“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 9

நேற்று சென்னை மக்களை சந்தித்த சத்குரு இன்றும் சென்னையில்தான் இருக்கிறார். “நதிகளை மீட்போம்” பேரணிக்காக சிலரை சந்தித்து, சில டி.வி.சானல்களுக்கு பேட்டி அளித்து, மாலை சென்னையிலுள்ள ஐ.ஐ.டி.யின் நிர்வாகப் பிரிவு மாணவர்களுடன் “இன் கான்வர்சேஷன் வித் தி மிஸ்டிக்” என்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடுகிறார்.
 

நேற்று சென்னை மக்களை சந்தித்த சத்குரு இன்றும் சென்னையில்தான் இருக்கிறார். “நதிகளை மீட்போம்” பேரணிக்காக சிலரை சந்தித்து, சில டி.வி.சானல்களுக்கு பேட்டி அளித்து, மாலை சென்னையிலுள்ள ஐ.ஐ.டி.யின் நிர்வாகப் பிரிவு மாணவர்களுடன் “இன் கான்வர்சேஷன் வித் தி மிஸ்டிக்” என்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடுகிறார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் சத்குரு

WhatsApp-Image-2017-09-11-at-18.24.49

இந்த நிகழ்ச்சி பிரத்யேகமாக ஐ.ஐ.டி.யின் நிர்வாகப் பிரிவு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐ.ஐ.டி.யின் மற்ற துறைகளில் இருப்பவர்கள் விருப்பப்பட்டால் கலந்து கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்திருந்தார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன், அந்த அரங்கம் கிட்டத்தட்ட நிறைந்துவிட்டது. 2000 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடிவிட்டார்கள். இதுபற்றி சொல்லும்போது, “பொதுவாக எங்கள் மாணவர்களை எந்த நிகழ்ச்சிக்கும் ‘கட்டாயமாக’ வரவேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துவதில்லை. இன்றும் அதுபோலத்தான். ஆனால் அரங்கமே நிறைந்திருக்கிறது. சத்குரு பேசுவதைக் கேட்க இவர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று” என்று சொல்லி, சத்குருவை வரவேற்று நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார் பேராசிரியர்.திரு.பாஸ்கர் இராமமூர்த்தி.

இந்நிகழ்ச்சியில், சத்குருவிடம் மாணவர்கள் கேட்ட கேள்வி-பதிலின் தொகுப்பு:

6e90adb8-5c6e-4770-86a1-69f9f2fab296

சமுதாய நலனில் தொழில்களின் பங்களிப்பு என்ன?

Question:சத்குரு, உலகில் பல தொழில் வல்லுநர்களுக்கு “வொர்க்ஷாப்” எனப்படும் திறனை தீட்டிக்கொள்ள உதவும் சிறு நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறீர்கள். சமுதாய நலனுக்கு அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

சத்குரு:

கடந்த 20 ஆண்டுகளாக தொழில் வல்லுநர்களின் மீது நான் கவனம் செலுத்தி வருகிறேன். ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு தொழில் நடக்கும் இடங்களில் என்ன வேலை? என்று ஆரம்பத்தில் உராய்வு இருந்தது. நாம் செய்யும் தொழில்களில் மிக முக்கியமானது, முதன்மையானது, நம் நல்வாழ்வு. அதை மறந்து கால்-ஆண்டு கணக்குகளில் மூழ்கி நல்வாழ்வை மறந்தால் எப்படி? ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒரு நாட்டின் வளமை அதன் தொழில் சார்ந்த விஷயம், அரசியலோ, படைபலமோ சார்ந்த விஷயமல்ல. நாம் செய்யும் எல்லா தொழிலும் மனித நல்வாழ்வுக்காகத்தான். அதை நாம் சரியாகச் செய்யவேண்டும். நீங்கள் செய்யும் செயல்கள் உங்களைப் பற்றியதா? எல்லோரையும் உள்ளடக்கியதா? என்பதுதான் கேள்வி. “இன்க்லூசிவ் இகோனாமிக்ஸ்” அதாவது எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் எனும் வார்த்தையை நான் ஒருமுறை பயன்படுத்தினேன். இன்று பலரும் அதைப் பயன்படுத்துகிறார்கள். தொழில்களின் கண்ணோட்டம் எல்லோரையும் உள்ளடக்கியதாக இல்லாவிட்டால், அது எல்லோரையும் ஏய்த்துப் பிழைப்பதாக ஆகிவிடும். அதுபோல் நடந்து செல்வம் ஒருபக்கமே சேரும்போது, மிகமிக மோசமான வழியில் இந்நிலை சமன் செய்யப்படும். பழங்காலத்தில் நடந்த இரத்தக்கறை படிந்த புரட்சிகள் இதற்கு சான்று. அதனால் எல்லோரையும் உள்ளடக்கிய கண்ணோட்டத்தில் தொழில் வளரவேண்டும். இதுவே என் முயற்சியாக இருந்திருக்கிறது.

