மனிதன் இந்த பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் படைப்புகளும் மனிதனுக்காக மட்டுமே படைக்கப்பட்டுள்ளது என நினைத்துக்கொண்டதன் விளைவு, இன்று இயற்கை பலவிதங்களில் சேதமடைந்துள்ளது. மண் வளமும் நீர் வளமும் பெரிதும் பாதிக்கப்பட்டு பலவித கொடிய நோய்களுக்கு மனிதன் ஆளாகி வருகிறான். அதிக மகசூல் ஈட்ட வேண்டுமென்ற நோக்கில் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து மண்ணை மலடாக்கி விட்டதோடு, நன்மை செய்யும் பூச்சி இனங்கள் பலவற்றையும் வயல்வெளிகளிலிருந்து காலிசெய்து தனக்குத்தானே உலைவைத்துக் கொள்கின்றனர் விவசாயிகள்.

இந்த உலகில் வாழ்வதற்கு அனைத்து ஜீவராசிகளுக்குமே உரிமை உள்ளது. வள்ளுவர் கூறும்போது, ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனக் குறிப்பிடுகிறார். உணவிற்காக ஒரு உயிரைக் கொன்று சாப்பிடும்போது கூட அதற்காக நன்றி சொல்லிவிட்டு உண்ணும் கலாச்சாரம் நம்முடையது. ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு நாம் இன்று இரசாயன நஞ்சினால் வயல்வெளிகளில் நிறைந்துள்ள பூச்சிகளைக் கொன்று குவிக்கிறோம்.

அதென்ன நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகள்?!

பூச்சிகள் நமது நண்பர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும், பூச்சிகள் நமக்கு நிச்சயமாக எதிரியல்ல! பூச்சிகளில் நல்லது என்றோ, கெட்டது என்றோ ஏதும் இல்லை; அவை அவற்றின் இயல்புப்படி வாழ்கிறன. விவசாயம் என்று வரும்போது நமது புரிதலுக்காக பூச்சிகளை நல்லது என்றும் கெட்டது என்றும் பிரிக்கிறோம்.

 

பூச்சி இனங்கள் இயற்கை விவசாயத்திற்கு எவ்வளவு முக்கியம்?, puchi inangal iyarkkai vivasayathirkku evaluvu mukkiyam?

பூச்சி இனங்கள் இயற்கை விவசாயத்திற்கு எவ்வளவு முக்கியம்?, puchi inangal iyarkkai vivasayathirkku evaluvu mukkiyam?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நன்மை செய்யும் பூச்சிகள் பற்றிய புரிதல்

விலங்குகளில் எப்படி சிங்கம் ஒரு மானை அடித்து உண்கிறதோ அவ்வாறே சில அசைவப் பூச்சிகள் மற்ற பூச்சிகளை பிடித்து உண்கிறது. இப்படிப்பட்ட அசைவப் பூச்சிகள் விவசாயிகளுக்கு நண்பனாக செயல்படுவதால் அவை நன்மை செய்யும் பூச்சிகள் என்று கூறப்படுகிறது. இவை பயிர்களைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளை உண்கின்றன. இப்படியான பூச்சிகள் சிலவற்றை உதாரணத்திற்கு பார்க்கலாம்.

பொறிவண்டு

அசுவினியை அழிப்பதில் பொறி வண்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை விவசாயம் செய்யப்படும் பண்ணைகளில் பொறிவண்டுகளை சாதாரணமாகக் காணமுடியும்.

தட்டான் (தும்பி)

தும்பியும் பூச்சிகளை தின்றே உயிர் வாழ்கிறது, தண்ணீர் உள்ள நெல்வயலில் தும்பிகள் முட்டையிட்டுகின்றன, பின் அதில் வளரும் இளம் புழுக்கள், தண்ணீரில் உள்ள பூச்சி புழுக்களை உண்டு வளர்ந்து கூட்டு புழுக்களாக மாறி நெற்பயிரின் அடிப்பாகத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கும். வளர்ந்த தும்பிகள் பயிரில் உள்ள பூச்சிகளைப் பிடித்து தின்னும்.

