திரு. முத்தழகன் - சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகா வகுப்பில் கலந்துகொண்டவர். அந்த வகுப்பும், சத்குருவின் இருப்பும், தன் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதை மிகவும் உணர்ச்சிகரமாக நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்...

முத்தழகன், சென்னை.

சத்குருவுடன் ஈஷா யோகா - கருப்பையை விட்டு உலகத்திற்கு வந்த நாள் ஒரு பிறப்பென்றால், ஆன்மீக பாதயை நோக்கி அடி வைக்க தொடங்கும் இந்த நாள் எனக்கு இரண்டாவது பிறப்பு. சாத்தியமற்றவை என சொல்லப்படும் எல்லாம் சாத்தியமாகி கொண்டு இருந்தது A.M Jain கல்லூரி வளாகத்தில்.

chennai, sharing, sadhguru mega class, shambavi, sadhguru, isha, yoga, meditation, kriya, isha kriya

அன்று பொழிந்த மழை, ஒரு கிரிக்கெட் மாட்ச்சாக இருந்தாலோ, அரசியல் கூட்டமாக இருந்திருந்தாலோ "வருந்துகிறோம் இன்னொரு நாள் நடைபெறும்" என்று நோட்டீஸ் ஒட்டியிருப்பார்கள். பலத்த மழை காரணமாக காரில் வருவோருக்கு அசௌகரியமாக இருக்கும், ஆகவே தயவு செய்து ரயிலில் வந்தால் நன்றாக இருக்கும் என ஒரு SMS. பிற்பாடு அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
'அங்க உழவன் சேத்துல கால வைக்கலான இங்க நாம சோத்துல கை வைக்க முடியுமா'

மீனம்பாக்கம் ரயில் நிறுத்தத்தை விட்டு இறங்கியதிலிருந்து நிகழ்ச்சி நடந்த வளாகம் வரை இரண்டு கை கூப்பி கண்ணில் இதயமே கரைந்து ஊற்றுவது போல் வரவேற்று கொண்டு இருந்தனர் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள். அங்கே சில காவல்துறை அதிகாரிகளையும் சந்திக்க நேர்ந்தது. ஆனால், எனக்கு தெரிந்தவரை அவர்கள் இவ்வளவு இலகுவாக வேலைப்பளு இல்லாமல், எந்த நிகழ்ச்சிக்காகவும் பணியாற்றி இருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்வேன். எல்லாமே ஏதோ மந்திரத்திற்க்கு கட்டுப்பட்டதுபோல் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு நதி, அதன் வழியில் அமைதியாக ஓடுவது போல் இயல்பாய் இருந்தது.

உள்ளே நுழைந்ததும் மெல்லிய இசை மனதை வருடிக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலை தானாகவே தியான நிலைக்கு இழுத்து சென்றுவிட்டது. 'மழை நல்லதுதானே, யாரும் அதை திட்டாதீங்க,' சத்குரு கருணைக்கு பேர் போன மழையை, நாம் எல்லோரும் கருணையோடு பார்க்க வேண்டும் என்றுச் சொன்னார்.

'அங்க உழவன் சேத்துல கால வைக்கலான இங்க நாம சோத்துல கை வைக்க முடியுமா' என்ற அவருடைய ஆரம்பப் பாடமே அசத்தல்தான். 'உடம்பில் 75% தண்ணீர்தான், பஞ்சபூதங்களில் முக்கியமான நீர், அதை வெறுக்கலாமா, சந்தோஷமாக எல்லோரும் மழையை வரவேற்கலாமே,' என்றார். முதல் நாள் பாடம், "செ! இந்த மழை வந்து காரியத்த கெடுக்குது பார்" என்று சொல்லும் நிலை மாறி, மழையை வரவேற்க்கும் மனப்பக்குவத்தை தந்தார் சத்குரு.

குறிப்பாக என் கடைசி நாள் தீட்சையின் அனுபவத்தை சொல்லியாக வேண்டும்,

'உயிர் மலர்ந்தால் தான் நீ இறைவன்
அருள் மலர்ந்தால் நான் தான் இறைவன்
ஆசையும் கோவமும் தெரியாத நோக்கம்
பற்றும் பாவமும் அறியாத நோக்கம்
அன்பும் ஆனந்தம் நெறஞ்ச நோக்கம்
உயிர் நோக்கம் வெறும் உயிர் நோக்கம்'

சத்குருவின் இந்த உச்சாடனம் உள்ளே ஏதோ செய்தது. உயிர் நோக்கம் அது மட்டும் என்னுள் எதையோ உசுப்பி விட்டது, தீப்போல் பரவியது எங்கும். உயிர், அது எப்படி இருக்கும்? அதற்கு என்ன நோக்கம் இருக்க முடியும்? உயிரின் நோக்கம் தேடத் தொடங்கிவிட்டது என் உள்ளுணர்வு.

