பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 15

இயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி செய்வதிலுள்ள நுட்பங்களை மட்டுமல்லாமல், நாட்டு நெல் ரகங்களின் தனித்தன்மையும் புரிய வைக்கிறது இந்த பதிவு!

ஈஷா விவசாய இயக்கத்தின் இயற்கை வணக்கங்கள், மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்தில் உள்ள விவசாயிகளை நேரடியாக கண்டு அவர்களது அனுபவங்களை நமது விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள் தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது என்று பெரும்பாலான விவசாயிகள் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இது எங்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தருகிறது.

பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் திரு. வெங்கடேஷ் அவர்கள் இயற்கை விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக மயிலாடுதுறையில் விவசாய நிலத்தை வாங்கி அதில் கடந்த ஏழு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

அந்த உற்சாகத்துடன், ஈஷா விவசாயக்குழு கிழக்கு மண்டலத்தின், தஞ்சை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் இயற்கை விவசாயி திரு. வெங்கடேஷ் அவர்களை 09.01.17 அன்று அவரது பண்ணையில் சந்தித்தது.

பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் திரு. வெங்கடேஷ் அவர்கள் இயற்கை விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக மயிலாடுதுறையில் விவசாய நிலத்தை வாங்கி அதில் கடந்த ஏழு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பண்ணையை பராமரிப்பதில் திரு.மணிகண்டன், வெங்கடேஷ் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்.

“மாசி மாசம் பொண்ணு பாரு, மயிலாடுதுறையில நெல்லப் பாருன்னு என்ற அப்பாரு ஒரு சொலவட சொல்லுவாப்புடிங்கோ. சோழநாடு சோறுடைத்துன்னு நாம படிச்சிருக்கோமில்லங்க?! பொறவு எப்புடிங்கோ... மயிலாடுதுறையில நெல்லு நல்லாத்தானுங்க விளையும். ஆனாலும் நம்ம வெங்கடேஷ் அண்ணா விவசாயமே தனிதாங்கோ... அட வாங்க, முழுசா கேட்டுப்போட்டு வருவோம்!”

பாரம்பரிய நெல் ரகங்கள்

நாம் நிலத்தை பார்வையிடும் போது, பாரம்பரிய ரகமான கிச்சிலி சம்பா நெல்லை 10 ஏக்கரில் பயிர் செய்திருந்தார், இந்த நெல் சன்ன ரக அரிசியைத் தரக்கூடியது. கிச்சிலி சம்பா அரிசியைச் சமைத்து உண்ண பலம், தேகச் செழுமை முதலியவை உண்டாகும் என நமது சங்கப் பாடலில் விவரிக்கப் பட்டுள்ளது,

நாட்டிற் பயிராகும் நற்கிச்சிலிச் சம்பா
வாட்டமறவே சமைத்து வாயினிக்க - வீட்டினிலே
உண்ணப் பலம்உண்டாம் ஒண்டொடியே! மெய்பெருக்கம்
வண்ணமிகு மேனி வழுத்து.

கருப்பு கவுனி நெல் ரகத்தை மூன்று ஏக்கரில் பயிர் செய்திருந்தார். இதன் வயது 140 நாட்களாகும், அந்த அரிசி அவல் செய்வதற்கும், இனிப்புப் பொங்கல் செய்வதற்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ரகமாகும். கருப்புக் கவுனி அரிசியால் செய்யப்பட்ட கஞ்சியை பருகுவதால் குதிகால் வலி நீங்கும் என்றும், நாய்க்கடி விஷம் நீங்குவதற்கும் பத்தியத்துடன் இந்த கஞ்சியை உண்ணலாம் என்றும் தெரிவித்தார்.

