ஸ்வாமியின் இழப்பு குறித்து சத்குரு அவர்கள் சொன்னபோது...

"மிக மென்மையான ஓர் உயிர், நீங்கள் கவனிக்கவும் தவறியிருக்கக்கூடும், ஆனால் கடந்துவிட்டது"

ஸ்வாமி நிஸ்சலா, கோவை பொறியியல் கல்லூரியில் தங்கப் பதக்கம் வென்றவர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் பணி புரிந்தவர். தான் பிரம்மச்சரியப் பாதையில் நடையிட முடிவு செய்தபோது, உதவி பொறியாளராய் பணியமற, TNPSC தேர்வுகளில் வெற்றிபெற்று தேர்வானவர். தன் உடன்பிறந்தவர்கள் ஆறு பேரில், ஸ்வாமி மட்டுமே கல்லூரிக்கு சென்று, தன் பணியில் இத்தனை சிறப்புகளை எட்டியவர்.

ஸ்வாமியை வீட்டிற்கு மீட்டுச்செல்ல தங்கள் உதவியை வழங்கிய உறவினர்களிடம், “இது சரியல்ல. அவர் தெய்வச்செயலில் ஈடுபட்டிருக்கிறார்,” என்று மறுத்திருக்கிறார்கள்.

1997ஆம் ஆண்டு, பிரம்மச்சரியம் எடுக்க தான் எடுத்திருக்கும் முடிவுகுறித்து தன் பெற்றோரிடம் கூறச்சென்றபோது, அவர்கள் ஸ்வாமியை எவ்வித சலனமும் இன்றிப் பார்த்து, “சரி,” என்று கூறினர். அவர் தன் பணியை தொடர்ந்திருந்தால், தங்கள் மொத்த குடும்பத்தையும் முழுமையாக வறுமையிலிருந்து காப்பாற்றி இருக்கக்கூடும் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. எளிமையான, ஏழ்மையான, தன்னடக்கமான விவசாயியான ஸ்வாமியின் தந்தை, ஆன்மீகப் பாதையில் நடையிடும் உன்னத மனிதர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். தன் மகனின் முடிவு, அவரது அறிவுத்திறனின் மற்றொரு வெளிப்பாடாகவே அந்தத் தந்தை பார்த்தார்.

ஸ்வாமி ஆசிரமத்திற்கு புறப்படுவதற்கு முன், தன் பெற்றோருக்கு பாதபூஜை செய்து விடைபெற்றார். அப்பொழுது, “நீ எந்த நோக்கத்திற்காக செல்கிறாயோ, உனக்கு அது கிடைக்கும்,” என்று மனதார வாழ்த்தி அனுப்பி இருக்கிறார்கள் அந்தப் பெற்றோர். ஸ்வாமி தீட்சை பெற்றபின், அவரை ஆசிரமத்திற்கு பார்க்க வந்திருந்த அவர்கள், ஸ்வாமியின் பாதங்களைத் தொட்டு வணங்கியிருக்கிறார்கள். பின்னாளில், ஸ்வாமியை வீட்டிற்கு மீட்டுச்செல்ல தங்கள் உதவியை வழங்கிய உறவினர்களிடம், “இது சரியல்ல. அவர் தெய்வச்செயலில் ஈடுபட்டிருக்கிறார்,” என்று மறுத்திருக்கிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளில், ஈஷாவில் எழுப்பப்பட்டுள்ள அனைத்து கட்டிடப் பணியிலும் ஸ்வாமி நிஸ்சலா மதிப்புமிக்க அங்கம் வகித்திருக்கிறார். இருந்தும், அவருடைய பணிவு குணம்தான், “நான் திறனற்றவன், நான் செய்வதெல்லாம், சில கணக்குகள் போடுவதும், சில கோடுகளும் வளைவுகளும் வரைவதும்s மட்டுமே,” எனச் சொல்ல வைக்கிறது.

swami-nischala-pagirvu-swami with sadhguru

அவர் தீட்சை பெற்றபின் நடைபெற்ற முதல் பிரம்மச்சாரிகள் சந்திப்பின்போது, “புது பிரம்மச்சாரிகள் அனைவரையும் வரவேற்கிறோம்,” எனச் சொல்லி சத்குரு சந்திப்பினை துவங்கியிருக்கிறார். இதைக்கேட்ட மாத்திரத்திலேயே, கைக்கூப்பியபடி எழுந்துநின்றார் ஸ்வாமி. இதைப் பார்த்த சத்குரு அவர்கள், “நீங்கள் ஆசிரமத்தில் இருக்கும்போது, நீங்கள் எதையும் சொந்தமாக்கிக் கொள்ளக்கூடாது. மாறாக, நீங்கள் ஆட்கொள்ளப்பட வேண்டும். அவர் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்,” என்றார். (When you are in the ashram, you don’t possess anything; but you should be possessed. He is possessed.) பின்னர் அதே சந்திப்பில், சத்குரு பிரம்மச்சாரிகளைப் பார்த்து, “கடந்த ஒரு நாளில் நீங்கள் எத்தனை முறை மகிழ்ச்சியாய் இருந்தீர்கள்?” எனக் கேட்டார். “தூங்கி எழும் கணத்திலிருந்தே மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்பதே ஸ்வாமியின் பதில்.

தன் தூக்கம் ஆழமானது எனவும், தனக்கு மிக அரிதாகவே கனவுகள் தோன்றும் என்றும் ஸ்வாமி ஒருமுறை கூறியிருந்தார். பகல்களில்கூட, தனது எண்ணங்கள் செயல் சார்ந்தாக மட்டுமே இருப்பதாகவும், இருந்தும் தன் எண்ணங்களிலிருந்து ஒரு தொலைவினை தான் உணர்வதாகவும் சொல்கிறார். “வாழ்க்கையில் எனக்கு எந்த குறிக்கோளும் இல்லை, ஞானோதயம்கூட இல்லை. எனக்குள் இனிமையை உருவாக்கிக் கொள்ளும் தொழில்நுட்பம் என்னிடம் இருக்கையில், வேறென்ன வேண்டும்?” என்கிறார்.

