நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்து வரும் இவ்வேளையில், இதனை சரிசெய்ய பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலதரப்பிலிருந்து முன்வைக்கப்படும் நிலையில், நாம் ஒவ்வொருவருமே செய்யவேண்டிய ஒரு செயல் ‘தண்ணீர் சிக்கனம்’. குறிப்பாக இந்த ஆண்டு தமிழகத்தில் பெரும் வறட்சி நிலவுவதாய் உள்ளது. மழையளவு வெகுவாக குறைந்து, விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிதண்ணீருக்கும் கூட மக்கள் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.

சொட்டுநீர் பாசனம் போன்ற நீர்மேலாண்மை அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகள் இன்று ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் விவசாயத்தில் மட்டுமல்லாது, நமது வீடுகளிலும் அன்றாட தண்ணீர் புழக்கத்தில் தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியமாகிறது.

தண்ணீர் சிக்கனத்தில் சில சுவாரஸ்யங்கள்!

அனைவரும் தாங்கள் தினமும் சாப்பிட்டு கைகழுவும்போது அதனை தங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள மரங்களிடம் செய்யலாம்; அப்போது அந்த மரங்களுக்கு தனியாக தண்ணீர் விடத் தேவையில்லை என சத்குரு சொல்வதுண்டு!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கி, மழைநீரை சேகரிப்பதன் மூலம் குடிதண்ணீர் மட்டுமலாமல், வீட்டுக்கு தேவையான அனைத்து தேவைகளுக்கும் மழைநீரைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

அதுபோல், சில மனிதர்கள் சில சுவாரஸ்ய சிக்கன முறைகளை கடைப்பிடிப்பதை நாம் கவனிக்க முடிகிறது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை சந்திக்கும் ஒரு சென்னைவாசி பல வருடங்களாக தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வகையில், குளிக்கும்போது அந்த தண்ணீர் வீணாக கழிவுநீராக சென்றுவிடாமல், ஒரு பிளாஸ்டிக் தொட்டியின் உள்ளே நின்றுகொண்டு குளிக்கிறார். குளித்து முடித்தபின் அந்த தண்ணீரை அப்படியே சேகரித்து டாய்லெட் உபயோகத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார்.

அதேபோல் இன்னொரு சென்னைவாசி தனது வீட்டில் துணி துவைக்கும்போது, வீணாகும் தண்ணீரை சேகரித்து, பாத்திரம் கழுவுவதற்கும் மற்றும் டாய்லெட் உபயோகத்திற்கும் பயன்படுத்துகிறார். மேலும் இன்னொருவர் பல வருடங்களாக தனது கொல்லைப்புறத்தில் வைத்து குளிப்பதாகவும், அப்போது அந்த கழிவுநீர் அங்குள்ள செடிகொடி மரங்களுக்கு பாய்வதால் தண்ணீர் சிக்கனமாவதாகவும் கூறுகிறார். தனது உடலில் உள்ள வியர்வையால் உண்டாகும் யூரியா போன்ற உப்புகள் செடிகொடிகளுக்கு நல்ல உரமாவதாகவும் சுவைபட விளக்கமளிக்கும் அவரின் கொல்லைப்புறம் நல்ல பசுமையுடன் காட்சியளிக்கிறது.

இது தவிர நாம் நமது வீட்டு தண்ணீர்க் குழாய்களை சரியாக மூடிவைப்பது, குழாய்களில் கசிவு ஏற்படும்போது உடனடியாக சரிசெய்வதும் முக்கியமான சிக்கன நடவடிக்கையாகும். இதுதவிர அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கி, மழைநீரை சேகரிப்பதன் மூலம் குடிதண்ணீர் மட்டுமலாமல், வீட்டுக்கு தேவையான அனைத்து தேவைகளுக்கும் மழைநீரைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும். மழைநீர் பலவருடங்களுக்கு கெடாது என்பதால் அடுத்த மழைக்காலம் வரும்வரை கூட நாம் அதனைப் பயன்படுத்தமுடியும்!

சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பொதுவாக இயற்கையே மழைநீரைப் பிடித்து வைப்பதற்கு ஏரிகள், குளங்கள் போன்ற அமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்தாலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கும், மாறி வரும் தட்பவெப்ப நிலைக்கும் அவை போதுமானதாயில்லை. கோடை காலத்தில் உச்சியைப் பிளக்கும் வெயில், நீர் தேக்கங்களை கபளீகரம் செய்துவிடுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் வீடுகளிலும் மேற்கொள்ளப்படும் மழைநீர் சேகரிப்புதான் இதற்குத் தீர்வாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்

ஈஷா அறக்கட்டளை பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், தண்ணீர் சிக்கனம் மற்றும் மழைநீர் சேகரிப்பை முன்னிறுத்தி இந்த தகவல்கள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை ஈஷா பசுமைக்கரங்கள் உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப் பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062