எல்லாவற்றிலும் இருப்பதும் நானும் ஒன்று என உணரும்போது, மற்றவர்களில் இருப்பது என்னில் இருப்பதும் ஒன்று என உணரும்போது, கண்ணில் கண்ணீர் பீறிட்டு வந்தது. சிக்னலில் கை ஏந்தி நின்றவரைக் கண்டு செய்த அலட்சியம், நெஞ்சில் ஈட்டியாக என்னில் இறங்கியது.

ஒரு வார்த்தையே இவ்வளவு மாற்றத்தை கொடுக்கும் என்றால். சத்குரு சொல்லும் இந்த யோக முறைகளை நாம் கடைப்பிடிக்க தொடங்கிவிட்டால் என்னென்ன மாறுதல்களை நம்மில் நிகழ்த்தும்.

உலகத்தில் இருக்கும் உயிர் எல்லாம் உங்கள் குழந்தையாக பாருங்கள் என சத்குரு சொல்லச் சொல்ல... என் அவலங்கள் என்னில் கழல ஆரம்பித்தது. உயிரைத் தேட தொடங்கியவுடன் மனம் செய்யும் மோடிமஸ்தான் வேலையும், அதன் கையில் இதுநாள்வரை நான் ஆடி வந்த கழைக் கூத்தாட்டம் புரிந்தது.

உயிருக்குரிய நோக்கம் புரிபடும் முன் உயிர் பற்றிய தேடுதல் எத்தனை ஜன்னல்களைத் திறந்துவிட்டது, பார்வை விரியத் தொடங்கிவிட்டது. நாங்கள் பாடம் கற்றுக்கொண்டிருந்த அந்தக் கல்லூரி அருகில் ஒரு மசூதி இருந்தது. இடையிடையே அவர்கள் ஓதும் ஃபாத்தியா குரல் கேட்டது, அது கூட எனக்கு என்னவோ நாம் செய்யும் "ஓம்" உச்சரிப்புக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவே பட்டது. எல்லாவற்றிலும் மனம் ஒற்றுமைகளை தேட ஆரம்பித்தது.

இப்படி உயிரைத் தேடத் தொடங்கும் நோக்கம், எல்லாவற்றிலும் ஊடுருவும் பார்வையைக் கொடுத்தது. இத்தனை நாள் கடவுள் என்பவர் ஆகாயம் தாண்டி வாழ்பவர், பல கைகளையும், சில தலைகளையும் கொண்டு நம்மை ஆசிர்வதிப்பவர் என்று புரிந்து வைத்திருந்த பார்வை மாறிப்போனது.

இப்பொழுது சத்குரு சொன்ன உயிர் நோக்கம் எனும் சொல்தான் கடவுள் என்னும் சொல்லுக்கான அர்த்தமாகப்பட்டது. கடவுள் என்பது கட-உள் என விரிந்தது. இது நாள் புரிந்து வைத்தது எல்லாம் மறைந்து புதிய பொருள் புரிபட ஆரம்பித்தது.

ஒரு வார்த்தை எத்தனை மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டது, என்னவோ உடம்பில் எல்லா துணியையும் கழற்றி அம்மணமாய் விட்டது போல் ஆகிவிட்டது. இது நாள் செய்துவந்த முட்டாள்தனத்தை நினைத்து அழுகையா? இனி என்ன என்ற கேள்வியா? ஒரு புரிபபடாத உணர்வு நிலையில் நின்றேன்.

தீயாக வேலை செய்ய தொடங்கிவிட்டது உயிர் நோக்கம். ஒரு வார்த்தையே இவ்வளவு மாற்றத்தை கொடுக்கும் என்றால். சத்குரு சொல்லும் இந்த யோக முறைகளை நாம் கடைப்பிடிக்க தொடங்கிவிட்டால் என்னென்ன மாறுதல்களை நம்மில் நிகழ்த்தும்.

விதை வீரியமானது என்றால், மலை முகட்டிலும் பாறையை உடைத்துக் கொண்டு வளரத்தானே செய்யும். விதையும் வீரியமானது, விதைத்தவரும் வீரியமானவர், பிறகு அந்த பதினைந்தாயிரம் பேர் வாழ்க்கை வளமாகத்தானே இருக்கும்.

தீட்சைக்குப் பின் குரு மூன்று தட்சணை கேட்டார். யாரும் குப்பையை போடாதீர்கள், வாரம் ஒரு முறை குனிந்து குப்பை எடுத்து சுற்றுபுறச்சூழலை சுத்தமாக வைத்து இருங்கள், தொலைபேசியில் பேசும் போது HELLO வை விட்டு நமஸ்காரம் என அழையுங்கள்.

குருவின் தட்சணைக் கூட பொதுநலம் கருதித்தான் இருந்தது. ஒரு மரம் வளர்ந்தால் பறவைகள் வளரும், வண்டு பூவுக்காக வரும், பழம் தேடி வௌவால் வரும், நிழல் தேடி மனிதன் வருவான். குரு கூட அப்படித்தான், ஒன்றாக அல்ல மொத்தமாய் மாறுதல்கள் நிகழ்த்துபவர்.

இத்தனை பெரிய மாறுதல்கள் தந்த ஈஷாவுக்கும், குருவிற்கும் என் மனமார்ந்த நன்றி.