ஒரு நினைவூட்டல்

அந்த அழைப்பிதழின் முடிவில் இருந்த அந்தவொரு வாசகம் என் கவனத்தை ஈர்த்தது - “நாம் இதனை நிகழச் செய்வோம்!” Isha Fest விழாவிற்கான அழைப்பு அது. ஆறு வருடங்களுக்கு முன் கோவையில் நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அதனை எனக்கு அனுப்பி இருந்தார். ஒருவேளை, நான் யோகா வகுப்புசெய்த, அந்த ஒளிபொருந்திய, முனிவரை ஒத்த அந்த யோக ஆசிரியரைப் பற்றியதாய் இந்த அழைப்பிதழ் இருக்குமோ என எண்ணினேன். அந்த யோக வகுப்பில் தொங்கிக் கொண்டிருந்த பேப்பர் போர்டில் இருந்த, “அன்பு, ஒளி, ஆனந்தம் நிறைந்த உலகம் - அதற்கான நேரம் வந்துவிட்டது. இதனை நாம் நிகழச்செய்வோம்,” என்ற வாசகம் மீண்டும் ஒருமுறை அந்த யோக வகுப்பினை எனக்கு நினைவூட்டியது. “அன்பு, ஒளி, ஆனந்தம், இதனை நாம் நிகழச்செய்வோம்,” இவ்வார்த்தைகளின் சேர்க்கை எனக்கு பிடித்திருந்ததால், அந்த வாக்கியம் எனக்குள் நிலைபெற்று விட்டது. அதனை மீண்டும் பார்த்தவுடன், 1990ம் ஆண்டு, கோவையில் நான் செய்திருந்த அந்த அசாதாரண யோக வகுப்பு என் நினைவில் சுழன்றாடியது.

முற்றிலும் வித்தியாசமான ஓர் அனுபவமாய் அந்த வகுப்பு அமைந்திருந்தது. நான் அதற்குமுன் கேட்டிராத மென்மையான வாத்திய இசை இசைத்துக் கொண்டிருந்தது. மைசூரிலிருந்து வந்திருந்த அந்த யோக ஆசிரியர், பாண்டிய அமைச்சரவையில் இருந்த மாணிக்கவாசகரை எனக்கு நினைவூட்டினார். தீட்சை நாளன்று சத்குருவுடன் தன்னார்வத் தொண்டர்களும் இணைந்திருந்தனர். இந்த ஞாபகங்கள் யாவும் பசுமையாய் என் நினைவில் படர்ந்தது. தீட்சை நாளன்று நடைபெற்ற விளையாட்டில், ஒருமுறை சத்குருவின் முகத்தை, மிக நெருக்கமாக நான் பார்த்தேன். அதற்குமுன் நான் கண்டிராத பிரகாசத்தை உடையவராய் அவர் இருந்தார். இவர் சாதாரண மனிதரல்ல என்பதை மறுமுறை உணர்ந்தேன். யோக வகுப்பிற்குள் முதன்முதலாய் அவர் நுழைகையில், நான் அவரைப் பார்த்தபோதும் இதே உணர்வுதான் எனக்குள் மேலோங்கியது.

என்னை கரையச்செய்த மற்றொரு விஷயம், தீட்சை நாளன்று தன்னார்வத் தொண்டர் ஸ்ரீநிவாசன் அவர்களின் பகிர்தல். கண்களில் கண்ணீர் மல்க, “சத்குரு 30 கடவுளர்களுக்கு சேவைச் செய்யச் சொன்னார்,” என்று பகிர்ந்துகொண்டார். வகுப்பில் கலந்துகொண்ட 30 பேரான எங்களைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார். அந்தக் கணத்தில், என்னுள் மிக அடிப்படையான ஏதோவொன்று நகர்ந்தது. ஒரு பணியாளைப் போல சேவை செய்தாலும், தனக்குள் மிக உயர்ந்த நிலையில் இருக்கமுடியும் என்பதை நான் அதுவரை அறியவில்லை. தன்னார்வத் தொண்டு பற்றிக்கூட அப்போது நான் அறிந்திருக்கவில்லை. சத்குருவுடன் நடந்த முதல் தியான அன்பர்களின் சந்திப்பின்போது, நான் கண்ட சத்குரு ஸ்ரீபிரம்மா புகைப்படத்தில் இருந்த தீவிரமும், பின் அந்த இரவு முழுவதும் பேச முடியாமல் நான் இருந்ததும், அந்த அழைப்பிதழைக் காணக்காண எனக்குள் உயிரோட்டம் பெற்றன.

இந்த அனுபவங்களைக் கடந்து, யோக வகுப்பிற்கு பின், முதலில் மதுரைக்கும் அதைத் தொடர்ந்து சென்னைக்கும் எனக்கு பணிமாற்றம் கிடைத்தது. வாழ்க்கை பரபரப்பாகி, அதன் ஓட்டத்தில் பயிற்சிகளையும் கைவிட்டிருந்தேன்.

