கோவையில், சமஸ்கிருத மஹா சம்மேளன நிகழ்ச்சியில் ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்கள் பங்கேற்றனர். அதன் தொகுப்பு...

"சமஸ்கிருத மஹா சம்மேளனம்" நிகழ்ச்சியை கடந்த 24, 25 தேதிகளில் சமஸ்கிருத பாரதி டிரஸ்ட் (தக்ஷிண தமிழ்நாடு) கோவையில் ஏற்பாடு செய்திருந்தது. இது சமஸ்கிருத மொழி குறித்த விழிப்புணர்வை உருவாக்கி, மக்களுக்கு அம்மொழியின் மீது ஆர்வத்தை உண்டுசெய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மஹா சம்மேளனத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நம் ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களும் பங்குபெற்றனர். சோலோ பாடல், குழு பாடல், குழு நடனம், மாறுவேடப் போட்டி, ஸ்லோக உச்சாடனை, நாடகம், சொற்பொழிவு, சூழ்நிலை உரையாடல், பேச்சுப் போட்டி, வினாடி வினா என்று நடைபெற்ற பலதரப்பட்ட போட்டிகளில் ஈஷா சம்ஸ்க்ருதியில் இருந்து 52 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் "கர்ணன்" எனும் நாட்டிய நாடகத்தை நம் குழந்தைகள் அரங்கேற்றினர். இதை பார்வையாளர்கள் பெரும் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். இக்குழந்தைகளின் வசன உச்சரிப்பு, நடிப்பு, உடை, அரங்க வடிவமைப்பு என அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை ஈர்த்தது. அதிலும், போர் காட்சிகளை நிழல்யுக்தி கொண்டு அவர்கள் சித்தரித்தது பெரும் ஆரவாரத்தை உண்டுசெய்தது. இந்நாடகத்திற்கான அரங்க அமைப்பு, திரைக்கதை, இயக்கம் என அனைத்தையும் மிகுந்த சிரத்தையோடு நம் குழந்தைகளே செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈஷா சம்ஸ்க்ருதி பற்றி...

ஈஷா சம்ஸ்க்ருதி என்பது, பாரம்பரிய இந்தியக் கலாச்சாரத்தையும், அறிவாற்றலையும் உள்ளடக்கிய குருகுல அமைப்பு. இங்கு யோகா, வேதம், சமஸ்கிருதம், சங்கீத சாஸ்திரம், நாட்டிய சாஸ்திரம் மற்றும் சாஸ்திரக் கல்வி கற்றுத்தரப்படுகிறது. ஒரு குழந்தை, உடலளவிலும் மனதளவிலும் அதன் முழுமையான வளர்ச்சியை அடைவதற்கும், தன் வாழ்வை சமநிலையோடும் நல்லிணக்கத்தோடும் அமைத்துக் கொள்வதற்கும் இந்த பாடத்திட்டம் வழிவகுக்கிறது.

பாரம்பரிய ஹடயோகா, இந்தியப் பாரம்பரியக் கலைகளான பரதநாட்டியம், இந்திய சாஸ்திரிய சங்கீதம், பழமை வாய்ந்த தற்காப்புக் கலையான களரிப்பயட்டு, ஆகியவற்றின் கலவையான இந்தக் கல்விமுறை, குழந்தைகளின் உடல் மற்றும் மனதிற்கு சமநிலையையும் உறுதியையும் தருகிறது. இக்கலைகள் வெறும் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இவற்றை ஆன்மீக செயல்முறைகளாகவே மக்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல, ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும் சமஸ்கிருத மொழியும் கூட இவர்களின் கல்விமுறையில் முக்கிய பங்கை வகிக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.