முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

“நதிகளை மீட்போம்” பேரணி நிறைவு – தன்னார்வத் தொண்டர்களுடன்

vol-meet-6

நேற்றுடன் பேரணிப் பயணம் நிறைவுக்கு வந்தது. துணை ஜனாதிபதி அவர்களின் தலைமையில், அவருடைய முழு ஆதரவுடன் நேற்று நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இன்று சத்குரு அவர்கள் “நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரையை பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை சந்தித்து அவரிடம் ஒப்படைத்தார்.

பிரதமருடன் சந்திப்பு

vol-meet-2

vol-meet-3

vol-meet-4

vol-meet-6-1

இன்று சத்குரு அவர்கள் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, “நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரையை வழங்கினார். 700 பக்கம் உள்ள இப்பதிப்பில், இந்தத் தீர்வு எப்படி செயல்படும் என்று அதன் விஞ்ஞானம், பொருளாதாரம் மற்றும் உலகில் இதுபோல் செயல்படுத்தப்பட்டு வெற்றி அடைந்துள்ள திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மண்வகை, வெவ்வேறு தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் இது வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டிருக்கும் சான்றுகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதுபற்றி சத்குரு:

இந்திய நதிகளை மீட்பதற்கான வரைவு திட்டப்பரிந்துரை நம் பிரதமரின் திறமையான கைகளுக்குச் சென்றுவிட்டது. சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் அதேநேரத்தில் பொருளாதார ரீதியாகவும் பலனளிக்கும் கோட்பாடு வகுக்கப்படுவதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

பிரதமர் அவர்கள் இந்த சந்திப்பை பற்றி டிவிட்டரில், “சத்குருவை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.

80009 – 80009 இனி எண்ணல்ல… பாடல்

80009 – 80009ஐ பாடலாக பாடுங்களேன் என்று புதுடில்லி நிறைவு விழாவில் ஆர்.ஜே ரோனக் சோனு நிகம் அவர்களைக் கேட்க, “இவர் ஏன் என்னை வம்பில் மாட்டி விடுகிறார்?” என்று கேட்டுவிட்டு, வேண்டுகோளுக்கு இணங்கி, 80009 – 80009 ஐ பாடலாகப் பாடுகிறார் சோனு நிகம்!

தன்னார்வத் தொண்டர்களுடன் சந்திப்பு

vol-meet-7

“ஹமாரே நதியா சுக் ரஹி ஹை” என்பதை கடந்த சில நாட்களாக பலமுறை கேட்டுக் கேட்டு எனக்கு பதிவாகிவிட்டது.

  • இப்பேரணியை எப்படி நடத்தலாம் என்று பல திட்டங்களை என் மனதிலேயே செயல்படுத்திப் பார்த்தேன். ஆனால் இதுபற்றி நம் ஆசிரமத்தில் 3 மாதங்களுக்கு முன்புதான் முதல்முதலாகப் பகிர்ந்தேன். சாத்தியமில்லை என்பது போன்ற காலக்கெடு, சுவாசிப்பதும் கடினமாக ஆகும் அட்டவணையைக் கொடுத்தால்தான் நம் ஆசிரமவாசிகள் மிகத் திறம்பட செயல்படுகிறார்கள். நிறைய நேரம் கொடுத்தால் வாக்குவாதமும், குழப்பங்களும்தான் எஞ்சுகின்றன.
  • எப்பேற்பட்ட மகத்தான ஒரு விஷயத்தை அவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை.
  • ஊடக நண்பர்களும், பல பிரபலங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தது, இப்பேரணியை வேறு கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.
  • 30 நாட்கள் நாம் சாலைகளில் இறங்கி பயணித்தால் போதும். மற்றவை எல்லாம் இனி தானாக நடக்கும் என்று எண்ண வேண்டாம். நிறைய சிக்கல்கள் உள்ளது. நம் நதிகளில் தண்ணீர் ஓடும்வரை உத்வேகம் குறையாமல் நாம் அயராது செயல்பட வேண்டும்.