அவரது சொந்த உபயோகத்துக்காக 50 குழி நிலத்தில் மாப்பிள்ளை சம்பா நெல்லையும் பயிர் செய்து, 6 மூட்டை நெல்லை அறுவடை செய்துள்ளார். மாப்பிள்ளைச் சம்பா 180 நாள் பயிராக ஆடி மாதம் நாற்றுவிடப்பட்டு தைமாதம் அறுவடை செய்யப்படுகிறது. இவ்விதம் இப்பயிர் மழைக்காலம், குளிர்காலம், இளவெய்யில் காலம் என மூன்று பருவங்களையும் கடந்து வளர்கிறது. இதனால் பயிரில் நல்ல சத்து சேர்கிறது, இதனால் இந்த அரிசியை உண்ணும் போது நல்ல உடல் பலத்தை தருகிறது என்றும், தொடர்ந்து பயன்படுத்தும் போது சர்க்கரை நோய் கட்டுப்படுத்தக் கூடியது என்றும் தெரிவித்தார்.

“ஏனுங்க பாத்தீங்ளா... இந்த மாப்பிள்ள சம்பா, கருப்பு கவுனியெல்லாம் எந்தமாறி மகத்துவம் உள்ளது தெரியாம ஐ.ஆர் 8, ஐ.ஆர் 20னு ஒட்டு ரகத்த சாப்புட்டுபோட்டு, பொறவு சத்தில்லா சமுதாயமா இப்போ நிக்குறோமுங்க. ஏனுங்க நான் சொல்றது சரிதானுங்ளே?! புதுமாப்பிள்ளை பொலிவோட இருக்குறதுக்கு மாப்பிள்ள சம்பா வாங்கிப்போடு, சுறுசுறுப்பா களத்து வேலைய பாக்கனும்னா கருப்பு கவுனி கஞ்சி குடின்னு எங்க ஊரு பெரியவங்க சொல்லுவாங்கோ! இப்பவாச்சும் இந்த நெல்மணிகளோட அருமைய நாம புரிஞ்சக்கணுமுங்க!”

ஆலங்குடி பெருமாள் அவர்களின் ஒற்றை நாற்று நடவு வழிமுறையை பின்பற்றுகிறார். கிச்சிலி சம்பா சாகுபடிக்கு மொத்தமாக 7 கிலோ விதை நெல்லை மட்டும் பயன் படுத்தியுள்ளார். 7 கிலோ விதை நெல்லில் இருந்து பெறப்பட்ட நாற்றுகள் 12 ஏக்கரில் நடுவதற்கு போதுமானதாக இருந்ததாகவும், அவர் பண்ணையில் 10 ஏக்கரில் நாற்று நட்ட பின், இரண்டு ஏக்கர் நடுவதற்கு போதுமான நாற்றுக்கள் மீதம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

ஒற்றை நாற்றுநடவு முறை சிறந்த பலனைத் தருவதினால், அனைத்து பயிர்களையும் ஒற்றை நாற்று நடவு முறையிலேயே பயிர் செய்திருந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒற்றை நாற்று நடவு முறையில் பயிர் செய்துள்ளதால் நாற்றுக்கு நாற்று 50 செ.மீ இடைவெளி விடப்பட்டுள்ளது. இடைவெளி போதுமான அளவு உள்ளதால் பயிர்கள் நுண்ணூட்ட சத்துகளுக்காகவும், காற்றுக்காகவும், ஒளிக்காகவும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடாமல் திடமாக வளர்கிறது என்றும், நாற்றுகள் நெருக்கமாக இருந்தால் நாற்று நீண்டு வளர்வது மட்டுமல்லாமல் அதிக தூர் வெடிக்காது, எனினும் பயிர் இடைவெளி பயிருக்கு பரிந்துரைக்கப் பட்ட அளவைவிட மேலும் அதிகரித்தாலும் மகசூலில் பாதிப்பு ஏற்படும் என்றும் தனது அனுபவத்தில் கவனித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உதாரணமாக இவர் பயிரிட்ட கிச்சிலி சம்பாவில் 2 ஏக்கர் மட்டும் 50 செ.மீ சரியான இடைவெளியுடன் நட்டிருந்தார், இந்த பயிரில் 45 முதல் 50 தூர்கள் வரை வந்துள்ளது, இந்த இரண்டு ஏக்கரில் மட்டும், ஏக்கருக்கு 35 மூட்டை நெல்லை (62 கிலோ மூட்டை) அறுவடை செய்துள்ளார்.

