நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 3


நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம், ஆனால் இந்த நண்பர்களை சோதிக்கத் தேவையில்லை. இவை இயற்கை அளித்த நண்பர்கள். ஆம், காக்கையும் குருவியும் மாடுகளும் நாய்களும் மட்டுமல்ல, பாம்பும்கூட நமக்கு நண்பன்தான் என்று கூறுகிறார் நம்மாழ்வார். இயற்கை தந்த இந்த நண்பர்கள் பற்றி நம்மாழ்வார் இங்கே பேசுகிறார்...

நம்மாழ்வார்:

ஒரு பழச் செடி நிற்கிறது. அதனால் இடம் விட்டு இடம் நகர முடியாது. ஒரு பறவை அந்தச் செடியில் பழம் தின்ன வருகிறது. பழம் தின்ற பறவை ஒரு கிலோ மீட்டர் தூரம் போன பிறகு எச்சமிடுகிறது. எச்சத்துடன் விழுந்த விதை, மழை வந்ததும் முளைத்துச் செடியாகிறது. இடம்விட்டு இடம் பெயர முடியாத செடியின் இனப் பெருக்கம் அங்கு நிகழ்ந்துவிட்டது. பறவை தன் பசியை ஆற்றிக் கொள்ளத்தான் செடியிடம் சென்றது. ஆனால், அது தன்னுணர்வு இல்லாமலேயே, அந்தச் செடி இனம் பெருகவும் துணை நின்றது.

நம் உணவுடன் போட்டி போடும் எலி, பாம்புக்கு உணவு என்கிற உண்மை ஒரு புறம். பாம்பையே காவல்காரனாக ஏற்றுக் கொள்ளும் உணர்வு மறுபுறம்.

மரம் தங்கசாமி என்பவர் தனது தோட்டத்தில், பறவைகள் நீர் பருக வசதியாகத் தொட்டிகளைப் பதித்துவைத்தார். கோடையில் நீர் பருக வந்த காக்கைகள் எச்சத்துடன் வேப்ப மர விதைகளையும் போட்டுவிட்டுப் போயின. தங்கசாமிக்குச் சொந்தமான கற்பகச் சோலையில் இதனால் நிறைய வேப்ப மரங்கள் வளர்ந்தன.

காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் படித்த கேரளத்து இளைஞர் ஒரு கதை சொன்னார். கேரளாவில் ஒவ்வொரு வீடும் ஒரு தோட்டத்தில் உள்ளது. தோட்டத்தின் மூலையில் புதர் மண்டிக்கிடக்கும் இடத்தை ‘சர்ப்பக் காவு’ என்கிறார்கள். அங்கு ஒரு நாகப்பாம்பு குடி இருக்குமாம். அங்கு வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைக்கிறார்கள். பால், முட்டையெல்லாம் வைக்கிறார்கள். குடும்பத்தாருக்கு நாகப் பாம்பு, நண்பன்.

நம் உணவுடன் போட்டி போடும் எலி, பாம்புக்கு உணவு என்கிற உண்மை ஒரு புறம். பாம்பையே காவல்காரனாக ஏற்றுக் கொள்ளும் உணர்வு மறுபுறம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, காட்டுப்பன்றி கிழங்கு தோண்டி உண்ட இடத்தில், வரகும் தினையும் விதைத்தார்கள் என்று படிக்கிறோம். ஏர் பூட்டி ஓட்டாமலே, நிலத்தை பன்றி உழுது கொடுத்தது எவ்வளவு பெரிய காரியம்.

இந்தக் கால்நடைகளின் கழிவுகளே நிலத்தில் வாழும் நுண்ணுயிர்களுக்கும் மண்புழுவுக்கும் உணவாவதால் மண் வளமாகிப் பயிர் விளைச்சல் கூடுகிறது. அவை இறந்த பிறகுகூட, கொம்பும், குளம்பும், எலும்பும், தோலுமாகப் பல விதத்தில் பயன்படுகின்றன. கொம்புக்குள் சாணத்தைப் புதைத்துவைத்து ‘கொம்புச்சாணம்’ தயாரிக்கிறார்கள். அது நிலவளம் உயர்த்துகிறது. விலங்குகளின் தோல், பையாகவும் காலணியாகவும் பயன்படுகிறது. விலங்குகளின் முடி, கம்பளி உடையாகி உறை பனியிலும் மனிதனைக் காத்து நிற்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

60 கிலோ எடையுள்ள மனிதன் தனது அறிவு வளர்ச்சியால் 8000 கிலோ எடையுள்ள யானையை அடிமைப்படுத்தினான். போருக்குப் பழக்கினான். நெற்களத்தில் போரடிக்கவும் பயன்படுத்தினான். தெருக்களில் பிச்சையெடுக்கவும் வைக்கிறான். இதுவா நாகரிகம்? இதுவா பண்பாடு?

பூவில் தேனெடுக்கச் செல்லும் தேன் பூச்சியானது, பூவின் மகரந்தத்தைச் சுமந்து போய் மற்றொரு பூவின் சூல் முடியில் சேர்க்கிறது. அதற்கொரு வாழ்விடம் அமைத்துக் கொடுத்தால், அது சேமித்த தேனை எடுத்துக் கொள்ளவும் மனிதனை அனுமதிக்கிறது. கொம்பில் உள்ள அடையைக்கூட அழிக்காமல் தேனெடுக்க வாரதாவில் உள்ள ‘கிராமத்துக்கேற்ற அறிவியல் மையம்’ பயிற்சி அளிக்கிறது. ஆனால், நாம் மாடுகளையே கறிக்கடைக்கு அனுப்புகிற சமூகத்தில் வாழ்கிறோம்.

இயற்கையில் ஒன்றின் வாழ்வு பிறிதொன்றின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருந்தது. அதுபோல, இன்றும் இனியென்றென்றும் விலங்குகளோடு சகோதரர்களாக வாழ்வதே அறிவுடைமைக்கு அழகு!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.

Photo Courtesy: FriedmanPhotography @ flickr