சாலைவழிப் பயணம்:

  • ரொம்ப அதிகமான நாள் ஆகிவிட்டது, இந்தியாவின் தெருக்களிலே பயணித்து. நான் கற்றதையெல்லாம் தெருவிலேதான் கற்றுக் கொண்டேன்.
  • இன்று தெரு என்றாலே மது, போதைப் பொருள், விபச்சாரம் என்றாகிவிட்டது. இதை மாற்ற வேண்டும். என் வாழ்வில் நான் கற்றுக் கொண்டது எல்லாவற்றையும் நான் தெருக்களில் இருந்தே கற்றுக் கொண்டேன். தெரு என்றால் ஆனந்தம், மனிதநேயம், அறிவு என்றாக வேண்டும்.
  • அடிப்படையில் இது சுற்றுச்சூழல் இயக்கமாக இருந்தாலும், இதுவே ஒரு மாபெரும் ஆன்மீக செயல்முறையாக மாறிவிடும்.
  • சில எல்லைப் பாதுகாப்பு ஜவான்கள் நம்முடன் பயணித்தனர். அவர்களில் வெகு சிலரிடமே நான் பேசியிருக்கிறேன். எனினும் முதல்நாள் விரைப்பாக வந்தவர்கள், நேற்று விடைபெறும்போது கண்ணீர் பெருக என்னைக் கட்டிக் கொண்டார்கள். வெறும் தெருக்களில் 30 நாள் இடைவிடாது பயணித்ததே அவர்களை இளகச் செய்துவிட்டது.
  • இதுபோன்ற ஒரு இயக்கம் வேறெங்குமே நடக்கவில்லை. அதிலும் சுற்றுச்சூழல் என்றாலே அதைப்பற்றி பலரும் பிளவுற்று இருப்பர். ஆனால் இங்கு எல்லோரும் ஒன்றிணைந்து இது பெரும் இயக்கமாக மாறியிருக்கிறது.

மூச்சுமுட்டும் வாழ்க்கை:

  • வாழ்க்கை என்பது நீங்கள் சேகரித்தவை பற்றியல்ல. பலரின் வீடுகள் இன்று கிடங்கு போல் உள்ளது. நீங்கள் அணியும் உடை, வாழும் வீடு, ஓட்டும் கார் இவையல்ல உங்கள் வாழ்க்கை. எவ்வளவு ஆழமான அனுபவங்கள் ஏற்படுகிறதோ அதுதான் உங்கள் வாழ்க்கை.
  • கடந்த 30 நாட்களில் “அப்போ நான்? எனக்கென்ன கிடைக்கும்?” என்ற எண்ணமின்றி செயல்பட்ட பல தன்னார்வத் தொண்டர்களின் வாழ்க்கை அனுபவம் மிக ஆழமாகி இருக்கிறது. இப்பேரணியில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, எத்தனை பேரின் வாழ்க்கை அனுபவம் ஆழமாகி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
  • வாழ்வைப் பற்றி “சீரியஸ்” ஆக இருந்தால், அது கனமாக உங்கள்மீது அமர்ந்து கொள்ளும். மூச்சு முட்டும். பின் ரிலாக்ஸ் ஆவதற்கு பப், பார்ட்டி, பிக்னிக் என்று சென்று அவ்விடங்களில் மட்டுமே பலரால் மூச்சுவிட முடிகிறது.
  • உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் ஆனந்தமாக நீங்கள் மூச்சுவிட வேண்டும். அதற்கான வழி, “அப்போது நான்? எனக்கென்ன கிடைக்கும்?” என்ற எண்ணத்தை உங்கள் மனதினின்று விலக்குவது.
  • இப்படி வாழ்வதற்கு இப்பேரணி போல் மாபெரும் விஷயம் நடக்கவேண்டும் என்றில்லை. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் இந்நிலையில் நீங்கள் நிகழ்த்திக் கொள்ளமுடியும்.
  • உங்களை விட, உங்கள் பிழைப்பை விட மாபெரும் ஒன்றை உருவாக்க செயல்படும்போது, உங்கள் வாழ்க்கை அனுபவம் மிக ஆழமாகும். நீங்கள் மகத்தான மனிதராக வளர்வீர்கள்.

