நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாள் கொண்டாட்டங்கள்... உங்கள் பார்வைக்கு...!

நவராத்திரி திருவிழாவின் இன்றைய நான்காம் நாள் கொண்டாட்டத்தில் திரு.மாதவப்பெடி மூர்த்தி மற்றும் குழுவினரின், குச்சிப்புடி நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5.30 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விநாயகரைப் போற்றி பாடப்பட்ட துளசி தாசரின் பஜனுடன் துவங்கிய திரு.மூர்த்தி குழுவினரின் குச்சிப்புடி நடனம் பார்வையாளர்களின் ரசனைக்கு விருந்தானது. தொடர்ந்து ‘சிவாஷ்டகம்’ மற்றும் ‘போ... ஷம்போ...!’ பாடல்களுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டத்தை அக்குழுவினர் வெளிப்படுத்தினர். ஸ்ரீ வெங்கடேசப் பெருமானைத் துதிக்கும் ‘பிரம்ம முகட்டி... பர பிரம்ம முகட்டி!’ எனும் பாடலுக்கு, குழுவினர் வழங்கிய நடனம் அனைவரையும் தாளத்திற்கேற்ப கரகோஷமிடச் செய்தது!

குறிப்பிடத்தகுந்த பிண்ணனி பாடகரான மறைந்த மாதவப்பெடி சத்யம் அவர்களின் மகனான திரு.மாதவப்பெடி மூர்த்தி அவர்கள், குச்சிப்புடி ஆர்ட் ஆகாடமி, சென்னையின் நிறுவனரும் இயக்குனருமான குரு பத்மபூஷன் டாக்டர்.வேம்பட்டி சின்னசத்யம் அவர்களிடம் தனது பயிற்சியை துவங்கினார். அதோடு, இவர் பாரம்பரிய இசையை சில காலம் கற்றுத்தேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் இயல்-இசை-நாடக மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இவர், தமிழக அரசிடமிருந்து கலைமாமணி பட்டம் பெற்றவராவார். இந்திய கலாச்சார உறவுக்கான கவுன்சிலில் இடம்பெற்றுள்ள இவர், சத்ய தாண்டவ சுந்தரம் எனும் பட்டத்தை பரதாஞ்சலியிடமிருந்தும், நாட்டிய கலா விப்பஞ்சி எனும் பட்டத்தை டாக்டர். வி பாலமுரளி கிருஷ்ணா அறக்கட்டளையிடமிருந்தும் பெற்றுள்ளார். கான்பெரா ஆஸ்திரேலியாவில் நாட்டிய சிரோன்மணி பட்டத்தையும், பாய் சென்ட்டர், சென்னையில் ரிஸ்வானின் ரோஸ் எனும் விருதையும், ஹைதராபாத்தில் ந்ருத்ய பாரதி பட்டத்தையும் இவர் வென்றுள்ளார்.

திரு.மாதப்பெடி மூர்த்தி குழுவினரின் அற்புத நாட்டிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிப்பாள். நான்காம் நாளான இன்று, மஞ்சள் அலங்காரத்தில் காட்சியளித்த லிங்கபைரவி தேவி, பக்தர்களுக்கு அருளை வாரிவழங்கினாள்.


நாளை...
ஐந்தாம் நாளான நாளைய கொண்டாட்டத்தில் ஷ்யாமா மேனன் அவர்களின் கர்நாடக வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறும்!