நான் கிராமத்தில் இருந்து வந்தவன். முதல் தலைமுறை பட்டதாரி, அரசு ஊழியனும்கூட. என் தந்தை கொஞ்சம் நிலபுலன்களை வைத்திருந்தார். ஆனால், நாங்கள் உண்பதற்கும் உடுத்துவதற்கும் என்ன தேவையோ அதைவிட அதிகம் சம்பாதிக்க எண்ணாதவர் அவர். நிறைவுடையவராகவும், ஆனந்தமானவராகவும் அவர் இருந்தார். தான் வைத்திருந்த லிங்கங்களுக்கும் கணபதி சிலைகளுக்கும், பூஜையறையில் தினசரி பூஜைகள் செய்வார். என்னுடைய இரு சகோதரர்களுக்கு திருமணம் செய்வது, அவர்களுக்கு உகந்த முறையில் வாழ்க்கையமைத்து கொடுப்பது எங்களது முக்கிய பணியாக அப்போது இருந்தது. அதனால், அந்த 6 வருடங்கள் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை சீர்படுத்துவதில் கடந்து போயின.

இப்போது, Isha Fest அழைப்பிதழை நான் பார்த்தபோது, அனைத்தும் எனக்குள் உயிர்பெற்றன. அந்த தொடர்புக்காக நான் ஏக்கம்கொண்டேன். சத்குரு அவர்களின் வகுப்பிற்கும் Isha Fest டிற்கும் உண்மையிலேயே தொடர்பிருக்கிறதா என்பதை நான் உறுதியாக அறிந்திருக்கவில்லை. எனினும், அதனைப் பயன்படுத்தி, 1996ஆம் ஆண்டு, செப்டம்பர் 23ஆம் தேதி, முதல்முறையாக ஆசிரமத்திற்கு பயணம் மேற்கொண்டேன்.

ஞானியுடன் முதல் சந்திப்பு

அங்கு சூழ்நிலை அத்தனை உயிரோட்டமாய் இருந்தது. அனைவருமே சந்தோஷமாகவும், சக்தியுடன் உற்சாகமாகவும் இருந்தனர். அங்கிருப்பதில் எனக்குள் அத்தனை மகிழ்ச்சி. சற்று நேரம் கழித்து, நான் சத்குருவை தேடத் துவங்கினேன், அவர் சிவாலயா மரத்திற்கு அருகில் சில பேருடன் பேசிக் கொண்டிருப்பதை அறிந்தேன். சற்று நேரம் கழித்து, அவர் என்னை நோக்கி வருவதை உணர்ந்தேன். இந்த முனிவரை வணங்குவது எப்படி என்பதை நான் அறிந்திருக்கவில்லை, அதனால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நெடுஞ்சான்கிடையாக அவர் காலடியில் விழுந்து வணங்க முற்பட்டேன். அவரது பாதங்களைத் தொட நான் எத்தனிக்கையில், என் கண்கள் சத்குருவின் கண்களோடு தொடர்புகொண்டன. இத்தனைக்கும் அவர் என்னைப் பார்க்கக்கூட இல்லை. அதன்பின், எனக்குள் நடந்தவற்றை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது என்பதால், அந்த கண்களில், “கருணையும் அன்பும்” பொங்கி வழிந்தன என்று மட்டுமே சொல்லமுடியும். படைப்பு முழுவதையுமே விழுங்கிவிட்ட கண்களைப்போல அவை இருந்தன.

திடீரென எனக்குள் ஏதோவொன்று உடைந்தது, எல்லையில்லா பரவசத்தை எனக்குள் உணர்ந்தேன். சுற்றத்தை மறந்த நிலையில், நான் அழத் துவங்கினேன். ஒரு மணி நேரம் அழுதிருப்பேன் என ஞாபகம். தனது குடும்பத்தில் இருந்து தொலைந்து, பிரிந்துபோய், மீண்டும் வந்துசேர்ந்தவனாய் உணர்ந்தேன். அந்த உணர்விலேயே திளைத்திருந்தேன்.

சம்சார சாகரத்தை கடந்த ஒரு காட்சி

மண்ணோடும், மரங்களோடும், வெற்றுவெளியோடும், நான் உண்ட உணவோடும் நான் ஒன்றிப் போனேன். என்னுடைய வெளியுலக வாழ்க்கை முற்றுபெற்றுவிட்டது என்பது எனக்குள் தெளிவாயிற்று.

அங்கிருந்து கிளம்பும்முன், சென்னையிலும் வகுப்புகள் நடைபெறுவதை நான் அறிந்துகொண்டேன். அந்த சமயத்தில் என் வீட்டார் எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற ஆசையெல்லாம் கிடையாது. ஆனால், குறிப்பிட்ட வயதில் அனைவருக்கும் நிகழும் ஒரு வழக்கமான நிகழ்வாகவே எனக்கு அது தெரிந்தது. இருந்தும், ஆசிரமத்தில் நடந்த அந்தக் குறிப்பிட்ட சம்பவத்திற்கு பின், மிக இயல்பாகவே, முயற்சியில்லாமல், எனக்கு திருமண ஆசை இல்லாமல் போனது. 1997ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில், பாவ-ஸ்பந்தனா செய்வதற்காக நான் ஆசிரமத்திற்கு வந்தேன். ஆனால், நான் 1990ஆம் ஆண்டு ஈஷா யோகா வகுப்பு செய்ததற்கான சான்றுகள் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. சொல்லப் போனால், சத்குரு கோவையில் நடத்திய முதல் சில வகுப்புகளில் அதுவும் ஒன்று. இதனால் கோவை மையத்திலும் முறையான பதிவுகள் எதுவும் இல்லை. அதனால், என்னை BSP செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால், BSP துவங்க இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. ஆசிரமத்தின் இந்த கோரிக்கைக்கு செவிமடுக்காதவனாய் தொடர்ந்து ஹோம்வொர்க் செய்ய ஆரம்பித்தேன். மிகுந்த வலியுறுத்தலுக்கு பின், வகுப்பு தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் உள்ளே அனுமதிக்கப்பட்டேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

