சுபாஷ் பாலேக்கர் ஐயாவுடன் ஒரு பண்ணைப் பார்வையிடல் - பகுதி 1

இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதிலும் பரப்பி, இரசாயன இடுபொருட்களால் நம் தாய்மண் மலடாவதைத் தடுக்கும்நோக்கில் செயல்பட்டு வரும் ஈஷா விவசாய இயக்கத்தின் செயல்பாடுகள் தற்போது வேகம்பிடித்துள்ளன. இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களுடன் சமீபத்தில் ஈஷா விவசாய இயக்க குழுவினர் மேற்கொண்ட பயண அனுபவங்கள், இயற்கை விவசாய நுட்பங்களையும் புதிய பல உத்திகளையும் அறிந்துகொள்ளும் களமாக அமைந்தது. அந்த மூன்று நாட்கள் பயண அனுபவங்கள், இங்கே உங்களுக்காக!
 

ஆரஞ்சு தோட்டத்தில் அறிந்துகொண்ட விவசாய நுட்பங்கள்!

பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 20,21,22 தேதிகளில் சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய முறையில் விவசாயம் செய்து வரும் பண்ணைகளைப் பார்வையிடுவதற்காக ஒரு பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஈஷா விவசாயக் குழுவினரும், நதிகளை மீட்போம் குழுவினரும் மொத்தம் 11 பேர் பங்கு பெற்றோம். இப்பயணத்தில் பண்ணைப் பார்வையிடலுடன் சுபாஷ் பாலேக்கர் ஐயாவுடன் பழகும் வாய்ப்பும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இயற்கை விவசாயம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதைக் குறித்து அறியும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தது.

இப்பயிற்சியில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டனர். குறிப்பாக ஆந்திராவிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்குபெற்றனர். ஆந்திரா அரசாங்கம் சுபாஷ் பாலேக்கர் அவர்களுடன் இணைந்து இயற்கை விவசாயத்தை மேம்படுத்திவரும் நிலையில் எண்ணற்ற வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அம்மாணவர்கள் களப்பயிற்சிக்காக இப்பண்ணை பார்வையிடலில் கலந்துகொண்டனர். பங்கேற்பாளர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் நாக்பூர், கட்டோல் அருகில் அனுசுயா தேவி கோவிலில் செய்யப்பட்டிருந்தது.

இப்பயணத்தில் மஹாராஷ்ட்ராவின் கிழக்குப் பகுதியான விதர்பா பகுதியில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணைகளை பார்வையிட்டோம். மகாராஷ்ட்ராவின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கொங்கன், புனே, நாசிக் பகுதிகளும், மராத்வாடாவும் நல்ல வளமான பூமி. கிழக்குப் பகுதியில் உள்ள விதர்பா மழை குறைவான வறண்ட பகுதியாக உள்ளது. இப்பகுதியின் சராசரி மழை பொழிவு 1,100 மி.மீ ஆக. உள்ளது, எனினும் தமிழ்நாட்டின் சராசரி மழையைவிட சற்று அதிகமே.

வறட்சியான இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் முயற்சியில் சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். விதர்பாவின் மேற்கு பகுதியிலுள்ள அமராவதி பாலேக்கர் அவர்களின் பூர்வீகம், தற்போது நாங்கள் பார்வையிட்டது விதர்பாவின் கிழக்குப் பகுதியான வார்தாவில் உள்ள பண்ணைகளையே. அப்பகுதியில் பெரும்பாலும் ஆரஞ்சு, பருத்தி, கரும்பு, துவரை போன்றவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. பயணத்தின் வழிநெடுக மானாவாரி நிலங்களும், தேக்கு காடுகளும் நிறைந்திருந்ததைக் காணமுடிந்தது.

(கடந்த ஆண்டு பத்திரிக்கைகளில் பிரபலமான *யவத்மால்* மாவட்டம் விதர்பாவின் அருகில்தான் உள்ளது. கடந்த ஆண்டு உயரமாக வளர்ந்திருந்த பி.டி. பருத்திச் செடிகளுக்கு இரசாயன பூச்சிக்கொல்லி அடித்ததின் விளைவாக பூச்சிக்கொல்லி முகத்தில் பட்டு விஷத்தின் தாக்கத்தால் 50க்கும் மேற்பட்ட பருத்தி விவசாயிகள் மரணமடைந்தனர்)

