ஒரு சகாப்தத்தின் துவக்கம்

ஸ்வாமி குருபிக்ஷா : அவர் பார்வை என்னிலிருந்து சற்றும் விலகவில்லை. அவரின் விரிந்த, ஆழமான, கருத்த கண்கள், பத்து நிமிடங்களாக என்னையே பார்த்தபடி நின்றன. என் பிஞ்சு மனதில் “என்னை அவருடன் கடத்திக்கொண்டு சென்றுவிடுவாரோ?” என்ற பயம் பிடித்துக்கொள்ள, ரயில் பெட்டியில் என்னருகிலிருந்து என் தாத்தாவின் கவனத்தை ஈர்க்க, நான் அழ ஆரம்பித்தேன். என் தாத்தா என்னை சமாதானப்படுத்துவதற்காக குனிந்தபோது, அடுத்த ஸ்டேஷன் வந்திருந்தது. யோகியைப் போல தோற்றமளித்த அவர் புறப்படுவதற்காக எழுந்தார். செல்வதற்குமுன் சட்டென என்னைக் கண்டு முருகனின் குறிப்பிட்ட ஒரு பெயரை சொல்லிப் பிரிந்தார். என் தாத்தாவுக்கும் சக பயணிகளுக்கும் அதற்குப்பிறகு என்னை ஆசுவாசப்படுத்த சற்று நேரமானது. அதன்பின் ஆச்சரியத்திலும் ஆச்சரியம், எங்கள் ஸ்டேஷனை அடைந்தபின், அவர் சொன்ன அதே பெயருடைய ஒரு முருகன் கோவிலுக்கு என் தாத்தா என்னை அழைத்துச்சென்றார். எனக்கு அப்போது வயது ஆறு, ஆனால் சத்குரு ஸ்ரீபிரம்மாவின் தீவிரத்துடன் இருந்த அந்த முகம், இன்று நடந்ததுபோல அப்படியே என்னுள் பதிந்திருக்கிறது. அதுவே என்னுள் துவங்கிய ஆன்மீகப் பயணமோ என்னவோ!  

swami gurubiksha side profile

என் தந்தை இறந்தபோது எனக்கு வயது 3. என் தாத்தா இறந்தபோது எனக்கு வயது 20. மிகக்குறைந்த வயதிலேயே குடும்ப சொத்துக்களும் பணமும் சார்ந்த வழக்குகளில் நான் அலைக்கழிக்கப்பட்டேன். என் சிறிய வயதை முந்திக்கொண்டு நான் முதிர்ந்திருந்தேன். இந்த சமயத்தில்தான் நான் யோகி ராம்சூரத்குமார் அவர்களை சந்தித்தேன். அவர் மிக மேன்மையான ஒரு மகான். வாழ்க்கையில் உலகம் சார்ந்த விஷயங்களில் என்னுள் இருந்த பெரும்பாலான தடைகளை அவர் அருளால் கடந்தேன். படிப்பை முடித்த பிறகு என் வாழ்க்கை லட்சியமான கட்டுமானத் தொழிலிற்குச் செல்ல விரும்பினேன். ஆனால், யோகி ராம் அவர்களோ, குடும்பத் தொழிலான பணம் கொடுக்கல் வாங்கலையே தொடரச் சொன்னார். இந்த சிறுத் திறமை, 1992ல் நான் இணைந்தபோது சிறிய அமைப்பாக இருந்த ஈஷாவின் பணிகளை நிர்வகிப்பதில் இத்தனை உதவிகரமாக இருக்கும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. 