BSP என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தது. ஒவ்வொரு கட்டத்திலும், என் சந்தோஷம் மென்மேலும் பெருகியது, என் சக்திநிலை மென்மேலும் அதிகரித்தது, நான் மென்மேலும் பரவசநிலைகளை எட்டினேன், மிகத் துடிப்புடையவனாய் ஆனேன். ஒரு கட்டத்தில், சத்குரு என் அருகே நடந்துசெல்வதை கண்ட நான், அப்படியே பாய்ந்து அவர் பாதங்களைப் பற்றிக்கொண்டேன். ஆனால், எனது கிரகிப்புத்தன்மையில், அவரது பாதங்கள் அங்கிருக்கவில்லை - அது வெறும் வெற்றுவெளியாக இருந்தது. ஒரு கட்டத்தில், நான் அறையைவிட்டு வெளியே வந்தபோது, என்னால் அந்த பரவசத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடல் உணர்வற்ற ஒரு நிலையில் அப்படியே சரிந்து விழுந்தேன். மண்ணோடும், மரங்களோடும், வெற்றுவெளியோடும், நான் உண்ட உணவோடும் நான் ஒன்றிப் போனேன். என்னுடைய வெளியுலக வாழ்க்கை முற்றுபெற்றுவிட்டது என்பது எனக்குள் தெளிவாயிற்று.

சென்னையில் அடுத்த இரண்டு மாதங்கள் என்னால் பணிசெய்ய இயலவில்லை. எதையோ ஒன்றை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பேன். ஒன்று, பரிபூரண வெறுமை என்னை சூழ்ந்திருக்கும் அல்லது பரவசத்தின் உச்சத்தை தொட்டிருப்பேன். என் நிலையை பற்றி என்னுடன் வேலைசெய்தவர்கள் வியந்த போதெல்லாம், “நான் யோகா செய்கிறேன்,” என்பேன். இரண்டு மாதங்களுக்கு பின் நான் இயல்புநிலைக்கு திரும்பினேன். ஆனால், சத்குரு அவர்களுடன் ஒரு பாகமாக இருக்கவேண்டும் என்ற தீவிர ஏக்கம் என்னை நிரப்பியது. சென்னையில் நடந்த 13 நாள் வகுப்பொன்றில் தன்னார்வத் தொண்டு செய்ய, 13 நாட்கள் விடுப்பு எடுத்து அந்த வகுப்பின் 3 செஷனிலும் இருந்தேன். ஆசிரமத்திலிருந்து விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை ஏற்று பிற தன்னார்வத் தொண்டர்களுடன் கடப்பா சென்று வந்தேன். அங்கு ஒரு அதிசயத்தை கண்டேன்.

அந்தவொரு அதிசயம்

அது வெக்கையான வெயிற்காலம், சூரியன் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தான். மாலை 4.30 மணியளவில் சத்குரு பிரம்மச்சாரிகளை ஒரு தியானத்திற்காக கருவறைக்கு அருகே இருந்த அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்றார். அந்த அறையில் சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் இருந்தார்கள். சத்குரு வெளியே வருவதற்கு பத்து நிமிடங்கள் இருக்கையில், திடீரென மழைப்பெய்யத் துவங்கியது. அன்றிரவு நடந்த சத்சங்கத்தில், உள்ளூர் பஞ்சாயத்து தலைவர், “மழை இல்லாமல் நாங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதால், குருவிடம் மழைவேண்டும் என்று வேண்டினேன், இன்றே மழை பெய்துவிட்டது,” என்றார். அவருக்கு சத்குருவிடம் நன்றியுணர்வு பொங்கிப் பெருகியது.

கடப்பாவில், தியானலிங்க உருவாக்கத்தைப் பற்றி சத்குரு பேசினார். சத்குரு பேசிய விதத்திலிருந்து இது மனிதகுலத்திற்கு கிடைக்கவிருக்கும் மிகப்பெரிய பேறு என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அதன் உருவாக்கத்தில் மிகச்சிறிய பகுதியாகவாவது நான் இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் என் இதயம் பூரித்துப் போயிருந்தது.

கடப்பாவிலிருந்து திரும்பிய பின், மீண்டும் அலுவலகத்திற்கு செல்வதில்லை என்று முடிவுசெய்தேன். முழுநேரத் தன்னார்வத் தொண்டராய் மாற நான் ஆசிரமத்திற்கு சென்றேன். என்னை சிறப்பாய் நடத்தினார்கள், தன்னார்வத் தொண்டனாய் செய்வதற்குரிய சிலப் பணிகளை எனக்கு வழங்கினார்கள். இருந்தும், நான்காவது நாளன்று, “சத்குருவிடம் அனுமதி பெறாமல் இங்கு மூன்று நாட்களுக்கு மேல் தங்கமுடியாது,” என்றார் ஸ்வாமி நிசர்கா. சத்குருவை எங்குசென்று காண்பது என்ற விவரத்தை அவர் சொல்லவில்லை. அதனால், மீண்டும் சென்னைக்கு திரும்பினேன்.

முழு அர்ப்பணிப்பு

“சிவனுக்கு பிரியமான மலர்களை இன்று நான் சத்குருவிற்கு அர்ப்பணிக்க வேண்டும்,” என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.