நாக்பூர் ஆரஞ்சு

நாக்பூரை சுற்றியுள்ள பகுதிகள் ஆரஞ்சு உற்பத்திக்கு பெயர் பெற்றது, பருத்தி சாகுபடிக்கேற்ற நல்ல கரிசல் மண் உள்ளது. மேடுபள்ளம் மற்றும் மலைப் பாங்கான பகுதிகளில் கரிசல் மண்ணுடன் சரளைக் கற்களும் உள்ளது. ஆரஞ்சு சாகுபடிக்கேற்ற தட்பவெப்ப நிலை உள்ளதால் பெரும்பாலும் ஆரஞ்சுப் பழ மரங்களே சாகுபடியில் உள்ளது. ஆரஞ்சு மரங்கள் 15x15 அடி அல்லது 20x10 அடி என்ற அளவில் பயிர் செய்யப்பட்டிருந்தது. எல்லா ஆரஞ்சுத் தோட்டங்களிலும் ஊடுபயிர்கள் சாகுபடி செய்யப்படவில்லை. ஆரஞ்சு மரங்கள் சில இடங்களில் பிஞ்சுவிட்ட நிலையிலும் சில இடங்களில் அறுவடை நிலையிலும் இருந்தன.

முதல் நாள் பயணம்

இயற்கை விவசாயத்தில் இனிக்கும் கரும்பு

மஹாராஷ்ட்ராவில் பலரும் இயற்கை விவசாயத்திற்கு தற்போது மாறி வருகின்றனர். இதற்கு உதாரணமாக இருக்கிறார் திரு.பிரதீப் காட்ஜே. கடந்த இரண்டு வருடமாக இயற்கை விவசாயம் செய்துவரும் இவர், இரண்டு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். கரும்புக்கு மாதம் ஒருமுறை ஜீவாமிர்தம் மட்டும் கொடுத்து, 40 டன் அறுவடை எடுத்துள்ளார். இரண்டாவது கட்டை தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. புதிதாக ஒரு ஏக்கரில் கரும்பு நடவும் செய்துள்ளார். கரும்பு வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியும், கரும்புக்கு கரும்பு ஒரு அடி இடைவெளியும் உள்ளது. இடையில் உயிர் மூடாக்காக தட்டை போன்றவற்றை விதைத்துள்ளார்.

ஊடுபயிர்களுடன் சிறக்கும் ஆரஞ்சுத் தோட்டம்

இரண்டாவது பண்ணை ஆரஞ்சுப் பழமரங்கள் மற்றும் பல்வேறுபட்ட ஊடுபயிர்களுடன் அருமையாக இருந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய பயிற்சியில் கலந்துகொண்ட திரு.ப்ரமோத் தாக்ரே, தற்போது முழுமையான இயற்கை விவசாயம் செய்துவருகிறார். இரண்டு ஏக்கரில் உள்ள ஆரஞ்சுத் தோட்டத்தில் 17 வருடங்களான நல்ல காய்ப்புடைய மரங்கள் உள்ளது. இந்த தோட்டத்தை தற்போது இயற்கை முறைக்கு மாற்றியுள்ளார். ஆரஞ்சு மரங்கள் ஊடுபயிருடனும், ஊடுபயிர்கள் இல்லாமலும் உள்ளது. ஊடுபயிராக காய்கறிகள் கீரைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது தவிர தனியாக செண்டு மல்லி சாகுபடி செய்து வருகிறார்.

ஆரஞ்சு மரங்கள் வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியும் மரத்துக்கு மரம் 10 அடி இடைவெளியிலும் நடப்பட்டிருந்தன. ஆரஞ்சு மரங்களுக்கு இடையே உள்ள 20 அடி நிலத்தில் இரண்டு பாத்திகள் அமைத்து அதில் கத்தரி, மற்றும் கீரைகள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது, அடுத்த வரிசையில் தக்காளி மற்றும் செண்டு மல்லி, அதற்கடுத்த வரிசையில் மஞ்சள் மற்றும் முட்டைகோஸ், அடுத்த வரிசையில் இஞ்சி மற்றும் கீரைகள் இருந்தன. இடைஇடையே சோளமும் இருந்தது. இஞ்சியைத் தவிர மற்ற பயிர்கள் நன்றாக வளர்ந்திருந்தன. ஒரு ஆரஞ்சு மரத்திற்கும் மற்றொரு ஆரஞ்சு மரங்களுக்கு இடையில் 10 அடி இடைவெளியில் பப்பாளி மரங்கள் நன்றாக வளர்ந்து காய்த்திருந்தன.

