நவம்பர் மாதம் 4ம் தேதி, திருவனந்தபுரத்திலுள்ள பூஜப்புரா மத்திய சிறையின் கைதிகளுக்கு ஈஷா யோகா மையம் தன் முதல் உபயோகா பயிற்சியை அளித்தது. அதைப் பற்றி ஒரு தன்னார்வத் தொண்டரின் பகிர்வு...

மத்திய சிறைச்சாலை - வெள்ளை சுண்ணாம்பு பூசிய பதினைந்து அடிக்கும் மேலே உயர்ந்த சுவர்கள் எங்களை பயமுறுத்தியது. முன்பின் அங்கு சென்றதில்லை என்பதால், ஒருவித பயத்தோடு நாங்கள் அந்தக் குறுகிய வாயிற்படியில் தலை குனிந்து உள்ளே நுழைந்தோம். உள்ளே பரோலில் வெளியே சென்றிருந்த சிலர், திரும்ப உள்ளே அனுமதிக்கப்பட, ரெஜிஸ்டரில் தத்தம் எண்களை அவர்கள் எழுதிக்கொண்டு இருந்தார்கள். எண்கள் மட்டும்தான்... பெயர்கள் இல்லை. இவர்கள் தம் சுதந்திரத்தை மட்டும் இழக்கவில்லை, இவ்விடத்திற்குள் தங்கள் அடையாளத்தையும் சேர்த்து அவர்கள் இழக்கிறார்கள் என்ற உணர்வு என்னை உலுக்கியது.

நம் தவறுகளை உணர்ந்து, நமது சரியான மதிப்பை உணர்ந்தோமானால், வாழ்வில் உயர வழி தெரியும்.

சிறை அதிகாரி ஒரு எண்ணைக் குறிப்பிட்டு அழைக்க (பெயர்தான் இல்லையே!!), எங்களை அந்த நபர் உள்ளே அழைத்துச் சென்றார். பிறகு அங்கிருந்து ஒரு காவல் அதிகாரி எங்களை சிறைகள் உள்ள கட்டிடத்திற்குள் அழைத்துச்சென்றார். அதிதுப்புரவான ஒரு முற்றத்தை சுற்றி நீண்ட தாழ்வாரம்; அதன் மூன்று பக்கங்களிலும் தாழ்ப்பாளுடன் கூடிய இரும்பு கிராதிகள் கொண்ட சிற்சிறு அறைகள் எங்களை மிரட்டியது.

சிறையின் உட்பகுதிக்கு செல்லுமுன் சுமார் ஐம்பது அன்பர்களைத் தாண்டியிருப்போம். எல்லோரும் சுத்தமான வெள்ளை வேட்டி, சட்டையுடன், கருப்பு நிற காலணிகள் அணிந்திருந்தார்கள். அன்றைய வேலை முடித்து, குளித்து, சுத்தம் செய்துகொண்டு திரும்ப கூண்டுக்குள் செல்லுமுன் அதிகாரிகளிடம் தம் எண்களை ரெஜிஸ்டர் செய்வதிலேயே அவர்கள் மும்முரமாக இருந்தார்கள்... அவ்விடத்தில் புதிதாகத் தெரிந்த எங்களைப் பற்றி அறிய யாருக்கும் சிறிதளவும் ஆர்வமோ, குறுகுறுப்போ இருக்கவில்லை. சூரியன் சாயும் முன்னே எதோ எழுதவோ படிக்கவோ செய்யலாமே என்பது போல் கம்பிகளுக்குப் பின் செல்ல முனைந்தார்கள்.

அங்குள்ள காவலர்களுக்கும் கைதிகளுக்குமிடையே நல்ல இணக்கமான, மரியாதையான உறவு தெரிந்தது. நாங்கள் சென்ற பொழுது, யோகப் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்திருந்த 20 முதல் 55 வயது வரையிலான 32 அன்பர்கள் வகுப்பிடத்தில் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் எல்லோருமே படித்தவர்கள், அதில் சிலருக்கு ஆங்கிலமும் புரியும் என்று சொன்னார்கள். பெரும்பாலானோர் ஆயுள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