ஆனால் மீதியுள்ள 8 ஏக்கரில் இடைவெளி 50 செ.மீட்டரை விட அதிகமாக வைத்து நடவு செய்து விட்டதால் மகசூல் குறைந்துள்ளது, இந்த 8 ஏக்கரில், ஏக்கருக்கு 23 மூட்டை நெல் மட்டுமே கிடைத்துள்ளது.

ஒரு ஏக்கருக்கு தோராயமாக 13,500 ரூபாய் செலவு செய்து இந்த மகசூலை எடுத்துள்ளதாகவும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“கெரகத்துக்கு நம்ம நாட்டு மக்கள் தொகை ஏகத்துக்கும் பெருகிப்போச்சில்லீங்கோ... அட நம்ம மக்கள் இரயில்லயும் பஸ்ஸுலயும் ரோட்டுலயும் கடைகள்லயும் நெருக்கமா இருந்து சிரமப்பட்டு கிடக்குறாங்கோ... அப்படி இல்லாம, நாம குறிப்பிட்ட இடைவெளியில வாழ்ந்தோம்னா ஆரோக்கியமாவும் வளமாவும் வாழலாமுங்க, ஏனுங்க நான் சொல்றது சரிதானுங்களே? அதுமாதிரிதானுங்க நெல் சாகுபடியிலயும் குறிப்பிட்ட இடைவெளியில நாற்று நடச்சொல்லி சொல்றாங்கோ! அட அந்த ஆலங்குடி பெருமாள் ஐயா ரொம்ப ஆராய்ச்சியெல்லாம் பண்ணித்தான் இதைய கண்டுபுடிச்சிருக்காருங்கோ!”

நெல் சாகுபடியில் புதிய நுட்பங்கள்! - சாதிக்கும் மயிலாடுதுறை விவசாயி, nel sagupadiyil puthiya nutpangal - sathikkum mayiladuthurai vivasayi

நெல் சாகுபடியில் புதிய நுட்பங்கள்! - சாதிக்கும் மயிலாடுதுறை விவசாயி, nel sagupadiyil puthiya nutpangal - sathikkum mayiladuthurai vivasayi

நெல் சாகுபடியில் புதிய நுட்பங்கள்! - சாதிக்கும் மயிலாடுதுறை விவசாயி, nel sagupadiyil puthiya nutpangal - sathikkum mayiladuthurai vivasayi

ஒற்றை நாற்று முறையில் விவசாயம் செய்ய முயலும் புதிய விவசாயிகள் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பயிருக்கு இடுபொருளாக ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா இரண்டையும் பயன் படுத்துகிறார். ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை, நாற்று நட்டு 15 வது நாளிலும், பஞ்சகவ்யாவை 45 மற்றும் 75 வது நாளிலும் கொடுத்திருக்கிறார், பூக்கும் காலத்தில் புளித்த மோர் கரைசலை தெளித்ததாகவும் இதை தவிர்த்து வேறு இடுபொருள் பயன்படுத்தவில்லை என தெரிவித்தார்.

இலைப்பேன் மற்றும் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக 60வது நாளில் மூலிகை பூச்சிவிரட்டியுடன் புகையிலையைச் சாறையும் சேர்த்து பயன்படுத்திய பின் பூச்சித்தாக்குதல் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

