமானம் வரும். செலவு போக நல்ல வருமானம் கிடைக்குது. எல்லாத்துக்கும் மேல இயற்கை விவசாயத்த லாபகரமா பண்ற மன திருப்தி கிடைக்குது” என்றார்.

சூரிய ஒளி உலர் களம்

சுற்றி பார்த்துகொண்டே வரும்போது ஒரு ஓரத்தில் வெள்ளை நிறத்தில் நீண்ட கூடாரம் ஒன்று இருந்தது. அது என்ன என்று விசாரித்தபோது சூரிய ஒளி உலர் களம் என கூறினார். உள்ளே சென்றால் வெதுவெதுப்பாகவும், தரை சற்று சூடாகவும் இருந்தது. மழை மற்றும் பனி காலங்களில் விளைபொருட்களை காய வைப்பதில் சிரமம் ஏற்படும். அந்த சிரமத்தை தவிர்ப்பதற்கு இந்த சூரிய ஒளி உலர் களம் நன்றாக பயன் தருவதாக அவர் கூறினார்.

நீர் மேலாண்மை

``ஈஷா விவசாய இயக்கத்துல இருக்குற வல்லுனர்கள் கொடுத்த ஆலோசனைப்படி என் தோட்டத்துல சொட்டு நீர்ப் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சுகிறேன். இதனால், சாதாரணமா மத்த விவசாயிங்க பயன்படுத்துற தண்ணீர் அளவுல மூணுல ஒரு பங்குதான் நான் பயன்படுத்துறேன். இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு ஏராளமான விவசாயிகள் என் தோட்டத்த வந்து பாத்துட்டு போறாங்க. தமிழ்நாட்டு விவசாயிங்க மட்டுமில்லாம வட மாநில விவசாயிகளும் வந்து பாத்துட்டு சிறப்பா பண்றீங்கனு சொன்னாங்க” என பெருமைப்பட்டு கொண்டார்.

“அவரு 28 ஏக்கர் வச்சுருக்காரு, துணிஞ்சு இயற்கை விவசாயம் பண்றாரு. எங்கட்ட இருக்குறது வெறும் நாலைஞ்சு ஏக்கர்தான். எங்களுக்கெல்லாம் இயற்கை விவசாயம் ஒத்துவருமா?” என கேட்கிறீர்களா? நிச்சயம் ஒத்துவரும்.

விதை விதைப்போம்…

நன்றி: தினத்தந்தி

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பு : இந்த கட்டுரை தினத்தந்தி நாளிதழில் வெளியானது.

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய உடனடி தகவல்களுக்கு Facebook மற்றும் Youtube சேனலில் இணைந்திடுங்கள்.