நிலையான நீர் பயன்பாட்டு முறைகள்- இந்திய வரலாற்றில் ஒரு பார்வை

இந்தியாவில் பழங்காலம் முதல் இருந்துவந்த திறம் வாய்ந்த நீர்ப்பாசன முறைகள் மற்றும் நமது நீராதாரங்களை செம்மையாகப் பாதுகாத்த பலவித தொழிற்நுட்பங்கள் இந்தப் பதிவில் விளக்கப்படுகின்றன. இது "நதிகளை மீட்போம்" இயக்கம் பரிந்துரைக்கும் சட்ட வரைவு அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டது.
நிலையான நீர் பயன்பாட்டு முறைகள்- இந்திய வரலாற்றில் ஒரு பார்வை, nilaiyana neer payanpattu muraigal india varalatril oru parvai
 

"நதிகளை மீட்போம்" பேரணியின் ஒருமாத கால பயணத்திற்கு பிறகு சத்குரு அவர்கள் "நதிகளை மீட்போம்" இயக்கம் பரிந்துரைக்கும் சட்ட வரைவு அறிக்கையை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். இந்த முயற்சியானது இந்திய நதிகளை மீட்பதில் எந்த விதத்தில் செயல்படும் என்பதை அறிந்துகொள்ள விருப்பமா? அந்த அறிக்கையிலுள்ள சில பகுதிகளை தொகுத்து இங்கே உங்களுக்காக வழங்குகிறோம். பகுதி 4ல் இந்தியாவில் பழங்காலம் முதல் இருந்துவந்த திறம் வாய்ந்த நீர்ப்பாசன முறைகள் மற்றும் நமது நீராதாரங்களை செம்மையாகப் பாதுகாத்த பலவித தொழிற்நுட்பங்கள் பற்றி விளக்கப்படுகின்றன.

ஆறுகளை வணங்கும் இந்தியாவின் ஆன்மீக வழிபாட்டுமுறையானது சமூக மக்கள் நதிகளை உபயோகிக்கும்போது குறிப்பிட்ட வரையறைக்குள் அதனை பயன்படுத்தி, பின் அதை பாதுகாப்பதற்காக, குறுகிய காலத்திற்குள் நதிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கும் துணைநிற்கிறது. நதிகளோடு நாம் கொண்டுள்ள உறவானது ஆழம் மிக்கதாக இருப்பதுடன், ஆறுகள் கலாச்சாரத்தின் மூலமாக விளங்குவதால், மனிதர்கள் ஆறுகளை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை உருவாக்குகிறது.

பெரும்பான்மையான நீர்ப்பாசனம் மேற்பரப்பு நீர்நிலையிலிருந்தும், குறைவான நீர் தேவைக்கு குறைந்த ஆழத்திலுள்ள கிணற்றுப் பாசனமும் பயன்படுத்தப்பட்டது.

தற்போதைய நதிகளின் சீர்கேட்டிற்கு முழு காரணங்களாக நாம் மக்கட்தொகை பெருக்கத்தையோ அல்லது சமூக பொருளாதார வளர்ச்சியையோ சொல்லி குறைகூற இயலாது! கிணறு வெட்டுதல், கால்வாய் அமைத்தல் மற்றும் தடுப்பணைகள் ஆகியவற்றின் மூலம் திறம்பட நீர்மேலாண்மை செய்த முன்னோர்களின் பணிகள் பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி நாகரீகத்தில் உணவு தானியங்களின் உற்பத்திற்கு நீர்ப்பாசன முறையை பயன்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளது. பெரும்பான்மையான நீர்ப்பாசனம் மேற்பரப்பு நீர்நிலையிலிருந்தும், குறைவான நீர் தேவைக்கு குறைந்த ஆழத்திலுள்ள கிணற்றுப் பாசனமும் பயன்படுத்தப்பட்டது.

மஹாராஷ்டிராவில், 3,700 வருட பழமைமிகு நீர்ப்பாசன வடிவமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. மௌரியர்கள் காலத்தில், அருகாமையிலிருக்கும் ஆறுகளிலிருந்து நீர்ப்பாசனம் பெற்ற விவசாயிகள் அதற்காக வழங்கிய வரி பற்றி சில பதிவுகளிலிருந்து தெரியவருகிறது. கி.மு 150 – கி.பி 200 வரையிலான சங்க காலத்தில், பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டுள்ள இலக்கியங்களில், நெல் சாகுபடியானது அந்தக் காலத்திலேயே தாமிரபரணி ஆற்றங்கரைகளில் செய்யப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. சோழர்கள் மற்றும் பாண்டியர் காலமான கி.பி 750-1300 வரையிலான காலங்களில் தமிழ்நாட்டில் நீர்ப்பாசனம் அதிகமானதும் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவிரி நதிக்கரையில் 1800 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட பெரிய அணை இன்றும் புழக்கத்தில் உள்ளது.

முதலில் நீர்ப்பாசனமானது ஆற்று நீர்ப்பாசனமாக இருந்துவந்தது. அதன்பின் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஏரிகள்-குளங்கள் (தமிழ்நாட்டில்) போன்ற நீர் நிலைகளின் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்பட்டது! இதைப் போலவே கர்நாடகாவில் கல்யாணிகள் என்ற பெயரிலான நீர்நிலைகளும் ராஜஸ்தானில் பெடிஸ் மற்றும் படிக்கட்டுகளுடனான கிணறுகளும் நீர்ப்பாசனமாக மாறியது. மழைக்காலங்களில் வரும் அதிகப்படியான நீரை சேமித்து வைக்கும் வகையில் இந்த நீர்நிலைகள் வடிவமைக்கப்பட்டன. இதைத் தவிர, அதிகப்படியான நீர்தான் ஆற்றில் சென்றுசேரும். இந்த தொழிற்நுட்பத்தின் மூலம் நீர் சுழற்சி எந்தவித தொய்வும் இன்றி இருந்தது.

இன்று போல எந்தவித தண்ணீர் பிரச்சனையையும் சந்திக்காமல் ஹரப்பா காலத்திலிருந்து நமது சமூகம் வாழ்ந்து வந்துள்ளது. நாம் நீர்ப்பாசனம் மட்டுமல்லாது, வர்த்தகம் மற்றும் பல்வேறு அத்தியாவசிய தேவைகளையும் இந்த நீர் மூலத்தைக் கொண்டே செய்தோம். ஆனால் இப்போது, நதிகளின் வறட்சி, குளங்கள் மற்றும் ஏரிகள் காய்ந்துபோதல் மற்றும் மோசமாக உறிஞ்சப்பட்டு குன்றிவரும் நிலத்தடி நீர்நிலை ஆகிய பிரச்சனைகளை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? எப்படி இவற்றை மீட்கப்போகிறோம்? இதனை நாம் புரிந்துகொள்வதற்கு முன், மனிதர்களுக்கு ஆறுகள் எவ்வளவு முக்கியம் என்ற உண்மையை நாம் உணர வேண்டும்.

ஆசிரியர் குறிப்பு: மேலுள்ள பகுதிகள் “நதிகளை மீட்போம்” சட்ட வரைவு அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டது. நீங்களும் இந்தியாவின் நதிகளை மீட்கும் இந்த முயற்சியில் பங்குபெற விரும்பினால் அதற்கான எளிய வழி, 80009 80009 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பது! நதிகளை மீட்பதில், மிஸ்டு கால் கொடுப்பதால் என்ன நிகழும் என்பதை அறிய க்ளிக் செய்யுங்கள்!