இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு உதவும் ஈஷா!
ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நிலைகளில் தனது உதவிக்கரத்தை நீட்டிவரும் ஈஷா, நேற்றைய தினம் ஒரு சிறப்பு மருத்துவ நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது! இதுகுறித்து ஒரு சில தகவல்கள் இங்கே!
 
 

ஈஷா அவுட்ரீச் மற்றும் ஆயுஷ் மருத்துவ திட்டம் இணைந்து நடத்திய இரத்த சோகையால் பாதிக்கப்பட்டோருக்கான மருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்றைய தினம் தொண்டாமுத்தூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஈஷா அவுட்ரீச் மருத்துவர் Dr.பரமேஸ்வரி, ஈஷா பிரம்மச்சாரி ஸ்வாமி நளதா, முன்னாள் TANSAC இயக்குனர் Dr.கிருஷ்ணமூர்த்தி மற்றும்   தொண்டாமுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.வெண்ணிலா முத்துமாணிக்கம், வெள்ளிமலைப் பட்டினம் பஞ்சாயத்து தலைவர் திரு.குழந்தை வேலு, இக்கரைப் போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு.சதானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.

Dr.பரமேஸ்வரி அவர்கள் இதுகுறித்து பேசும்போது, “ஈஷா யோகா மைய சுற்றுவட்டாரத்திலுள்ள 13 கிராமங்களில் 3 மாதங்கள் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. வெள்ளருக்கம் பாளையம், தீத்திபாளையம், செம்மேடு, நரசிபுரம், புத்தூர், தேவராயபுரம், ஜாகிர் நாயக்கன்பாளையம், தானிக்கண்டி, மடக்காடு, விராலியூர், சந்தேகவுண்டன்பாளையம், குப்பனூர், இக்கரைப் போளுவாம்பட்டி மற்றும் மாதம்பட்டி ஆகிய கிராமங்களில் இரத்தசோகை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் இரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 90க்கும் மேற்பட்டோர் ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டனர்.

இவர்களின் இரத்தத்தின் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை 4 முதல் 10 வரை மட்டுமே உள்ளது. பொதுவாக இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் சராசரி எண்ணிக்கை 12ஆக இருக்கவேண்டும். அனால், இவர்களுக்கு மிக குறைவாகவே உள்ளன.  இவர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக சித்த மருந்துகள் வழங்குகிறோம். மேலும், அடுத்த 50 நாட்களில் இவர்களுக்கு மீண்டும் இரத்தப் பரிசோதனை செய்யப்படும்.” என்று கூறினார்.

Dr.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேசுகையில், “இரத்தசோகை நோயினால் அதிகமாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் வளரிளம் பெண்கள் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.” என்று கூறினார். இந்நோயினால் உடல்சோர்வு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும் ஏற்படுவதாகவும், இதனால் அடிப்படை ஆரோக்கியம் குறைகிறது என்றும் அவர் கூறினார்; கேழ்வரகு, கறிவேப்பிலை உள்ளிட்ட இரும்புச்சத்துமிக்க உணவு வகைகளை பயன்படுத்துவது இரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்கும் என்று கூறினார்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1