பங்கேற்பவர்கள் நிலைகொள்ளாது தவிப்பதுபோல் இருந்ததால், தாமதிக்காது விளையாட்டைத் துவங்கினோம். உடனே காவலர்கள் கதவு, கம்பி இல்லாத ஜன்னல் போன்ற இடங்களில் காவலுக்காக விறைப்பாக விரிந்து நிற்கத் துவங்கினார்கள். இதைப் பார்த்த நாங்களே சிறிது படபடப்புடன்தான் இருந்தோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா யோகா ஆசிரியர் உற்சாகத்துடன் ஆரம்பிக்க, விளையாட்டு சூடு பிடித்தது. அப்போது நாங்களும் சிறிது ஆசுவாசமானோம் என்றால் மிகையாகாது. சில நொடிகளில் அவர்கள் விளையாட்டை ரசித்து, கைகொட்டி, ஆரவாரமாக, ஒருவரையொருவர் ஊக்குவித்து விளையாடினார்கள். விறைப்பாக நின்றிருந்த காவலாளர்கள் கூட சிறிது விறைப்பைத் தளர்த்திக்கொண்டார்கள். விளையாட்டும் முடிந்தது, சிறப்பு விருந்தினர் வந்தவுடன், கட்டளைகள் ஏதுமின்றி அவர்கள் கைகளை கட்டிக்கொண்டு, நேர்த்தியாக வரிசையில் வந்து நின்றார்கள்.

சிறைச்சாலை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் குமார், இந்திய தொழிலக கூட்டமைப்பின் பெண்கள் பிரிவிற்கான தலைவி ரீனா விவேகானந்தன், கோன்ஹில் டெக்னோபார்க்கின் செயலாளர் திரு.லோகநாத பாஹ்ரா மற்றும் ஈஷா யோக மையத்தின் சார்பாக மா கற்ப்பூரி ஆகியோர் விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர். இவர்களோடு சேர்த்து, சிறைக்கண்காணிப்பாளர், பங்கேற்பாளர்களின் சார்பாக ஒரு கைதியையும் அழைத்து குத்து விளக்கை ஏற்றச் சொன்னது மிக நெகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்தது. சத்குரு அங்கு இருப்பதாகவும் அவரின் இருப்பை எல்லோரும் உபயோகப்படுதிக்கொள்ள வேண்டும் என்றும் மா கர்பூரி தனக்குத் தெரிந்த மலையாளத்தில் கேட்டுக் கொண்டார்.

அதன்பின் விளையாட்டு நேர அனுபவம் பற்றி ஈஷா ஆசிரியர் கேட்க,
“சிறு குழந்தையின் அப்பாவித்தனத்தோடு இருப்பதாய் உணர்ந்தேன்”
“பள்ளியில் என் தோழர்களுடன் விளையாடுவதைப் போல் இருந்தது.”
“சில நொடிகளுக்கு நான் ஜெயிலில் இருக்கிறேன் என்பதையே நான் மறந்துவிட்டேன்” என்று மனம்விட்டு அவர்கள் பகிர்ந்ததைக் கேட்கும்போது எனக்கு பெருமிதமாய் இருந்தது.

“விளையாடும் போது உங்களை மறந்து, முழுமையாய், ஆனந்தமாய் விளையாடியதாய் கூறினீர்கள். எப்போது ஒரு விஷயத்தில் முழு தீவிரத்துடன் நீங்கள் ஈடுபடுகிறீர்களோ அப்போது அதிக உற்சாகத்துடனும், விழிப்புணர்வுடனும் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். நாம் இப்போது செய்யப்போகும் பயிற்சியிலும் இதேபோல் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளுங்கள்" என்று ஆசிரியர் கேட்டுக்கொள்ள, அவர்கள் சிரத்தையுடன் கேட்டுக் கொண்டனர். சிலர் முன்னேற்பாடாக பத்மாசனத்திலும், வஜ்ராசனத்திலும் அமர்ந்து கொண்டார்கள்.

பயிற்சியின் நடுவில் ஒரு காவலாளர் வந்து, 'எல்லோரும் இருக்கிறார்களா?' என்ற எண்ணிக்கை எடுத்துப்போனார். நான் ஒரு மூலையில் அமர்ந்து, பயிற்சி நடப்பதை பார்த்துகொண்டிருந்தேன். பயிற்சி நடந்த மூன்று மணி நேரமும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் பயிற்சியில் உன்னிப்பாக இருந்தார்கள்.

அந்த இடத்துக்கே உரித்தான ஆழ்ந்த சோகத்தையும், முரட்டுத்தனத்தையும் அந்த சூழ்நிலையில் நான் உணர்ந்தாலும், அதையும் தாண்டி இந்த யோகவகுப்பு அங்கு ஒரு மாற்றத்தை உண்டு செய்தது. இந்த வகுப்பு முடிந்து, அங்கு ‘அலை அலை’ பாடல் தொடங்கியதும் மெதுவாக ஆசிரியர் ஆடத்துவங்க, நாங்களும் அவரோடு சேர்ந்து ஆடுவதைக் கண்டு எல்லோரும் ஆனந்தமாய், உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். நடுவயதான அன்பர் ஒருவர் மட்டும் கண்களில் தாரை தரையாக கண்ணீர் வழிய, பிரமித்து நின்றார்.

