மரங்களை சுவாசித்தவர், தன் சுவாச காலம் முழுவதும் மரங்களை நேசித்தவர் மரம் தங்கசாமி ஐயா அவர்கள்; மரங்களை நேசித்து, மரங்களின் உணர்வுகளிலேயே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர்; தமிழகத்தின் வறட்சி பகுதிகளிலும் மரங்களை துளிர்க்கச் செய்தவர்; தன் வாழ்நாள் முழுவதும் மரங்களுக்காகவே வாழ்ந்தவர்; கடந்த 2018 செப்டம்பர் 16 அன்று அவரது உடலையும் ஒரு மரத்திற்கு உரமாக்கி விட்டு மறைந்து விட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், சேந்தன்குடி கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த மரம் தங்கசாமி ஐயா, வறட்சியின் பிடியில் இம்மண்ணும், வறுமையின் பிடியில் மக்களும் இருந்தபோது, விவசாயிகளின் வறுமைக்கு முழு காரணம் இயற்கையையும், மண்ணையும் காக்காமல் விட்டதே என்பதை உணர்ந்திருந்தார். வறட்சிக்கும், வறுமைக்கும் தீர்வு மரங்கள் மட்டுமே என்பதை உணர்ந்து, மரங்களை நட்டு வறுமையில் வாடிய விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். இதன்மூலம் தமிழகத்தின் பசுமை பரப்பையும் அதிகரித்தவர். இயற்கையை நேசிக்கும் பண்பால் அவரது கிராமத்தை நோக்கி உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சுழல் ஆர்வலர்களை பயணிக்க செய்தவர்.

பசுமைக்கரங்கள் திட்டத்தில் ஐயா ஆற்றிய அரும்பணிகள்

மரம் சார்ந்து வாழும் அனைத்து மக்களுடனும் இணைந்து பணியாற்றிய ஐயா அவர்கள், குறிப்பாக ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் ஒரு அங்கமாகவே தன்னை இணைத்திருந்தார். பசுமைக்கரங்கள் திட்டத்தின் இயற்கை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இத்திட்டத்தினை மக்களிடம் கொண்டுசேர்க்க 12 ஆண்டுகள் பணியாற்றியவர்.

நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலுடன் பசுமைக்கரங்கள் திட்டம் 2006 ஆம் ஆண்டு ஒரே நாளில் 7,00,000 மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைக்க முயன்றபோது அதற்காக அரும்பணியாற்றியவர் மரம் தங்கசாமி ஐயா அவர்கள். கடலூர் மாவட்டம் முழுவதும் நடை பயணமாகவே சென்று மரங்கள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தவர். 2007 ஆம் ஆண்டு பசுமைக்கரங்கள் திட்டத்தின் இலக்கான 2.5 கோடி மரங்கள் நடும் திட்டத்தினை செயல்படுத்த தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டவர்.

ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம் தன் பணியினை வறட்சியான புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கியபோது, விவசாயிகளின் மத்தியில் மர விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘மரப்பயிரும் பணப்பயிரே' என எடுத்துரைத்த தங்கசாமி ஐயா அவர்கள், இத்திட்டத்தினை வேளாண் காடுகளை உருவாக்கும் திட்டமாக வழிநடத்தி, அப்பகுதியில் ஆயிரக் கணக்கான மரங்களை விவசாயிகளின் பங்களிப்புடன் நட்டு, பெரும் மாற்றத்தினை நிகழ்த்தியவர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தன் உடல்நிலையையும் முதுமையையும் பொருட்படுத்தாமல் 2009 மற்றும் 2011 ஆண்டுகளில் தன்னுடைய கற்பகச் சோலையில் 48 நாட்கள் விரதமிருந்து, ஈஷா யோக மையத்திற்கு சைக்கிள் பேரணியை 350 கிலோ மீட்டருக்கும் மேல் மேற்கொண்டவர். பேரணியின் வழி நெடுகிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இயற்கை மற்றும் மர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு பசுமைக்கரங்கள் திட்டத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சென்றவர்.

நம்மாழ்வார் ஐயாவுடன் இணைந்து இயற்கைப் பணி

விதையாய் இருக்கும்போதே, நான் விழிப்பாக இருந்ததால்தான், மழை பொழிந்தவுடன் மரமானேன். இன்னும் தண்ணீரைத் தேடி என் வேர்கள் செல்கின்றன. ஆனால் மனிதா ஏன் இப்படி என் மீது சாய்ந்து கொண்டு உறங்குகிறாய்?

இவரின் இயற்கை ஈடுப்பாட்டினால் ஈர்க்கப்பட்ட மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வார் ஐயா அவர்களின் அழைப்பை ஏற்று, அவருடன் இணைந்து இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் பரவச் செய்தவர். தனது 8 ஏக்கர் நிலத்தில் அவரது கரங்களாலேயே மரங்களை நட்டு சோலையாக மாற்றியவர். நம்மாழ்வார் ஐயா அவர்கள் அந்த காட்டிற்கு கற்பகச் சோலை என பொருத்தமாகப் பெயரிட்டார். அந்த கற்பகச் சோலை இயற்கை ஆர்வலர்களுக்கு சிறந்த பயிற்றுவிக்கும் இடமாக மாறியது.