முதல் ஐவரின் சங்கா

sanga of first five

இளவயதிலிருந்தே எனக்கு யோகா மீது மிகுந்த பிரியம் இருந்தது. அதனாலேயே நான் சத்குருவின் யோகா வகுப்பில் கலந்துகொண்டேன். ஆனால் 1992ல் சம்யமாவில் கலந்துகொண்ட பிறகு, என்னால் சத்குருவை விட்டு விலக முடியவில்லை, அவருடன்தான் நான் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தேன். தமிழகமெங்கும் நடந்த யோக வகுப்புகளில் துடிப்பாக தன்னார்வத் தொண்டு செய்யத் துவங்கினேன். அந்த வருடத்திலேயே சிங்காநல்லூர் அலுவலகத்திற்கு இடம் பெயர்ந்தேன். முழுநேரத் தன்னார்வத் தொண்டர்களாக வந்திருந்த ஐந்து பேரில் நான்தான் வயதில் மூத்தவன். ஒரு குடும்பம்போல வாழ்ந்தோம், சண்டை போட்டுக்கொண்டோம். விஜி அக்கா அடிக்கடி எங்களுக்காக சமைத்தார், சத்குருவும் விஜி அக்காவும் எங்கள் சண்டைகளில் நடுவர்களாக இருந்தார்கள், எங்கள் சின்னஞ்சிறு தேவைகளையும், தாய் தந்தைகூட கவனித்துக்கொள்ள முடியாத அளவு பார்த்துக்கொண்டார்கள். அது என் வாழ்வின் வசந்தகாலம்.

ஏதோவொன்றிற்காக என்னை கிண்டல் செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் சத்குரு அதனை தவறவிட மாட்டார். ஒருமுறை நான் தயார்செய்த சில ஆவணங்களில் கையெழுத்துப் போட்டுக்கொண்டு இருந்தபோது, சத்குரு ஒரு பிழையை கவனித்தார். அவரே அதை திருத்திவிட்டு அடுத்தடுத்த பக்கங்களில் கையெழுத்திடுவதைத் தொடர்ந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த விஜி அக்கா, விளையாட்டாக, “எங்களுக்கெல்லாம் சுட்டிக்காட்டுவதைப் போல ஏன் இவருக்கு பிழையை நீங்கள் சுட்டிக்காட்டவில்லை?” என்று கேட்டார். “இவன் பிழைகளைப் பற்றி அவனிடம் விளக்கத் துவங்கினால், நாள் முழுக்க அவனிடம் பேசிப் புரிய வைப்பதிலேயே போய்விடும்!” என்று சொல்லியபடி தொடர்ந்து கையெழுத்திட்டார். அவர்கள் கொடுத்த இந்த கவனத்தை நான் மிகவும் ரசித்தேன். இருந்தும், “என் குரு யார்? யோகி ராம்சூரத்குமாரா? இல்லை சத்குருவா?” என்ற கேள்வி என்னுள் இருந்தது. அதற்கும் சீக்கிரமே பதில் வந்தது.

திருப்புமுனை

பிறகு 1993ல், என் சொந்த ஊருக்கு சில நாட்கள் சென்றுவர திட்டமிட்டிருந்தேன். அப்போது, “என்னைப் பற்றி விசாரிக்கும் இரண்டு நபர்களை நீ சந்திப்பாய். அவர்களிடம் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லி, அவர்கள் நலத்தை நான் விசாரித்ததாகச் சொல்,” என்று சத்குரு சொன்னார். திடீரென எந்த விளக்கமும் இல்லாமல், நான் கிளம்ப ஆயத்தமானபோது, இப்படிச் சொன்னார். பிறகு வீட்டிற்கு வெளியே காலடி எடுத்து வைக்கும்முன் மறுபடியும் நினைவுபடுத்தினார். இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னிடம் யாராவது பேசிய ஒவ்வொருமுறையும் மிக விழிப்பானேன். ரயிலில் செல்லும்போதும், வீட்டிலும், தெருக்களிலும், கடைகளிலும், எங்கு இருந்தாலும் அதே கவனத்தில் இருந்தேன். யாரும் அவரைப்பற்றி கேட்காமல் ஒருநாள் கடந்தது, இருந்தும் நான் விழிப்பாகவே இருந்தேன். அடுத்த நாள் என் மாமாவை சந்தித்தபோது, “யோகா எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். அவர் கேட்ட விதத்தைப் பார்த்தால், அவர் சத்குருவைப் பற்றி கேட்டிருக்கக்கூடும் என்றே தோன்றியது. சத்குருவும் யோகாவும் ஒன்றா? இப்படி ஒருக்கணம் யோசித்துவிட்டு, “யோகா நன்றாக இருக்கிறது!” என்றேன். “யோகாவும் உங்களை நலம் விசாரித்தது,” என்று சொல்ல முடியாதே!

