உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துக் கொள்ள விளையாட்டு மிகச் சிறந்த வழி. இந்த வாய்ப்பினை கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும் வழங்கும் வகையில் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம், கோபிச் செட்டிப்பாளையத்தில் கிராமிய விளையாட்டுத் திருவிழாவை நடத்தியது. அதன் சுவாரஸ்யமான பகுதிகள் இங்கே…

கிராமப்புற மக்களின் உடல், உள்ளம், பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பாட்டை எடுத்து வந்து, அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை எடுத்து வருவதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கிராமப் புத்துணர்வு இயக்கம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால் உற்சாகமான உடலோ மனமோ இல்லாதவர்களை வைத்து என்ன மறுமலர்ச்சியைக் கொண்டு வந்து விட முடியும்? உற்சாகத்திற்குக் கொண்டாட்டம் வேண்டும், கொண்டாட்டத்திற்கு விளையாட்டு ஒரு நல்ல வழி. இதை அறிந்த புத்துணர்வு இயக்கம் முதன் முதலாக கோபிச் செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய நகரங்களின் சுற்றுப்புறக் கிராமங்களில் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தியது. ஆண்களுக்கு கைப்பந்து, பெண்களுக்கு எறிபந்து.

வெகுவிரைவில், இந்த கிராமப்புற மக்கள், விளையாட்டுக்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். ஏனெனில் உற்சாகமாக விளையாட ஆரம்பித்த சில நாட்களிலேயே அவர்களின் உடல், மனம் மற்றும் உணர்வு என்று அனைத்திலும் வியக்கத்தகு மாற்றம். வயது வித்தியாசம், ஜாதி வித்தியாசம் என்று ஒவ்வொரு வித்தியாசமும் மெதுவாகக் கரைய ஆரம்பித்தது. பிறகு இந்த விளையாட்டுக்களை மேலும் உற்சாகப்படுத்தவும் நெறிப்படுத்தவும் கிராமப் புத்துணர்வு இயக்கக் கோப்பையை முன்னிறுத்தி கிராமிய விளையாட்டுத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திருவிழாவுக்கு இது ஒன்பதாம் ஆண்டு.

இந்த வருடம் கிராமிய விளையாட்டுத் திருவிழாவை கோபிச் செட்டிப்பாளையம் ஈஷா யோகா மையம் மற்றும் அண்ணா நகர் சஞ்சீவி இளைஞர் மன்றம் இணைந்து கோபிச் செட்டிப்பாளையத்தில் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடத்தின. இந்த வருடப் போட்டிகளில் கோபி, சத்தி, பெருந்துறை, அந்தியூர் ஆகிய நான்கு ஊர்களைச் சுற்றியிருக்கும் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் பங்கேற்றன. மொத்தம் 1600 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற ஆண்கள் கைப்பந்து அணிகள் ஈஷா ப்ரொபஷனல், ஈஷா ரூரல் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அங்கு விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகள் மட்டுமின்றி, பங்கேற்பாளர்களுக்காகவும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்களுக்கான உள்ளே வெளியே விளையாட்டுப் போட்டி, பெண்களுக்கு பாஸிங் பால் போட்டி, குழந்தைகளுக்கு புதையல் சேகரித்தல் போட்டி போன்ற போட்டிகள் மிகுந்த ஆரவாரத்துடன் உற்சாகமாக நடைபெற்றன. மேலும் உரியடித்தல், கயிறிழுத்தல் போன்ற சமூக விளையாட்டுகளோடு, ஒரு மணி நேரம் நடந்த சிலம்பாட்டப் போட்டியும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

பார்வையாளர்களுக்கான போட்டிகளில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும், இளைஞர், முதியவர் என்ற பாகுபாடு இல்லாமல் ஆர்வமாகப் பங்கேற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. ஒரு போட்டியில் பாட்டியும், பேத்தியும் ஒரே அணிக்காக விளையாடினார்கள்!

ஜூன் 24ம் தேதி அன்று நடந்த ஈஷா ப்ரெபஷனல் அணிகளுக்கான ஆண்கள் கைப்பந்து இறுதிப் போட்டியில் சாவக்கட்டுப்பாளையம் கிராம அணி தொடர்ந்து 2வது முறையாக வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது. இப்போட்டியில் தீனம்பாளையம் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ஈஷா ரூரல் அணிகளுக்கான ஆண்கள் கைப்பந்து இறுதிப் போட்டியில் குருமந்தூர் கிராம அணி முதலிடத்தையும், சிவன்மலை கிராம அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. பெண்களுக்கான எறிபந்து இறுதிப் போட்டியில் முருகன் புதூர் அணி தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்றது. இப்பிரிவில் கொளப்பளூர் கிராம அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பணப் பரிசுகளும், சுழற் கேடயங்களும் வழங்கப்பட்டன.

ஒரு பந்து ஒரு சமுதாயத்தையே எப்படி மாற்ற முடியும் என்பதற்கு இந்த போட்டிகள் பலமான சாட்சியங்களாக இருக்கின்றன!