உங்கள் பங்களிப்பு:

  • “அவன் தவறு செய்கிறானே, நான் செய்தால் மட்டும் என்ன?” என்று செயல்பட்டுத்தான் இன்று நதிகளை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டோம்.
  • இதுவே அவசியமான ஒன்றை செய்யவேண்டும் என்றால், “அதுதான் இத்தனை பேர் செய்யப் போகிறார்களே. நான் செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன? பெரிதாக ஒன்றும் வித்தியாசமிருக்காது” என்று சொல்லி விலகி நின்றால் ஒன்றும் நடக்காது. உங்களால் முடிந்த சிறு துரும்பையேனும் நிச்சயம் செய்வேன் என்று எழுந்து செயல்பட்டால்தான் எதுவும் நடக்கும்.
  • பிரதமரிடம் திட்டப்பரிந்துரையை ஒப்படைத்துவிட்டோம். அவர் மிகுந்த உற்சாகத்தோடும், மதிப்போடும் அதை பெற்றுக் கொண்டார். ஆனால் நாட்டில் தினமும் பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் தொடர்ந்து இதை அவர்கள் கவனத்தில் வைக்கவில்லை என்றால், மெதுவாக இது பின்னுக்குச் சென்றுவிடும்.
  • அதனால் நாம் தினமும் பேசும் பேச்சில் 10% நதிகளைப் பற்றியே இருக்கவேண்டும். நாம் அனுப்பும் மெஸேஜ்களில் 10% நதிகள் பற்றி இருக்கவேண்டும். “அப்படி செய்தால் எனக்கு பித்துப் பிடித்திருக்கிறது” என்று என் நண்பர்கள் கேலி செய்வார்களே? நம் வாழ்விற்கு ஆதரமான ஒன்று இல்லாமல் நாம் வாழமுடியாது. இதை புறக்கணித்தால் நீங்கள் நிச்சயம் பித்துப் பிடித்தவர்தான்.

அடுத்து என்ன?:

  • இதுவரை சிற்சிறு அளவுகளில் இப்பரிந்துரை வேலை செய்கிறது என்று காண்பித்து இருக்கிறோம். “நதிகளை மீட்க” மத்திய அரசு கோட்பாட்டை வெளியிடும்போது இதை பல மாநிலங்களில் முன்னெடுப்பாக செயல்படுத்த பலர் களமிறங்க வேண்டும். அதற்குத்தான், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 100 இளைஞர்கள் கேட்டிருக்கிறோம். குறைந்தது 1200 பேர் முழுநேரமாக இதில் இறங்க வேண்டியிருக்கும்.
  • 5 ஆண்டு காலத்தில் இதை வெற்றிகரமாக நாம் செயல்படுத்தினால், அதன்பின் மக்களும் அரசாங்கமும் இதில் முழுமூச்சாக இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
  • இதை செய்யப்போகிறேன் என்றதும் ஆசிரமத்தில் இருக்கும் சில படித்த, நிதானமான மனிதர்கள் என்னை எச்சரித்தார்கள். இதில் பற்பல பிரச்சினைகள் இருக்கிறது. ஒருவேளை சொன்னதுபோல் இதை செய்ய முடியவில்லை என்றால், உங்கள் மதிப்பு, பெயர் எல்லாம் மண்ணோடு மண்ணாகிவிடும் என்று.
  • நான் சொன்னேன் இதில் என் பெயரும், மதிப்பும் என்ன, என் உயிரே போனாலும் கவலை இல்லை என்று. நம் நதிகளில் நீரோடுவது அத்தனை முக்கியம்.
  • தயக்கத்தில் இனியும் காலம் கடத்துவதற்கு நேரமில்லை. நதிகளில் நீர் ஓடவில்லை என்றால், நமக்கு வாழ்வில்லை, நம் புண்ணிய பூமி தழைக்க வழியில்லை.
  • நதிகளுடன் சேர்ந்து உங்கள் வாழ்வும் பெருகி ஓடட்டும்.
    வாருங்கள் இதைச் செயல்படுத்துவோம்!

