தென்கைலாயத்தை தூய்மை செய்யத் துணிந்த கரங்கள்...
தென்கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையேற்றம் என்றாலே பலருக்கும் மலைப்பையும் அயற்சியையும் தரக்கூடியதாக இருக்கும். சாதாரணமாய் ஏறிவருவதே பலருக்கும் சிரமமாய் இருக்க, மலைகளில் மக்காத ப்ளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டவர்களின் அனுபவம் எப்படி இருந்திருக்கும்... தொடர்ந்து படித்தறியுங்கள்!
 
 

தென்கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையேற்றம் என்றாலே பலருக்கும் மலைப்பையும் அயற்சியையும் தரக்கூடியதாக இருக்கும். சாதாரணமாய் ஏறிவருவதே பலருக்கும் சிரமமாய் இருக்க, மலைகளில் மக்காத ப்ளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டவர்களின் அனுபவம் எப்படி இருந்திருக்கும்... தொடர்ந்து படித்தறியுங்கள்!

சிவன் வந்தமர்ந்த தென்கைலாயமாம் வெள்ளியங்கிரி மலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் கடந்த ஜூன் மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈடுபட்டனர். சக்தியளவில் பெரும் கோபுரமாய் வீற்றிருக்கும் வெள்ளியங்கிரியில், சிலர் அலட்சிய மனப்பான்மையோடு வீசிச்செல்லும் பிளாஸ்டிக் கவர்களும், பாட்டில்களும் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாக மாறிவிடுகின்றன.

கார்த்தி என்ற தன்னார்வத் தொண்டர் கூறுகையில் “நான் ஒவ்வொருமுறை குனிந்து குப்பைகளை எடுக்கும்போதும், அந்த சிவனின் பாதத்தையே வணங்குவதாக உணர்கிறேன்” என உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டார்.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி மலையேற்றம் முடிந்ததும் காற்றடிக்கும் காலமான ஆடி மாதம் துவங்குவதற்கு முன்னதாக, தென்கைலாய பக்திப் பேரவை தன்னார்வத் தொண்டர்களால் இந்த மலை தூய்மைப் பணி நடைபெறுகிறது. காற்றடிக்கும் காலம் துவங்கிவிட்டால் குப்பைகள் அனைத்தும் பறந்து அடர்ந்த காட்டிற்குள் சென்றுவிடும் என்பதால் அவர்கள் ஜூன் மாதத்தைத் தேர்ந்தெடுத்து செயல்படுகிறார்கள்.

இவ்வருடம் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த சிவாங்கா பக்தர்கள், தன்னார்வத் தொண்டர்கள், கல்லூரி மாணவர்கள், ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் என மொத்தம் 600க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

முதல் வாரத்தில் சிலர் முதல் மலையை மட்டுமே இலக்காக வைத்து அங்குள்ள ப்ளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து அடிவாரத்திற்கு கொண்டுவந்தனர். அடுத்தவாரங்களில் அடுத்தடுத்த மலைகளை ஏறிச்சென்று, நான்காம் வாரத்தில் ஏழாவது மலையில் தூய்மைப்பணியை மேற்கொண்டனர். சிலரோ முதலிலேயே நேரடியாக ஏழாவது மலையை ஏறிவிட்டு, இறங்கும் வழியில் தங்கள் கைகளிலிருக்கும் சாக்குப் பைகளில் குப்பைகளைச் சேகரித்துக்கொண்டு வருவதை வழக்கமாக்கிக்கொண்டனர். இவர்கள் முதலில் ஏறும்போதே எங்கெங்கு குப்பைகள், பாட்டில்கள் இருக்கிறதென அடையாளம் பார்த்துவிட்டுச் செல்வர்; அல்லது பாதையை விட்டு தள்ளிக் கிடக்கும் குப்பைகளைச் சேகரித்து பாதையின் ஓரத்தில் ஒன்று சேர்த்து வைத்துவிட்டு செல்வர். பிறகு கீழிறங்கும்போது அனைத்தையும் எடுத்து சாக்குப் பைகளில் போட்டுக்கொள்வர்.

நான்காம் வாரத்தில் ‘டிவைன் ட்ரக்கர்ஸ்’ என்ற மலையேற்றக் குழுவினரும் கூட இந்தத் தூய்மைப்பணியில் கலந்துகொண்டதோடு, கோயம்புத்தூரைச் சேர்ந்த SNS இராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் KG கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் NSS மாணவர்களும் இதில் பங்கேற்றனர். ஈஷா சுடுகாட்டில் தன்னார்வத்தொண்டு புரிந்துவரும் பாலா எனும் தன்னார்வத் தொண்டர், மலையேற்றக் குழுவினர் நான்காம் மலையை ஏறுவதற்கு முன்னரே ஏழாவது மலையை ஏறிவிட்டு அவர்களை எதிரே சந்தித்தார். “என்னப்பா பாகுபலி மாதிரி இவ்வளவு பெரிய சுமைய தூக்கிக்கிட்டு சாதாரணமா வர்ற” என்று மலையேற்றக் குழுவினர் வியக்க, “அது என்னவோ தெரியலண்ணா, இங்க வந்தாலே எனர்ஜி வந்திடுது” என்று சொல்லியபடி சிரித்துக்கொண்டே குப்பைப் பையுடன் கீழிறிங்கி மீண்டும் மேலே ஏறத் தயாரானார் பாலா!