மக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் தனிச்சிறப்பு பெற்ற மரம் தங்கசாமி அவர்கள் சேந்தன்குடி நகர கூட்டுறவு சங்க தலைவர், மாவட்ட பட்டு வளர்ப்பு சங்க தலைவர், திருச்சி வானொலி உழவர் சங்க அமைப்பாளர் என பல்வேறு மாநில, மத்திய அமைப்புகளில் பொறுப்பேற்று இயற்கையை மேம்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

இவரின் பணியை பாராட்டி பல்வேறு அமைப்புகள் பல விருதுகளை வழங்கியுள்ளன. குறிப்பாக 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு சுற்றுச்சுழல் துறை அறிஞர் அண்ணா விருது வழங்கி சிறப்பித்தது.

நம்மாழ்வார் ஐயா நினைவு விருதிற்கு ஐயா அவர்களின் பெயர் தமிழக சுற்றுச்சுழல் ஆர்வலர்களால் பரிந்துரைக்கப்பட்டு முதல் விருது இவருக்கே வழங்கப்பட்டது.

மரம் தங்கசாமி ஐயா அவர்களின் பண்புகளில் மிகவும் கவனிக்கத்தக்கது, தான் யாரை சந்திக்கச் சென்றாலும் அல்லது தன்னை யார் சந்திக்க வந்தாலும் மரங்களை பரிசளித்து அச்சந்திப்பை நீங்காத நினைவாக்கி விடுவார். இவரது கற்பகச் சோலையில் இந்தியாவின் ஒவ்வொரு தலைவர்களும் மரங்களாக இன்றும் வாழ்கின்றனர். இவர் கலந்து கொண்ட மணவிழாக்களை மரவிழாக்களாக மாற்றியவர்.

ஒவ்வொரு விழாவும் மரங்கள் இல்லாமல் நிறைவடையாது. எங்கெங்கு வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் மரங்கள் குறித்தே இவரது பேச்சு இருக்கும். அதிகாலை தேநீர் கடை நண்பர்கள் சந்திப்பையும் மர வளர்ப்பிற்கான கருந்தரங்கமாக மாற்றியவர்.

இவர் கலந்துகொண்ட ஒவ்வொரு இயற்கை விவசாயக் கூட்டத்திலும் மரங்கள் நடவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி வந்தார். யாரேனும் மரம் நடுவதில் கருத்து வேறுபாடு தெரிவித்தால் "மரம் நடாமல் இயற்கை விவசாயத்தை காப்பாற்ற முடியாது" என்ற அழுத்தமாக கூறுவார்.

மரங்கள் பேசுவதாக அவர் அடிக்கடி ஒரு வாக்கியத்தை கூறுவார், "விதையாய் இருக்கும்போதே, நான் விழிப்பாக இருந்ததால்தான், மழை பொழிந்தவுடன் மரமானேன். இன்னும் தண்ணீரைத் தேடி என் வேர்கள் செல்கின்றன. ஆனால் மனிதா ஏன் இப்படி என் மீது சாய்ந்து கொண்டு உறங்குகிறாய்?" இந்த வார்த்தைகள் பலருக்கும் மரங்கள் குறித்த ஞான வாக்கியமாக அமைந்தன.

மரங்களை மண்ணிலும், மனிதர்களின் மனங்களிலும் விதைக்க இவர் மேற்கொண்ட பயணங்கள் அற்புதமானவை. இவர் கலந்துகொண்ட மரம் வளர்ப்புக்கான கருத்தரங்கங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நடை பயணங்கள், சைக்கிள் பேரணிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து செய்த மரம்நடும் விழாக்கள் இவையனைத்துமே என்றுமே பசுமையானவை.

வாழ்நாள் முழுவதும் மரங்களுடன் வாழ்ந்த தங்கசாமி ஐயா அவர்கள் மரணத்திற்கு பின்னும் மரப் பேழையில் புதைந்து போகாமல், மறைந்த பின்னும் அவரின் ஆதரவாளர்களின் கரங்களினால் மரத்திற்கும் மனிதர்களுக்கும் புதிய விதையை விதைத்துள்ளார். அவர் ஓய்வெடுக்கும் இடத்தில் பல மரங்கள் துளிர்க்கின்றன. இவர் மறைந்த நாளன்று அவரது சேவையை நினைவுகூறும் விதமாக பசுமைக்கரங்கள் திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் உள்ள அனைத்து நாற்றுப் பண்ணைகளிலும் மரங்கள் நடப்பட்டதுடன், அவர் வாழ்ந்த சேந்தன்குடி கிராமத்திலும் மரங்களை வழங்கி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. தங்கசாமி ஐயாவின் நினைவாக நடப்பட்ட மரங்கள், மரங்களின் மீது அவருக்கிருந்த பேரார்வத்தையும், அந்த ஆர்வத்தை பூர்த்திசெய்ய அவர் செய்த செயல்களையும் நமக்கு என்றென்றும் நினைவுபடுத்துவதோடு, நிகழ்காலத்தில் நிழலாகவும் எதிர்காலத்தில் விதைகளாகவும் இருக்கும். அவரது வாழ்வை ஒவ்வொரு இளைஞரும் தங்கள் மனதில் விதையாக ஊன்ற வேண்டும்; விதை விருட்சமாகும்; விருட்சம் தோப்பாகும்; தோப்பு வனமாகும்.

விதைகளை விதைப்போம்! மரங்களை நடுவோம்!
ஐயா அடிக்கடி கூறுவது போல, வாழ்வோம் மரங்களுடன்...

வணக்கத்துடன்
ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்
94425 90062
முகநூல் : ஈஷா விவசாய இயக்கம்