சிலந்திகள்

சிலந்திகள் வயல்வெளிகள், தோட்டங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. ஒரு சில சிலந்திகள் வலை கட்டாமலேயே நேரடியாக பூச்சிகளைப் பிடித்துத் தின்னக்கூடியவை. நன்மை செய்யும் பூச்சிகளில் சிலந்திகள் மிகவும் முக்கியமானவை.

பொதுவாக பூச்சிகள் தாக்கினால் இழப்பு மட்டும் ஏற்படும் என்பதல்ல, பயிர்களுக்கு நன்மையும் ஏற்படுகிறது. உதாரணமாக குருத்துப்பூச்சி நெற்பயிரை தாக்கும்போது நடுக்குருத்து காய்ந்து விடும் ஆனால் அதிகமான பக்கக் கிளைகள் வெடிக்கும். இதனால் நிறைய தூர்கட்டுகிறது. வயலில் களப்பயிற்சி செய்யும்போது புதிதான பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம்.

இதனால் பூச்சிகளை எப்படி மேலாண்மை செய்வது என்ற புரிதல் எற்படுகிறது.

பூச்சிகளின் மீது பூச்சிக்கொல்லிகள் மகரந்தச் சேர்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நஞ்சுகளால் தேனீக்களும் பாதிக்கப்படுகிறது, தேனீ அது செல்லும் பாதையை மறந்து விடுகிறது. தேன் கூட்டிற்கு அடையாளம் கண்டு செல்ல முடியாமல் வழிமாறிச் சென்று விடுகின்றன. தேனும் சேகரிப்பதில்லை. அயல் மகரந்த சேர்க்கைக்கு பூச்சிகள் மிக பெரிய பங்களிப்பை செய்கிறது. தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் மற்றும் சில வண்டுகள் அவற்றுள் மிக முக்கிய பங்குவகிக்கிறது. ஒரு மலரில் தேனைப் பருகும்போது மகரந்தங்களை அதன் கால்மேல் வைத்திருக்கும் பூச்சிகள் அடுத்தடுத்த செடிகளுக்கு செல்லும்போது சேகரித்த மகரந்தங்களை உதிர்க்கிறது. இதன் மூலம் அயல் மரந்தச் சேர்க்கை நடைபெற்று பூக்களில் இருந்து காய்கள் காய்க்கின்றன. பெரும்பாலான காய்கறிப் பயிர்களில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற்றே காய்கள் காய்க்கின்றன.

மகரந்த சேர்க்கை நடைபெறவில்லை என்றால் பூக்கள் காய்க்காமல் அப்படியே உதிர்ந்து விடும். பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது இத்தகைய நன்மை செய்யும் பூச்சிகளும் அதிகமாக பாதிப்படைவதால் மகரந்தச் சேர்க்கைக்கு தேவையான பூச்சிகள் இருப்பதில்லை.

<strong>ஈஷா விவசாய இயக்கம்</strong>

ஈஷா பசுமைக் கரங்களின் அங்கமாக ஈஷா விவசாய இயக்கம் தற்போது இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண் முறையை முன்னெடுக்கிறது. இந்த இயக்கத்தின் சார்பில் ‘பூச்சிகளை கவனிங்க’ என்ற சிறப்புப் பயிற்சி கடந்த டிசம்பரில் நடைபெற்றது.

பூச்சியியல் வல்லுநர் திரு."பூச்சி" செல்வம் அவர்களால் இப்பயிற்சி நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதிலுமிருந்து ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இவர்களோடு இயற்கை ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முதல் கட்டமாக நடந்துள்ள இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் இத்தகைய களப்பயிற்சிகள் நடத்தப்படும். இயற்கை விவசாயம் குறித்து மேலும் தகவல் பெறவும், ஈஷா பசுமைக் கரங்களின் நர்சரியிலிருந்து மரக்கன்றுகளைப் பெறுவதற்கும் 94425 90062 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.