'ஈவன்ட் மேனேஜ்மென்ட்' எனப்படும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தை நடத்தி வருபவரான திருமதி.கயல்விழி லட்சுமணன் தன் உணவு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்...

திருமதி.கயல்விழி லட்சுமணன்

"சாப்பாட்டு அனுபவமா, எனக்கு ரொம்பப் பிடிச்ச சமாச்சாரத்தைத் தான் கேட்கிறீர்கள். சாப்பாடு, சாப்பிடுவது இதெல்லாம் ரொம்ப இனிப்பான வார்த்தைகள் எனக்கு. வட இந்திய உணவுகள் எனக்கு ரொம்பவுமே பிடித்தமானதாக இருந்தது ஒரு காலத்தில்.

'இருந்தது' என இறந்தகாலத்தில் ஏன் சொல்கிறேன் எனக் கேட்கிறீர்களா? அந்த சுவையான சம்பவத்தைக் கேளுங்கள்...

எட்டு வருஷத்துக்கு முன்பு நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது டெல்லிக்கு எல்லோரும் சுற்றுலா போனோம். இரண்டு வார டூர் அது. முதல் வாரம் சப்பாத்தி, பரோட்டா, டால் அது இது என நன்றாக சாப்பிட்டோம். ஒரு வாரம் தான். அப்புறம் சலித்துப் போச்சு.

எங்கேயாவது நம்ப ஊர் இட்லி, 'மெத்'தென்ற தோசை, தயிர் சாதம் கொஞ்சமாவது கிடைக்காதா என ஏங்க ஆரம்பித்து விட்டோம். இரண்டு நாளில் ஊருக்குக் கிளம்பணும். ஷாப்பிங் போய் எல்லா காசிற்கும் வாங்கித் தீர்த்த பிறகு எங்கள் கண்ணில்பட்டது 'சரவணபவன்' அடடா! முதலிலேயே பார்த்திருந்தால் இங்கே வந்து ஒரு கை பார்த்திருக்கலாமே என ரொம்ப வருத்தமாகிவிட்டது. என்ன செய்ய? வெளியிலிருந்தே 'சரவணபவன்' என்ற அந்த போர்டை ஆசை தீரப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

அன்றிரவு எல்லோரும் தூங்கப் போகுமுன், எங்களை அழைத்து வந்திருந்த பேராசிரியை எங்கள் அறையினுள் நுழைந்தார். "ஹலோ கேர்ள்ஸ்! நான் ஊரிலிருந்து கிளம்பறப்ப என்னோட கணவர் ஐந்தாயிரம் ரூபாய்க்கு 'கிஃப்ட் செக்' கொடுத்து, உன்னோட ஸ்டூடண்ட்ஸுக்கு ஏதாவது வாங்கிக் கொடுன்னு சொன்னார். ஆமா, உங்களுக்கு என்ன வேணும்? நாளைக்கு வாங்கலாம்..." என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவ்வளவுதான், நாங்களெல்லாம் 'ஓ' வென்று கத்திவிட்டோம். "மேடம், எங்களுக்கு வேற ஒண்ணுமே வேண்டாம். நம்ப ஊர் இட்லி, தோசை, பொங்கல் சாப்பிடறோம்..." என்றோம். அவருக்கு ஒரே சிரிப்பு.

மறுநாள் போய் சரவணபவனை கலக்கிவிட்டோம். ஐந்தாயிரம் ரூபாய்க்குத் தின்றே தீர்த்தோம்... ஒரே கொண்டாட்டம்தான். அதற்குப் பிறகு வட இந்திய உணவின் மேலிருந்த மோகம் தீர்ந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கிடைக்கும்போது சாப்பிடுவோம்.

என்னதான் இருந்தாலும் நம்மூரு சாப்பாடு போலாகுமா? அதனால் ஊருக்கு வந்த பிறகு அம்மாவை வத்தக்குழம்பு, சாம்பார் என தினுசு தினுசாக செய்யச் சொல்லி சாப்பிட்டேன். சூப்பராக சாஃப்டாக ராகி தோசை சாப்பிட்டேன். நமக்குப் பழக்கமான உணவு என்று வரும்போது எவ்வளவு சாப்பிட்டாலும் சலிப்பு வருவதில்லை. காரணம் அது நம்மோடு இணைந்து இருக்கிறது.

நான் 'சான் ஈவன்ட் & மீடியா' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். என் பாட்டி சாந்தகுமாரி, தாத்தா அன்பழகன் ஆகியோரின் பெயர்களை இணைத்து 'சான்' என வைத்தேன். அதிலே பல நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுப்பேன். சமீபத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு என்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தினோம்.

நிறைய குழந்தைகள் ஏன் பெரியவர்கள் கூட காலை உணவைத் தவிர்த்து விடுவார்கள். குழந்தைகள் வெறும் பாலைக் குடித்துவிட்டு ஓடிவிடுவார்கள். பெரியவர்கள் காப்பியைக் குடித்தே காலம் தள்ளுவார்கள்.

ஆனால் உடலின் உள்ளுறுப்புக்கள் முழு சக்தியுடன் இயங்கும் நேரம் காலை நேரம். அந்த சமயத்திலே சத்தான உணவை உண்டால் அது ஜீரணமாகி, உடலில் சக்தியாக சேரும். இரவில் குறைவாக சாப்பிட வேண்டும். ஆனால் நாமோ இரவில் நேரங்கழித்து பரோட்டா, குருமா என 'ஹெவி'யாக சாப்பிடுகிறோம்.

இவையெல்லாம் தவறு என்பதை எடுத்துச் சொன்னோம். உணவை எப்போது, எப்படி சாப்பிட வேண்டுமோ அப்படி சாப்பிட்டால்தான் அது உடலுக்கும், மனதுக்கும் நல்லது. இல்லையென்றால் சக்தியைக் கொடுக்க வேண்டிய உணவே நோயாக மாறிவிடும்...

பரங்கிக்காய் வத்தக் குழம்பு

தேவையான பொருட்கள்:

நறுக்கிய பரங்கிக்காய் - அரை கப்
கெட்டியாக கரைத்த புளி - ஒரு கப்
வெந்தயம் - ஒன்றரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - இரண்டு
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியாதூள் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம், உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • இத்துடன் நறுக்கிய பரங்கிக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பிறகு புளிக்கரைசல், உப்பு, மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து பச்சை வாசனை போனதும் சிறிது தண்ணீர் விட்டு மீண்டும் கெட்டியானதும் இறக்கி விடவும்.
  • பிறகு வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நுணுக்கி சேர்த்தால் பிரமாதமான வத்தக்குழம்பு தயார்.

பின் குறிப்பு: இறக்கும் முன் சிறிது வெல்லத்தைச் சேர்த்தால் ருசி இரட்டிப்பாகும்.

கேழ்வரகு தோசை

கேழ்வரகு தோசை, Kezhvaragu dosai

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - ஒரு கப்
உளுந்து - கால் கப்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • உளுந்தை முக்கால் மணிநேரம் ஊறவைத்து மைய அரைக்கவும்.
  • இத்துடன் கேழ்வரகுமாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
  • இதை ஐந்து மணிநேரம் புளிக்க வைக்கவும்.
  • புளித்த மாவை கனமான தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு மூடி வேகவைத்தால், பட்டுப்போன்ற ருசியான தோசை தயார்.

பின்குறிப்பு: ஈஷா ருசி கேழ்வரகு தோசை மாவை பயன்படுத்தியும் செய்யலாம். ருசி அபாரமாக இருக்கும்.