84669b3a-5f1f-4d8c-a45f-04f832a4e64d

சென்னையில் நடந்த வெள்ளம் – எப்படி சரி செய்வது?

சத்குரு:

நமக்குக் கிடைக்கும் வரத்தை எப்படிக் கையாள்வது என்று நமக்குத் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். நம் நகரங்களில் தண்ணீர் பஞ்சம் உள்ளது. என்றாலும், பருவமழை வந்தாலும்கூட அதை சமாளிக்க முடியாத நிலையில் அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. புயல், சுனாமி ஆகியவற்றை சமாளிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை… ஆனால் பருவமழையை சமாளிக்க முடியவில்லை! காரணம், நகரத் திட்டமிடல் என்று எதுவும் நடக்கவில்லை. நிலத்தின் அமைவை கருத்தில் கொள்ளாமல், அதி புத்திசாலிகளான நாம் கட்டிடங்களும், பாலங்களும் கட்டிக்கொண்டே போகிறோம். பழமை என்று நாம் ஒதுக்கும் பழங்காலத்தில், நில-அமைவைக் கணக்கில் கொள்ளாமல் எதுவுமே கட்டப்படவில்லை. ஆனால் நாம்? கட்டிட அனுமதி ஒவ்வொரு கட்டிடத்திற்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு இடத்திற்கான முழுமையான திட்டம் என்ன? தெரியாது. இப்படி நாம் நகரங்களை உருவாக்கிவிட்டோம். சென்னையின் நில அமைவு வரைபடத்தைப் பார்த்தாலே எந்தெந்த இடங்களை காலிசெய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும். இது பலருக்கும் மனக்கஷ்டத்தை தரும் என்றாலும் அதைச் செய்தே ஆகவேண்டும். வருங்காலத்தில் எல்லோரும் நலமாக வாழ இந்தக் கடுமையான படியை நாம் எடுத்துத்தான் ஆகவேண்டும். சென்னையில் தற்சமயம், நம் தேவையில் 50% நீர்தான் உள்ளது. 2030 ற்குள் அது 22-25% ஆக குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள். இப்போது நீங்கள் யோசிக்க வேண்டியது வெள்ளம் பற்றியல்ல. தண்ணீர் பற்றாக்குறை பற்றி. இங்கு பருவமழை 40-45 நாட்கள் தான் பொழியும். அதைக் கொண்டு 365 நாட்கள் நாம் வாழவேண்டும் என்றால், அதை சேமிக்கத் தேவையானதை நாம் சரியாகச் செய்ய வேண்டும்.

WhatsApp-Image-2017-09-11-at-18.24.49

தன் நலத்தை விட்டு சமுதாய நலனை மக்கள் பார்ப்பதற்கு என்ன செய்வது?

சத்குரு:

இங்கு சமுதாயம் என்று எதுவுமில்லை. தனிப்பட்ட மனிதர்கள்தான் இருக்கிறார்கள். நம் நகரம் போன்ற இடங்களில் மிக அருகாமையில் பலர் சேர்ந்துவாழும் போது, குப்பை போடுவது, தண்ணீர் உபயோகம், வாகனம் என பல விஷயங்களையும் எங்கே, எவ்வளவு என்று கணக்கிட்டுச் செய்யவேண்டும். சில சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் அடுத்தவருக்கு அது தீங்கு விளைவிக்கும். சட்டங்களை பின்பற்ற வேண்டாம் என்றால், எங்காவது தனித்து காட்டில் வசிக்க வேண்டும். காட்டில்கூட சில சட்டங்களை பின்பற்ற வேண்டியிருக்கும். புலி வந்தால் அவ்வாறே அதன்முன் நடக்கமுடியாது, இல்லையா? அதிகமான மக்கட்தொகை, ஏழ்மை என பல நிர்பந்தங்களின் சுமை தாளாமல், தம் சௌகரியங்களுக்கு மக்கள் குறுக்குவழிகளை நாடுகின்றனர். ஆனால் நாம் சட்டங்களுக்கு உட்பட்டு வாழவேண்டும். நம் நாடு பெரும்பாலும் உணர்ச்சிகளின் அடிப்படையில் நடக்கிறது. அவ்வாறின்றி, நாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு முறையே செயல்பட வேண்டும். “நதிகளை மீட்போம்” பேரணிக்காக நாம் செல்லும் ஊர்களில் மக்கள், “நாங்கள் இப்போதே இறங்கி மரம் நடட்டுமா?” என்று கேட்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். முதலில் மிஸ்டு-காலுக்கு வழி செய்யுங்கள் என்றேன். முறையான திட்டமின்றி உணர்ச்சிவசத்தில் செயல்பட்டால், 3 நாளுக்கு மேல் அது தாக்குப்பிடிக்காது. நில அமைவு பொறுத்து, இன்று நகரங்களை சீரமைப்பது கடினம் என்றால், நிலத்தடியில் பைப்புகள் வைக்க வேண்டும். அதற்கும் அதிக முதலீடு, செயல் தேவைப்படும்.

