சுக்கு செய்யும் மருத்துவம்!
'திரிகடுகம்' எனும் நீதிநூல் "சுக்கு மிளகு திப்பிலி" என்ற மூன்று மருத்துவப் பொருட்களின் மருத்துவ குணங்களை உவமை காட்டி எழுதப்பட்ட ஒரு நூலாகும். திரிகடுகத்தில் முதலில் உள்ள பொருளான சுக்கு பற்றி நம் உமையாள் பாட்டி என்ன சொல்கிறாள்?! வாருங்கள் பாட்டியிடம் கேட்போம்!
 
 

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 10

'திரிகடுகம்' எனும் நீதிநூல் "சுக்கு மிளகு திப்பிலி" என்ற மூன்று மருத்துவப் பொருட்களின் மருத்துவ குணங்களை உவமை காட்டி எழுதப்பட்ட ஒரு நூலாகும். திரிகடுகத்தில் முதலில் உள்ள பொருளான சுக்கு பற்றி நம் உமையாள் பாட்டி என்ன சொல்கிறாள்?! வாருங்கள் பாட்டியிடம் கேட்போம்!

"என்னப்பா இப்போதான் இந்த பாட்டி ஞாபகம் வந்ததா?! சரி... சரி... வா! வந்து உட்காரு." என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த மர நாற்காலியின் மேலிருந்த தாம்பாளத்தை அப்புறப்படுத்தி அதில் உட்காரச் சொல்லி உபசரித்தாள் உமையாள் பாட்டி.

"என்ன பாட்டி அது, தாம்பாளத் தட்டில்...?"

"ஓ அதுவா... அதுதான் சுக்கு!"

"சுக்குன்னா...?"

தொண்டைகட்டு, குரல்கம்மல், காதடைப்பு, கபம் இப்படி பல நோய்க்கு சுக்கு ஒரு நல்ல மருந்தா இருக்கு.

"ஓ நீங்கல்லாம் சூப்பர் மார்க்கெட் ஜந்துக்கள்! உங்களுக்கு கலர் கலர் ப்ளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டதை வாங்கிதான் பழக்கம். உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்க நியாமில்லதான்" என்று சொல்லி நையாண்டி செய்தாள் பாட்டி.

"ஆமாம் பாட்டி! இப்பல்லாம் குழந்தைக கிட்ட பால் எதிலிருந்து கிடைக்கிறது'னு கேட்டா? பசுவிலிருந்து'ன்னு சொல்றதில்ல... பாக்கெட்ல இருந்துன்னுதான் சொல்றாங்க!"

"சரிதான்... காலம் எதைநோக்கி போய்கிட்டு இருக்குதோ, அப்பனே, முருகா! உனக்குத்தான் வெளிச்சம்...!" என்று பாட்டி சலித்துக்கொண்டாள்.

"சரி பாட்டி, நீங்க இந்த சுக்கு பத்தி இப்போ சொல்லுங்களேன், நான் தெரிஞ்சிக்குறேன்."

"இஞ்சி உனக்கு தெரியுமா?"

"ஓ தெரியுமே! இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஏன் முழிக்கிற'னு எங்க கணக்கு வாத்தியார் அடிக்கடி சொல்லுவாரு."

"ம்... அந்த இஞ்சி காஞ்சி போனா... அதுதான் சுக்கு."

"ஓ அப்படியா?! சரி இதன் மருத்துவ குணம் என்னென்ன பாட்டி?"

"சுக்கிற்கு மிஞ்சிய மருந்துமில்ல... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லனு சொல்லுவாங்க! ஒவ்வொன்னா சொல்றேன் கேட்டுக்கோ! தொண்டைகட்டு, குரல்கம்மல், காதடைப்பு, கபம் இப்படி பல நோய்க்கு சுக்கு ஒரு நல்ல மருந்தா இருக்கு. அஜீரணம், வயிற்று பொருமல், வாய்வு தொல்லைகளுக்கு சுக்கு பானம்(சுக்கு காபி) சிறந்த மருந்து. பசி உண்டாகாமல் இருப்பவர்க்கு பசி உண்டாக்க சுக்குப்பொடியை 3 விரலளவு எடுத்து அப்போது கறந்த பாலில் கலந்து கொடுத்து வரணும்.

....பிள்ளைபெற்ற தாய்க்கு கருப்பை இயல்புநிலை அடைய, பால்சுரப்பு தூண்ட, சுக்கும் சில மருத்துவப் பொருட்களும் சேர்த்து செய்யப்பட்ட 'சௌபாக்கிய சுண்டி லேகியம்' நல்ல பலன் தரும். இந்த சௌபாக்கிய சுண்டி லேகியம், சுக்கு பானம்... இதெல்லாம் நம்ம ஈஷா ஆரோக்கியா மருந்தகங்கள்ளயே கிடைக்குது. போய் வாங்கிக்கலாம்!"

"பாட்டி, சுக்கு பத்தி சும்மா சூப்பரா சொன்னீங்க பாட்டி. சரி...நான் கௌம்புறேன்!"

"இருப்பா, கொஞ்சம் சுக்கு காப்பி போடுறேன், குடிச்சிட்டு போ!" சொல்லிவிட்டு அடுப்பங்கரைக்குள் பாட்டி சுக்கு காப்பி போடச் சென்றாள்.

சுக்கின் மகத்துவம் அறிந்தபிறகு, அதுவரை எனக்குப் பிடிக்காமல் இருந்த சுக்கு காப்பியை அப்போது குடிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

குறிப்பு:

தொண்டைக்கட்டு மற்றும் குரல்கம்மலுக்கு: சுக்கை மென்று சாற்றை மட்டும் விழுங்க வேண்டும். சுக்கு, மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து தொண்டையில் பூசி (வெளிப்புறமாக) வரலாம்.

குற்றிருமலுக்கு: சுக்கு மற்றும் அதிமதுரத்தை பொடி செய்து 1கிராம் அளவுகு தேனில் குழைத்துண்ணலாம்.

காதடைப்பு, கபம்: சிறு துண்டு சுக்கை சிதைத்து, துணியில் கட்டி காதினுள் வைத்தல்

பூரான்-தேள் கடி விஷம் முறிக்க: சுக்கு சிறு துண்டு, மிளகு 10, வெற்றிலை 1 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்

சுக்குப்பற்று

நெற்றியிலிட - தலைவலி தீரும்
கழுத்தின் மீதிட - தொண்டை வலி தீரும் (tansilitis)
புருவத்தின் மீதிட - அண்மைப் பார்வைக்குறை நீங்கும்
மூட்டின் மீதிட - மூட்டு வலி, வீக்கம் மறையும்

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1