எழுத்து: பால்ராட்னர், Bigthink.com

திரு. ஏக்போல் சந்தாவோங், 25 வயது, முன்னாள் புத்த துறவி, இந்நாள் கால்பந்து பயிற்சியாளர். கிட்டத்தட்ட 12 வருடங்கள் துறவுப் பாதையில் இருந்திருக்கிறார், தியானம் கற்றிருக்கிறார். இவரும் மாணவர்களுடன் அந்த குகைக்குள் இருந்தவர். குகைக்குள் இருந்த அத்தனை நாட்களிலும் தனது மாணவர்களை அமைதியாகவும், பதற்றமில்லாமலும் வைத்திருந்த பெருமை இவரைச் சேர்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் பத்து நாட்கள் கழித்து அந்த குகைக்குள் நுழைகையில், அந்த 12 மாணவர்கள் உட்பட அந்தத் துறவியும் தியானம் செய்தவாறு இருந்திருக்கின்றனர்.

திருமதி. ஆயிஷா, குகைக்குள் சிக்கிக்கொண்ட 11 வயது சேன் எனும் சிறுவனின் தாயார், மாணவர்கள் அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையை சிறப்பாய் கையாள அவர்களது பயிற்சியாளரின் பின்னணியே உதவியிருக்கிறது என்று உறுதியாகச் சொல்கிறார். அந்தச் சிறுவர்கள் மீட்கப்பட்ட அந்த தருணத்தை வீடியோவில் பார்க்கையில், அவர்கள் சாந்தமாகவும் அமைதியாகவும் இருந்ததை யாரும் காணத் தவறியிருக்கவே மாட்டார்கள் என்கிறார்.

“அவர்கள் எத்தனை சாந்தமாக அங்கே அமர்ந்திருக்கிறார்கள், பாருங்கள். யாருமே அழவில்லை, சோகமாய் இருக்கவில்லை. பார்ப்பதற்கு பிரம்மிப்பாய் இருந்தது” எனத் தொடர்கிறார் அவர்.

திருமதி. லீ வீஸ், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நிபுணரான இவர், CNBC தொலைக்காட்சியிடம் இந்தச் சம்பவம் குறித்து பேசியபோது, “இவர்கள் அனைவரும் உயிருடன் நமக்கு கிடைத்ததற்கு மிக முக்கிய காரணம் தியானம்தான் என்கிறார். உங்கள் கவனக்குவிப்புத் திறனை மேம்படுத்தி, அன்பைப் பெருக்க, மனோரீதியான பயிற்சியை தியானம் அளிக்கிறது,” என்று சொல்லி இருக்கிறார் இந்த நிபுணர்.

“புத்த மதத்தில் இருப்பவர்கள் வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கும்போது தியானம் செய்கிறார்கள்,” என்கிறார் வீஸ். “அபாயத்தில் இருக்கும்போது செயல்பட இயலாதபடி நம்மை முடக்கிப் போட்டுவிடும் சுபாவத்திலிருந்து, அந்தப் பிரச்சனையை திறம்பட கையாள்வதற்கான திறனை தியானம் அளிக்கிறது,” என்கிறார். 

குறிப்பாக, அவர் சொல்கையில், “போதுமான காற்று, உணவு இல்லாத சூழ்நிலையிலும், அங்கு சிக்கிக்கொண்ட அந்தச் சிறுவர்களுக்கு மிக யதார்த்தமான ஒரு தீர்வாக தியானம் இருந்தது,” என்று மேலும் தொடர்கிறார்.

“இதயத்துடிப்பு, மூச்சு மற்றும் வளர்சிதை மாற்றத்தை குறைப்பதனால், தியானம் ஒரு அமைதியான மனோநிலையை ஒருவருக்குள் உண்டாக்குகிறது. கார்டிசால் அளவை குறைத்து, ஆக்சிஜனை திறம்பட பயன்படுத்தவும் உதவியாய் இருக்கிறது. அதுமட்டுமல்ல, தியானம் செய்யும்போது, குறைவான கரியமில வாயுவினையே ஒருவர் வெளியிடுகிறார்,” என்கிறார். 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அந்தச் சிறுவர்கள் குகைக்குள் சிக்கிக்கொண்டது எப்படி என்கிற முழு விவரமும் வெளிவராத நிலையில், தியானத்தின் சக்தியை வெளிப்படுத்துவதாய் இந்த உண்மைச் சம்பவம் அமைந்திருக்கிறது. தியானம் பற்றி மேற்கொள்ளப்படும் தீவிரமான ஆய்வுகள் துரிதமான வேகத்தில் பெருகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், தியானம் ஒருவரது மன அழுத்தத்தை குறைக்கிறது, அவருக்குள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தெளிவான நோக்கமும், மன அழுத்தத்திலிருந்து பாதுகாப்பும் அளிக்கிறது என்பதற்கு நிரூபண சாட்சியாக இச்சம்பவம் அமைந்துள்ளது. 

