பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள், அறிவோம் வாருங்கள்! -பாகம் 6

இரசாயன பூச்சிக்கொல்லிகளால் மனிதருக்கு ஏற்படும் நோய்கள் குறித்த அபாயத்தை விளக்கும் இந்த பதிவு, எந்தெந்த விதங்களிலெல்லாம் இரசாயன நஞ்சு நம்மை வந்தடைகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது!

பூச்சிக்கொல்லிகளை பூச்சிக்கு மட்டும் அடிப்பதில்லை பயிருக்கும் சேர்த்தே அடிக்கிறோம். கீரைகள், காய்கறிகள் போன்றவற்றில் பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகம், பல வகைகளில் நம் உடலில் சேரும் இப்பூச்சிக்கொல்லி விஷம், மனித உடலை கொல்லக் கூடிய அளவில் இல்லை என்றாலும், இது மரணத்தை ஏற்படுத்தாமல் கொடிய நோய்களை ஏற்படுத்துகிறது. படிப்படியாக உடலில் சேர்ந்து உள் உறுப்புகளை பாதித்து நம்மை நிரந்தர நோயாளியாக்குகிறது.

எண்டோசல்பான் என்ற எமன்

இராசயன பூச்சிக்கொல்லிகள் மனிதனையும், மண்ணையும் பாதிப்பது எப்படி?

கேரளாவில் காசர்கோடு மற்றும் சில பகுதிகளில் 4696 ஹெக்டேரில் கேரள அரசாங்கத்துக்குச் சொந்தமான முந்திரித் தோப்புகளில் 1976 முதல் 2001 வரை ஹெலிகாப்ட்டர் மூலம் அடிக்கப்பட்ட எண்டோசல்பான் பூச்சி மருந்தினால் மனிதர்கள், விலங்குகள் என எந்த பாகுபாடுமின்றி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் ஊனம், தலைபெரியதாக பிறத்தல், கருப்பை பிரச்சினைகள் என 22 சதவீத குழந்தைகள் நிரந்தர ஊனத்துடன் நடைபிணங்களாக உள்ளனர். பலர் கேன்சரால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 4000 க்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

நரம்பு நஞ்சுகளும் அல்சைமர் நோயும்

60 வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது கூடியிருக்கிறது. இதற்குக் காரணம், பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை பாதித்து அதன் மூளையை குழப்பக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள நரம்பு நஞ்சுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதே ஆகும். இந்த நரம்பு நஞ்சுகள் பல்வேறு வகையில் நம் உடலில் கலக்கிறது.

ALL OUT போன்ற நரம்பு நஞ்சுகள் கொசுக்களை விரட்டுவதைவிட நமக்கு ஆஸ்துமாவை அதிகம் ஏற்படுத்துகின்றன. இத்தகைய கொசு விரட்டிகளின் பயன்பாடு சமீபத்தில் மிகவும் அதிகரித்துள்ளதால் சுவாச நோய்கள் அதிகரித்து, சுவாச நோய்களுக்கான மருந்துகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

மண்ணின் மீது பூச்சிக்கொல்லிகளின் விளைவு

மண்ணின் முக்கிய செயல், பொருட்களை மக்க வைத்தலாகும். மண்ணில் மக்கு அதிகம் இருக்கும்போதுதான் பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. மக்க வைக்கும் செயலை மண்ணில் உள்ள நுண் உயிர்கள் செய்கிறது. ஒரு கைப்பிடி மண்ணில் இரண்டரைக் கோடி (2,50,00000) நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்உயிர்களின் எண்ணிக்கையே மண்வளத்திற்கு ஆதாரமாக உள்ளது.