நான் சென்னைக்கு திரும்பிய பிறகு, சில நாட்களுக்குப்பின் சத்குருவும் ஒரு வகுப்பிற்காக அங்கு வந்திருந்தார். தீட்சை நாளிற்கு அடுத்த நாள் சத்குருவை சந்திக்க நான் நேரம் பெற்றிருந்தேன். காலை 11 மணிக்கு அந்த சந்திப்பு நிகழவிருந்தது. காலையில் எழுந்தவுடன், மாணிக்கவாசகருடைய கதை மீண்டும் என் நினைவில் நிழலாடியது. பாண்டிய அரசவையில், முதல்மந்திரியாக இருந்த மாணிக்கவாசகப் பெருமான், அரசனின் கட்டளைக்கு இணங்கி அரேபிய குதிரைகளை வாங்கச் சென்றார். சென்ற வழியில், சிவனே குருவடிவில் வந்து அவரை தடுத்தாட்கொண்ட அந்த நிகழ்வு, அவரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது. இதுதான் எனக்கும் நிச்சயமாக இன்று நடக்கப்போகிறது என்கிற எண்ணம் எனக்குள் மேலோங்கியது. “சிவனுக்கு பிரியமான மலர்களை இன்று நான் சத்குருவிற்கு அர்ப்பணிக்க வேண்டும்,” என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். காலை 7.30 மணிக்கு, சிவனுக்கு விருப்பமான ஐந்து வகையான மலர்கள்/ இலைகளைத் தேடி நான் பயணமானேன். அவை நந்தியாவட்டம், மந்தாரை, வில்வம், செம்பருத்தி மற்றும் நாகலிங்கம். எங்கள் அண்டை வீட்டாரின் கொல்லைப்புறத்தில், நந்தியாவட்டை, மந்தாரை, செம்பருத்தி ஆகிய மூன்றும் கிடைத்தன. அவற்றை ஒரு ஈரத்துணியில் போர்த்தி எடுத்துக்கொண்டு, வில்வம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் ஒரு சிவன் கோவிலை நோக்கி சென்றேன். கோவிலருகே, வில்வமும் நாகலிங்கமும் கிடைத்தன. நான் மலர்களை சேகரிக்கவும், சத்குரு அவர்கள் இருந்த இடத்தை அடையவும் நேரம் சரியாக இருந்தது.

முதல்முறையாக சத்குரு என்னிடம் பேசியபோது…

swami-nischala-pagirvu-pic3

நான் அந்த அறைக்குள் நுழைந்தபோது, சத்குரு அமர்ந்திருந்தார். அவர் முன் வஜ்ராசனாவில் அமர்ந்து, துணியினை திறந்து, மலர்களை அவரது பாதங்களில் அர்ப்பணித்தேன். உள்ளுணர்வில், அந்த ஐந்து மலர்களுடன், “நான்” என்று எவற்றையெல்லாம் நினைத்திருந்தேனோ அவை அனைத்தையும் சேர்த்தே அவரது பொற்பாதங்களில் சமர்ப்பித்தேன், சரணடைந்தேன். இந்த கணத்திற்காக பல ஜென்மங்கள் காத்திருந்ததைப் போன்ற ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. திடீரென, எனக்குள் அனைத்துமே அசைவற்று போனது, அவரது பாதங்களைப் பார்த்தவாறே நான் அமர்ந்திருந்தேன். கண்களில் கண்ணீர் திரண்டு ஓடிக்கொண்டிருந்தது. 2-3 நிமிடங்கள் இப்படியே கடந்தன. அவரது பாதங்களை நோக்கி ஈர்க்கப்பட்டவனைப் போல நான் உணர்ந்தேன். அந்த சில கணங்களில் அவரது பாதங்களைத் தவிர வேறொன்றையும் நான் காணவில்லை.

 “பேசலாமா...” என்று சில நிமிடங்களுக்கு பிறகு சத்குரு என்னிடம் சொல்லிவிட்டு, தன் பாதங்களை அசைத்தார். அவர் பாதங்கள் எனக்குள் அசைவதை நான் உணர்ந்தேன். என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. வார்த்தைகளும் வரவில்லை, ஒன்றுமே எனக்கு தெரியவில்லை. எங்கிருந்து அந்த வார்த்தைகள் வந்தன என்பது மட்டும் எனக்கு புலப்படவில்லை, “எனக்கான நேரம் வந்துவிட்டது!” என்றேன். “நிச்சயமாக, நேரம் வந்துவிட்டது,” என்றார் சத்குரு.

 “என்ன செய்யலாம்?” என்று அவர் தொடர்ந்தார். “நான் ஒரு சந்நியாசி ஆகவேண்டும்,” என்று தெளிவாக அவரிடம் சொன்னேன். அதன்பின், நான் என்ன செய்கிறேன், என் குடும்பப் பின்னணி என்ன போன்ற பல விஷயங்களை என்னிடம் கேட்டார். என் குடும்ப சூழ்நிலையைப் பற்றி தெரிந்துகொண்டவுடன், “உன் பெற்றோரை யார் பார்த்துக் கொள்வார்கள்,” என்று கேட்டார். “என் மூத்த சகோதரர்கள் பார்த்துக்கொள்வார்கள்,” என்று அவரிடம் கூறினேன். “டிசம்பரில் ஆசிரமத்திற்கு வந்துவிடு,” எனச் சொன்னார்.

அது ஜுலை மாதம். எனக்குள் எல்லாமே முடிந்துவிட்டது, “நான்” என்று என்னவெல்லாம் நினைத்திருந்தேனோ அவற்றை அவர் பாதங்களில் ஒப்படைத்துவிட்டேன். அவரிடம் ஒப்படைத்துவிட்ட அந்தக் கணத்திலிருந்து இதனை நான் எழுதும் இந்தக் கணம் வரை, எனக்குள் மிக ஆழமான கட்டுக்கடங்கா பரவசம் நிலைத்திருக்கிறது. பிற உணர்வுகள் அனைத்தும் மேல்மட்டத்தில் மட்டுமே நிகழ்கின்றன. ஆனால் அவற்றைத் தாண்டி உள்ளிருக்கும் ஆனந்தம், தானாகவே, எப்போதும் நிலைபெற்றிருக்கிறது. 1997ம் ஆண்டு, டிசம்பர் 1ம் தேதி, முழுநேர தன்னார்வத் தொண்டராய் நான் ஆசிரமத்திற்கு வந்துசேர்ந்தேன். 1998ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி தினத்தில் பிரம்மச்சரிய தீட்சை பெற்றேன்.

