சோம்பு சேர்த்தால் ஆரோக்கியம் சேரும்!
நம் பாரம்பரிய சமையலில் பெருஞ்சீரகம் முக்கிய பங்குவகிப்பதைப் பார்க்கலாம்! ‘சோம்பு’ எனப்படும் பெருஞ்சீரகம் தரும் மருத்துவ நன்மைகள் என்னென்ன என்பதை உமையாள் பாட்டி சொல்வதைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்!
 
சோம்பு சேர்த்தால் ஆரோக்கியம் சேரும்!, Sombu serthal arogyam serum
 

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 24

நம் பாரம்பரிய சமையலில் பெருஞ்சீரகம் முக்கிய பங்குவகிப்பதைப் பார்க்கலாம்! ‘சோம்பு’ எனப்படும் பெருஞ்சீரகம் தரும் மருத்துவ நன்மைகள் என்னென்ன என்பதை உமையாள் பாட்டி சொல்வதைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்!

வெகுநாட்கள் ஆயிற்று பாட்டியும் நானும் நகர் உலா சென்று...! எப்போதாவது பாட்டியின் அஞ்சறைப் பெட்டி காலியானால் மட்டும்தான் என்னை துணைக்கு அழைத்துக்கொண்டு நகர்ப்பக்கம் செல்வது பாட்டியின் வழக்கம். நாங்கள் சென்ற சூப்பர் மார்க்கெட்டின் எதிரே இருந்த உணவகத்தில் பல கல்லூரி இளைஞர்கள் சாப்பிட்டுக்கொண்டே கேஸ் அடைக்கப்பட்ட குளிர்பானங்களைக் குடிப்பதை பார்க்க நேர்ந்தது.

“சாப்பிட்டதக்கு அப்புறம் தினமும் கொஞ்சம் சோம்ப எடுத்த வாயில போட்டு மென்னு, சாற கொஞ்சம் கொஞ்சமா விழுங்கி வந்தா உணவு சீக்கிரமா ஜீரணமாகும். அதோட வாயுத் தொல்லையும் சரியாகும். சோம்பு சாப்பிட்டா பசிய நல்லா தூண்டும்.”

ஹெவியாக சாப்பிட்டுவிட்டு இதுபோன்ற குளிபானங்களைக் குடிப்பதால் வாயுத் தொல்லை இல்லாமல் இருக்கும் என பரவலாக நம்பப்பட்டாலும், பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கும் என்பது முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால், சாப்பிட்டவுன் குடிக்கப்படும் குளிர்பானம் வயிற்றில் செரித்தலுக்கு தேவையான நொதிகளை நீர்த்துப் போகச்செய்து, அஜீரணத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். நாளடைவில் புற்றுநோய் போன்ற கடுமையான பாதிப்பிற்கும் ஆளாக நேரிடலாம்!

உமையாள் பாட்டி அந்த இளைஞர்களின் கையிலிருந்த குளிர்பானங்களைப் பார்த்து, “இந்தக் கால இளவட்டங்க டிவி விளம்பரத்த பார்த்துதான் எல்லாத்தையும் கத்துக்குறாங்க!” என்று சொல்லி என்னிடம் நொந்துகொண்டாள்.

“சரி பாட்டி, செரிமானத்தை இயற்கை வழியில அதிகரிக்கறதுக்கு என்ன பண்ணலாம்?!” பாட்டியிடம் கேட்டேன்.

“இப்போ அதத்தான அந்த சூப்பர் மார்க்கெட்டுல வாங்கினோம்! இந்தா...” பையிலிருந்த பாக்கெட்டுகளில் ஒன்றை உடைத்து சிறிது சோம்பை எடுத்து, வாயில் போடச் சொல்லிக் கொடுத்தாள்.

“ஓ... இதுதான பெருஞ்சீரகம்?!” மென்றுகொண்டே கேட்க பாட்டி சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தின் மருத்துவ பலன்களைப் பற்றி சொல்லலானாள்.

“சாப்பிட்டதக்கு அப்புறம் தினமும் கொஞ்சம் சோம்ப எடுத்த வாயில போட்டு மென்னு, சாற கொஞ்சம் கொஞ்சமா விழுங்கி வந்தா உணவு சீக்கிரமா ஜீரணமாகும். அதோட வாயுத் தொல்லையும் சரியாகும். சோம்பு சாப்பிட்டா பசிய நல்லா தூண்டும்.”

“ஆனா... பாட்டி சோம்பு சாப்பிடுறது அவ்வளவு ஸ்டைலா இருக்குமா என்ன?!” பாட்டி பேசிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்து பகடியாகக் கேட்டேன்,
“ஸ்டைலா இருக்கனுமா இல்ல ஆரோக்கியாமா இருக்குறது முக்கியமா?!” என்று கேட்டு புன்னகைத்த பாட்டி இன்னும் சில ஆரோக்கியக் குறிப்புகளைப் பற்றி தெரிவித்தாள்.

“தினசரி உணவுல சோம்பு சேக்குறதுனால குடற்புண்கள் ஆறும். சோம்ப இளம் வறுவலா வறுத்து பொடி செஞ்சு தினமும் ரெண்டுவேள பனங்கற்கண்டு சேத்தோ இல்ல தனியாவோ 1கிராம் சாப்பிட்டு வந்தா மாதவிலக்குல ஏற்படும் வயிற்றுவலி குணமாகும். பெண்ணுக்கு கருப்பை பலப்படும். சோம்ப பொடி செஞ்சு தேனுடன் கலந்து (1கிராம்) சாப்பிட்டா கல்லீரலுக்கு பலம் கெடைக்கும். சோம்பு கசாயம் செஞ்சு குடிச்சு வந்தா வறட்டு இருமல், மூக்குல நீர் வடியுறதெல்லாம் சரியாகும்.”

பாட்டி சொல்லிக்கொண்டே இருக்க, நான் சாப்பிட்ட சோம்பின் சாறு வயிற்றுக்குள் இறங்கி இறங்கி எனக்கு நல்ல பசியைத் தூண்டியிருந்தது. பேசிக்கொண்டே நடந்த நான் அங்கிருந்த பிரபல சிற்றுண்டி கடை ஒன்றைக் காட்டி, அங்கு சிற்றுண்டி ருசிக்கும் என் ஆவலைத் தெரிவித்தேன். ஆரோக்கியமானதா இருந்தா நானும் லைட்டா சாப்பிடுறேன் என பாட்டியும் சம்மதித்தாள்.

“அதான் ஜீரணமாக சோம்பு இருக்கே பாட்டி அப்புறமென்ன நெறய சாப்பிடலாம்” என வேடிக்கைக்காக சொன்னதும், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!' என்ற பழமொழியை நினைவூட்டினாள் பாட்டி!

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1