“இன்னும் ஒன்றா, இல்லை இன்னுமிரண்டா?” என்று வீட்டிலிருந்த மீதி இரண்டு நாட்களும் சிந்தித்தபடியே ஓடின. எதுவும் நடக்கவில்லை. கோவை திரும்பும் வழியில், மதுரையில் என் ஒன்றுவிட்ட தங்கையை சந்திக்கச் சென்றேன். அவளுடைய கணவர் என்னிடம், “ஜிக்கி எப்படி இருக்கிறார்?” என்று கேட்டார். “ஜகி நன்றாக இருக்கிறார்” என்று சொன்ன மறுகணமே, “அவரும் உங்களை விசாரித்தார்,” என்றேன். சத்குரு அவரை விசாரித்தார் என்றதும் அவர் ஆடிப்போனார். அவர் தர்மசங்கடத்தைக் கண்டதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. சரி, ஒன்று யோகா, இன்னொன்று ஜிக்கி: ஜகி பற்றி கேட்கவில்லையே என்று சிங்காநல்லூர் வந்து சேரும்வரை யோசித்துக்கொண்டே சென்றேன்.

அதற்குமேல் என்னால் அடக்க முடியவில்லை, கதை முழுவதையும் விஜி அக்காவிடம் சொன்னேன். ஆச்சரியத்துடன் நடந்ததைக் கேட்டுக்கொண்டு, சத்குரு ஏன் அப்படிச் சொன்னார் என்று அவரும் வியந்தார். பிறகு அன்றே சத்குருவின் வகுப்பிற்கு தன்னார்வத் தொண்டு செய்ய நேர்ந்தது. வாய்ப்புக் கிடைத்ததும் “நான் சொல்லும் ஒரு விஷயத்தைக்கூட உன்னால் சரியாகச் செய்ய முடியவில்லை,” என்று சத்குரு என்னை கடிந்துகொண்டார். நான் எதை சரியாக செய்யவில்லை என்று யோசித்தேன். ஆனால், அவரோ சொல்லி முடித்தவுடன் அடக்கமுடியாத சிரிப்புடன், “விஜி என்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்,” என்றார்.

இன்றுவரை, ஏன் அப்படிச் செய்தார், நடந்தது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் என் எளிய மனதிற்கு, நடக்கப்போவதை அவர் முன்கூட்டியே பார்க்க முடிந்தது அதிசயமாகத் தெரிந்தது. சத்குருதான் என் குரு என்பதை அப்போது உணர்ந்தேன். சத்குரு மீது நான் கொண்ட உறுதிக்கு இந்நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவின் பணிவும் பக்தியும்

பிப்ரவரி 1993ல், சத்குரு ஆசிரமத்தைக் கட்டுவதற்கு நன்கொடை கேட்பதற்காக தமிழகமெங்குமுள்ள பல தியான அன்பர்களின் வீடுகளுக்குச் சென்றார். ஒருமுறை இதற்காக சத்குருவுடன் கரூர் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சத்குரு நன்கொடை கேட்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பலர் அள்ளிக் கொடுத்தார்கள், சிலர் குறைவாகக் கொடுத்தார்கள். ஆனால், ஒவ்வொருவரையும் அதே பக்தியுடன் சத்குரு வணங்கினார்.

ஹோல்னெஸ் நிகழ்ச்சி அனுபவம்

1994 ஜூலை 12ம் தேதி, ஹோல்னெஸ் நிகழ்ச்சிக்குச் செல்ல சத்குருவின் காரை பின்தொடர்ந்து ஆசிரமத்திற்கு சென்று கொண்டிருந்தோம். மழை பலமாகப் பெய்ததால் இருட்டுப்பள்ளத்தில் மழைநீர் காட்டாறாக பெருக்கெடுத்து ஓடியது. அதனால் எங்களால் அதைக் கடக்க முடியவில்லை. அதனால் சில தன்னார்வத் தொண்டர்களுடன் நாங்கள் ஆலாந்துறையிலேயே தங்கினோம். ஹோல்னெஸ் வகுப்பு ஒருநாள் தாமதமாகத் துவங்கியது. அறிவிக்கப்பட்ட வகுப்பு ஒருநாள் தாமதமானது, ஈஷாவின் சரித்திரத்திலேயே அந்த ஒருமுறைதான் நடந்தது.