உயிர் காத்தது யோகப் பயிற்சியா

குறைந்தபட்சம் மூன்று நாள் பசியோடு இருந்திருக்கிறீர்களா? சாப்பாட்டிற்காக உடலும் மனமும் தவிக்கும் தவிப்பை அனுபவித்திருக்கிறீர்களா? பசி என்பது மனிதனை மிருகத்தின் நிலைக்கு கீழிறக்கவல்லது. அதுவும் விளையாட்டு வீரராக இருந்தால், அதிக சக்தி செலவழிக்கப்படுவதால், உணவின் தேவையும் அதிகம்.

தாய்லாந்து குகையில் மாட்டியவர்கள், சிறுவர்கள், விளையாட்டு வீரர்கள். அவர்கள் உள்ளே மாட்டிக் கொண்டது வெளியே இருப்பவர்களுக்கு தெரியுமா, தெரியாதா என்பதைக்கூட அறியாமல் முதல் 8 நாட்களை கடந்திருக்கிறார்கள்.

உணவின்றி, நல்ல தண்ணீரின்றி, போதிய காற்றோட்டமின்றி, சூரிய வெளிச்சமின்றி, வெளியுலக தொடர்புமின்றி, உயிர் பிழைக்கும் சாத்தியக் கூறுகள் உண்டா என்பதுகூடத் தெரியாமல் இருக்க நேர்ந்தால்... ஒருவருக்குள் ஏற்படும் மன அழுத்தம், உயிர் பயம், பசி, தாக மயக்கம் இவற்றை சொல்லில் வடிக்க இயலாது.

அந்தச் சிறுவர்களை அழைத்துச் சென்ற பயிற்சியாளருக்கு நிச்சயம் கூடுதல் மனச்சுமை அழுத்தியிருக்க வேண்டும். மனவலிமை இல்லையெனில் உடலின் வலிமை பொருளற்றது.

இது அத்தனையையும் அவர்கள் கடந்தது எப்படி?

மீட்கப்பட்ட சிறுவர்களின் முகத்தில் மீட்கப்பட்ட பூரிப்பு தெரிந்தது எப்படி?

மாட்டிக்கொண்ட சோர்வோ, மரணபிடியின் பயமோ, அழுகையோ வெளிப்படவில்லை? இது எதனால்?

தனது உயிர் மட்டுமல்லாது, பிற சிறுவர்களின் உயிருக்கும் பொறுப்பாகி, சூழ்நிலையின் அழுத்தத்தில் பயிற்சியாளரை மனசிதைவு அடையாமல் காத்தது எது?

இப்படி வரிசைகட்டி நிற்கும் பல கேள்விகளுக்கு அமைதியான விடையாகி நிற்கிறது யோகப் பயிற்சியும் தியானமும். தியானத்தின் மூலம் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடு (Metabolic activity) குறைகிறது. இதன்மூலம், உடலுக்கு தேவைப்படும் அடிப்படை தேவைகளின் அளவு குறைகிறது. மனதில் அமைதியையும், திடத்தையும் ஏற்படுத்தி தேவையற்ற பயம், குழப்பம் போன்றவைகளைக் கடக்கும் பாலமாகிறது. யோகப் பயிற்சிகள் பசி மயக்கத்தையும் தாண்டி புத்துணர்வை அளிக்கவல்லது. உங்கள் ஆரோக்கியத்தை காக்கவல்லது.

காலங்காலமாக சொல்லப்பட்ட கருத்துகளுக்கும், செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளுக்கும் உதாரணமாகி கண்முன்னே அந்த குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் முகப்பொலிவு சான்றாகி நிற்கிறது.

வாழ்க்கை நம் மீது எதை வீசினாலும், அதிலிருந்து எதனை உருவாக்குகிறோம் என்பது நமது கைகளில் உள்ளது என்பதை இந்த 12 சிறுவர்களும் எடுத்துக்காட்டி உள்ளனர். மனித அனுபவங்களுக்கான மூலகாரணம் நமக்குள் உள்ளது. உள்நோக்கி செல்வதே விடுதலைக்கான ஒரே வழி. - சத்குரு #ThaiCaveRescue

thailand-cave-incident-sgtweetimg

நன்றி: Bigthink.com இணையதளம்

ஆசிரியர் குறிப்பு: திரு.பால் ராட்னர் அவர்கள், BigThink.com எனும் இணையதளத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. திரு.பால் ராட்னர் அவர்கள் ஒரு எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர். விருதுபெற்ற இவரது திரைப்படங்கள் உலகம் முழுவதும் நடைபெறும் பல திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. பால் அவர்கள், அறிவியல் ஆராய்ச்சிகள், வரலாறு, வருங்காலவாதம், தத்துவவாதம் மற்றும் நடப்புச் செய்திகள் குறித்து எழுதி வருகிறார்.

ஐந்தே நிமிடங்களில் எளிதாக செய்யக்கூடிய புத்துணர்வூட்டும் உப-யோகப் பயிற்சிகளை இலவசமாக கற்றுக்கொள்ள சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்..