மேலும், கார்த்தி என்ற தன்னார்வத் தொண்டர் கூறுகையில் “நான் ஒவ்வொருமுறை குனிந்து குப்பைகளை எடுக்கும்போதும், அந்த சிவனின் பாதத்தையே வணங்குவதாக உணர்கிறேன்” என உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டார்.

பலரும் ‘சிவ ஷம்போ’ என்ற உச்சாடனைகளுடன் தூய்மைப்பணியை மேற்கொண்டாலும், அங்கே ஒரு கணீர் குரல், பாடகர் டி.எம்.சௌந்தரராஜனை இமிட்டேட் செய்தபடி, சில சினிமா பாடல்களை உற்சாகமாய் பாடிக்கொண்டே மலையேறியது. ஐம்பது வயது இளைஞரான தன்னார்வத்தொண்டர் சுந்தர் அண்ணாவின் பாடல்களை இரசித்தபடி சிலர் பின்தொடர்ந்தனர். மலையேறும்போது மூச்சைப் பிடித்துக்கொண்டு ராகம்போட்டு தங்களால் எப்படிப் பாடமுடிகிறது என்று சிலர் நகைச்சுவையாகக் கேட்டதற்கு, மூச்சுப்பயிற்சி என்று ஒரே வார்த்தையில் பதில் தந்தார். இதுபோல், தூய்மைப் பணியின் நடுவே கலகலப்பிற்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

பொதுவாக வெள்ளியங்கிரி மலை ஏறுவதே சிரமமாக இருக்கும் எனச் சொல்வார்களே நீங்கள் குப்பைகளைச் சேகரிக்க எப்படி வந்தீர்கள் எனச் சிலரிடம் கேட்டபோது, “இங்கே வருவதற்கு முன் பலவித தயக்கங்களும், நம்மால் முடியுமா என்ற கேள்விகளும் இருக்கத்தான் செய்தன. ஆனால் கம்பியைக் கையில் பிடித்து ஒவ்வொரு குப்பையாகப் பார்த்து குத்தி எடுத்துச் சேகரிக்கும்போது எந்தவித களைப்பும் தெரிவதில்லை! இறுதியில் கீழே நாம் சேகரித்த சாக்குமூட்டைகளைக் கொண்டு வரும்போது, நம்மால் உருப்படியான காரியம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்ற மனத்திருப்திக்கு இணையாக ஏதும் தெரியாது” எனப் பகிர்ந்துகொண்டனர்.

பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த சிவாங்கா பக்தர்கள், தன்னார்வத் தொண்டர்கள், கல்லூரி மாணவர்கள், ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் என மொத்தம் 600க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சில வெளிநாட்டு தன்னார்வத்தொண்டர்களும் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது. அதைப் பார்த்த மலையேற்றக் குழுவில் இருந்த ஒருவர் வியந்து சொல்லும்போது, “அவர்கள் நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்து தூய்மைப்படுத்தும் இவர்களிடம் இருப்பதே உண்மையான பக்தி” என்றார்.

சாதாரணமாக மலையேறுவதற்கும் தூய்மைப்பணியில் ஈடுபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
என்று ஒரு தன்னார்வத் தொண்டரிடம் கேட்டோம்! “நாம் வழக்கம்போல் மலையேறும்போது, ஏழாவது மலைநோக்கி நடந்துசெல்வோம், செல்லும் வழியில் இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிப்போம். ஆனால், தூய்மைப் பணியின்போது மலையேறுவதே தனி அனுபவம்தான்! இதில் ஒவ்வொரு அடியையும் நாம் கவனித்துக்கொண்டே செல்கிறோம். அந்த மண்ணோடு நாம் தொடர்புகொள்கிறோம். அந்த மலை இன்னும் ஆழமாக நமக்குள் சென்றுவிடுகிறது!” என்று கண்களில் நீர்மல்க பகிர்ந்துகொண்டார்.

நாம் இவ்வளவு பேர் ஆண்டுதோறும் குப்பையைச் சேகரிப்பதற்கு பதிலாக, குப்பையே போடாமல் இருப்பதுதானே இதற்கு தீர்வாக இருக்கும்?

இந்தக் கேள்வியைப் பலரிடமும் கேட்டபோது, அனைவருமே ஒரே குரலில் ‘ஆம் அது உண்மைதான்!’ என்றனர். ஆனால், இதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வைக் கொண்டுவருவது மிகவும் முக்கியம். அதோடு, சீசன் நேரங்களில் மலைகளில் ஆங்காங்கே கடை வைத்திருப்பவர்கள் ப்ளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யாமல் இருப்பது மிகவும் முக்கியம் என்பதையும் அவர்கள் பதிவுசெய்தனர்.

இனிவரும் காலங்களில் குப்பைகளைச் சேகரிக்க வேண்டிய நிலை இல்லாமல், அருளைச் சேகரிக்க மட்டுமே வெள்ளியங்கிரியை நாடிச்செல்ல வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது!

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1