ஒரு வருடத்திற்கு முன்பு எந்தவித மாதாந்திர வருமானமும் இல்லாமல் இருந்த இவ்விவசாயி தற்போது காய்கறிகளையும் பப்பாளியையும் ஊடுபயிர் செய்வதினால் அவ்வப்போது ஒரு கணிசமான வருமானம் பெற்று வருவதாக நம்மிடம் தெரிவித்தார். சுபாஷ் பாலேக்கர் ஐயா ஆரஞ்சு மரங்களுக்கிடையில் ஊடுபயிர் சாகுபடி குறித்து விளக்கினார். இரசாயன விவசாயம் செய்யும் ஆரஞ்சுப் பண்ணைகளில் பூக்கள் அதிகமாக உதிரும் என்றும், இயற்கை விவசாயப் பண்ணைகளில் பூ உதிர்தல் குறைந்து அதிகமான பழங்கள் கிடைக்கும் என்பதை நேரடியாக விளக்கினார்.

கோசாலை மற்றும் காய்கறிகள், கீரைகள்

மதிய உணவுக்கு நாங்கள் சென்ற இடம் ஒரு கோசாலை. திரு.அனில் கர் அவர்களின் இந்த இடத்தில் 50க்கும் மேற்பட்ட ஹரியானி நாட்டுரக மாடுகள் பராமரிக்கப்படுகின்றன, மேற்கு மஹாராஷ்ட்ராவில் கிர் மாடுகள் வளர்க்கப்பட்டாலும் விதர்பா பகுதியில் ஹரியானி நாட்டுமாடுகளே அதிகமாக காணப்படுகின்றன. அப்பண்ணையில் காய்கறிகள் கீரைகள் போன்றவற்றை 3 ஏக்கர் அளவுக்கு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தண்ணீர் குறைவான பகுதி என்பதாலும், வெப்பக் காற்றைத் தடுப்பதற்கும் கூரை வடிவில் ஷேட்நெட் அமைத்து அதில் சாகுபடி செய்திருந்தனர். தண்ணீர் சிக்கனத்திற்காக நிலத்தில் 3x10 அடி என்ற அளவில் ஆறு அங்குலம் உயரமுடைய பலகைகளை செவ்வக வடிவில் அமைத்து அதில் கனஜீவாமிர்தம் மற்றும் மண் கலந்த கலவையை இட்டு 'பெட்' (Bed) அமைத்து சாகுபடி செய்யப்பட்டிருந்தது. மீதி உள்ள சில ஏக்கர் நிலம் மாடுகளுக்கு மேய்ச்சல் நிலமாக உள்ளது.

மதிய உணவை முடித்தபின் பார்வையிட்ட பண்ணைகளைக் குறித்த கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று தங்குமிடத்திற்கு திரும்பிய பின் இயற்கை விவசாயத்தின் அடிப்படை விஷயங்களான ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், மூடாக்கு, வாப்சா போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பாலேக்கர் ஐயா அவர்கள் விளக்கமளித்தார். இதன் மூலம் இயற்கை விவசாயத்தை புதிதாகத் தொடங்கியுள்ள விவசாயிகளும், மாணவ மாணவியர்களும் பல பயனுள்ள விஷயங்களைக் கற்றுக்கொண்டனர்.

இரண்டாவது நாள் பயணம்

ஆரஞ்சு, முருங்கையுடன் ஊடுபயிர் துவரை..

திரு.விஜய் சல்வே அவர்களது பண்ணையும் ஆரஞ்சு பழத்தோட்டமே, 20x20 அடி இடைவெளியில் ஆரஞ்சு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஊடுபயிராக இரண்டு வரிசைகளில் துவரை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. துவரை பூக்கும் பருவத்தில் இருந்தது. ஒவ்வொரு ஆரஞ்சுக்கு மரத்திற்கு நடுவிலும் முருங்கை இருந்தது. ஆரஞ்சு முருங்கை வரிசையில் புளிச்ச கீரை, வெண்டை, செண்டு மல்லி ஊடுபயிர் செய்து அறுவடையும் செய்திருந்தனர். களைகள் அதிகம் இருந்தாலும் ஆரஞ்சு மகசூலில் பாதிப்பு இல்லை.

பயணங்கள் தொடரும்..

[seperator type="thin"]

அடுத்த பகுதியில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பருத்தி, சாத்துக்குடி பண்ணை, ஆரஞ்சு மரங்களுக்கு ஊடுபயிராக நடப்பட்ட பப்பாளி போன்ற பல்வேறு பண்ணை பார்வையிடல் அனுபவங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

தொகுப்பு: ஈஷா வேளாண்காடுகள் திட்டம்

தொடர்புக்கு: 94425 90068

 

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1