பயிற்சி முடிவடைந்தவுடன் ஒரு அன்பர் என்னிடம் வந்து “நான் உங்கள் பாதங்களைத் தொடலாமா?” என்றார். நான் பதில் சொல்லுமுன் அவர் என் கால்களில் விழுந்தார். அவரை அணைத்துக் கொள்ளத்தான் என்னால் முடிந்தது. கண்களில் நீர் நிரம்ப அவர் ஆசிரமத்தை பற்றி விசாரித்தார். இவ்வகுப்பை பார்த்திருந்த காவலதிகாரி, 'மற்ற அதிகாரிகளுக்கும் இந்த பயிற்சி தர முடியுமா?' என்று விசாரித்தார்.

நாங்கள் ஹாலை விட்டு வெளியில் வரும்போது மழை கொட்டிக்கொண்டு இருந்தது. பயற்சியில் முழுமையாய் ஈடுபட்டு இருந்ததால் வெளியில் என்ன நடக்கிறது என்ற உணர்வே எங்களுக்கு இருக்கவில்லை. மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பயிற்சி ஆரம்பிக்கும்போது விழிப்பாக, எச்சரிக்கையோடு எல்லாப் பாதைகளையும் மறித்து 15 காவலர்கள் விறைப்பாக நின்றிருந்தார்கள். ஆனால் பயுற்சி முடிவடையும் போது, விறைப்பும், எச்சரிக்கையும் காணாமற் போய் அவர்களும் சாதாரணமாக இருந்தார்கள்.

உள்ளே நுழைந்தபோது, 'சிறை' என்று என்னிடம் இருந்த பயம் காணாமற் போயிருந்தது. அந்த இடம் சிறையென்றும், உள்ளே இருந்தவர்கள் கைதிகள் என்றும் ஒதுக்கிவைத்துப் பார்த்த என் மனோபாவம் மாறியிருந்தது. பல இடங்களில் உபயோகா பயிற்சியளித்தோம். அதுபோல் இதுவும் ஒரு இடம் என்றே உணர்ந்தோம். அவர்கள் நடந்துகொண்ட விதமும், வகுப்பில் கலந்துகொண்டு உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் வடித்ததையும் பார்த்த எங்களால் அவர்களை வெறுக்கவோ, ஒதுக்கவோ முடியவில்லை... அந்நேரத்தில் அவர்களை அணைக்க மட்டுமே முடிந்தது. அவர்கள் எதை செய்துவிட்டு உள்ளே வந்திருந்தாலும், அவர்களும் மனிதர்கள் தான் என்ற ஒரு எண்ணம் வலுவாய் உள்ளே பிறந்தது.

அப்போதுதான், திரு.பாஹ்ரா அவருடைய துவக்க உரையில் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்தது. “நாம் எல்லோருமே கைதிகள்தான் - வாழ்கையின் கைதிகள், எண்ணங்களில் கட்டுண்ட கைதிகள், பொருள் ஈர்ப்புகளால் கட்டுண்டு இருக்கும் கைதிகள், ஆசாபாசங்களில் கட்டுண்டு இருக்கும் கைதிகள், ஏக்கத்தின் கைதிகள் - எல்லோருமே சூழ்நிலையின் கைதிகள் தானே?” என்று.

அவர் மிகச்சரியாகத்தான் சொன்னார். நாமும் ஒருவகையில் கைதிகள் தான்... என்ன! உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சூழ்நிலைக்கு அடிபணிந்து, வெளியில் ஒரு வேஷமும், உள்ளே வேறாகவும் இருக்கும் நாம் அதை உணரக்கூட இல்லை. கௌதம புத்தர் சொன்னதுபோல் - “நம் தவறுகளை உணர்ந்து, நமது சரியான மதிப்பை உணர்ந்தோமானால், வாழ்வில் உயர வழி தெரியும்”.

குறிப்பு: உலக யோகா தினத்திற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட உப-யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, வெற்றி, அன்பு, ஆனந்தம், உள்நிலை அறிதல் என்ற தலைப்புகளில் உள்ளன.

இந்த உப-யோகப் பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: உப-யோகா