நாட்டுரக பயிர்களை பருவம் தவறி பயிர் செய்யக் கூடாது என்றும், தவறி பருவம்மாறி பயிர் செய்துவிட்டால் அவசரப்பட்டு வைக்கோலை அறுவடை செய்யாமல் சற்று பொறுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தற்போது நெல் அறுவடைக்கு பின் 2 ஏக்கரில் மட்டும் உளுந்து விதைத்துள்ளார். நெல் அறுவடை செய்வதற்கு 7 நாட்களுக்கு முன்பே ஏக்கருக்கு 8 கிலோ விதை உளுந்தை தூவி விட்டு அதன் பின் நெல்லை அறுவடை செய்துள்ளார். இவ்வாறு விதைப்பதினால் முளைக்கும் உளுந்து சிறிது பாதித்தாலும் சில நாட்களில் உயிர்பிடித்து வளர்ந்துவிடும். மீதி உள்ள நிலத்தில் ஏதேனும் ஒரு பாரம்பரிய குறுவை ரகம் நெற்பயிரை பயிர் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாரம்பரிய நெல்லை பற்றிய ஒரு சில விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். பொதுவாக பாரம்பரிய ரக நெல் ரகங்களை சரியான பட்டத்தில் பயிர் செய்ய வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கறுப்பு கவுனி நெல்லை குறுவைப் பட்டத்தில் (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை) விதைத்திருந்ததாகவும், பருவம் தவறியதனால் பூக்கும் வயது வந்தும் பூக்காமல் இருந்ததாகவும், எனினும் பயிரை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டு விட்டதாகவும், இறுதியில் சிறிது மழை பொழிவு ஏற்றபட்ட பின் பயிர் பூத்து மகசூலும் கிடைத்தது என்றும் தெரிவித்தார். எனவே நாட்டுரக பயிர்களை பருவம் தவறி பயிர் செய்யக் கூடாது என்றும், தவறி பருவம்மாறி பயிர் செய்துவிட்டால் அவசரப்பட்டு வைக்கோலை அறுவடை செய்யாமல் சற்று பொறுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அருகில் உள்ள ஒரு சில விவசாயிகளும் அந்த ஆண்டில் குறுவைப்பட்டத்தில் கருப்பு கவுனி பயிர் செய்திருந்ததாகவும், அவர்கள் பட்டம் தவறியதால் பயிர்கள் இனிப் பூக்காது என்று நினைத்து அவசரப்பட்டு பயிரை, வைக்கோலுக்காக அறுவடை செய்து விட்டனர் என்றும், எங்கள் வயலில் மட்டும் அவசரப்பட்டு அறுவடை செய்யாமல் பொறுமையாக இருந்ததினால் எங்களுக்கு மகசூல் கிடைத்ததென்றும் தெரிவித்தார்.

நாட்டு மாடுகளின் மீது ஆர்வம்

அவரது இல்லத்திற்கு அருகே நான்கு ஏக்கர் தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து அதில் கோசாலை அமைத்து அதில் 10க்கும் மேற்பட்ட கிர் மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். கிர் மாடுகள் இயல்பாக அந்த சூழ்நிலைக்கு பொருந்தி விட்டன. மாடுகள் நன்கு பழகிவிட்டதால் அவைகளை பராமரிப்பது எளிதாக உள்ளது என தெரிவித்தார்.

தென்னந்தோப்பில் தென்னைக்கு நடுவே ஊடுபயிராக வாழை, துவரை மற்றும் காய்கறிகளை பயிர் செய்து, அதிலிருந்து கணிசமான வருமானம் பெறுகிறார்.

விபூதி தயாரிப்பு

கிர் மாடுகளின் சாணத்தைப் பயன்படுத்தி விபூதி தயார் செய்கிறார். சாணத்தை 3 அங்குல விட்டம் மற்றும் 1 அங்குல உயரம் கொண்ட விராட்டிகளாக தட்டிக்கொண்டு அவைகளை உலர வைக்க வேண்டும். கருக்கா நெல்லை (பதர் நெல்) நான்கு அடிக்கு வட்டமாக பரப்பி, (அதாவது விராட்டி அடுக்கும் பொழுது கையெட்டும் அளவுக்கு இருக்கவேண்டும்) நன்கு உலர்ந்த விராட்டிகளை வட்டமாக கருக்கா நெல்மேல் அடுக்கி, அந்த விராட்டி மேல் மீண்டும் கருக்கா நெல்லை இடைவெளி இல்லாமல் மீண்டும் பரப்ப வேண்டும், இவ்வாறு பரப்பும் போது காற்று உள்ளே புகாத வகையில் இடைவெளிகள் இல்லாமல் நிரப்ப வேண்டும்.