(வேறு பலருக்கு அமைந்ததுபோல) எனக்கு ஹோல்னெஸ் நிகழ்ச்சி, வேற்றுலக அனுபவம் போன்ற ஆன்மீக அனுபவங்கள் நிறைந்ததாக இருக்கவில்லை. எனக்குள் இன்னொரு நிலைக்கு என்னை அது இட்டுச்சென்றது. உயிர்வாழ்வதற்கு தீவிரமான ஒரு நிலைக்கு என்னை அது இட்டுச்சென்றது. முதல் 30 நாட்களுக்குப் பிறகு, ஹோல்னெஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை சத்குரு இரண்டு குழுக்களாகப் பிரித்தார். எங்களில் ஏழு பேர் “ஆசிரமவாசிகள்” குழுவில் இருந்தோம், மற்றவர்கள் “ஆசிரியர்கள்” குழுவில் இருந்தார்கள். அவர்கள் ஈஷா யோகா வகுப்பு நடத்த பயிற்சி பெற்றார்கள். “ஆசிரியர்கள்” குழுவுடன் சத்குரு அதிக நேரம் செலவிட, நாங்கள் ஏழுபேரும் சும்மா அங்கே இருப்பதும், சாதனா செய்வதும், தோட்டவேலை செய்வதும், சின்னச்சின்ன வேலைகள் செய்வதுமாக இருந்தோம். சிறிது காலத்திற்குப் பிறகு நாங்கள் தனித்துவிடப்பட்டது போல உணர்ந்தோம். எங்களுடன் சத்குரு அதிக நேரம் செலவிடவில்லை என்று உடைந்துபோனோம். கவலையுடன் தழுதழுத்த குரலில், “எங்களுடனும் சற்றுநேரம் செலவிடுங்கள் சத்குரு,” என்று ஒருநாள் சென்று வேண்டினேன்.

சத்குரு மிகுந்த அன்புடன் என்னைப் பார்த்தார். அடுத்த நாள் எங்களை சந்திக்க வந்தபோது, “லீனிங் ட்ரீ” மீது வந்தமர்ந்தார், நாங்கள் ஏழுபேரும் அவரைச் சுற்றி அமர்ந்தோம். “நீங்கள் என்ன செய்தாலும் அன்புடன் செய்யுங்கள். பார்த்தீனியம் செடியை களையெடுத்தாலும் அன்புடன் செய்யுங்கள், உங்கள் ஆன்மீக சாதனாவையும் ஞானோதயத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்றார். அதுவே ஞானோதயம் குறித்து வார்த்தையால் அவர் கொடுத்த முதல் வாக்குறுதி!

ஹோல்னெஸ் நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், ஆசிரமவாசிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் பற்றி பங்கேற்பாளர்களை கலந்துரையாடச் சொன்னார். இந்த நெறிமுறைகளின் பட்டியல் நீளமாய் செல்ல, நான் குழம்பிப்போய் அதிர்ச்சியடைந்தேன், பயந்து போனேன். அன்று மாலை சத்குருவைப் பின்தொடர்ந்து அவர் அறைவரை சென்றேன். இருட்டாக இருந்தது. அவர் டார்ச் வைத்திருந்தது நினைவிருக்கிறது. கதவுமுன் இருவரும் நின்றோம். அவர் என்னைப் பார்த்ததும் நான் சற்றும் யோசிக்காமல், “ஜகி, எனக்கு எந்த விதிமுறைகளும் வேண்டாம்,” என்றேன். அவர் டார்ச்சை என் முகத்தில் அடித்தார். என் கண்கள் குளமாகியிருந்ததை அவர் பார்த்திருக்கக்கூடும். மென்மையாக, மிக மென்மையாக, “சரி, உனக்கு எந்த விதிமுறைகளும் இல்லை,” என்றார். இன்று வரை ஆசிரமத்தின் விதிமுறைகள் அத்தனையையும் நான் பின்பற்றி வருகிறேன். ஆனால், குழந்தைபோன்ற என் உணர்வினை சத்குரு அவ்வளவு மென்மையாக கையாண்ட விதம், அந்நிகழ்வை என் நினைவில் நிரந்தரமாகப் பதித்துவிட்டது.