WhatsApp-Image-2017-09-11-at-19.38.34

அதிவிரைவான கேள்வி-பதில் சுற்று

கேள்வி: சிறந்த பரிசு – நீங்கள் கொடுப்பதற்கும், பெறுவதற்கும்.
சத்குரு: இரண்டிற்குமே தெளிவான பார்வைதான். நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு தெளிவான பார்வை இருப்பது நமக்குத்தானே நல்லது?

கேள்வி: உங்களுக்கு பெரிய சோகம் என்றால்?
சத்குரு: எதுவும் இல்லை. சந்தோஷம், சோகம் இரண்டும் மனதின் நாடகம். அதற்கு நீங்கள்தான் இயக்குநராக இருக்கவேண்டும். இயக்குநராக இருந்தால் எதைத் தேர்வு செய்வீர்கள்? (பதில்: சந்தோஷம்தான்) என் வாழ்வின் இயக்குநர் நான்தான்.

கேள்வி: எதைச் செய்வது நேர-விரயம்?
சத்குரு: விரயம் என்று எதுவுமில்லை. எதையும் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு செயலுக்கும், செயலின்மைக்கும் ஒரு விளைவு உண்டு. அதை விழிப்புணர்வோடு தேர்வு செய்து செயல்படுவதுதான் முக்கியம்.

கேள்வி: எதை தவறவிடக்கூடாது?
சத்குரு: வாழ்வை. உங்களுக்குக் கிடைப்பதும் நீங்கள் தவறவிடக் கூடியதும் வாழ்க்கை மட்டும்தான். அதை தவறவிட்டுவிடாதீர்கள்.

கேள்வி: செய்வதற்கு மிகக் கடினம் என்பது எது?
சத்குரு: நீங்கள் சீரியஸான மனிதர் என்றால், செய்யும் எல்லாமே கடினமாகத்தான் இருக்கும்.
விவரிக்கலாமா? அதற்கு அனுமதி உண்டா? (சிரிக்கிறார்)
நீங்கள் எளிமையாக இருந்தால், வாழ்க்கை உங்கள்மீது கனமாக அமராது. உங்களைப்பற்றி மிகப்பெரிதான ஒரு நினைப்போடு வலம்வந்தால், ஒவ்வொரு சூழ்நிலையும் பெரும் பிரச்சினையாக விடியும். இப்பிரபஞ்சத்தில், நம் சூரிய மண்டலம் சிறு தூசு. இந்த சூரிய மண்டலத்தில் நம் பூமி சின்னஞ்சிறு தூசு. நம் பூமியில் உங்கள் ஊர் கண்ணுக்குத் தெரியாத தூசு. அந்த கண்ணுக்குத் தெரியாத தூசில், ஐயா! நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர்!!! இதுதான் பிரச்சினை. சரியான கண்ணோட்டம் தேவை.

கேள்வி: நிஜமாகவே உங்களுக்கு சோகம் என்று எதுவும் இல்லையா?
சத்குரு: என்னை சுற்றி நடப்பவை எப்போதே என் விருப்படி 100% நடப்பதில்லை. என் எதிர்பார்ப்புகளை நான் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், என்னை சுற்றி இருப்பவர்கள் அற்புதமாகவே வேலை செய்தாலும் எனக்குப் போதாது. அது ஏமாற்றம்தான். ஆனால் எனக்குள் எப்படி இருக்கவேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்கிறேன் என்பதால், ஆனந்தமாகவே ஏமாற்றத்தையும் சந்திக்கலாமே!

“நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஒரே சமயத்தில் 2000+ மிஸ்டு கால்!

iit-13

WhatsApp-Image-2017-09-11-at-19.55.46

இன்னும் சிறிது நேரம் கேள்வி-பதில் தொடர்ந்தது. முடியும் சமயத்தில் சத்குரு “நதிகளை மீட்போம்” பேரணி பற்றி விளக்கி, அதில் மாணவர்கள் பங்கேற்க ஊக்கமளித்தார். இப்பேரணிக்கு தங்கள் ஆதரவை ஊர்ஜிதம் செய்யும் விதமாக, சத்குரு மேடையில் இருக்கும்போதே ஒரேநேரத்தில் எல்லோரும் 80009-80009 எனும் எண்ணிற்கு மிஸ்டு-கால் கொடுத்தனர். அவர்களிடம் சத்குரு விடைபெற்றுக் கிளம்பினார். நாளை மறுநாள் விஜயவாடாவில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜயவாடாவிற்கு செல்லும் வழியில் மேலும் சுவாரஸ்யமான விஷயங்களுடன் உங்களை சந்திக்கிறோம்.

சென்னை IIT மாணவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடல் - வீடியோ