மரப் பயிர்கள் எப்படி மண் வளத்தைப் பெருக்கும்?

குறைந்து வரும் மண்வளம் விவசாயிகளுக்கு பெரும் தடையாய் மாறியுள்ளது! விவசாயிகள் பிரச்சனையில் உள்ளனர் என்றால், அது உலகில் உள்ள அனைவரையும் பாதிக்கும் அல்லவா?! இதோ மண் வளத்தை மீட்பதற்கு ஒரு எளிய வீரியமிக்க தீர்வை இக்கட்டுரை வழங்குகிறது!
 

அறிவியல் மிகச் சிறிய அளவிலேயே மண்ணை அறிந்துள்ளது. பல நூற்றாண்டுகள் களுக்கு முன்பாக, லியனார்டோ டாவின்சி அவர்கள் இப்படிச் சொன்னார்: “நம் காலுக்கடியில் இருக்கும் மண்ணைப் பற்றிய விஷயங்களை விட வேற்றுகிரக உயிர்களைப் பற்றி நமக்கு அதிகமாக தெரியும்” இந்த நிலை இப்போதும் கூட தொடர்கிறது. அட்லாண்ட்டிக்கை பொறுத்தவரை, ஒரு தேக்கரண்டி மண்ணில் 10,000 முதல் 50,000 உயிர்கள் வரை இருக்கக் கூடும். அதே தேக்கரண்டி மண்ணில் பூமியில் வாழும் மனிதர்களைக் காட்டிலும் அதிகமான பல நுண்ணுயிர்கள் இருக்கின்றன. ஒரு கைநிறைய வளமான மண்ணில், அமேசான் காடுகளில் வசிக்கும் விலங்குகளைக் காட்டிலும் அதிகமான வகை பாக்டீரியாக்கள் இருக்கின்றன. மண்ணைப் பற்றியும் மரங்களோடு மண் கொண்டுள்ள தொடர்பு பற்றியும் மற்ற உயிரியல் மண்டலம் பற்றியும் நாம் அறிந்திருப்பது ஒரு பனித்துளி அளவே ஆகும்.

உள்ளூர் மண்புழுக்கள் பற்றி...

மண்புழுக்கள் மண்ணை உண்டு செரித்து அதனை மர வேர்கள் மற்றும் தாவரங்களின் வேர்கள் உட்கொள்ளும் வகையில் கரிமப் பொருட்களாக மாற்றுகின்றன.

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண் முறையை இந்தியா எங்கும் முன்னெடுத்து வரும் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் உள்ளூர் நிலங்களில் மண்புழுக்களின் வேலை குறித்து கூறும்போது, மண்புழுக்கள் மண்ணின் இதயமாக செயல்படுவதாகக் கூறுகிறார். மண்புழுக்கள் மண்ணை உண்டு செரித்து அதனை மர வேர்கள் மற்றும் தாவரங்களின் வேர்கள் உட்கொள்ளும் வகையில் கரிமப் பொருட்களாக மாற்றுகின்றன. மண்புழு இப்படி கழிவாக வெளித்தள்ளும் பொருள் நீரில் கரையாது என்பதால், மழைநீரால் பாதிப்புக்குள்ளாகாது என்பது குறிப்பிடத்தக்கது. மண்புழுக்களின் இத்தகைய செயல்பாடுகளால் மண்ணில் உண்டாகும் நுண்துளைகளில் மழைநீரை மண் தக்கவைத்துக்கொள்கிறது.

மரங்களின் வேர் அமைப்புகளில் சில வகை பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் வாழ்ந்து வருவதை நாம் அறிவோம்! இந்த உயிரியல் நடவடிக்கைகள் மண்ணின் உயிர்த்தன்மைக்கு அவசியமான நைட்ரஜனை வழங்குகின்றன. மேலும், நிலத்தின் அடிப்பாகத்திலிருந்து சத்துகளை உறிஞ்சி எடுத்து நிலப்பரப்பின் மேலே கொண்டுவந்து அதனை மறுசுழற்சி செய்கிறது.