தியானலிங்க உருவாக்கத்தின் உற்சாகம்

swami-nischala-pagirvu-swami construction pic

ஆரம்பத்தில் நான் சமையற்கட்டிலும், பாத்திரம் துலக்குவதிலும், சமையல் செய்வதிலும் ஈடுபட்டிருந்தேன். 3 மாதங்களுக்கு பிறகு, கட்டுமானத் துறையின் அங்கமானேன். என்னையும் இன்னும் இருவரையும் சத்குரு ஒரு சந்திப்பிற்கு அழைத்தார். “குறிப்பிட்ட நேரத்திற்குள் தியானலிங்கத்திற்கு ஒரு மேற்கூரை தேவை,” என்று சத்குரு அழுத்தமாக சொல்லி, தியானலிங்க கட்டிடம் மற்றும் வளைகூரை உருவாக்குவது குறித்த தகவல்களை எங்களுடன் எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி, வரைபடம்கூட இல்லாமல் வெறும் வார்த்தைகளில் விளக்கினார். எங்களிடம் எதை கட்டச்சொன்னாரோ, அதன் வடிவம், அளவு, இடம், திசையமைப்பு, கட்டுமானப் பொருட்கள் என அனைத்தும் அவருக்குள் தயாராய் இருந்தன. அந்த முதல் சந்திப்பில், “தினசரி எத்தனை பேர் இந்தக் கோவிலுக்கு வரவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று சத்குரு எங்களிடம் கேட்டார். மிக உற்சாகமாக, “ஆயிரம்,” என்றேன். அப்போது இருந்த சூழ்நிலையில், எனக்கு ஆயிரம் பக்தர்கள் வருவதே மிகப்பெரிதாக தோன்றியது. “ஆம், இன்னும் நிறைய பேர் இங்கு வருவார்கள்,” என்று சொன்னார். இன்று ஆயிரக்கணக்கான மக்கள் தியானலிங்கத்திற்கு வருகை தருவதை பார்க்கும்போது எனக்கு பூரிப்பாய் இருக்கிறது.

ஆரா செல் கற்களும் நான்கு தொழிற்சாலைகளும்

இந்தச் சந்திப்பிற்கு பிறகு, அனைத்து ஆசிரமவாசிகளும் தன்னார்வத் தொண்டர்களும் சத்குரு குறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் தியானலிங்க கட்டிடப் பணியை நிறைவு செய்வதில் தீவிரமானோம். பகலும் இல்லை இரவும் தெரியவில்லை - இந்த பெரும்பணிக்கு எங்களால் இயன்ற அனைத்தையும் நாங்கள் அர்ப்பணித்தோம். அடித்தளமும் சுவரும் மிகச் சீக்கிரமாக எழுப்பப்பட்டன. இருந்தாலும், ஆரா செல்லினை நிறைவுசெய்ய உத்திரத்திற்கான கற்கள் தேவைப்பட்டன. ஒரு மாதத்திற்குள் விநியோகம் செய்வதாக கல்குவாரி உரிமையாளர் சொல்லியிருந்தார். ஆனால், அவரிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லை. ஒரு மாதம் கடந்த பின்பும் கற்கள் வராததால், குவாரிக்கு நேரடியாக செல்ல முடிவுசெய்தோம். அவ்விடத்தை நாங்கள் அடைந்தபோது, நமக்கு தேவைப்பட்ட 54 கற்களில் வெறும் 2 கற்கள் மட்டுமே தயாராய் இருந்தன. மீதமுள்ள கற்களை உரிய நேரத்திற்குள் அவர் விநியோகம் செய்வதற்கான ஒரு சாத்தியமும் தென்படவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை; எப்போதும் போல, நம் தன்னார்வத் தொண்டர்களிடம் சொல்லி வைத்தோம்.

கோபியைச் சேர்ந்த அருணகிரி அண்ணாவும், செந்தில் அண்ணாவும் ஆபத்பாந்தவர்களாய் எங்களை காக்க வந்தனர். பெங்களூரூவிலுள்ள குவாரி ஒன்றின் முகவரியை எங்களுக்கு அளித்தனர். கொள்முதல் பொறுப்பாளரான ஸ்வாமி அபிபாதாவும், மொழிபெயர்ப்பாளரான ஸ்வாமி நிசர்காவும் குவாரிக்கு சென்று கற்களை அவர்கள் விநியோகிப்பதற்கான தேதிகளை நிர்ணயித்துவிட்டு வந்தனர். இருந்தும், இந்த குறுகிய காலத்தில், அத்தனை கடின கற்களை அறுப்பது எப்படி என்கிற கேள்வி எங்களுக்குள் வந்தது! கோபியை சேர்ந்த இரண்டு அண்ணாக்களும் நான்கு தொழிற்சாலைகளை கண்டறிந்து, கற்கள் வரவர, அவற்றை அறுக்கும் வேலையும் நடக்கும்படி ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். காலதாமத்திற்கு பயந்து, ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் தினமும் பஸ்சில் பயணம் செய்து வேலை நடப்பதை நான் உறுதிசெய்து கொண்டேன். தினமும் இரவு 11 மணிக்கு சிங்காநல்லூர் அலுவலகத்திற்கு நான் வருகையில், ஸ்வாமி தேவசத்வா, நான் உணவருந்திவிட்டேனா என்று என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்டு உறுதிசெய்து கொள்வார். இது நெகிழ்ச்சியான சம்பவமாய் எனக்கு அமைந்தது. நான் சாப்பிடாது இருந்தால், உடனே, குறைந்தது உப்புமாவாவது செய்து கொடுத்துவிடுவார்.

