சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்களின் வேண்டுகோளை ஏற்று, அங்குள்ள பல பகுதிகளுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் சத்குரு. அதைப் பற்றி சில தகவல்கள் இங்கே...

சத்குருவின் தாய்மொழி தெலுங்கு என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்! தனது தாய்மொழியே மறந்துவிடும் அளவிற்கு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில்தான் ஈஷா அறக்கட்டளை மூலமாக சத்குரு தனது அனைத்துப் நலப்பணிகளையும் செயல்படுத்தி வருகிறார். ஆனால், எல்லையற்ற அன்பிற்கும் கருணைக்கும் மொழியென்பது ஏது?!

ஆந்திர மக்களும் மாநில அரசும் சத்குருவின் அருளையும் ஈஷாவின் நற்பணிகளையும் வரவேற்க காத்திருக்க, சத்குரு கடந்த ஜனவரி முதல் வாரத்தில் ஆந்திர விஜயம்செய்து சத்சங்கங்களை நிகழ்த்தியதோடு, தியான அன்பர்களுக்கும் பொதுமக்களுக்கும் தனது அருளாசியை வழங்கினார். அதுமட்டுமல்லாது, ஆந்திர அரசுடன் இணைந்து ஆந்திர மக்களின் நல்வாழ்விற்காக பல நலத்திட்டங்களையும் அறிவித்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஹைதராபாத், திருப்பதி, நெல்லூர் விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் சத்சங்கங்களை வழங்கிய சத்குரு அவர்கள் ஆன்மீகம் குறித்தும் வாழ்வியல் குறித்தும் பல கருத்தாழமிக்க உரைகளை அங்கு வழங்கினார்.

“குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வழிகாட்டியாக மாறுவதற்கு, முதலில் குழந்தைகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக வேண்டும். அந்த நம்பிக்கை இல்லாதபோது குழந்தைகள் தங்களின் கேள்விகளுக்கான பதிலைப் பெற சக மாணவர்களை நாடத் துவங்கிறார்கள். விரைவாக பதிலளிக்கும் தங்கள் நண்பர்கள் மீது குழந்தைகள் நம்பிக்கைகொள்கிறார்கள்.

பெரும்பாலான குழந்தைகள் வீட்டிலுள்ளவர்களை வழிகாட்டியாக பார்க்காமல், சமூக வலைதளங்களில் தங்கள் வழிகாட்டிகளைத் தேடுகின்றனர். தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மிக விரைவாக இன்றைய குழந்தைகள் அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள்.” என்று தெரிவித்த சத்குரு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைளிடத்தில் ‘வழிகாட்டி’ என்ற இடத்தைப் பெறுவதற்கு குழந்தைகளின் நண்பராக மாறி, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேசுகையில், “கடந்த காலங்களில் வேலைவாய்ப்புகள் மிக குறைந்த அளவே இருந்தன. இந்த நிலை ‘என் எதிர்காலம் என்னாகுமோ?!’ என்ற அச்சத்தை இளைஞர்களிடத்தில் ஏற்படுத்தியது. ஆனால், தற்போதுள்ள இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஏழ்மைத் தனத்திலிருந்து விடுபட்டு முன்னேற்றமான வழியில் வாழ்வை அமைத்துக்கொள்வது முன்பு ஒரு பெரும்பாடாக இருந்தது. ஆனால், இன்றைய இளைஞர்கள் ‘வேலை தேடுதல்’ என்ற நிலையைத் தாண்டி, தங்களின் சுயமான வழியை தேர்ந்தெடுப்பதன் மூலம் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்த சத்குரு, இளைஞர்கள் சுயதொழில் முனைவோராக மாறுவதில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

கல்விமுறையின் அவலங்களை சாடிய சத்குரு, இந்த விஷயத்தில் அரசியல் தலைமைகள் விழிப்புணர்வு கொண்டு பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். விவசாயப் பாடத்தை கல்விமுறையில் சேர்க்கும் நடவடிக்கையின் முக்கியத்துவத்தைக் கூறிய சத்குரு, விவசாயிகளின் இன்றைய நிலையின் அவலத்தையும், விவசாயிகள் கவனிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

விசாகப்பட்டிணத்தில் நிகழ்ந்த மாபெரும் சத்சங்கத்தில், முதல்முறையாக தங்கள் நகரத்திற்கு வருகை தந்த சத்குருவை வரவேற்பதற்காக சுமார் 5000 பேருக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் மெல்லிசையைத் தொடர்ந்து மேடையேறி அனைவரையும் கைகூப்பி வணங்கிய சத்குரு, தனது இருப்பினால் தியான அன்பர்களை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தினார்.

நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை நாம் உணராத வரை வாழ்வென்பது துயரமாகவே இருக்குமென்று கூறி, உள்நிலைத் தெளிவின் அவசியத்தை சத்சங்கத்தில் எடுத்துரைத்த சத்குரு, “நமக்குத் தேவையானது நம்பிக்கையல்ல, தெளிவு” என எடுத்துரைத்தார். தெளிவில்லாத நம்பிக்கையானது அழிவைக் கொண்டுவரும் என்றார். மன அழுத்தம், துக்கம் என்பவையெல்லாம் சாத்தான் மனதில் விளைவிக்க முயற்சிப்பவை என்றும், உள்நோக்கி பார்ப்பதன் மூலம் இவற்றை நாம் நமது மனதை விட்டு விரட்டமுடியும் எனவும் சத்குரு கூறினார்.

முன்னதாக திருப்பதியில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் ஆந்திரத்தில் 460 பள்ளிகளைத் தத்தெடுத்து, அப்பள்ளிகளிலுள்ள மாணவர்கள் தரமான ஆங்கில அறிவையும் கணினி அறிவையும் பெறுவதற்கு ஈஷா அறக்கட்டளை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்பதை அறிவித்த சத்குரு, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் தத்தெடுத்துள்ள புட்டம் ராஜகன்றிகா கிராமத்தின் வளர்ச்சியிலும் ஈஷா தனது பங்களிப்பை வழங்கும் என தெரிவித்தார்.

ஆந்திர மாநில அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தலைநகரமான அமராவதியில் தலைமைப் பண்பை மேம்படுத்தும் அகாடமிகளை ஈஷா துவங்கும் என்றும், மேலும், திருப்பதி மற்றும் அமராவதி ஆகிய நகரங்களில் இதற்கான மையங்கள் நிறுவப்பட திட்டமிடப்பட்டு வருவதாகவும் சத்குரு தெரிவித்தார்.