ஹோல்னெஸ் நிகழ்ச்சி முடிந்ததும், தியானலிங்க பிரதிஷ்டைக்கு சத்குருவிற்கு உறுதுணையாக இருப்பதில் நாங்கள் தீவிரமானோம். அது தீவிரமான செயலும், தீவிரமான சாதனாவும் நிறைந்த காலம். சட்டப்பூர்வ பணிகளையும் பணம் சார்ந்த விஷயங்களையும் நான் கவனித்துக் கொண்டேன். தியானலிங்க வளைகூரை, பிரகாரம் கட்டத் தேவையான பல பொருட்களைத் தேடுவதிலும் வாங்குவதிலும் நான் ஈடுபட்டிருந்தேன். பிறகு 1996 மஹாசிவராத்திரி அன்று, பிரம்மச்சரிய தீட்சை பெற்றேன். பிரம்மச்சரிய தீட்சைபெற்ற இரண்டாவது குழுவினராக நாங்கள் இருந்தோம்.

மஹாசமாதி என்றால் என்னவென்று உண்மையில் அறிந்திருந்தேனா?

ஜனவரி 1997ல், விஜி அக்கா மஹாசமாதி அடைந்தது, சற்றும் எதிர்பாராத சமயத்தில் பாய்ந்த இடியாக என் மீது விழுந்தது. நான் மிகுந்த வருத்தமுற்றேன். ஒரு காரணம், நான் விஜி அக்காவுடன் மிகவும் சகஜமாகப் பழகுவேன் எதையும் அவரிடம் நம்பிக்கையுடன் பகிர்ந்துகொள்வேன். சத்குருவிடம் நான் சொல்லமுடியாத விஷயங்களை நான் அவரோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இன்னொரு காரணம், பலமுறை சத்குருவும் விஜி அக்காவும் என்னிடம் முன்பே இதுபற்றி கூறியிருந்த போதிலும், அது நடக்கக்கூடும் என்று நான் ஒருபோதும் நம்பியதில்லை. அடிமுட்டாளைப்போல உணர்ந்தேன்.

ஆகஸ்ட் 1996ல், விஜி அக்கா, தான் போக விரும்புவதாகச் சத்குருவிடம் சொல்வதை முதல்முறையாக நான் கேட்டேன். தியானயாத்திரை முடிந்து தில்லியிலிருந்து கோவை திரும்பும் ரயிலில் நாங்கள் இருந்தோம். “எப்போதும்போல விளையாட்டாக ஏதோ பேசிக்கொள்கிறார்கள்,” என்றுதான் அப்போது நினைத்தேன். இன்னொருமுறை சத்குரு முக்கோண கட்டிடத்திற்கு முன்னால் என்னை நிறுத்தி, விஜி மஹாசமாதி அடைய விரும்புவதாகச் சொல்கிறாள் என்றும், அவளை அந்தப்படியை எடுக்க வேண்டாமென்று எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை என்றும் என்னிடம் கூறினார். அப்போதும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மஹாசமாதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, சத்குரு என்னை வேலை நிமித்தமாக மைசூர் வரச்சொன்னார். அச்சமயம், விஜி அக்கா வித்தியாசமாக இருப்பது போல எனக்கு தெரிந்தது. “இன்று வித்தியாசமாகத் தெரிகிறீர்கள், என்ன விஷயம்?” என்று அவரிடம் கேட்டேன். உடனே அவர் சத்குருவைப் பார்த்து, “பாருங்கள், அவர்கூட நான் வித்தியாசமாகத் தெரிகிறேன் என்று சொல்கிறார்,” என்றார். சத்குரு என்னிடம், “அவள் விரைவில் மஹாசமாதி அடைய விருப்பதால் அப்படித் தெரிகிறாள்,” என்றார். அப்போதுகூட அது நிஜமாகவே நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. மஹாசமாதி என்றால் என்னவென்று நான் கேள்விப்பட்டிருந்ததால், “ஆன்ம சாதனையின் அந்த உச்சநிலையை விஜி அக்கா எப்படி அடைய முடியும்?” என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது.