தயாராய் இருந்த செங்கற்கள்!

சத்குரு பயன்படுத்தச் சொல்லிய கருங்கற்களையோ பிற பொருட்களையோ எங்களில் யாருக்கும் வாங்குவதிலும் அவற்றை பயன்படுத்துவதிலும் அதிகப் பரிட்சயம் இல்லை என்பதுதான் உண்மை. இருந்தாலும், ஒவ்வொரு முறை நாங்கள் தடுமாறிய போதும், உதவி நாடி வந்தது - எப்படியோ பேரதிசயமாய் அது நிகழ்ந்தது. உத்திரத்திற்கு கிடைத்த கற்களைப்போல... வளைகூரைக்கு 2 இன்ச் செங்கற்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில் சத்குரு மிக தெளிவாக இருந்தார். 2 இன்ச் என்பது வழக்கமாக கிடைக்கும் ஒரு அளவல்ல. அதனால், தமிழ்நாட்டில் அதற்கான விநியோகஸ்தரை எங்களால் கண்டறிய முடியவில்லை. என்ன செய்வதென்பதை அறியாமல், மீண்டும் தேடுதலை துவங்கினேன், மீண்டும் ஒரு தன்னார்வத் தொண்டர் கைகளில் தீர்வுடன் உதவிக்கு வந்தார். மோகன்தாஸ் அண்ணா அவர்கள், நமக்கு வேண்டிய அளவில், வேண்டிய கையிருப்பு வைத்திருந்த ஒரு தொழிற்சாலையை கேரளாவில் கண்டுபிடித்தார். இத்தனைக்கும் மோகன், விநியோகஸ்தரை தேடி அங்கு செல்லவில்லை, வேறொரு பணி நிமித்தமாக கேரளாவிற்கு சென்றிருந்தார். அந்த தொழிற்சாலையுடனான தொடர்பு தானாக, இயல்பாக நடந்தது.

ஹுர்டீஸ் ஓடுகளின் பலம்

தியானலிங்க கட்டுமானப் பணிகளின் போது, இன்று வரை நம் கட்டுமானப் பணிகளில் வழக்கத்தில் இருக்கும் பல செயல்முறைகளையும், பொருட்கள் பற்றியும் நாம் கற்றுக்கொண்டோம். உள்பிரகார கூரைக்கு ஹுர்டீஸ் ஓடுகளைப் பயன்படுத்துமாறு சத்குரு சொல்லி இருந்தார். அவை பளுவை தாங்குமா என்கிற கேள்வி எங்களுக்கு இருந்தது. மேலும், தமிழ்நாட்டில் அவை பயன்பாட்டில் இருந்த எந்த இடத்தையும் எங்களால் அறிய முடியவில்லை. மறுபடியும், மோகன்தாஸ், கோழிக்கோடில் உள்ள ஹுர்டீஸ் ஓடுகள் தொழிற்சாலைக்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு நமக்கு தேவையான அளவு கையிருப்பு தயாராய் இருந்தது. அந்த ஓடுகளைப் பார்த்தவுடன், அதனை கட்டுமானப் பணியில் பயன்படுத்துவது எப்படி என்று எங்களுக்கு விளக்கமளிக்க முடியுமா என்று அந்த தொழிற்சாலை எம்டி யிடம் கேட்டேன். அந்த எம்டி ஒரு பொறியாளருடன் எங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அன்று மாலை 4.30 மணிக்கு அந்த பொறியாளரை நாங்கள் சந்திக்கச் சென்றோம். அதன்பின் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இன்றும்கூட என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன.

ஹோட்டலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தியான அன்பர் அங்கு வந்தார். அவர் கோவை விமான நிலையத்தில், விமான நிலைய மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர். முன்னம் ஒருமுறை ஆசிரமத்திற்கும் வந்திருக்கிறார். அதனால் அவர் உடனடியாக ஸ்வாமி அபிபாதாவை அடையாளம் கண்டுவிட்டார். எங்கள் கதையை கேட்டபின், பணியிடங்களை சுற்றிப் பார்க்க தனது காரினை எங்களுக்கு வழங்கிவிட்டு, அவரும் அவரது மனைவியும் ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்த இன்ஜினியர் அங்கு வந்தார். அவரும் கோவையில் படித்தவர் என்பது எங்களுக்கு தெரிய வந்தது. அதிகப்படியான அக்கறையுடன் அந்த ஓட்டினை முறையாய் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து எங்களுக்கு விளக்கினார். மேற்கொண்டு, ஓட்டினை கொண்டு அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களை பார்க்க ஏற்பாடு செய்துகொடுத்தார்.

மனிதகுலம் செழிக்க, சத்குரு அவர்கள் கொண்ட நோக்கத்தினை நிறைவேற்றுவதில் நான் சிறிதளவாவது பயனுள்ளவனாய் இருப்பது என்னுடைய பாக்கியம். என்னுடைய உச்சகட்ட கற்பனையிலும்கூட நினைத்துப் பார்த்திராத விஷயங்கள் இங்கு எனக்குள் நடந்திருக்கின்றன