தூவப்பட்ட கருக்கா நெல்லின் மேல் மீண்டும் விராட்டிகளை அடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து விராட்டி மற்றும் கருக்கா நெல் இவைகளை அடுக்கடுக்காக பரப்பி கோபுரம் போன்று அடுக்கவேண்டும். படிப்படியாக விராட்டி எண்ணிக்கையை குறைத்து இறுதியில் ஒரு விராட்டி மட்டும் இருக்குமாறு அமைக்க வேண்டும்.

இந்த விராட்டி அடுக்கு காற்று குறைவாக இருக்கும் நேரத்தில் புடம் போடப்படுகிறது, உச்சியில் உள்ள விராட்டியின் மீது கற்பூரம் ஏற்றப்படுகிறது, இந்த கற்பூர நெருப்பு படிப்படியாக கனன்று அடுக்கில் உள்ள எல்லா விராட்டிகளும் சாம்பலாகிறது. இறுதியில் வெண்மை நிறமான சாம்பல் கிடைக்கிறது.

கருக்கா நெல் ஆங்காங்கே இடைவெளியுடன் தூவியிருந்து, காற்று உள்ளே சென்றிருந்தால் சாம்பல் வெண்மை நிறத்தில் இல்லாமல் கருப்பு நிறமாகி விடும். இவ்வாறு சாம்பல் கருப்பு நிறமாகி விட்டால் விபூதியாக பயன்படுத்த இயலாது, எனவே புடம் போடும் போது கவனமாக புடம் போடவேண்டும்.

இந்த விபூதியை, மதிப்புகூட்டி விற்பனை செய்யும் நபர்களுக்கு விற்பதாகவும், அவர்கள் இந்த விபூதியுடன் வேறு சில வாசனைப் பொருட்களை சேர்த்து, வாசனை விபூதி தயாரிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

“ஏத்தம் இறைச்சு கிடைக்குற சோறும், எருவ எரிச்சு கிடைக்குறே திருநீறும் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லுவாப்டிங்க என்ற பெரிய வூட்டு ஆத்தா. இப்பல்லாம் அல்லா பொருளுமே கலப்படமா ஆகிப்போச்சுங்கோ. நம்ம வெங்கடேஷ் அண்ணா பண்ணைக்கு போனா அங்க வர்ற சுத்தமான திருநீறு வாசனையே அதோட மகிமையை சொல்லுமுங்க! உங்களுக்கு சுத்தமான திருநீறோட தியானலிங்க அதிர்வும் வேணும்னா ஈஷாவுக்கு போயி வாங்கிக்கலாமுங்க!”

இறுதியாக அவரது வயலில் விளைந்த சீரக சம்பா அரிசியால் செய்யப்பட்ட வாசனையான அன்னத்தை, கீரையுடன், கிர் மாட்டின் சுவையான தயிர் மற்றும் நெய்யுடன் வெங்கடேஷ் அவர்களின் துணைவியார் எங்களுக்கு பரிமாறி அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சீரக சம்பாவின் மணமும் சுவையும் நினைவில் நிலைத்திருக்கிறது.

உயர்கல்வி கற்று கல்லூரியில் பேராசிரியராக பணியில் இருந்தும், இயற்கை விவசாயத்தை ஈடுபாட்டுடன் செய்து பல நாட்டு மாடுகளை பேணி பாதுக்காத்து வரும் திரு. வெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு விடைபெற்றோம்.

தொடர்புக்கு:
திரு. வெங்கடேஷ் - 9443634287
திரு. மணிகண்டன் - 8124259564