அதனால், அவர் சென்றுவிட்டார் என்று கேள்விப்பட்டதும், என் மீது இடியே விழுந்ததுபோல இருந்தது. என் இழப்பை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் எனக்குள் எங்கோ அவரைக் கண்டு பொறாமைப்படவும் செய்தேன்.

தீவிரத்தில் இன்னுமொரு பாய்ச்சல்

விவரிக்க முடியாத இழப்பாக இது இருந்தாலும், கவலையில் ஆழ்ந்திருக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. தியானலிங்க பிரதிஷ்டை வேலைகள் எங்கள் அனைவரையும் அதில் ஈடுபட வைத்திருந்தது. ஒரு பிரம்மச்சாரியாக அதுவே என் வாழ்வின் மிகத் தீவிரமான தருணங்கள். விஜி அக்காவின் மஹாசமாதி நடந்த நான்கு மாதங்களுக்குப் பின், 400 தியான அன்பர்களை ஆந்திர மாநிலத்தின் கடப்பா நகரத்திலுள்ள ஒரு கோயிலுக்கு சத்குரு அழைத்துச்சென்றார். கடப்பாவிற்குக் கிளம்பும்முன், அக்கோயிலிலுள்ள லிங்கத்திற்குத் தங்கக்கவசம் செய்வதற்காக ஒரு தியான அன்பர் தன்னிடமிருந்த தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். தங்க ஆசாரியிடமிருந்து, அந்த கவசம் ஒரு சிறு ஊர்வலமாக ஆசிரமத்திற்கு எடுத்து வரப்பட்டது. அதற்குப்பின், கடப்பாவிலுள்ள லிங்கத்தை அலங்கரிப்பதற்காக அந்த கவசம் எடுத்து செல்லப்பட்டது. கடப்பாவில்தான் முதல்முறையாக சத்குரு தனது குருவைப் பற்றிப் பேசினார்.

முன்ஜென்மத்தில் தியானலிங்கத்தின் செயல்திட்டத்தினை வடிவமைப்பதற்கு அமர்ந்திருந்த அதே மண்டபத்தில் அன்று இரவு அமர்ந்து, பிரம்மச்சாரிகள் அனைவரையும் ஒரு சக்திவாய்ந்த செயல்முறைக்கு உட்படுத்தினார். அந்த செயல்முறை மிக சக்திவாய்ந்ததாக இருந்தது, என் கைகள் வினோதமான முறையில் மேலும் கீழும் அசைந்தபடி, யானை பிளறுவதைப் போல நான் உரக்க சத்தம் போடுவதை உணர்ந்தேன். அன்று இரவு முழுவதும், அடுத்த சில மாதங்களிலும், சக்திவாய்ந்த சூழ்நிலைகள் உருவாகிய போதெல்லாம் அந்நிலைக்குச் சென்றேன். கடப்பா கோயிலுக்குச் சென்றது என் தீவிரத்தில் இன்னொரு பாய்ச்சலாக அமைந்தது.

"தியானலிங்கம் என்ன சொல்கிறது?"

sadhguru-dhyanalinga-pic

ஜூன் 24, 1999ல், தியானலிங்க பிரதிஷ்டை முழுமை அடைந்தது.