நாங்கள் முதல் கட்டிடத்திற்கு சென்றபோது, தற்செயலாக, அந்த கடை உரிமையாளரும் ஆசிரமத்திற்கு ஏற்கனவே வந்துசென்றவராய் இருந்தார். அந்த நகரத்தில் ஈஷா மையம் இல்லாதபோதிலும், அத்தனை தியான அன்பர்களை அங்கு கண்டதில் எங்களுக்கு மிகுந்த ஆச்சரியம். எங்களிடம் மிகுந்த அக்கறையோடு அவர் நடந்துகொண்டார். மேற்கொண்டு எந்த தகவலும் வழங்குவதற்கு முன்பு, நாங்கள் கட்டாயமாக ஏதாவது ஜுஸ் குடித்தே ஆகவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதன்பின், அனைத்தையும் காட்டி, விளக்கமளித்தார். அவரது இடைத்தள மாடியில் அவர் இந்த ஓட்டினை போட்டிருப்பதையும், அதில் கணமான மின்சாதனங்கள், குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றை வைத்திருப்பதையும் பற்றிச் சொன்னார். அதனால், அந்த ஓட்டின் பலம் குறித்து நான் சமாதானம் அடைந்தேன். பிற இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவையும் எனக்கு ஏற்படவில்லை. இன்றும்கூட, ஈஷாவின் பல்வேறு கட்டிடங்களில் இந்த ஹுர்டீஸ் ஓடுகளை நாம் பயன்படுத்தி வருகிறோம்.

C-Clamp போட்ட கிடுக்குப்பிடி

கட்டிடப் பணியின் மற்றொரு பரிமாணம்... எங்களுக்கு தெரிந்தவை அனைத்தையும், எங்கள் தன்மை அனைத்தையும் நாங்கள் பயன்படுத்த தேவையிருந்தது. தியானலிங்க முகப்பு மண்டபங்களிலுள்ள தூண்களை தூக்கி நிறுத்த, ஒருமுறை, நானே சி-வடிவ இரும்பு கிளாம்ப் ஒன்றினை வடிவமைத்தேன். தூண்களை அவை சரியாக பற்றிக்கொள்ளும் எனத் தெரிந்தாலும், அதனைப் பயன்படுத்துவதற்கு எனக்குள் பதற்றமாகவே இருந்தது. “ஒருவேளை தூண் நழுவி கீழே விழுந்துவிட்டால், யாருக்காவது அடிப்பட்டுவிட்டால், யாராவது இறந்துவிட்டால்...” இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே என்னால் இரவு முழுவதும் உறங்க இயலவில்லை. அடுத்த நாள் காலையில் எனக்கு வயிற்றுப்போக்குகூட ஏற்பட்டது. தியானலிங்கத்திற்கு சென்று 3 மணிநேரம் அங்கு அமர்ந்திருந்தேன். நான் வெளியே வருகையில், மெக்கானிக்கல் இன்ஜினியரான ஸ்வாமி நந்திகேஷாவை சந்தித்தேன். அந்தச் சூழ்நிலை குறித்து அவரிடம் விவரித்தேன். சில நிமிட யோசனைக்குபின், கிளாம்புகளை இறுக்கப்படுத்த, மர ஆப்புகளை பயன்படுத்தலாம் என்றும், தூணுக்கு கீழேயும் கூடுதலாக கிளாம்பினை பொருத்தலாம் என்றும் அவர் சொன்னார். அந்தத் தீர்வு சிறப்பாய் வேலை செய்தது. அவரும் பெரிய அளவில் அனுபவம் இல்லாத, கல்லூரிப் படிப்பை அண்மையில் முடித்த ஒருவர்தான். ஆனால், எங்களை நாங்கள் முழுமையாய் பயன்படுத்தினோம், அது வேலை செய்தது.

அருள் நிழலில் ஒரு வாழ்க்கை

இதுபோல பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது, நான் கடந்த 20 வருடங்களாய் இங்கு இருக்கிறேன். உண்மையில், நாம் இங்கு ஈஷாவில் கட்டிடப்பணி என்கிற பெயரில் செய்வதெல்லாம், சத்குருவின் கருத்துருவாக்கத்தில் விளைந்து, வடிவமைக்கப்பட்டவை. பல்வேறு வகைகளில், சத்குரு அவர்களின் அருளினால் நடைமுறைப்படுத்தப்பட்டவை. அவருடனான கட்டிடப் பணிகள் குறித்த சந்திப்புகளில், அவர் குறிப்புகளை வழங்குவார், அவர் சொல்லிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், அதன் 3ஞி வடிவம் என் மனதில் ரூபமெடுக்கும். பின், வரைபடங்கள் வரைகையில், கட்டிடக்கலையின் தோற்றக் கூறுகளுக்கு அவர் கொடுத்த பரிமாணங்களும் விகிதாச்சாரங்களும் மிகச் சரியாக, சுலபமாக பொருந்திப் போகும்.

மனிதகுலம் செழிக்க, சத்குரு அவர்கள் கொண்ட நோக்கத்தினை நிறைவேற்றுவதில் நான் சிறிதளவாவது பயனுள்ளவனாய் இருப்பது என்னுடைய பாக்கியம். என்னுடைய உச்சகட்ட கற்பனையிலும்கூட நினைத்துப் பார்த்திராத விஷயங்கள் இங்கு எனக்குள் நடந்திருக்கின்றன. சத்குருவின் அந்த ஒளி பொருந்திய பிரகாசமான முகத்தை எனக்குள் காட்சிப்படுத்தும் போதெல்லாம், தாங்க இயலா பேரானந்தப் பரவசத்தில் நான் திளைத்துப் போகிறேன் - எவ்விடத்திலும், எந்நேரத்திலும். அது எப்படி நிகழ்கிறது என்று எனக்குத் தெரியாது, என்னைப் பொருத்தவரை சிவன்தான் சத்குரு. இம்மியளவு குறைவும் அல்ல, கூடவும் அல்ல.

தெளிவு குருவின் திருமேனி கண்டல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவுரு சிந்தித்தல் தானே

ஆஉம் ஷம்போ ஷிவ ஷம்போ, ஜெய ஷம்போ மஹாதேவா!