மாணவர்களுக்காக மாரத்தான் ஓடலாம், வாருங்கள்!!!

சென்னையில் நடக்கவிருக்கும் மாரத்தானில் நீங்களும் ஈஷா வித்யாவிற்காக ஓடலாம். அதைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள் இங்கே...
 

சென்னையில் நடக்கவிருக்கும் மாரத்தானில் நீங்களும் ஈஷா வித்யாவிற்காக ஓடலாம். அதைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள் இங்கே...

சென்னையில் நடப்பவர்களை விட ஓடுபவர்கள் அதிகம்தான்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் உள்ளது. அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு, அவசர அவசரமாக அலுவலகத்திற்கும், பள்ளி-கல்லூரிகளுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும், சினிமா தியேட்டர்களுக்கும் என பல்வேறு நோக்கத்துடன் எப்போதும் ஓட்டத்தில்தான் இருக்கிறது சென்னை மக்களின் கால்கள். ஆனால், வரும் டிசம்பர் 13ல், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் சென்னையில் ஓடவிருக்கும் மாரத்தான் ஓட்டத்திற்கு, ஒரு உன்னத நோக்கம் உள்ளது.

சென்னை மாரத்தான் 2015ல் ஈஷா...

வரும் டிசம்பர் 13ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் 500 பேர் கலந்து கொண்டு ஓடவிருக்கிறார்கள் என்ற செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஈஷா வித்யாவின் வாசகங்களைத் தாங்கிய டி-ஷர்ட்களுடனும், பேனர்களுடனும் ஓடும் இவர்களின் நோக்கம், மக்கள் மத்தியில் ஈஷா வித்யா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதேயாகும்; வார்த்தைகளால் அல்லாமல், தங்களின் உறுதிமிக்க கால்கள் ஓடும் ஓட்டத்தினால் ஏற்படுத்தப் போகும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் இது!

இதன்மூலம் திரட்டப்படும் நன்கொடை, பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்காக தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 8 ஈஷா வித்யா பள்ளிகளின் வகுப்பறைகளை மேம்படுத்துவதற்கும், பள்ளி பேருந்து மேம்பாட்டிற்காகவும், பள்ளியின் சுற்றுச்சுவர்களை அமைப்பதற்காகவும் உதவ உள்ளது. மேலும், இங்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிடவும், பள்ளிக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வாங்கிடவும் இந்த நன்கொடைத் தொகை திரட்டப்படுகிறது.
ஈஷா அரசுப்பள்ளித் தத்தெடுப்புத் திட்டத்தின் மூலம் தத்தெடுக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சிகளிலும் இந்த நன்கொடைத் தொகை உதவிகரமாக இருக்கும்.

ஓடினால் என்ன கிடைக்கும்?!

"யாருப்பா இவங்க...?! குரூப்பா இப்படி ஓடுறாங்க...! ஈஷா வித்யானா என்ன?" இப்படியான கேள்விகள் மாரத்தான் போட்டியைப் பார்க்க அங்கே கூடியிருக்கும் மக்களிடையே எழும்போது, அது நமது முயற்சிகளுக்கு கிடைக்கும் சிறிய வெற்றியாக இருக்கும். நம் கண்களில் உள்ள உறுதியையும் கால்களின் விடாமுயற்சியையும் பார்த்து, ஈஷா வித்யாவிற்கு யாரேனும் ஒருவர் கைகொடுக்க முன் வந்தால், அப்போது நாம் ஓடியதன் முழுப்பலனும் பெற்றுவிட்டதாக எண்ணலாம்.

இம்முறை ஈஷா பிரம்மச்சாரிகளும் சென்னை மாரத்தான் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கான பயிற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 21 கி.மீ தூரத்தை ஓடிக்கடப்பதற்கு நம் கால்களுக்கு கொஞ்சம் பயிற்சியும் வேண்டுமல்லவா?!

சிலருக்கு பரிசுத்தொகை நோக்கமாக இருக்கலாம்; சிலரோ தொழில்முறையாக ஓடலாம். ஆனால் ஈஷா அன்பர்களின் கண்களில் குழந்தைகளின் ஏக்கம் தோய்ந்த முகங்களே நிற்கும் என்பதில் சந்தேகமில்லை!

எங்கோ சென்று முடியும் பாதையில்
எதையோ நோக்கி ஓடும் கால்கள்
இங்கே வந்து ஓடட்டுமே
இவர்களின் வாழ்வும் மலரட்டுமே!
பரிசுத் தொகையும் நோக்கமல்ல
பேரும் புகழும் வாங்க அல்ல
கல்விக்காக கைகொடுக்க
கால்கள் இரண்டும் ஓடட்டுமே!

நீங்கள் ஈஷா வித்யா மாணவர்களுக்காக மாரத்தானில் கலந்துகொள்வதை உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் என அனைவரிடமும் கூறி, அவர்களையும் போட்டி நடைபெறுமிடத்திற்கு அழைத்து வாருங்கள்! குறுஞ்செய்தி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரியப்படுத்துங்கள்! இதன்மூலமாக ஈஷா வித்யாவிற்கான உதவிக் கரங்களை நாம் பெற முடியும். உங்கள் மனதிலும் கால்களிலும் உள்ள உறுதியைப் பார்த்து அவர்கள் வழங்கும் நன்கொடை, எங்கோ ஒரு மூலையிலிருக்கும் கிராமப்புறக் குழந்தைகளின் வாழ்வில் வெளிச்சத்தை நிச்சயம் கொண்டுவரும்!

போட்டிக்காக பதிவு செய்தல்...

15 வயது நிறைவடைந்தவர்கள் 10 கி.மீ தூர மாரத்தானிலும், 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 21 கி.மீ அல்லது 42 கி.மீ தூர மாரத்தானிலும் கலந்துகொள்ளலாம். இந்தப் போட்டியில் ஈஷா குரூப் ரெஜிஸ்ட்ரேஷன் மூலம் பதிவு செய்து, போட்டியில் கலந்துகொள்வதற்கு 95000-67280 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும் அல்லது chn.marathon@ishavidhya.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். பதிவு செய்வதற்கான கடைசி நாள், அக்டோபர் 31ஆம் தேதி.

தனிப்பட்ட முறையில் பதிவு செய்வதற்கு நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. சென்னை மாரத்தான் குறித்த மேலும் தகவல் அறிய விரும்பினால் http://www.thewiprochennaimarathon.com/faq.php என்ற இணையதள முகவரிக்குச் செல்லலாம்! போட்டிக்கான கட்டணத்தொகை முழுவதும் போட்டி அமைப்பாளர்களுக்கே போய்ச் சேரும், ஈஷா வித்யாவிற்குச் சேராது.

ஈஷா வித்யா குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பந்தய வீரர்களை உங்கள் நிறுவனம் மூலம் ஸ்பான்சர் செய்ய விரும்பினால்,
தொடர்புக்கு: 94890 45045
மின்னஞ்சல்: prabhu.loganathan@ishavidhya.org

ஈஷா வித்யாவிற்கு நன்கொடை அளிக்க விரும்பினால் 94425-44458 என்ற எண்ணையோ அல்லது http://www.ishavidhya.org/ என்ற இணைய முகவரியை தொடர்புகொள்ளலாம்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1