2000ல் நான் முதல்முறையாக லிங்கார்ப்பணம் செய்தேன். ஒருநாள் நான் பூப்பரிப்பதற்காக முக்கோண கட்டிடத்திற்கு சென்றபோது சத்குருவை எதிர்க்கொள்ள நேர்ந்தது. “தியானலிங்கம் என்ன சொல்கிறது?” என்று சத்குரு கேட்டார். மறுபடியும் குழம்பிப் போனேன், என்ன சொல்வதென்று தெரியாமல், “ஒன்றுமில்லை!” என்றேன். அதற்குப் பிறகுதான் அவர் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. அதுவரை கோயிலில் நான் பக்தியுடன் சேவை செய்த போதிலும், அது எனக்கு சத்குரு பிரதிஷ்டை செய்த ஒரு கோயிலாக மட்டுமே இருந்தது. ஆனால், சத்குரு என்னிடம் இப்படிக் கேட்ட பிறகு, தியானலிங்கம்தான் சத்குரு, சத்குருதான் தியானலிங்கம் என்பதை உணர்ந்தேன். இருவரும் எனக்கு ஒன்றுபோல் தெரிந்தார்கள்!

எனது ஆரம்பகால பயணத்தில், சத்குரு மீது மட்டுமே நான் உறுதியுடன் இருந்தேன். நான் இங்கு வந்ததும் பிரம்மச்சரியம் எடுத்ததும், சத்குருவைப் பிரிந்த ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பதால்தான். ஆனால், லிங்கார்ப்பணத்திற்குப் பிறகு, தியானலிங்கமும் அதே அளவு மிகப்பெரிய இருப்பாக எனக்கு மாறியிருந்தது. இன்றும், வெளிமக்களைக் கையாளுவதில் நான் சோர்வுற்றுப் போனால், குறிப்பாக பணம் சார்ந்த விஷயங்களினால் அலைக்கழிக்கப்பட்டால், தியானலிங்கத்தில் வந்து அமர்வேன், சில மணித் துளிகளில் என்னுள் எல்லாம் சீரடைந்துவிடும்.

ஆன்மீக முதிர்வு நோக்கிய பயணம்

sadhguru offering food to sw gurubiksha

சந்நியாசத்திற்கான தீட்சை பெற்ற பிறகு, ஒரு ஆன்ம சாதகராக எனது வாழ்க்கை மிகப்பெரிய முதிர்ச்சியைக் கண்டது. 2003ல் ஒரு பிரம்மச்சாரிகள் சந்திப்பின்போது, எங்களில் பத்துபேருக்கு சத்குரு சந்நியாச தீட்சை வழங்கி, இப்போது அழைக்கப்படும் பெயர்களை எங்களுக்கு வழங்கினார். அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால், வெகு சீக்கிரத்தில் எனக்குள் மிக அடிப்படையாகவே ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை நான் கவனித்தேன். எனக்குள் இருந்த பல நிர்பந்தங்கள் உதிர்ந்தன. என் பாதையில் நான் முழுமையாக நிலைப் பெற்றேன். அதன்பின், என்னுள் நான் முழு விடுதலையாக உணரும்போதிலும், இன்னும் முற்றிலும் விடுபடவில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.

முடிக்கும்முன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புவது... ஆசிரமத்தில் இருப்பவர்கள் மிக அற்புதமானவர்கள். வெளிமக்களை நான் சந்திக்கும்போது, அவர்கள் பல சொர்ப்ப விஷயங்களில் சிக்கியிருப்பதை கவனிக்கிறேன். பணம், உறவுகள், அந்தஸ்து, வீடு, கார், எனப் பல விஷயங்களில் சிக்கியிருக்கிறார்கள். ஆனால், இங்கு அப்படி இல்லை. இயற்கை நமக்கு விதித்துள்ள எல்லைகளுடன் நாம் சற்று போராடிக்கொண்டு இருந்தாலும், தெரிந்தோ தெரியாமலோ தேவையில்லாத பல முடிச்சுகளை நாம் கட்டவிழ்த்துள்ளோம். இப்படிப்பட்ட மக்கள், தியானலிங்கம், எல்லாவற்றுக்கும் மேலாக என் குரு! உங்கள் மத்தியில் வாழ்வது என் பாக்கியம்.