நல்ல வளமான மண்ணில் ஒரு சொட்டு மோனோ குரோட்டோபாஸ் ஒரு முறை விழுந்தால் 10,000 நுண் உயிரிகளை அழிக்கிறது. நாம் எத்தனை முறை மருந்தடிக்கிறோமோ அத்தனை முறை மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகிறது. முக்கியமாக களைக்கொல்லிகளை மண்ணிலேயே நேரடியாக அடிப்பது மண்ணில் உள்ள நுண் உயிர்கள் அழிவிற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இரசாயன விவசாயம் செய்யும் நிலங்களில் தொடர்ச்சியாக மருந்து தெளித்ததன் விளைவாக தற்போது நுண்ணுயிர்களின் எண்ணிக்கை மிகக்குறைந்து ஒரு கைப்பிடி மண்ணில் 2,50,000 நுண்ணுயிர்கள் மட்டுமே உள்ளன.

எஞ்சும் நஞ்சு மற்றும் தங்கும் நஞ்சு

பயிருக்கு பூச்சிமருந்துகளை அடித்தப்பின் பயிரால் எடுத்து கொள்ளப்பட்டு மீதி உள்ள நஞ்சு எஞ்சிய நஞ்சு எனப்படும். இந்த எஞ்சிய நஞ்சு மண்ணில் சென்று தங்குகிறது இது தங்கும் நஞ்சு எனப்படுகிறது. இந்த நஞ்சுக்கள் அனைத்தும் பலவகைகளில் உயிரினங்களை பாதிக்கிறது.

மருந்து தெளித்து ஐந்து வருடங்கள் வரை பூச்சிக்கொல்லிகள் அழிவதில்லை. அவை அப்படியே நிலத்தில் தங்கியுள்ளது. மூன்று வருடங்கள் கழித்துதான் பூச்சிக்கொல்லி சிறிது சிறிதாக சிதையத் தொடங்குகிறது.

உதாரணமாக Monochrotophose அல்லது ஒரு பூச்சி மருந்தை பயிருக்குத் தெளிக்கும்போது அந்த நஞ்சு 50 சதவீதம் வரை வைக்கோலில் தங்குகிறது. வைக்கோலை சாப்பிடும் மாட்டின் ஈரலிலும், கொழுப்பிலும் படிகிறது, பின்னர் பாலிலும் அந்த நஞ்சு வெளியேறுகிறது, அந்தப் பாலையே நாம் பருகுகிறோம்.

சந்தைக்கு வரும் காய்கறிகளில் சிலவகை காய்கறிகளுக்கு அறுவடைக்கு முதல் நாள்தான் பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. இவ்வாறு பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளை சந்தைக்கு அனுப்புவதால், பூச்சி மருந்துகள் முழுமையாக அப்படியே காய்கறிகளில் உள்ளது. கீரை வகைகளுக்கும் இவ்வாறு செய்யப்படுகிறது.

காலிஃப்ளவர் மற்றும் முட்டைகோஸ் போன்றவை பூச்சி மருந்துக் கரைசலில் அமிழ்த்தி எடுக்கப்படுகிறது. திராட்சையை பல்வேறு பூஞ்சன நோய்கள் தாக்குவதால், திராட்சை பூக்கள், பிஞ்சுகள் மற்றும் கொத்துக்கள் என எல்லா பருவத்திலும் மாலத்தியான், எண்டோசல்பான், மோனோகுரோட்டோபாஸ் சேர்த்து கலக்கப்பட்ட பூச்சிக்கொல்லிக் கரைசலில் அமிழ்த்தி எடுக்கப்படுகிறது.

ஆர்கானிக் மருந்துகளிலும் பூச்சிக்கொல்லிகள்

ஆர்கானிக் உரம் என்றும், உயிர் உரம் என்றும் கடைகளில் கிடைக்கும் மருந்துகள் எதுவும் இந்திய அரசின் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுவதில்லை. ஏனெனில் அவை பதிவு செய்யப்படாத மருந்துப் பொருட்கள். எனவே அவற்றை பரிசோதிப்பதற்கான செயல்முறைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உயிர் உரங்கள் என்ற பெயரில் இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.


பூச்சிகளை தொடர்ந்து கவனிப்போம்...