இலைகள் மட்குதல் மற்றும் தாவர கழிவுகள் ஆகியவை மண்ணின் கரிம வளங்களை உருவாக்குகின்றன. மழையின்போது இலை-தழைகளிலிருந்து உருவாகக் கூடிய கரிமவள தன்மைகளை மரங்களின் பசுமைப் பரப்பு சுற்றுச்சூழலிலிருந்து கிரகித்து மழைபெய்யும்போது  மண்ணில் சேர்க்கிறது.

மண் வளம் பெருக மரப் பயிர்கள்

மேற்கூறியவாறு மண்ணில் உயிர்ப்பெருக்கம் அதிகரித்து கரிம வளம் பெருக வேண்டுமெனில் விவசாயிகள் பயிறு வகை பயிர்கள் சாகுபடியிலிருந்து மெல்ல மெல்ல மரப்பயிர் சாகுபடிக்கு மாறுதல் அவசியமாகிறது. ஏனெனில் மண் வளம் பெருகுவதற்கு மரங்களின் வேர்கள் மண்ணில் இருப்பதும், இலைகள் மண்ணில் விழுந்து மட்குவதும் அவசியமாகிறது! விவசாயிகள் வரப்போரங்களில் மட்டுமல்லாது நிலங்களின் ஊடேயும் மரப்பயிர்களை நட்டு ஊடுபயிராக பயிறு வகைப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியும்!

நெல் மற்றும் கோதுமை போன்ற உணவு தானிய பயிர்வகைகளைக் காட்டிலும் நாட்டு மரங்கள் ஒரு கிலோ கிராம் உற்பத்திக்கு குறைவான நீரளவைதான் உறிஞ்சுகின்றன. இது கவனிக்கப்படவேண்டிய இன்னொரு முக்கியமான காரணியாகும்.

விவசாயிகள் பயிர் உற்பத்தியிலிருந்து மரப்பயிர் உற்பத்திக்கு மாறும்போது அதிகப்படியான நல்ல வருமானம் கிடைக்கப்பெறுவர் என்பதற்கு பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் உதாரணமாக உள்ளன. தமிழ்நாட்டில் சிலர் அரை ஏக்கரில் மட்டுமே பயிர்செய்து 5 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டுகின்றனர். மஹாராஷ்டிராவில் சில விவசாயிகளின் வருமானம் ஏறக்குறைய 7 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு வருடத்தில் 1 ஏக்கருக்கு ரூ.20,000ஆக இருந்தது சுமார் ரூ.1.5 லட்சம் ரூபாய்வரை வருமானம் அதிகரித்துள்ளது.

ஈஷாவின் வேளாண்காடுகள் உருவாக்கம்!

விவசாயிகள் தங்கள் நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கிறார்கள். இந்நிலைக்கு ஒரு நல்ல தீர்வாக வேளாண் காடுகள் வளர்ப்பு உள்ளது. ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்திலுள்ள வேளாண் வல்லுனர்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்ப்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் களைகளை  கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்களையும் நேரில் வந்து அளிக்கிறார்கள்.

முதலில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ற மரங்களை வழங்கும் பசுமைக் கரங்களின் தன்னார்வத்தொண்டர்கள், ஊடுபயிர் நடுவதிலும் தங்கள் ஆலோசனையை வழங்கி ஒத்துழைப்பு தருகின்றனர். லாபம் தரும் ஊடுபயிர்கள் என்னென்ன என்பதைக் கூறி வழிநடத்துவதோடு, சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கும் தங்கள் வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.

ஈஷா நாற்றுப்பண்ணைகள்

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை ஈஷா பசுமைக் கரங்கள் உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப் பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. மேலும் டிம்பர் வேல்யூ உள்ள மரவகைகளும் இங்கு கிடைக்கின்றன. உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ.பே: 94425 90062

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1