இந்த 3 ஆண்டுகள் வருவதற்கு பெற்றோர்கள் சம்மதிக்க வேண்டுமே?

vol-meet-10

கேள்வி: இதுவரை என் தந்தை என்ன சொல்லியும் கேட்காமல் இஞ்சினியரிங் படிப்பை பாதியிலே விட்டு, வேறொரு கோர்சும் வேண்டாம் என்றுவிட்டு, எனக்குப் பிடித்தமான இசையில் கவனம் செலுத்தி, டில்லியில் ஒரு சிறு இசைக் கலைஞனாக இப்போதுதான் தலை எடுத்திருக்கிறேன். ஆனால் “நதிகளை மீட்போம்” பேரணிக்கு கடந்த சில வாரங்களாக ஆதரவு திரட்டிவிட்டு, நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, எனக்குள் திடீரென எதுவோ உடைந்தது. நேற்றிரவே 3-வருட தன்னார்வத் தொண்டு செய்ய பதிவு செய்து கொண்டேன். இதை என் தந்தையிடம் கூறியபோது, அவர் வெகுண்டார். உங்களை “ஆன்மீகத் தீவிரவாதி” என்றதோடு, உங்களிடம் இக்கேள்வியைக் கேட்குமாறு கூறினார், “ஒரு மகனாக நான் என் பெற்றொருக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?” என்று. இதற்கு நீங்கள் பதில் கூறமுடியுமா? அதோடு, எனக்கும் ஒரு கேள்வி உள்ளது, “நான் செய்ய நினைப்பது சிறந்தது தானா?”

சத்குரு:

  • இங்கு சரி-தவறு என்று எதுவுமில்லை. உனக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய். அதில் உன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் அதில் முதலீடு செய், அதுவே மகத்தானதாக ஆகும்.
  • உனக்கும், உன் பெற்றோருக்குமான நீ செய்யவேண்டிய கடமை… உன் வாழ்க்கை என்பது மிகக் குறுகிய நிகழ்வு. விட்டில் பூச்சியின் வாழ்க்கை உன் அனுபவத்தில் மிகக் குறுகியதாக, அர்த்தமற்றதாக இருப்பின், நதிகளுடன் ஒப்பிடும் போது நீ விட்டில் பூச்சியை விடவும் மிக அர்த்தமற்ற நிகழ்வு.
  • உன் வாழ்க்கை மட்டுமல்ல, உன் தந்தையின் வாழ்க்கையும் மிகமிகக் குறுகியது என்பதை அவருக்கு ஞாபகப்படுத்து.
  • முன்காலத்தில் இறக்கும் நேரத்தில் காசிக்கோ, வேறெங்கோ கூட்டிச் சென்று தனக்கு முக்தி கிடைக்க மகன் வழி செய்வான் (மகள் திருமணம் செய்து புக்ககம் சென்றுவிடுவாள்) என்றுதான் மகன் வேண்டும் என்று வேண்டினார்கள். அதுதான் மகனின் கடமையாக இருந்தது.
  • உன் தந்தை என்னை என்னவென்று சொன்னாலும் அது ஒன்றும் பிரச்சினையில்லை.
  • “இதில் பங்கெடுப்பதன் மூலம் நான் சரியானதைச் செய்கிறேனா?” அது எனக்குத் தெரியாது. ஆனால் இதுதான் இப்போது இங்கு நடக்கவேண்டிய மிகமிக முக்கியமான விஷயம்.
  • தனக்குத் தேவையானதை செய்பவன் புத்திசாலி. என்ன தேவையோ அதைச் செய்பவன் மேதை. எப்போது என்ன தேவை என்பதைப் பார்த்து அதைச் செய்யத் துவங்குகிறீர்களோ, உங்கள் மேதைமை மலரும்.
  • இப்பேரணியின் பல அம்சங்களை என் மனதில் உருவாக்கினாலும், சிலவற்றை மட்டுமே செய்யவேண்டிய குறிப்புகளாக வெளியில் கூறினேன். மற்றவை தானாய் நிகழ்ந்தது. இது என் மனசக்தியை உபயோகித்ததால் என்று எண்ண வேண்டாம்.
  • இவ்வுலகின் தேவை எதுவோ, அது என் விருப்பமாக, என் உறுதியாக இருப்பதால்!

 

தன்னார்வத் தொண்டர்களுக்கான சத்சங்கம் - முழு வீடியோ

நதிகளை மீட்போம் பேரணி - ஆரம்பம் முதல் இறுதி வரை - ஒரு தொகுப்பு

கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்கள் ஆதரவு

முக்கிய பிரமுகர்கள் ஆதரவு - ஒரு தொகுப்பு

பேரணியை மக்களுக்கு எடுத்துச் சென்ற ஊடகங்கள் - ஒரு தொகுப்பு